இதழ்கள் இளைஞர் முழக்கம்

குறைந்த பட்ச ஊதிய சட்டம் – எஸ்.கண்ணன்

Tamil-Daily-News_12113153935

பிழைப்பதற்காக ஊதியமா? நியாய ஊதியமா? வாழ்வதற்கான ஊதியமா? என்ற கேள்வியை, இந்திய தொழிற்சங்கங்கள் அரசிடம், நெடுநாள்களாக கேட்டு வருகிறது. பிழைப்பது என்பது, பிளாட்பாரத்தில் வாழும் உழைக்கும் மக்களுடன் சேர்ந்தது. உயிர்வாழத் தேவைப்படும் ஊதியம். ஆனால் வாழ்வதற்கான ஊதியம் என்பது, உயிர்வாழ்வது என்பதுடன், தன்னை அண்டி வாழும் மனிதர்கள், குழந்தைகளின் கல்வி, வீட்டு வாடகை, மருத்துவம், துணியின் தேவை, உழைக்க முடியாத எதிர்காலத் தேவை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.

இந்திய சட்டம், ஒருவர் தானாக தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தால், குற்றமாக கருதி தண்டிக்க வழிவகுக்கிறது. வாழும் உரிமைகள் குறித்து பட்டியல் இடுகிறது. கல்வி பெறும் உரிமையை வாழும் உரிமையுடன் இணைத்து, 1993 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்தகைய வாழும் உரிமையை தராத அரசுகள் மீது யார் நடவடிக்கை எடுப்பது, என்ற கேள்வியை, இடதுசாரிகள் தவிர வேறு யாரும் கேட்கப்போவதில்லை. அதேநேரத்தில் குறைந்தபட்ச சம்பளம் மூலம் குழந்தைகளின் கல்வியை உத்திரவாதம் செய்ய முடியுமா? நகர்மயமாதல் வளர்ந்துவரும் நிலையில், இடம்பெயர்தலும் அதிகரித்துள்ளது. இங்கு குறைந்தபட்ச சம்பளம் என்ற வாதத்தை அங்கீகரிக்கலாமா? நாகரீகமற்ற அனுகுமுறையை அரசும், இன்றைய சமூக அமைப்பும், தொழிலாளர்கள் மீது சுமத்துவது, இந்த வாதங்கள் மூலம் தான்.

குறைந்த பட்ச சம்பளம்:

இந்திய அரசு 1948 ஆம் ஆண்டில் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை உருவாக்கியது. இது விலைவாசிக்கு ஏற்ப மாற்றம் பெறுகிறது. அகவிலைப்படி என்ற விலைவாசிப்புள்ளிக்கு ஏற்பவும், நகரங்களின் தன்மைக்கு ஏற்பவும், புள்ளிக்கு எத்தனை ரூபாய் என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், இந்த அகவிலைப்படி அணுகுமுறை, அன்றாடம் உழைத்து வாழும் மக்களுக்கு அமலாவதில்லை.

நமது அரசியல் சட்டக் குறிக்கோள் அனைவருக்கும் வாழ்வூதியம் கொடுப்பது எனினும், நடைமுறையில் தொடமுடியாத அடிவானமாக இருக்கிறது, என்று நீதிபதி இதயத்துல்லா, 1966ல் கூறியுள்ளார். தேசிய வருமானம் குறைவாக உள்ள நமது நாட்டில், தொழிலாளர்களுக்கு வாழ்வூதியம் நிர்ணயிப்பதும், அதனை வழங்கக் கூறுவதும், சரியல்ல. பொருளாதாரத்தில் முன்னேறிய சில நாடுகளில் மட்டுமே சாத்தியம், என்றும் கூறப்பட்டது.

இன்று தேசிய வருமானம் உயர்ந்துள்ளது. இந்தியப் பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு 27 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. ஆனாலும் வாழ்வூதியம் குறித்த விவாதம் வலுப்பெறாத நிலை இந்திய சமூகத்தில் உள்ளது. எனவே தான் குறைந்தபட்ச ஊதியத்திலும் முன்னேற்றம் இல்லை. இந்திய ஆட்சியாளர்களிடம் தொழிற்சங்கங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.15 ஆயிரம் ஒரு மாதத்திற்கு, என தீர்மானிக்க வலியுறுத்திய போராட்டங்கள் நடந்து வருகிறது. வேலை நிறுத்தங்களின் போது, உயர்த்த சம்மதிக்கின்றனர். அதன் பின் தேர்தல் வாக்குறுதி போல், மறைந்து விடுகிறது.
குறைந்த பட்ச ஊதியத்தை தொழில் மற்றும், வாழும் ஊரின் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப தீர்மானிக்கின்றனர். குறைந்தபட்ச ஊதியமானது, ஒரு தொழிலாளி உயிர் வாழ போதுமானதாக இருப்பதுடன், அவர் தனது தொழில் திறமையைத் தொடர்ந்து பராமரித்துக்கொள்ள உதவிய்யாகவும் இருக்க வேண்டும், என வரையறுத்துள்ளனர். அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர்களால் அந்த குறைந்தபட்ச ஊதியத்தை தர இயலுமா? என்பது பற்றி கவலைக் கொள்ள தேவையில்லை என்று, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தனக்கான சம்பளத்திற்கான பேரம் பேசும் சக்தியற்ற அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கான சமூக நியாயமாக குறைந்தபட்ச ஊதியச் சட்டம் பயன்படுகிறது. பேரம் பேசும் சக்தி அமைப்பாகிய தொழிலாளர்களுக்கு உள்ளது. 30 விதமான தொழில்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மாநில அரசு நிர்ணயம் செய்ய முடியும், மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு அளவு தொகையை அங்குள்ள விலைவாசி அல்லது வாழ்வாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்ய முடியும். இதை ஆண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க முடியும். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இதை மாவட்டத்தில் வெளியிடும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.
குறைந்தபட்ச ஊதிய சட்டம் அமலாகும் போது, முதலாளியால் ஒரு தொழிலாளியின் ஓய்வூதிய நிதிக்கு அல்லது வருங்கால வைப்பு நிதிக்கு அல்லது சமூக காப்பீடு திட்டத்திற்கு எந்த ஒரு பங்கு தொகையும், ஊதியம் என்பதில் வராது. அதேபோல் பயணப்படி மற்றும் பயணக் கட்டண சலுகை என்பதும், ஊதியம் என்பதில் வராது. வேலையில் இருந்து விலகிக் கொள்ளும் போது அளிக்கப்படும், பணிக்கொடையும் ஊதியத்தில் வராது.

பிறநாடுகளின் அனுபவம்:

குறைந்தபட்ச ஊதியத்தைத் தீர்மானிக்கிற போது, மணி, நாள், மாதம் என மூன்று வகையில் தீர்மானிக்கலாம், என இந்திய குறைந்தபட்ச ஊதியச் சட்டம் சொல்கிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மணிநேர அளவிற்கு கூடுதல் முக்கியத்துவம் தருகின்றன. இங்கு ஓய்வு குறித்த விழிப்புணர்வு அதிகம் இருப்பது முக்கியக் காரணம் ஆகும். நமது நாட்டில் ஓய்வு என்பது குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. எட்டு மணி நேர வேலை முடிந்த பலர், சட்டத்தை மீறி மிகைப் பணி செய்வதும், வேறு வேலை செய்வதும் வழக்கமாக இருக்கிறது.
அமெரிக்காவில் ஒவ்வொரு மாகானத்திற்கும் அங்குள்ள வாழ்நிலை அம்சங்களைக் கணக்கில் கொண்டு தீர்மானிக்கின்றனர். குறைந்தபட்ச ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு 7.5 டாலர் இருந்தது. தற்போது அதிபர் தேர்தலில் இது முக்கிய விவாதமாக மாறியுள்ளது. 12 டாலர் அளவிற்கு தீர்மானிப்பது குறித்து பேசுகின்றனர். ஐரோப்பா கண்டத்தில் ஜெர்மன் நாடு ஒரு மணி நேரத்திற்கு, 8 யூரோ தீர்மானித்துள்ளது. இதுவும் அதிகப்படுத்தப்படுவதன் அவசியம் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.

நமது நாட்டிலும் தேர்தல் நேரங்கள் உள்ளிட்டு எல்லா காலத்திலும், இது போன்ற விவாதங்களை முன் வைக்கிற தேவை உள்ளது. இதில் தொழிற்சங்கங்கள் மட்டுமல்லாமல் சமூக இயக்கங்களுக்கும் அதிகப் பங்கு உள்ளது. வேலைக்காக போராடும் இளைஞர்கள் இந்த விழிப்புணர்வு பெறுவதும், வேலையில்லாக் கால நிவாரணம் பெறுவதற்கான விழிப்புணர்வும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாக உள்ளதை உணர்ந்து அரசுகளை நிர்பந்திக்க வேண்டும்.

Related Posts