சினிமா தமிழ் சினிமா

குற்றம் கடிதல்: முதல் பார்வை …

  • பாலாஜி

குற்றம் கடிதல் – தேசிய விருதுபெற்ற படம், ஆனாலும் சந்தைபடுத்துதலில் மிகவும் போராடி வெளிவந்திருக்கும் சிறந்த படம். காதல், மதம் மறுப்பு திருமணம், தம்பதிகளின் நெருக்கம், காதலில் காப்பி போட்டுத்தருவேன் என்கிற சிறு பொய் சத்தியத்தை கூட நினைவில் வைத்துக்  கேட்பது, அவரின் ‘எலியைகூட கொல்லாதே’ எனச் சொல்லும் அஹிம்சை என்று கதை ஆரம்பிக்கும் அழகு, அநீதியைக் கண்டு பொங்கியெழும் அனைவருமே போராளிகள், கம்யூனிஸ்ட்டுகள் என்று ‘செ குவேரா’வின் வார்த்தையை – கார் விபத்தின் போது சமூக அக்கறையை  பிரதிபலிப்பதிலிருந்து, பாலியல் கல்வியின் அவசியத்தை வலுவாக அறைந்து சொல்லுவதில் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இயக்குனர் பாராட்டுக்கு உரியவர்.

பள்ளிகளின் போதனை முறையையும், பாடம் கற்றுத் தருவதில் ஒவ்வொரு ஆசிரியர்களின் முழு ஈடுபாடும் வேண்டும் என்பதை ஆரம்பத்திலேயே கோடிட்டு காட்டுவதால் பார்வையாளர்களை  ஆர்வம் கொள்ளச் செய்கிறது, மேலும் ஆசிரியர்களின் மேல் ஒரு மரியாதையையும் ஏற்படுத்தி விட்டுத்தான் கதையின் ஆணி வேரைத் தொடுகிறார் இயக்குனர், அதிலும் குறிப்பாக இனப்பெருக்கம் (reproductive system ) பாடத்தை அந்த வயது மாணவர்களுக்கு எடுப்பது, அதன் மீது  மாணவர்களின் கிண்டல் எனத் தொடங்கி பின்னர் அதை விஞ்ஞானமாகவும், பற்றுதலோடு மாணவர்கள் உள் வாங்குவதென்று என்று போதித்தலை பல இடங்களில் உயர்த்திப் பிடிப்பதன் ஆசிரியர்கள் மீது மரியாதை ஏற்படுத்துகிறார்  இயக்குனர்.

கணவருடன், மாமியாருக்கு தெரியாமல் சினிமாவுக்குப் போவது, அதனால் தனக்கு மாற்றாக வரும் ஆசிரியையிடம் தன்னுடைய வகுப்பு மாணவர்களின் குணாம்சத்தை விளக்கி சொல்லி, பத்திரமாக பார்த்து கொள் என்று அறிவுறுத்துகிறார் ஆசிரியை – அந்த இடத்தில் மாமியாருக்குத் தெரியாமல் என்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாம்.

சேட்டை செய்யும் மாணவனாக அறிமுகமாகும் சிறுவனுடைய கதாப்பாத்திரம் – சக வகுப்பு மாணவர்களிடம் காட்டும் துள்ளலும், நையாண்டியும் அருமை. அலுவலக வேலைப் பளு, ஆபத்தில் நண்பர்கள் மட்டுமல்ல அதிகாரிகளும் தலைமேல் போட்டு கொண்டு உதவுவார்கள் என்கிற எதார்த்தம் நம்பிக்கையை உருவாக்குகிறது. பள்ளியின் தலைமையாசிரியரும் அவரின் மனைவியும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றனர்.

மதமாற்றம்/மன மாற்றம் இரண்டையும் தெளிவாகச் சொல்லி, என்ன போராட்டம் என்று வந்தாலும் மத (மன) உணர்வுகள் தலைதூக்காமல் இருக்க வேண்டும் என்பதையும் காட்சிகளாக் உணர்த்துகிறார். அதுவும் நெற்றிப் பொட்டினை அழிக்கும் காட்சியில் உள்ள தடுமாற்றம் போன்ற மெல்லிய செய்கைகள் கவனம் பெறுகின்றன.

போலீஸ் நண்பனாக செயல் பட்டாலும், தங்கியிருக்கும் விடுதிக்கு தேடிச் செல்வதென்பதும் எதார்த்தமே. மருத்துவமனையில் மருத்துவர்கள் புரியாமல் பேசுவது, அடுத்தநாள் நடக்கும் சிகிச்சைக்கு முதல் நாளே பணம் கட்ட சொல்லும் நாசுக்கு என்று அதையும் பதியமல் விடவில்லை.

பத்திரிக்கைகளும், ஊடகங்களும் சமூக நோக்கம் சிறிதும் இல்லாமல் செயல்படுவதையும்,  பாதிக்கப்பட்ட தாயின் மனநிலையைப் பற்றி கவலைப்படாமல் அவரின் பைட் வாங்குதென்று – இன்று ஊடகத்துறையில் நிலவும் பரபரப்புத் தேடலையும் – அவலத்தையும் காட்டுகிறார்.

மகாகவியின் பாடலின் பின்னணியில், படத்தில் வரும் அத்துனை பாத்திரங்களின்  மன ஒட்டத்தையும் பிரதிபலிக்கிறது. இந்தப் பாடலுக்கே தேசிய விருது தரலாம், அதிலும் என் உயிர் நின்னதன்றோ என்ற வரி போதும்.

பாதிக்கப்பட்ட ஆசிரியையை முதலில் எங்கள் முன் நிறுத்துங்கள் என்று கோபப்படுவதிலும்,  மனம் உருகி தன் முகத்தில் வலியைக் காட்டுவதிலும், பையனைத் தாக்கிய ஆசிரியரின் மன எண்ணங்களைத் தெரிந்து, அவரையும் தோழியாக ஏற்று கோள்ளும் மனப் பக்குவமும் அவனின் கொள்கைப் பின்புலமும் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

படைத்ததினால் பிரம்மனும் பிரம்மனே!!!!!!

 

 

Related Posts