அரசியல்

குப்பைக் கிடங்கைவிட சேரி மக்களின் நிலை கேவலமா . . . . . . ???

(2015 மழை வெள்ளத்தை காரணம் காட்டி அகற்றப்பட்டபோது ஆய்வு செய்து எழுதியது…)

இந்தியா வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவதாகக் கூறப்படுகிற இதே காலச்சூழலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிராமங்களிலும் நகரங்களிலும் ஏழை எளிய குடிசைவாழ் மக்களின் இடப்பெயர்ச்சி அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது. தங்களது வாழ்வாதாரத்துக்காக இடம்பெயர்வது ஒருபுறமிருக்க, இயற்கைச் சீற்றத்தின்போது அல்லது யுத்தம் போன்ற அவசர நிலைமையின் காரணமாக இடம்பெயர்வது இன்னொருபுறமிருக்க, தற்போது மக்களை அப்புறப்படுத்தி அவர்களது வாழ்வாதாரத்தில் அடிகொடுத்து, அவர்களுக்கு எதிரான ஒரு யுத்தம் தொடுக்கப்படுகிறது. இதற்கு வளர்ச்சி என்று நாமகரணம் சூட்டப்பட்டிருக்கிறது.

20ஆம் நுற்றாண்டின் இறுதிக்கட்டத்திலிருந்தே பல்வேறு நாடுகளில் இப்படி “வளர்ச்சி” சார்ந்த மறு குடியமர்வு செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் தற்போது பெரிய அளவிலான முதலீடுகள் சார்ந்த திட்டங்களாக நகரப் புணரமைப்பு, நாற்புறச் சாலைகளை உருவாக்குவது, மெட்ரோ ரயில் அமைப்பது, சிறப்பு பொருளாதார மண்டங்களை வரையரை செய்வது, பெரிய அளவிலான உள் கட்டமைப்புத் திட்டங்கள், புதிய துறைமுகங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது, சுரங்கங்களை அமைப்பது போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் திட்டங்களுக்காகப் பெரிய அளவில் குடியிருப்புகள் அகற்றப்படுகின்றன. இதனால், நகரங்களிலும் கிராமங்களிலும் வாழும் மக்கள் – குறிப்பாக‘ ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் – மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். வளர்ச்சி தேவைதான் அது யாருக்கானதாக பார்க்கவேண்டும்.

ஒரு இடப்பெயர்வால் ஏழை மக்களின் வாழ்க்கை நிலை 10 வருடத்திற்கு பிந்தைய நிலைக்குத் தள்ளப்பட்டுகிறது. மறுகுடியர்வு நடவடிக்கைகளில் பெரிதும் பாதிக்கப்படுவது தலித்மக்கள், முதியோர், பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்பு நிலையில் உள்ளவர்களே. இவர்களது வாழ்வுரிமை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் தட்டிப்பறிக்கப்படுகின்றன. நாட்டின் அரசமைப்பு சாசன பிரிவு 14 – 21 வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் இம்மக்களுக்கு மீறப்படுகின்றன.

அதற்கு அடிப்படையான காரணம்:

  1. துரித நகரமயமாகுதல்.
  2. கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்தல்.
  3. நகரங்களில் ஏழைகளை குறிப்பாக சேரிகளில் வாழும் தலித் மக்கள் என்றாலே ஆக்கிரமிப்பாளர்களாகவும் சமூக விரோத குற்ற செயலில் ஈடுபடுபதாகவும் ஆள் காட்டிகளாகவும் பார்க்கப்படுகின்றனர்.
  4. நகரத்தில் உள்ளவர்களில் மறுகுடிஅமர்வு செய்யும்போது மக்கள் காலம்காலமாக செய்து வந்த தங்களது வாழ்வாதாரத்திற்கான தொழிலை விட்டுச்செல்லும் சூழல் உள்ளது. அதனை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை.
  5. நகரப்புறங்களில் ஏழ்மையை அகற்றும் திட்டம் என்பது வெறும் வீடு கட்டிகொடுத்தால் போதும் என்ற மனநிலைதான் உள்ளது. இதனால் மறுகுடியமர்வு என்பது வீடு கட்டுமானத்தோடு முடிந்துவிடுகிறது. ஆனால் அதன் பின் தேவைப்படும் வாழ்வாதாரப் பிரச்சனை, கல்வி, சுகாதாரம், நில உரிமை, அடிப்படை தேவைகள், சமுக பாதுகாப்பு இவைகள் எல்லாம் ஒடுக்கப்பட்ட தலித் மக்களை கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
  6. தேசிய நிவாரண மற்றும் மறுவாழ்வு குடியமர்வுத் திட்டம் என்பது கிராமப்புற கண்ணோட்டத்தில் உள்ள ஒரு  திட்டமாகதான் பார்க்கப்படுகிறது. இத்திட்டம் நகரப்புற தனித்துவத்தை கருத்தில் எடுப்பதில்லை. (குறிப்பாக தமிழகத்தில்)

இந்த சூழ்நிலையில் மற்றமாநிலங்களில் இத்தகைய திட்டங்கள் அமல்படுத்தும் விதத்தை பார்க்கும்போது அங்கெல்லாம் மறுகுடியமர்வைத் தாண்டி நிலவுரிமை, தரமான குடியிருப்பு, வாழ்வாதாரம் பாதுகாப்பு, கல்வி பாதுகாப்பு, சமுகபாதுகாப்பு திட்டங்கள், இழப்பீடு, சட்ட உதவி மற்றும் குறைகள் தீர்வு மையம் போன்ற  அடிப்படை பிரச்சனைகளில் ஓரளவுக்கேனும் கவனம் செலுத்தப்படுகிறது. மறுகுடியமர்வு, மறுவாழ்வு என்பது அந்த மக்களின் உரிமையாக பார்க்கப்பட வேண்டும். அதை தவிர்த்து இடபெயர்ப்பு செய்யப்படுவதை ஒரு வழிமுறையாக பார்க்கப்படக் கூடாது.

திட்டத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள முரண்பாடுகள்….

சுதந்திரத்திற்கு முன் இந்தியாவில் 1921 காலகட்டத்திலேயே வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் பம்பாய் மாகாணத்தில் நிலுவையில் இருந்த சான்றுகள் உள்ளன.

இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு 5 ஆண்டு திட்டத்தின் மூலமாக வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் அமலில் இருந்தது. இரண்டாம் 5 ஆண்டு திட்டத்திலும் இத்தகைய முயற்சிகள் செய்யப்பட்டன. அதில் பல மைல் தொலைவில் மக்கள் மறுகுடியமர்ப்பு செய்ய முயற்சிகள் நடந்தன. இதனை  எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி தடுத்துள்ளனர். இதன் காரணமாக நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் வரையில் தொலைவான இடங்களில் மறுகுடியமர்வு செய்வதைத் தவிர்த்து நகர வளர்ச்சிக்கான திட்டத்தில் மட்டும் அரசு கவனம் செலுத்தியது.

இந்நிலையில் 1972ல் நகரங்களில் உள்ள சேரிகள் சுற்றுப்புற மேம்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் முக்கிய நோக்கம் 7 அடிப்படை வசதிகளை சேரிகளில் உள்ள வீடுகளுக்குக் கொண்டு சேர்ப்பது.

ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது  மாநிலங்களில் உருவாக்கப்பட்ட வரைவு திட்டம் அடிப்படையில் ஒருங்கிணைந்த நகர வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட்டு கிராமபுறம் மற்றும் நகரத்திற்கு குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் பராமரிப்போடு ஒருங்கிணைந்த நகர வளர்ச்சி திட்டமும் இணைக்கப்பட்டது.

இதுவரை மத்திய அரசின் திட்டமாக இருந்த வீடு கட்டி தரும் திட்டம் என்பது ஆறாவது 5 ஆண்டு திட்டத்தின் போது மாநில அரசின் பொறுப்பெற்று தனிநபர்கள் கையில் விடப்பட்டது. அரசாங்கத்திடமிருந்து தனியாரிடம் விடப்பட்டது. அது ஏழை எளிய ஒடுக்கப்பட்ட, தலித் மக்களுக்கு பெரும் ஆபத்தாக முடிந்தது. அரசு நிதியை, மட்டும் வழங்கி தனியாரிடத்தில் இத்திட்டத்தை ஒப்படைத்துவிட்டது. இதனால் ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களின் வீடு மற்றும் குடியிருப்பு எதிர்பார்ப்புகள் எட்டாக் கனியாகிவிட்டது. வீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் குழுமமாகிவிட்டது.

நகரப்புற உள்ளாட்சி அமைப்புகள் நகர திட்டம் இவை எல்லாம் பணக்கார வர்க்கத்திற்கும் தொழில் நிறுவனங்களுக்கும் சேவை செய்யும் விதமாகத்தான் உள்ளதேயனின்றி ஏழை எளிய ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் ஒருபோதும் உதவி செய்யவில்லை.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர புணரமைப்பு திட்டம் பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்டு, நகர உள்கட்டமைப்பு தேவைகள், நகர வளர்ச்சி, நகரங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவைகளில் கவனம் செலுத்துவது என்ற அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் செயல்கள் ஏழை எளிய மக்களுக்கு தரமான வீடு, வாழ்வதற்கான சூழலை உருவாக்கி கொடுப்பது, சுயதொழில் வளர்ப்பது போன்ற நோக்கத்தோடு இது தொடங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் மூலம் நகரப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்களை நகரத்திற்கு அப்பால் குடியமர்த்துவதுதான் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நகரங்களில் அடர்த்தியான வாழும் சூழலிலிருந்து ஏழை எளிய ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் வலுக்கட்டாயமாக தாங்கள் வாழும் இடத்திலிருந்து பல மைல்  தூரத்தில் குடியமர்த்தப்படுகிறார்கள். தனியார் முதலீட்டார்களை வீடு கட்டுதல் திட்டத்தில் இணைத்ததால், வெளிப்படைதன்மை இல்லாமல் போய்விட்டது.

பதினொன்று மற்றும் பன்னிரெண்டாவது 5 ஆண்டு திட்டத்தில் ஏழை எளிய மக்களை உள்ளாடக்கியதாகதான் இத்திட்டங்கள் அமையும் என்று சொன்ன போதிலும் நகரங்களில் வீடு கட்டிதரும் திட்டமானது அடிப்படையில் இவர்களை புறக்கணிக்கும் விதமாகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் மனித உரிமைகளையும் மீறுவதாக உள்ளது.

தமிழகத்தில் நகரங்களுக்குள் உள்ள ஏழைகளை நகர எல்லைக்கு குடிபெயர்ப்பது…….

தமிழக அரசாங்கம் நகரப்புற ஏழை எளிய மக்களின் குடியிருப்பு தேவைகளை அமல்படுத்துவது என்பது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செயல்படுத்துகிறது.

சென்னையில் மக்கள் சேரிகளில் பல தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 1970லிருந்து 1990 வரையில் அடர்ந்து வாழும் சேரிகளை அடையாளம் கண்டு அங்குள்ள அடிப்படை தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்வது மற்றும் நகரத்திற்குள்ளேயே அவர்களுக்கு மறுகுடியமர்ப்பு செய்வது என்ற நிலை இருந்தது. ஆனால் தாராளமயமாக்கப்பட்ட பின்னர் நிலங்களில் விலைகள் வானளாவிய அளவுக்கு எகிறிவிட்டன. நகரங்களில் உள்ள சேரி குடியிருப்புகள் வெளியேற்றும் நிலை உருவானது. அரசாங்கம் செய்து கொடுக்கும்  இந்த வீடு கட்டு தரும் திட்டமானது பெரிய மாற்றத்தை அடைந்தது.

புதிய பொருளாதார திட்டத்தின் அடிப்படையில் மாநிலங்களில் இத்தகைய வீடு கட்டிதரும் திட்டத்தில் அரசாங்கம் உலக வங்கியின் நிதியை சார்ந்து இருக்கும் சூழல் உருவானது.

உலக வங்கியின் நிதி பங்களிப்பு என்பது இந்தியாவில் ஒரு புதிய  வீடுவசதி நிதி நிறுவனமாக மாறி இந்தியாவின் ஒட்டுமொத்த வீடு கட்டுமான வளர்ச்சி துறையாக வளர்ந்துள்ளது. அது நகர பொருளாதார வளர்ச்சிக்கும் தேச வளர்க்கும் பங்களிப்பை செலுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டதாக உள்ளது. இருப்பினும், நகரத்தின் வாழும் சாமான்ய மக்களுக்கு எதிர்மறையான பாதிப்புகளை உருவாக்கின.

தமிழகத்தில் 1977 வாக்கிலேயே இத்தகைய நிதி அளிப்பு  நகர வளர்ச்சிக்கும் குறிப்பாக சென்னை வளர்ச்சிக்கு இத்தகைய நிதி பங்களிப்பு உலக வங்கியின் சேரிகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வாழும் இடத்திலேயே வீடு கட்டிதரும் திட்டம். அதன் அடிப்படையில் 45ஆயிரம் பேர் பயனடைந்தார்கள். ஆனால் இந்த ஒட்டுமொத்த திட்டம் என்பது மானியத்தின் அடிப்படையில் கிடையாது.  பல தலைமுறையாக இந்த நிலத்தில் வாழ்ந்து வந்த மக்கள் வாடகை செலுத்தி வாழும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.

2005-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அறிக்கையின் படி ஆட்சேபனைத்திற்குரிய சேரிகள் ஆட்சேபனை இல்லாத சேரிகள் என்ற தரம் பிரிக்கப்பட்டது. அதன் விளைவு தமிழ்நாடு குடிசை மாற்று சட்டத்தின்  கீழ் சேரிகள் என்று தரம் கண்டு இப்பகுதியில்  வாழும் மக்களை, சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர் என்ற முத்திரை குத்தப்பட்டது.

உலக வங்கியின் உதவியில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம். அதே பகுதியில் அல்லது அருகாமையில் மாற்று இடத்தில் சுகாதாரமான முறையில் கல் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டமாகத்தான் முதலில் இருந்தது. உலக வங்கி நிதி உதவியில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் நகர வளர்ச்சியை தனியார் பங்கீடு ஊக்குவித்தது. அதே நேரத்தில் அரசின் பங்கு குறைந்து வெறும் மேற்பார்வையாளராகவும் தனியார் பங்கீட்டாளர்களை அதிகப்படியாக ஈடுபடுத்துவதுமாக ஒரு சந்தைப் பொருளாதாரத்திற்கு இட்டுச் சென்றது.

அதேவேளையில் உலக வங்கியிடம் திட்டத்திற்கு நிதி பெறுவது என்பதிலிருந்து கொள்கை ரீதியாக கடன் பெறுவது என்ற நிலை உருவானது. இப்படிப்பட்ட கொள்கை மாற்றத்தில் அரசின் வர்க்கக் கண்ணோட்டமும் இருக்கிறது. இதனால் நகரப்புறத்தில் வாழும் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் வெளியேற்றப்படுகிறது நிலை தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

1990லிருந்து 2010 வரையிலான காலக்கட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சென்னை சேரி பகுதிகளிலிருந்து கட்டாய வெளியேற்றம் மறுகுடியமர்வு செய்யப்பட்டு கண்ணகிநகர், செம்மஞ்சேரி, தண்டையார்பேட்டை, திலகர் நகர் ஆகிய இடங்களுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். அக்கட்டிடங்கள் தமிழ்நாட்டு பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கான கல்வி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 13 சதவீத நிதியில், 75 சதவீதம் தொகையை கட்டுமான பணிக்கு பயன்படுத்தியுள்ளனர். இதனால், மறுகுடியமர்வு செய்யப்படுவர்களின் பெரும்பாலானவர்கள் தலித் மக்களாக உள்ளனர்.

இவைகளை எதிர்த்து தொடர்ச்சியான போராட்டங்களும் மக்கள் எதிர்ப்பும் இந்த காலகட்டத்தல் இருந்த போதிலும் தமிழக அரசாங்கம் கொள்கை ரீதியாக தொடர்ந்து  மக்களை தூர இடங்களுக்கும் வெளியேற்றுவது மறுகுடியமர்ப்பு செய்து கொண்டுதான் இருக்கிறது.

சிஎம்டிஏ 2008 சென்னைக்கான  இரண்டாம் நகர திட்டம் தொகுதி 3ம்பிரிவில்  சேரிகள் இறைவனால் படைக்கப்பட்டது அல்ல. மனிதர்களால் உருவாக்கப்பட்ட மடத்தனமான செயல். இதனால் சென்னையின் அழகு கெட்டு அசிங்கமாக  உள்ளது. இதனை சரிசெய்ய பல திட்டங்களை அமல்படுத்தி சேரிகளை அப்புறப்படுத்தும் கண்ணோட்டம் தான் தமிழக அரசுக்கு உள்ளது. தமிழகத்தில் பரவலாக மறுகுடியமர்ப்பு மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில்  சென்னையிலிருந்து மட்டும் 20820 குடும்பங்களை வெளியேற்றி இருக்கிறார்கள். இன்னும் 31,912 குடும்பங்களை வெளியேற்றுவதற்கான வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது. மொத்த 59,912 குடும்பங்கள் சேரிகளிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விரட்டப்பட்டு வருகிறார்கள். இதில் பெரும்பாக்கம், கண்ணாகி நகர், செம்மஞ்சேரி சென்னையிலிருந்து 30 கிலோ மீட்டருக்கு அப்பால் விரட்டப்படுகின்றனர்.

மறுகுடியமர்ப்பு மற்றும மறுவாழ்வுக்கான வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் அரசாங்கத்தின் தற்போது நிலைபாடு.

2007ல் உருவாக்கப்பட்ட தேசிய மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டத்தில் கட்டாய அடிப்படையில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களை குடிபெயர்ப்பு செய்யும்போது, அடிப்படையான உள்கட்டுமானம், அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. (கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் அமைத்தல், பாதுகாப்பான குடிநீர் வசதி, ரேசன் கடைகள், தபால்நிலையம், குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம், சமுகநல கூட்டம், பள்ளிகள், வழிப்பாட்டு தடங்கள், பாதுகாப்பு வசதி, பால்வாடி , மயானம் இவைகள் அனைத்து அடங்கும்.. ஆனால்., பெரும்பாலும் இத்தகைய  வசதிகள் எதுவுமே மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களுக்கு போய் சேரவில்லை.

‘இடஒதுக்கீடு அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கு நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிலத்தை பகிர்ந்து அளிக்கும் போது சேரிகளையும் தரம் உயர்த்த முடியும்.

அரசு கட்டுப்பாட்டில் உள்ள பயன்பாடாற்ற நிலங்களை கண்டறிந்து ஏழை எளிய மக்களுக்கு நிலங்களின் வீடு கட்டி தர வேண்டும். இல்லையென்றால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இவர்கள் சென்னையில் குடியிருப்பு இல்லாத நிலைமை ஏற்படும்.

நகரத்திட்டத்தின் கணக்கீடு சொல்வது என்னவென்றால், 78, 47 சதவீதம் மக்கள் சரியான வீடுகள்  இல்லாத இடங்களிலிருந்துதான் மக்களை அன்றாடும் பணியை செய்து கொண்டு வருகின்றனர். அதற்கு அடிப்படை காரணம் அரசுக்கு கொள்கை ரீதியாக வீடு கட்டித்தரும் திட்டம் இல்லை. ஆனால் 2007 தேசிய குடியமர்ப்பு திட்டம் அந்த அந்த மாநிலத்தில் கொள்கை ரீதியாக திட்டங்களை உருவாக்கவேண்டும் என்று வலியுறுத்தியது.

முன் எழும் பிரச்சனைகளும் தீர்வும்….

மறுகுடியமர்ப்பில் ஏற்பாடும் பாதிப்புகள் குறித்து சமூக ஆர்வலர்கள், ஊடகம், ஆராய்ச்சியாளர் என  தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதன் கட்டாயத்தின் பெயரில் அரசாங்கத்திற்கு நிர்பந்தம் ஏற்படுகின்றது. ஆகையால், அரசு சமீபத்தில் உயர் மட்டக்குழு அமைத்து ஒரு சில அடிப்படை தேவைகளை சரிசெய்துள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சி, குடிநீர் விநியோக துறை சேரிகளை சரிப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டது. அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பாடிற்கு வழி வகுத்தது. இருந்தாலும் அரசாங்கத்திற்கு கொள்கை ரீதியாக  எந்த மாற்றமும்  ஏற்படவில்லை. அதற்கு காரணம் ஒரு திட்ட வரையரையோ வழிகாட்டுதலோ தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு கிடையாது.

அரசாங்கத்திற்கு சேரிகளை அப்புறப்படுத்துவதற்கு காட்டும் ஆர்வத்தை  வாய்ப்பு இருக்கும் எல்லா சேரிகளையும் மேம்பாடுத்தும் திட்டம்தான் தற்போது தேவையாக உள்ளது.

தமிழ்நாடு குடிசை மாற்றும் வாரியம், சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ மற்றும் நிலம் உரிமை இருக்கக்கூடிய துறை அனைத்தும் இடஓதுக்கீடு அடிப்படையில் நிலங்களை பிரித்து  நகர திட்டத்தின் அடிப்படையில் நிலங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும்

அரசு பயனற்ற நிலையில் உள்ள காலி இடங்களுக்கு மக்களை குடியமர்த்தப்பட வேண்டும்.  இதன் மூலம் மக்களை தூர இடத்திற்கு குடியமர்த்துவதும் அதனை தொடர்ந்துள்ள பிரச்சனைகளை  தடுக்கலாம்.

நகர வீடு கட்டித்தரும் திட்டம் என்பது அந்த பகுதிவாழ மக்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் சம்பந்தமான இணைப்பை தெரிந்து கொண்டு அந்தப் புரிதலோடு செயல்பட வேண்டும்.

தேசிய நகர வீட்டு வசதி, குடியமர்வு திட்டம் 2007. சொல்லப்பட்டது போல அந்த அந்த மாநிலத்திற்கான தனியான மாநில நகர வீட்டு வசதி மற்றும் குடியிருப்பு திட்டம் உருவாக்க வேண்டும். மாநில அரசாங்கம் இதுபோன்ற பிரச்சனையில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

இதையெல்லாம் வெளிப்படையாகவும், அக்கறையுள்ள அமைப்புகளோடு கலந்துரையாடி உண்மையான பொதுக்கருத்து அடிப்படையிலும் மேற்கொள்கிறபோதுதான் அது நிஜமாகவே மறுவாழ்வு நடவடிக்கையாக இருக்கும். மாறாக, தற்போதை நடைமுறைகள்தான் தொடரும் என்றால் இது மறு குடியமர்வு என்று அல்ல, மறு குடியழிப்பு நடவடிக்கையாகவே வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

– ஹேமாவதி.

 

Related Posts