தலையங்கம்

கீழ வெண்மணி – சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவோம்!

இதே தமிழகத்தில்தான் டிசம்பர் 25 தேதியும் வந்தது.

‘கீழ வெண்மணி’ படுகொலைகளை – மறந்துவிட முடியுமா? “அந்த கிராமத்து ஏழைகள் அரைப்படி நெல்லை உயர்த்திக் கேட்டது ஒரு குற்றம். கேட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், அவர்கள் வர்க உணர்வோடு, சுயமரியாதை உணர்வும் பெற்று எதிர்க்கத் தொடங்கிவிட்டது மற்றொரு குற்றம். இதனை சகித்துக் கொள்ள முடியாத சாதி வெறியும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கமுமே, 3 வயது குழந்தை உட்பட 40 மனிதர்களை உயிருடன் எரிக்கச் செய்தது”

இந்தியாவெங்கும் வர்கச் சுரண்டலும், சாதி ஆதிக்க எண்ணமும் எளிய மக்களை இன்றுவரை நசுக்கித்தான் வருகின்றன. நாமும் விடாது போராடுகிறோம். முதலாளித்துவத்தையும், பார்ப்பனீய கருத்தியல்களையும் வீழ்த்தாமல் சக மனிதனை நேசிக்கும், மனித நேய உணர்வு தழைத்தோங்கச் செய்வது சாத்தியமில்லை என்பது உண்மை. அந்தவகையில், தந்தை பெரியார் நமக்கொரு கருத்தாயுதமாக திகழ்கிறார். அவரைப்போலவே அம்பேத்கரும், சிங்காரவேலரும், ஜீவானந்தமும் – தஞ்சை களப்போராட்டத்தில் முன் நின்ற சீனிவாசராவும் நமக்கு உத்வேகம் கொடுக்கிறார்கள்.

வெண்மணி படுகொலைகள் நடைபெற்றது 1968 ஆம் ஆண்டு, தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் உச்சத்தில் இருந்த காலகட்டம். தி.மு.க ஆட்சியில் இருந்தது. தாழ்த்தப்பட்ட ஏழை உழைப்பாளர்கள் மீதான கீழவெண்மணி படுபாதக அடக்குமுறைக்கு அவர்களின் எதிர்வினை என்ன? சரி இப்போதும்தான் அவர்களின் வழிவந்தோர் நிலை என்ன?.

பொருளாதார ஏற்றத்திற்கான போராட்டமும் சமூக நீதிக்கான போராட்டமும் – சம அளவில் முக்கியத்துவமுடையவை என்பது காலம் சொல்லியிருக்கும் பாடம். இதனை சுய விமர்சனத்தோடு கற்றுக் கொள்வதில்தான் எந்தவொரு முற்போக்கு இயக்கத்தின் தன்மையும் மேம்படுகிறது.

முடிவடையாத சுயமரியாதைப் போராட்டத்தை முன்னெடுக்க மார்க்சிஸ்டுகள் இடையராது முயற்சிக்கிறார்கள். பெரியாரிய இயக்கங்களும், அதே கற்றல் வினையாற்றுவது காலத்தின் அவசியமாகும். சாதி ஆதிக்கப் புற்றுநோயிலிருந்து, நம் சமூகத்தின் விடுதலைக்கு பெரியாரிய, அம்பேத்கரிய கொள்கைகள் அவசியம், ஆனால் முழுமையான வெற்றியை மார்க்சியக் கல்வியே பெற்றுத்தரும். வெண்மணியின் சாம்பலில் இருந்து மனிதம் உயிர்த்தெழுவது இத்தகைய கற்றலில்தான் சாத்தியமாகும்.

Related Posts