சினிமா தமிழ் சினிமா

குற்றமே ”தண்டனையும் பெண்களுக்கு மட்டும்தானா” மணிகண்டன்…!

அன்புள்ள மணிகண்டனுக்கு,

சினிமா எனும் வலிமையான ஊடகத்தில், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நுகர்வு கலாச்சாரம் எனும் போதையில் நாம் எவ்வாறு மயங்க வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உங்களின் முதல் படமான ”காக்கா முட்டை” திரைப்படத்தில் காட்சிப்படுத்தியதில் வெற்றியடைந்திருந்தீர்கள். ஒரு சினிமாவாக அதில் பேசப்பட்ட அரசியலில் சில முரண்பாடுகள் இருப்பினும், பாராட்டுதலுக்குரிய படைப்பே என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த சமூக அக்கறையே உங்களின் இரண்டாம் படத்தையும், அதிலும் இளையராஜாவுடன் கை கோர்த்திருக்கும், சஸ்பென்ஸ் த்ரில்லர் என்கிற வகையில் “குற்றமே தண்டனை” படத்திற்கான எதிர்பார்ப்பைக் கூட்டியது.

ஆனால், படத்தில் நீங்கள் காட்சிப்படுத்தியிருக்கும் ஒரு நுணுக்கமான அரசியலைத் தெரிந்துதான் செய்தீர்களா? ஒரு படைப்பு மனித மனங்களை செழுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால் ”குற்றமே தண்டனை”யோ “இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் தெரிஞ்சி போச்சிடா…, “அடிடா அவள… வெட்றா அவள… குத்துடா அவள…“ போன்ற பாடல்களின் மேம்பட்ட காட்சி வடிவமாக அமைந்துவிட்டது என்பதை உணர்ந்தீர்களா?

”வேலைக்குச் செல்லும் பெண்கள் அனைவரும் விபச்சாரிகள்” எனும் சங்கராச்சாரியாரின் கருத்துக்கும், உங்களின் காட்சியமைப்பிற்கும் என்ன பெரியதாக வித்தியாசம் கண்டுவிட முடியும்.

அதெல்லாம் இல்லைங்க பூஜா தேவரியாவின் கதாப்பாத்திர அமைப்பை கண்ணியமாகக் காட்டியிருக்கிறேன் என்று வாதிடுவீர்களேயானால், அதுவும் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தின் மீதான கழிவிறக்கத்தின் வடிகாலே என்று சொல்லுவேன்.

மிகக் குறைவான காலகட்டமே காட்சிப்படுத்தியிருப்பினும், ஐஸ்வர்யா கதாப்பாத்திரம் மிகத் தெளிவாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு கதாப்பாத்திரமாகவே பார்க்கிறேன். ஒருவனை விரும்பி “என் ஸ்டேட்டஸ்க்கு உன் கூட பழகினதே பெரிய விஷயம்” என்று கழட்டிவிட்டு, பாஸ் மற்றும் வேறொரு இளைஞனுடன் உடல் ரீதியிலான உறவு வைத்துக் கொண்டு என காட்சிப்படுத்தியிருப்பதன் மூலம், பெண்கள் மீதான வன்முறையையும் கொலையையும் நியாயப்படுத்தியுள்ளீர்கள்.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்கிற வகையில் ஐஸ்வர்யாவின் கதாப்பாத்திர வடிவமைப்பிற்கு ”எவன் கூட வேணாலும் போயிடுவா” என்கிற காட்சிப்படுத்துதல் மிக மிக ஆபத்தான ஒன்றாகும்.

”குற்றமே தண்டனை”, யாருடைய குற்றத்திற்கு என்ன தண்டனை? ஐஸ்வர்யா செய்த குற்றத்திற்கு கொலை தண்டனையா? இல்லை விதார்த் செய்த குற்றத்திற்கு பார்வை பறிபோனது தண்டனையா? க்ளைமாக்ஸில் எழுந்து நின்று கை தட்டினார்கள் என்பது கூட, சமூகம் கட்டமைத்திருக்கிற, சட்டத்திற்குள் அடங்கி பூஜா தேவரியா விதார்த்தைப் பார்த்துக் கொள்கிறார் என்பதற்காகத்தான் இருக்குமே ஒழிய, விதார்த் செய்த குற்றத்திற்கு கிடைத்த தண்டனைக்காக இருக்காது என்றே கருதுகிறேன்.

சமூகத்தில் வெளியாகும் ஒரு படைப்பும் அது வெளியாகும் கால சூழ்நிலையும் மிக முக்கியாமனது. ரோஜா வெளியான காலகட்டமும் அதைத் தொடர்ச்சியாய் வெளியான தமிழ் சினிமாக்களும், ”இஸ்லாமிய தீவிரவாதிகள்” எனும் பதத்தை எல்லோர் மனதிலும் விதைத்துவிட்டதை அறிவீர்களா? தேவர் மகன் திரைப்படத்திற்கு பின்னான சாதியக் கலவரங்களை அறிவீர்களா? அதேபோலவே ஸ்வாதி, நவீனா, சோனாலி, பிரான்சினா என காதலிக்க மறுக்கும் இளம் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிற இந்த காலகட்டத்தில், இப்படி ஒரு படம் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதாகவே அமையும்.

30 நிமிடத்திற்கு ஒரு முறை பாலியல் பலாத்காரங்களை எதிர்கொள்ளும், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பாலியல் வன்முறையை எதிர்கொள்ளும் இந்த நாட்டில் இன்னும் புள்ளி விபரங்களுக்குள் அடங்காத எத்தனையோ வன்முறைகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆணாதிக்க சிந்தனை நிறைந்த இந்த சமூகத்தில் “குற்றமே தண்டனையை” ரசிக்க முடியவில்லை மணிகண்டன்.

சமூகத்தில் பெண் எப்போதும் சீண்டல்களுக்கும், கேலிகளுக்கும் உள்ளாகிக் கொண்டேதான் இருக்கிறாள். இரவில் கொஞ்சம் நேரமானால் கூட, அருகில் வந்து உரசும் படியாக, ஏற இறங்க பார்த்து செல்லும் மனநிலையிலிருந்து அநேக ஆண்கள் விடுபடவில்லை என்பதை பார்த்திருக்கிறீர்களா? அதிலும் திரைப்படங்களில் காட்டப்படும் பெண் கதாப்பாத்திரங்கள் லூசு மாதிரியோ அல்லது ”அடக்க ஒடுக்கமான” குடும்பப்பாங்கவோ காட்டபடுவதன் பின்னான மிக நுண்ணிய அரசியலை உணர்ந்திருக்கிறீர்களா?

அட போங்க பாஸ், ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம், பேசாம பார்த்தோமா? ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, எடிட்டிங்க், பின்னணி இசை, நடிகர்களின் கச்சிதமான நடிப்பை ரசித்தோமா என்றில்லாமல், இதெல்லாம் அவசியமா என்று கேட்டீர்களேயானால். ஆட்டோ சங்கரையும், ஒரு குறிப்பிட்ட படத்தை திரும்பத் திரும்பப் பார்த்து ஆசிரியரை கத்தியால் கொடூரமான முறையில் குத்தி சாகடித்த மாணவன் வாழும் அதே தமிழ்நாட்டில்தான் இருக்கிறோம் என்பதையும் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

சந்தேகத்திற்கே இடமின்றி  சினிமா வலிமையான ஊடகமே, அதில் நல்லது சொன்னால் அதிகம் பேரை சென்று சேர்வதை விடவும், மிக வேகமாக மோசமான விஷயங்கள் சென்று சேரும் என்பதே யதார்த்தமான உண்மை.

இன்னும் ஆழமாக கதைக்குள் சென்று அதன் லாஜிக் ஓட்டைகளைப் பற்றி பேச விரும்பவில்லை. படத்தின் நீளம், பாடல்கள் இல்லாத தன்மை என ஏற்கனவே வழக்கமான சினிமாவின் கட்டுப்பெட்டித்தனங்களை உடைப்பதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளீர்கள்.

அதே நேரத்தில் ”ஒருத்தன் கூட பழகுவா, 2 பேர் கூட படுப்பா” அதனால அவள கொல்றது தப்பில்ல என்கிற விஷமத்தனமான பிரச்சாரத்தை விதைத்து விடாதீர்கள். இனி வரும் காலங்களில் பெண்களின் கதாப்பாத்திரங்களை வடிவமைப்பதில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

நிச்சயம் உங்களின் அடுத்த படைப்பு சமூக அக்கறையுடன் கூடிய, பெண்களை இழிவு படுத்திடாத ஒரு நல்ல படைப்பாக அமையும் என்று விரும்பும், ஒரு சராசரி சினிமா ரசிகன்.

– முத்தழகன்.

Related Posts