அரசியல்

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பில்லையா மாண்புமிகு பிரதமரே…???

1.மோடியின் நாடாளுமன்ற உரை உண்மைக்கு மாறானது.


பொய் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. ஏனெனில் நாடாளுமன்றத்தில் பேசிய மோடி ‘பொய்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அது அவைக் குறிப்பிலிருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளது.

2.ஒரு பிரதமரின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவது சாதாரணமான நிகழ்வல்ல. தேசத்தின் அவமானம்.

3.குடியுரிமைச் சட்டத்தால் இங்கு யாருக்கும் பாதிப்பு வராது என்கிறார் மோடி. இது உண்மையா?

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் இந்திய அரசியல் சட்டத்தோடு தொடர்புடையவர்கள். அரசியல் சட்டத்தை பாதுகாக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

பாஜக நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, அரசியல் சட்டத்தின் 14, 15 மற்றும் 19 ஆவது பிரிவுகளுக்கு எதிரானது. இந்தியாவின் மதசார்பற்ற தன்மையை பாதுகாக்க இந்த பிரிவுகள் உத்தரவாதம் அளிக்கின்றன. பாஜகவின் இந்தச் சட்டம் குறித்து சட்ட வல்லுநர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். அவற்றுக்கு நேரடியாக மோடி பதில் சொல்லவில்லை.

4.குடியுரிமை சட்டமோ, தேசிய குடிமக்கள் பதிவேடோ இந்திய முஸ்லிம்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று மோடி கூறியதும் உண்மையல்ல.

2019 ஏப்ரல் மாதம் அமித்ஷா பேசும்போது, முதலில் குடியுரிமைச் சட்டத்தை கொண்டுவருவோம். இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை கொடுப்போம். பிறகு இந்தியாவுக்குள் ஊடுருவியர்களை எளிதில் கண்டுபிடித்து வெளியேற்றுவோம் என்றார். அப்படியானால், என்ஆர்சி கணக்கெடுப்பில் முஸ்லிம்களுக்கு மட்டுமே கடும் நெருக்கடி கொடுக்கப்படும். இந்த விவகாரத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கில் காட்டவேண்டிய ஆவணங்களைக்கூட மத்திய அரசு இன்னும் இறுதி செய்யவில்லை.

5.”நான் 130 கோடி இந்தியக் குடிமக்களுக்கு சொல்ல விரும்புகிறேன், எனது அரசு அதிகாரத்துக்கு வந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து என்.ஆர்.சி குறித்து இன்று வரையில் ஒரு முறை கூட பேசவில்லை’’என்று மோடி பேசுகிறார். இது உண்மையா?

*பாஜக, 2019 ஆம் ஆண்டில் தனது தேர்தல் அறிக்கையில் நாடு முழுவதும் என்.ஆர்.சி அமலாக்கப்படும் என உறுதியளித்திருந்தது.

  • நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமைத் திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது, மக்களவையில் நவம்பர் 9-ம் தேதி அன்று, “நாடு முழுவதும் என்.ஆர்.சி கொண்டுவந்து அமலாக்குவோம், ஊடுருவிய ஒரே ஒருவரைக் கூட விட்டுவைக்க மாட்டோம்” என்று பேசினார்.
  • என்.ஆர்.சி திட்டம், என்.பி.ஆர் என்ற மக்கள் தொகை பதிவேட்டு வேலைகள் (ஏப்ரல் 1 – செப்டம்பர் 30, 2020) முடிந்த பிறகு தொடங்கும். என்.பி.ஆர் என்பது என்.ஆர்.சி திட்டத்தின் முதல் கட்டம். அரசிதழில் இது கடந்த 2019 ஜூலை 31 அன்று வெளியிடப்பட்டுவிட்டது.

6.குடியுரிமைச் சட்டத்தின் கீழ் நாடற்றவர்களாக மாற்றப்படும் மக்களை அடைத்து வைக்க சிறப்பு முகாம்களை பாஜக அரசு கட்டுவதாக வெளிவந்த செய்திகள் உண்மையில்லை. காங்கிரஸும், அர்பன் நக்ஸல்கள் என்று அழைக்கப்படும் அறிவுஜீவிகளும் தான் இதை பரப்புகிறார்கள் என்று மோடி கூறினார்.

ஆனால், மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு அமைச்சர் நித்தியானந்த் ராய் ஆம் என்று பதிலளித்தார். பல்வேறு ஆதாரங்களுடனும் படங்களுடனும் நிரூபிக்கப்பட்ட செய்தியை, பொய் என்று பேசினார் மோடி. அசாமிலும்,பெங்களூருவிலும் கட்டி முடிக்கப்பட்ட முகாம்களின் படங்கள் வெளியாகின. எல்லா முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற முகாம்கள் கட்டுவதற்காக மாதிரி வடிவமைப்பை அரசுகளுக்கு அனுப்பியிருப்பாதகவும் நிரூபிக்கப்பட்டது.

என்ஆர்சியால் மக்கள் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை. அவர்களுக்காக அரசு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்ய வேண்டும். அசாமில் 19 லட்சம் பேரை குடியுரிமை அற்றவர்களாக அறிவித்துள்ளனர். அவர்களுக்காக முகாம்கள் கட்டப்படுவதாக சொல்லப்படுவதை மோடி மறுக்கிறார். ஆனால், படங்களுடன் செய்தி வருகிறது. 3 ஆயிரம் பேர் தங்குவதற்கு 40 கோடி செலவில் முகாம் கட்டப்படுகிறது. அப்படியானால், 19 லட்சம் பேரை தங்கவைக்க 24 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. இதெல்லாம் இப்போது தேவையா? இந்தியாவை இன்னொரு ஜெர்மனியாக மாற்றும் முயற்சியை அனுமதிக்க முடியுமா?

  • கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி மாநிலங்களவையில் உள்துறை அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு சொன்ன பதிலில், “அனைத்து மாநிலங்களிலும் சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் தண்டனை உறுதி செய்யப்பட்டு நாடு கடத்தப்பட வேண்டிய அந்நியர்களையும் அடைப்பதற்காக தடுப்பு முகாம்களைக் கட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர்அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி, தடுப்பு முகாம்கள் கட்டுவது பற்றிய வழிகாட்டுதல்களின் தொகுப்பினை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியிருக்கிறது.

  • மத்திய அரசு கடந்த நவம்பர் 28- ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில், “நம் நாட்டில் சட்டவிரோதமாக வாழும் அந்நிய தேசத்தவர்களுக்கான தடுப்பு முகாம் அமைப்பதற்கு அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு கடிதமும், 2018 ஆம் ஆண்டு அந்தப் பணிகளின் நிலை அறிய ஒரு கடிதமும் எழுதப்பட்டது” எனத் தெரிவித்தது.
  • கடந்த நவம்பர் 2019 இல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்போது அசாம் தடுப்பு முகாம்களில் குடியேறிகளாக சந்தேகிக்கப்படுவோர் தடுத்துவைக்கப்பட்டு அதில் 28 பேர் மரணமடைந்திருப்பதாகத் தெரிவித்தார். 988 அந்நியர்கள் அசாமில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் எண்ணிக்கையை வெளியிட்டார்.
  • 2014 ஏப்ரல் 24/29 ஆகிய தேதிகளிலும், 2014 செப்டம்பர் 9/10 ஆகிய தேதிகளிலும் வழிகாட்டுதல்கள் இந்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து அனுப்பப்பட்டன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு மாதிரி தடுப்பு முகாம்கள்/தங்கும் மையம்/ முகாம் மாதிரி ஆகியவை அனைத்து மாநில/யூனியன் பிரதேசங்களுக்கும் 2018-ல் அனுப்பப்பட்டது.
  • கர்நாடகா போல பாஜக ஆட்சி செய்யும் பல மாநில அரசுகள் தடுப்பு முகாம்களைக் கட்ட உத்தரவு போட்டுவிட்டன.

7.என்.ஆர்.சி.யை காங்கிரஸ் கொண்டு வந்ததாக மோடி கூறுகிறார்.

தேசிய குடியுரிமை கணக்கெடுப்பை காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது என்று மோடி கூறினார். இதுவும் அப்பட்டமான பொய் ஆகும். தேசிய குடியுரிமை பதிவேடு என்பதை அசாம் மாநிலத்துக்கு மட்டுமே காங்கிரஸ் கட்சி கொண்டுவந்தது.

1985- ஆம் ஆண்டு அசாமில் உள்ள வெளிநாட்டவரை கணக்கிட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்திய மாணவர் கூட்டமைப்போடு, அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டார். மதங்களுக்கு அப்பால், அசாமில் ஊடுருவியுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்ற வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம். ஆனால், பாஜக இந்தியா முழுவதும் கணக்கெடுக்க திட்டமிட்டுள்ளது.

8.எரிக்க விரும்பினால் எனது உருவபொம்மையைக் கூட எரியுங்கள். ஏழைகளை துன்புறுத்தாதீர்கள். போலீஸார் மீது கல்லெறிந்து அவர்களை காயப்படுத்துவதால் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது என்று மோடி பேசினார். இதுவும் உண்மையில்லை.

ஆயுதமற்ற போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 18 பேர் உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே கொல்லப்பட்டனர். போராட்டக்காரர்களை மட்டுமல்ல, நெருக்கடியில் சிக்கிக்கொண்ட பொதுமக்களையும் போலீஸார் தாக்கியதை ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

9.நான் யாருடைய மதத்தையும் குறிப்பிட்டு பேசியதே இல்லை” என்கிறார் மோடி.

  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணி பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, வன்முறையில் ஈடுபடுவோர் யார் என்பதை அவர்களுடைய உடையை வைத்துக் கண்டுபிடிக்க முடியும் என்றார்.
  • 2019 பொதுத்தேர்தலில் மோடி, வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்ந்தெடுத்திருப்பதற்குக் காரணம் “பெரும்பான்மைகள் சிறுபான்மையாக உள்ள தொகுதி” என்றார்.

மக்களை தவறாக வழிநடத்துவதற்கு மோடி முயல்கிறார். இந்திய அரசமைப்பின் மதச்சார்பற்ற ஜனநாயக உள்ளடக்கத்திற்கு எதிராக அவர்கள் செய்திருக்கும் தாக்குதலை மறைக்கிறார்.

10.காஷ்மீர் வளர்ச்சி தடைக்கு 370 ஆவது பிரிவே காரணம்!


ஜம்மு காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கு அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவின் கீழ் அந்த மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்த்துதான் காரணம் என்று மோடி சொன்னார்.

ஆனால், அவர் மூன்று முறை முதல்வராக இருந்து ஆட்சி செய்த குஜராத்தின் சமூக வளர்ச்சியைக் காட்டிலும் காஷ்மீரின் வளர்ச்சி நன்றாகவே இருப்பதை புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கி மக்களவையில் பேசிய அமித்ஷா கூறிய புள்ளி விவரங்களும் தவறானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.

11.டாக்டர் அம்பேத்கர், ஷியாமா பிரசாத் முகர்ஜி, வாஜ்பாய் உள்ளிட்ட கோடிக்கணக்கான மக்களின் கனவு இப்போது நனவாகி இருக்கிறது என்று மோடி கூறினார். காஷ்மீர் குறித்து அம்பேத்கர் கூறியதாக மோடி சொன்னது உண்மைக்கு மாறானது.

காஷ்மீர் குறித்து அம்பேத்கர் எழுதிய கருத்துகளை படிக்காமல் அல்லது தவறாக புரிந்துகொண்டு பொய்யை பரப்புகிறார் மோடி. காஷ்மீர் பிரச்சனைக்கு எனது சரியான தீர்வு அதைப் பிரிப்பதுதான். இந்துக்களும் பவுத்தர்களும் நிறைந்த பகுதியை இந்தியாவுக்கு கொடுத்துவிட வேண்டும்.

இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிட வேண்டும். நாம் முஸ்லிம்கள் நிறைந்த காஷ்மீர் பகுதியைப் பற்றி கவலைப்படவே மறுக்கிறோம். முஸ்லிம்கள் நிறைந்த காஷ்மீருக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனைதான் இது. காஷ்மீர் முஸ்லிம்கள் அவர்கள் இஷ்டப்படி முடிவெடுக்கலாம். அல்லது காஷ்மீரை மூன்று பகுதிகளாக நீங்கள் பிரிக்கலாம். போர் நிறுத்தப் பகுதி, சமவெளி, ஜம்மு- லடாக் பகுதி என்று பிரித்து சமவெளியில் மட்டும் பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என்றுதான் அம்பேத்கர் கூறியிருக்கிறார். இதையே தங்கள் இஷ்டத்துக்கு திரித்து கதை அளக்கிறார் மோடி.

12.காந்தி எங்கள் உயிர்மூச்சு என்கிறார் மோடி.
அவரது மூச்சை நிறுத்தியவர்கள் யார் என மோடி விளக்குவாரா?

13.பலகோடி செலவு

இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த வேண்டுமெனில் சுமார் ரூ. 6 இலட்சம் கோடி தேவைப்படும். அசாமில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த அரசாங்கம் 1,500 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. மொத்த மக்களும் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவழித்துள்ளனர். இப்போது முதல் கேள்வி என்னவென்றால், இத்திட்டத்தை இந்தியா முழுவதும் 130 கோடி மக்களுக்கும் அமல்படுத்தினால் எவ்வளவு செலவாகும் ?
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.

14.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் இஸ்லாமியர்களை விலக்குவது ஏன்?

அவர்கள் 6 மதங்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாகச் சொல்கிறார்கள். புத்த மதம், ஜைன மதம், பார்சி, சீக்கிய மதம், இந்து மதம், கிறுத்துவ மத மக்களை அனுமதிப்பதாகக் கூறுகிறார்கள்.
மொத்தத்தில் அவர்கள் முசுலீம்களை மட்டும் ஒதுக்குகிறார்கள். இது பாஜக ஆர்.எஸ்.எஸ்.-ன் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.
இது ஏற்றுக் கொள்ள முடியாதது. அரசின் மதசார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. நமது அரசியல்சாசனத்தைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதே தேசப்பற்று நடவடிக்கை. அரசியல் சாசனத்தை சிதைப்பது நம்பிக்கை துரோகிகளின் வேலை.

15.இந்துக்களையும் பாதிக்கும் சட்டம்

கட்டிடத் தொழிலாளர்கள் உட்பட சுமார் 42 கோடி தொழிலாளர்களை நேரடியாகப் பாதிக்கும். அவர்களுக்கு வீடு கிடையாது. நிலையான இடத்தில் வேலை கிடையாது. அவர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மூன்று மாதம் கர்நாடகா, 3 மாதம் ஆந்திரா, 3 மாதம் மும்பை என ஒவ்வொருமுறையும் வேலை தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் என்ன ஆவணங்கள் இருக்கும் ?

அர்ஜுன் சென் குப்தா கமிட்டி அறிக்கையின் படி 84 கோடி பேர் ஒரு இடத்தில் 28 நாட்களுக்கு மேல் இருப்பதில்லை. இவர்களிடம் எந்த ஆவணங்களும் இருக்காது. ஆகவே இந்த தேசிய குடிமக்கள் பதிவேடும், குடியுரிமை திருத்தச சட்டமும் இந்துக்களுக்கும் எதிரானது.

  1. பாஜகவின் பித்தலாட்டம்

தங்களது ஓட்டுவங்கியான இந்துக்களுக்கே எதிரானதை பாஜக ஏன் நடைமுறைப்படுத்துகிறது என்று கேட்கிறார்கள்.

அவர்கள் சோறில்லை என்று கேட்டால், இவர்கள் இராமஜென்ம பூமியில் இராமன் கோவில் கட்டுவதாகக் கூறுகிறார்கள். மக்கள் நேரடியாக சொர்க்கத்திற்குச் செல்வது குறித்துப் பேசுகிறார்கள்.

பலதரப்பட்ட மக்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமைதியான வழியில் தொடர்ந்து போராடுகிறார்கள். பல்வேறு போராட்ட வடிவங்களை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களது போராட்டங்கள் விரிவடைந்து செல்கின்றன. மொத்த நாடே பற்றி எரிகிறது. இது இன்னும் பரவும்.

17.குடியுரிமையின் சாரம் என்ன?

குடியுரிமை என்பதை ஓட்டு போடும் உரிமை என்பதாக சுருக்கி பொது மக்களால் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. சொத்துரிமை, கல்வி உரிமை, வேலை உரிமை, தொழில் உரிமை, தங்களது விருப்பமான பண்பாடு, நம்பிக்கைகள், மதக் கடமைகள் தொடர்வதற்கு (பிறருக்கு பாதிக்காத வகையில்) உரிமை, ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க – தேர்வு செய்யப்படும் உரிமை, இராணும் – நீதி – நிர்வாகத் துறைகளில் சம வாய்ப்பினைப் பெறும் உரிமை, மனித மாண்புகளுடன் வாழும் மனித – சனநாயக – சுதந்திர உரிமைகள் அனைத்தும் இணைந்ததுதான் குடியுரிமை சாரம்சமாகும்.

18.அகதிகளின் நிலை

இன்றைய மனித குலத்தின் பேரவலம் எது? பெருந்துயரம் எது? முரண்பாடு எது? முதன்மையான சிக்கல் எது?

வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், வன்முறை, சுதந்திரம் இழப்பு, சனநாயக மறுப்பு, ஓடுக்குமுறை, மனித உரிமை மீறல், கார்ப்பரேட் சுரண்டல், உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராள மயமாக்கல், ஆணாதிக்கம், சூழலியல் பேரழிவு, போர்கள், கலவரங்கள்…. இப்படி பலவற்றை இதற்கு விடைகளாக எழுதிக் கொண்டு போகலாம். ஆனால் அனைத்திலும், மனித மாண்பின் சவாலாக அமைந்த பிரச்சினையாக அகதிகள் வாழ்வியல்தான் முதன்மையானதாக இருக்கிறது. மேற்கொண்ட அனைத்துப் பிரச்சினைகளும், அதன் முரண்களும் பின்னிக் கலந்து அகதிகள் பிரச்சினையை பெருந்துயரமாய், மனிதப் பேரவலமாய் மாற்றியுள்ளது.

19.ஈழத்தமிழர்கள்-அதிமுக இரட்டை வேடம்

30 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் இங்கு வாழ்கிறார்கள். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் அதிமுக இந்தச் சட்டத்தை ஆதரித்ததன் மூலம் தமிழ் சமூகத்திற்கே பெரும் துரோகத்தைச் செய்துள்ளது. இது மன்னிக்க முடியாத குற்றம்.
ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நாம் மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.

சூர்யா சேவியர்.

Related Posts