அரசியல்

”கீழவெண்மணியின் வாய்மொழி வரலாறு” – நேர்காணல்

ramaih_hut_remains

தென்பறை முதல் வெண்மணி வரை” என்னும் நூலின் ஆசிரியர் தோழர் அப்பணசாமியுடன் ஓர் நேர்காணல்.

பொதுவாக விவசாய இயக்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பாக அதில் நேரடியாக ஈடுபட்ட தலைவர்கள், தனிநபர்கள், கோட்பாடு சார்ந்தும்  அது இல்லாமலும் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் ஓடுக்கப்பட்டோருக்கான இயக்கங்கள் நிறைய உருவாகி வந்திருக்கிற சூழலில் இடதுசாரிகளின் பங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு என்னவாக இருந்திருக்கிறது என கேள்விகள் வருகின்றன ஆனால் உள்ளபடியே பார்த்தால் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக  நிறைய இயக்கங்களை கட்டியுள்ளார்கள்.

இரண்டாவதாக இது  போன்ற இயக்கங்களை ஆவணப்படுத்துதல் தொடர்பாக சுணக்கம் உள்ளது. குறிப்பாக தலைவர்கள் அல்லாமல் கீழ் மட்டத்தில் பங்கெடுத்த தோழர்களின் பார்வையை பதிய வேண்டிய தேவை இருப்பதாக உணர்ந்தேன். திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த போராட்டங்கள் என பல இவ்வாறு ஆவணப்படுத்தாமல் உள்ள போராட்டங்களை பற்றி  தோழர்கள் சென்னை புக்ஸ் பாலாஜி  மற்றும் பலருடன் பகிர்ந்துகொண்டேன். பாலாஜி இதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளார். அப்போது  நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக இருந்த ஜி.ஆர் இந்த ஆவணப்படுத்தும் முயற்சியை வரவேற்றார்.

இம்முயற்சியை தொடங்குவதற்கு முன் நான் வைத்த முதல் கோரிக்கை கீழத் தஞ்சை விவசாயிகள் சங்க வரலாற்றை, சிபிஐ(எம்) மட்டும் சம்மந்தப்பட்ட நிகழ்வாக  பார்க்கவியலாது என்பதுதான். அதில் பிரச்சனை ஒன்றும் இல்லை நீங்கள் பல கோணங்களிலிருந்து அனைவரையும் சந்தித்து பதிவு செய்யுங்கள் என ஜி.ஆர்-ம் கூறினார். எங்கள் களப்பணி தினமும் நூறு கிலோமீட்டர் வரை பைக்கில் சென்று இயக்கத்தில் பங்கு பெற்ற தோழர்களை சந்தித்து பேசுவதுதான். 15748711_1168400506583627_1312938771_oவிவசாயிகள் போராட்ட வரலாறு 1930-களில் தென்பறையில் துவங்குகிறது. எனவே அவ்விடத்திலிருந்தே தொடங்கினோம் பலருக்கு வயது தொன்னூறுக்கு மேலே கடந்துவிட்டது. கூறப்போனால் வெண்மணி இயக்கத்தில் பங்கு பெற்றவர்களதான் இளையவர்களாக தமது அறுபதுகளில் இருந்தனர். அவரகள் நினைவலைகளிலிருந்து விஷயங்களை வாங்குவது சற்றே கடினமாகத்தான் இருந்தது. சில நேரம் ஒரே நபரின் இடத்தில் இரண்டு மூன்று நாள் வரை கூட தங்கியிருக்கிறோம். இவ்வாறு ஒரு இருபது பேரை நேர்க்காணல் செய்தோம். இதில்லாமல் ஜி.வீரையன், ஏ.எம்.கோபு ஆகிய தலைவர்களையும் நேர்க்காணல் செய்தோம். இவை அனைத்தும் நடந்து பன்னிரெண்டு வருடங்களாகிவிட்டது! இந்த நேர்க்காணலில் வந்த அரசியல் கருத்துக்களை பெரும்பாலும் தவிர்த்துவிட்டோம். இந்த களப்பணியின் நோக்கமே இன்றைய தலைமுறைக்கு ஒடுக்கப்பட்டவர்களின் மத்தியில் இடதுசாரிகளாற்றிய களப்பணியை கொண்டு செல்வதுதான். அந்த வகையில் இந்த புத்தகம் இடதுசாரி அமைப்பினரிடம் மட்டுமல்லாது தலித் அமைப்புகளிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த அமைப்புகளில் உள்ளவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில்  இடதுசாரிகள் இவ்வளவு வேலை செய்துள்ளனரா என தெரிந்துகொண்டனர். இதற்கு எதிர் விமர்சனங்களும் வராமலில்லை. நானும்  இந்த களப்பணியை  வெண்மணியுடன் நிறுத்திக் கொண்டேன். அதன் பிறகு தொடர இயலவில்லை. இதுதான் இந்த புத்தகத்தையொட்டிய எனது அனுபவத்தின் சுருக்கம். நீங்கள் இப்போது  கேள்விகள் கேட்கலாம்

கே: நீங்கள் பேசும்போது இந்த போராட்டங்களை பற்றிய தரவுகள் இல்லையென கூறினீர்கள் ஏன் இந்த நிலை என்று நினைக்கிறீர்கள்?

ப: ஆம் கூறப்போனால் இப்போராட்டங்கள் பற்றிய தரவு சேகரிப்பில் இதுதான் முதல் முயற்சி என்றுகூட கூறுவேன். ஏனெனில் தரவுகள் கீழே களத்தில் இருக்கும் தோழர்களின் வழியே கிடைக்க வேண்டும் . மேல் மட்டத்தில் இயக்கத்தை வழிநடத்திய தலைவர்களின் பார்வையிலிருந்து கண்டிப்பாக இது மாறுபட்டிருக்கும். அந்த வகையில் தரவு சேகரிப்பில் இயக்கங்கள் பின்தங்கிதான் உள்ளன. இப்புத்தக தரவு சேகரிப்பின் போதே தோழர் எம்.கே-வை பார்க்க வேண்டியது, ஆனால் முடியவில்லை. ஆக இந்த வகை தரவு சேகரிப்பு என்பது தமிழக  விவசாயிகள் இயக்க போராட்ட வரலாற்றில் மிகக்குறைவே. அந்த வகையில் விவசாயிகள் இயக்க வரலாற்றில் 1950-க்கு முன்பு இருந்த முக்கியமான தோழர்கள், மன்னார்குடி ஒப்பந்தம், ஆத்தூர் கொலைச்சம்பவம் ஆகிய போராட்டங்களில் இருந்த, பங்குபெற்ற  அனைவரையும் சந்தித்துவிட்டோம். அந்த வகையில் தமிழக  விவசாய இயக்கங்களுக்கான தரவு சேகரிப்பில் இது ஒரு முயற்சி.

கே: தலித் இயக்கங்கள் பெருவாரியாக உருவாகி இருந்திராத சூழலில் குறிப்பாக 80-களுக்கு முன்னால் நடந்த  போராட்டங்களில் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியிருந்தாலும் இடதுசாரிகள் தலைமை தாங்கியதாலேயே அவை தலித்துகளுக்கான போராட்டமாக பேசப்படாமல் போனதா?

ப: அவ்வாறு ஒரேடியாக தலித்துகள் அமைப்பாக இல்லை என்று கூற முடியாது. மராட்டியத்தில் அம்பேத்கர் போல நமக்கும் இங்கே அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், சிவராஜ் என போராளிகள் இருந்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் தலித் மக்களின் சமுதாய விடுதலைக்காகப் போராடும் பாணியை பின்பற்றினர். சுதந்திரமடைந்தால் சாதி வித்தியாசம் எல்லாம் இருக்காது என்ற காங்கிரசின் போலி வாக்குறுதிகளை அவர்கள் நம்பவில்லை.. காங்கிரஸிலிருந்து வெளியேறிய பெரியார் பல முன்னெடுப்புகளை நிகழ்த்தினார். எடுத்துக்காட்டுக்கு மன்னார்குடி காங்கிரஸ் மாநாட்டில் வேதரத்தினம் முதலியார் சாதியெல்லாம் சுதந்திரம் வந்தால் இருக்காது என்று கூறியதை கேட்டுக்கொண்டு  உணர்ச்சி வசப்பட்ட நாவிதர் ஒருவர் அங்கு நடந்த சமபந்தி போஜனத்தில் தனது குடும்பத்துடன்  உணவருந்தியுள்ளார். அங்கு ஒன்றும் பேசாதவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதும் அந்த நாவிதரை அழைத்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி அவமானப்படுத்தியுள்ளனர். இது பெரியாரின் காதுக்கு எட்டியதும் அவர் மாயவரத்திற்கே சென்று அந்த நாவிதரையும் அவர் சமூகத்தாரையும் அழைத்து ஒரு மாநாடே நடத்தினார்! இவ்வாறு அமைப்பாக உருவாகாத சூழலில், வாழ்க்கையில் சுதந்திரத்திற்கு பின்பும் சாதிய ஒடுக்குமுறையில் மாற்றம் ஏற்படாததாலும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்  களையப்படாததாலும், பெரும்பாலான தலித் மக்கள் இடதுசாரிகளின் பின் போராட்டக்களத்தில் அணிவகுத்தனர்.

இதனால்தான் விவசாய போராட்டங்களில் பெருமளவு தலித் மக்களை இடதுசாரிகளால் திரட்ட முடிந்தது. ஆனால் தலித் மக்களை அணிதிரட்டினோம் என்று இடதுசாரிகள் கோரிக்கொள்ளவில்லை. 80-களின் இறுதியில் தலித் மக்களில்  ஒரு பகுதியினர் முன்னுக்கு வந்துகொண்டிருந்த  சூழலில் இதர சாதியினருடன் அவர்கள் சமமாக வாழும் வாழ்க்கைச் சூழலை நகரங்கள் போல் கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் பார்க்கப்படவில்லை. அங்கு இந்த சாதியப்பார்வையால் உண்டாகும் மோதல்கள் மேலும் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழா ஆகியன தலித் அமைப்புகள் வரலாற்றில் புதிய சகாப்தத்தை தமிழகத்திலும் அகில இந்திய அளவிலும் தோற்றுவித்தன. இந்த பின்னனியில்தான் தலித்கள் இடதுசாரிகளின் தலைமையின் கீழ் இருந்ததையும், தனக்கான அமைப்புகள் உருவாக்கிக்கொண்டதையும் பார்க்கவேண்டும்.

கே: இன்றும் பலதரப்புகளில் குறிப்பிடும் போது இது அரைப்படி நெல் அதிகம் கேட்டதற்காக எரித்து கொல்லப்பட்டதாகத்தான் வெண்மணியை விவரிக்கிறோம். ஆனால் இதில் சாதியப் பார்வை உள்ளது என்பதும் உரக்க கூற வேண்டியதல்லவா?

ப: வெண்மணி நிகழ்வை பல வளர்ச்சிப்போக்குகளின் ஒரு முக்கிய  கட்டமாகத்தான் நீங்கள் பார்க்கவேண்டும். 1930-களின் தொடக்கத்தில் அங்கிருந்த நிலைமைகளே வேறு. வேலையில் சுனக்கம் ஏற்பட்டால் சவுக்கடி, சாணிப்பால்தான், கைரேகை தெரியாத அதிகாலையில் வந்து வேலை செய்து, கைரேகை தெரியாத அந்திப்பொழுதில்தான் போகவேண்டும். பண்ணையடிமை என்றால் ஒரு பண்ணையில் வேலை செய்யும் கூலி. நிலைமை எவ்வளவு மோசமானாலும் வேறெங்கும் செல்லக்கூடாது. குடும்ப நல்லது கெட்டதுக்கு ஆண்டைகளிடம்தான் பணம் வாங்கவேண்டும். திருமணம் நடந்தால் மனைவிக்கு முதலிரவு ஆண்டேயோடுதான். வீட்டிற்கு கதவு வைத்துக்கொள்ளக்கூடாது. இந்த மோசமான சூழலில்தான் பி.சீனிவாசராவ் அங்கு விவசாயிகள் இயக்கம் கட்ட வருகிறார். இன்று சொல்கின்ற அடங்க மறு . . . . ! அத்துமீறு . . . . ! என்பதை அப்போதே சொன்னவர். “அடித்தால் திருப்பி அடி, போடி என்றால் போடா என்று சொல்லுங்கள், அவர்களுக்கு கைகால் இருப்பது போல் உங்களுக்கும் இருக்கிறது” என்று தைரியம் கூறினார். அவர்களுடன் பழகுவதற்காகவே தனது நடை உடை பாவனைகளை அவர்களுக்கு புரியும் விதத்தில் மாற்றிக்கொண்டார். அவர்களை அமைப்பாக அணிதிரட்டினார் . இன்றும் அவர்களது நடவுப்பாடலில் பி.எஸ்.ஆர்-ன் பேரைக் காணலாம்.

பி.எஸ்.ஆர் வந்து இயக்கம் கட்டத்துவங்கியது மன்னார்குடியில்தான். அங்கிருந்த தென்பறை என்னும் ஊரில் தொடங்கிய போராட்டம் மன்னார்குடி திருத்துரைப்பூண்டி என்று தீயென பரவியது. ஒரு கட்டத்தில் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மாவட்டங்கள் முழுக்க செங்கொடி சங்கக் கோட்டையாக மாறியது. விவசாயிகள் கட்சியின் தலைமையில் சங்கங்களாக திரண்டு போராட ஆரம்பித்தனர். இதன் விளைவாக பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இவற்றை அமுல்படுத்த மேலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இது பல இடங்களில் நிலக்குவியல்களை உடைத்தது. வேலைக்கு கூலி முறை அமுலானது. விவசாயத் தொழிலாளர்கள் சிறு விவசாயிகளாக மாறினர். இதில் பல சாதிய கட்டுமானங்கள் அடிவாங்கின.  எடுத்துக்காட்டுக்கு படையாச்சி விவசாய தொழிலாளர்களும் தலித் தொழிலாளர்களும்  ஒரே வாழ்நிலையில் இருக்கும் சூழல் இருந்தது.  இதில் பல பண்ணையாளர்களுக்கு தமது ஆதிக்கம் குறைந்ததில் அதிருப்தி ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் கூட வெண்மணி எரிப்புக்கு காரணமான கோபாலகிருஷ்ணநாயுடு எனும் பண்ணையாருடன் கூட்டு சேர்கின்றனர். இதற்கெல்லாம் அரசியல் பின்னணியில் அன்று ஆட்சியில் இருந்த திமுகவும் ஒரு காரணம். ஒருபுறம் செங்கொடி சங்கங்கள் வலுப்பெற்றுக்கொண்டிருக்க மறுபுறம் எதிரிகளும் ஒன்றுகூடிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் நிகழ்ச்சிகளின் வேகமான வளர்ச்சிப்போக்குகளில்   வாழ்வா . . . . . சாவா  . . . . . . .  என்ற கட்டத்தில் வெண்மணியில் பிரச்சனை வெடிக்கிறது. இது சாதிய, பொருளாதார மற்றும் தொடர் போராட்டங்களால் வெவ்வேறு அணிகளாக பிரிந்தவர்களுக்கு இடையில் நடந்த உச்சகட்ட போராட்டம் என்றுதான் பார்க்கவேண்டும்.

கே: இந்த வரலாறை வாய்மொழி வரலாறாக பதிய காரணம் என்ன?

ப: பொதுவாக வரலாறு எனது மேல்மட்டத்தில் இருந்து கட்டப்படுகிறது. ஆட்சியாளர்கள், மேட்டுக்குடிகள், அரசர்கள் வெட்டிய கல்வெட்டுகள், பட்டயங்கள், ஆட்சியாளர்களின் வரலாறுகளைக் கூறும் இலக்கியப்பாக்கள் ஆகியவையே வரலாறாகத் தொகுக்கப்படுகின்றன. இதில் மக்கள் அந்த ஆட்சியை எப்படி பார்த்தார்கள், அவர்கள் பாடு என்ன என்பது பதிவுசெய்யப்படுவதில்லை. அந்த மக்கள் பேசும்போதே அது மக்கள் வரலாற்றுக்கான தரவுகளாகிறது. இதனை வாய்மொழி இலக்கியம் எனலாம். இவ்வாறு வாய்மொழி வரலாறை பதியும்போது இதுபோன்ற இயக்கத்தில் இழந்தது என்ன? பெற்றது என்ன? என்னும் நமக்கு இதுவரை தெரியாத வரலாற்று பார்வை இதில் கிடைக்கும். நிகழ்ச்சிப்போக்குகளை புதிய கோணங்களில் அணுகமுடியும். இன்றைக்கு ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை படிக்கும் துறைகளெல்லாம் வந்துவிட்ட சூழலில் இது போன்று பதிவது அவசியமாகும்

கே: இந்த வருடம் மட்டும் இதுவரை தமிழகத்தில் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள், கூலி கேட்டால் கொலை என்கிற காலம் மாறிப்போய், பொருளாதாரக்காரணிகள் தற்கொலைக்கு தூண்டும் காலத்திற்கு வந்திருக்கிறோம், உலகமய சூழலில்  சாதிய அம்சங்கள் விவசாயிகளின் பிரச்சனையை பின்னுக்கு தள்ளி, பொருளாதார  காரணிகள் முன்னெடுத்துக் கொண்டு இருக்கும் காலங்களில் இருக்கிறோமா?

ப: இந்த கேள்வி என் மனதில் ஓடியதால்தான் கோ.வீரையன் அவர்களின் பேட்டியை எனது புத்தகத்தில் கடைசியில் இணைத்தேன். இன்று நிலக்குவியல் பெருமளவு உடைக்கப்பட்டுவிட்டது. ஆனால் தனி ஒரு ஆள் 3000 – 4000 ஏக்கர் வைத்திருந்தது போய் பன்னாட்டு கம்பனிகளும், கார்ப்ரேட் நிறுவனங்களும் சர்வ சாதாரணமாக 10,000, 20,000 ஏக்கர் வைத்துள்ளனர். நில உச்சவரம்பு சட்டம் உள்ளதா என்று சந்தேகமே வருகிறது. தென்பறை முதல் வெண்மணி வரை வாய்மொழி வரலாறு புத்தகத்துக்கான கள ஆய்வு செய்து சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன. அப்போதிருந்த புரிதலுக்கும் அதன்பிறகான அனுபவங்களினூடாக பெற்றகல்வியின் பயனாக இன்று சிந்திப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

அன்றைய மதிப்பீடுகளாக

கீழைத்தஞ்சை விவசாய தொழிலாளர்கள் எழுச்சி என்பது நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் பெற்றுத்தரும் போராட்டமாக விரிவடைந்தது.

விவசாய தொழிலாளர்களில் 80%க்கும் அதிகமானவர்கள் தலித் மக்கள் என்பதால் இப்போராட்டம் தீண்டாமையை அழித்தொழிப்பதிலும் முக்கியக்கவனம் செலுத்தியது. பல கிராமங்களில் தலித் மக்கள் நிலங்களை உடமையாகப் பெற்றதால் கிராமப்புற சமுதாய நிறுவனங்களில் சாதிகளின் சமமற்ற நிலை ஓரளவுக்கு குலைந்தது. பழைய நில உடமை உறவுகள் உடைப்பதற்கு உழுபவனுக்கே நிலம் என்ற கோரிக்கையை வென்றெடுப்பதன் அவசியம் உணரப்பட்டது.

ஆனால், கீழத்தஞ்சை போராட்டப்பாதை தமிழகம் முழுவதும் தொடரவில்லை. இதனால் கீழத்தஞ்சை மாவட்டத்திலும் தீண்டாமையை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இதனால் அங்கு தலித் அமைப்புகள் உருவாகின. இவையே அன்றைய புரிதலாக இருந்தது. இன்று, இப்பார்வையில் எனக்கு மாறுதல் உள்ளது.

அன்று விவசாயம் என்பது ஓரளவுக்காவது விவசாயிகளை வாழவைக்கும் தொழிலாக இருந்தது. ஒரு குடும்பம் ஓரு ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு கவுரவமாகப் பிழைக்க முடிந்தது. தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடிந்தது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கடைப்பிடித்ததால் இன்று விவசாயத் தொழில் என்பது முற்றிலும் நலிவடைந்த தொழிலாக மாறிவிட்டது. விவசாயிகள் நிலத்தை நம்பமுடியாத நிலை வந்துவிட்டது. விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். இருக்கும் நிலத்தை விற்றுவிட்டு திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். குறிப்பாக காவிரி டெல்டா பாலைவனமாகும் அபாயம் உருவாகியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் டெல்டாவில் எந்த நிலத்திலும் தொடர்ந்து சாகுபடி நடைபெறவில்லை. சிறுவிவசாயிகள் நிலைமை இன்னும் மோசம். அரசுகள் விவசாயத்தைக் கிட்டத்தட்ட கைவிட்டு விட்டது. இந்தநிலையில் தலித் மற்றும் நலிவடைந்த விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் நிலைமை இன்னும் மோசமாகிக்கொண்டிருக்கிறது. இதனால் அவர்கள் வேகமாக சமூக கெளரவத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே,

தலித் மக்கள் அனைவருக்கும் நிலம் உடமையாக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் நில உடமை உற்பத்தி உறவுகளை முற்றிலுமான நவீனப்படுத்தி தொழில்மயமாக்கி,  விவசாயத்துடன் இணைந்த தொழில் வளர்ச்சியும் அதில் தலித் மற்றும் நலிவடைந்த மக்களுக்கு பயிற்சி அளித்து, அதில் அவர்கள் மூலதனத்தை அதிகப்படுத்துவதும், முக்கியமாக அனைத்து தனியார் துறைகளும் இடஒதுக்கீடு அமல்படுத்துவதும், விவசாயத் தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புகளும் சமூக சமத்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தலித் விடுதலை என்பது என் பார்வையில்

  • உழுபவனுக்கே நிலம்
  • அனைத்து தலித் மக்களுக்கும் உயர்கல்வி
  • கிராமப்புறங்களில் தொழில் வளர்ச்சி
  • தொழில்துறைகளில் தலித் மக்கள்முதலீடு அதிகரிப்பு

ஆகிய கோஷங்கள் அடங்கியதாக இருக்கிறது. 

இந்த அரசு கார்ப்பரெட் கம்பெனிகளின் கூட்டை எதிர்த்து இயக்கம் கட்ட வேண்டிய சூழல் உள்ளது. இந்த சூழலிலும் தலித்துகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். கிருஷ்ணம்மா-ஜகந்நாதன் போன்றோர் வெண்மணி போராட்டத்தால் உந்தபட்டு இன்று இவ்வாறு நவீன சுரண்டலுக்கு ஆட்படுபவர்களுக்கு சட்டத்தின் மூலம் நிலத்தை மீட்டு கொடுத்து வருகின்றனர்.  நிலத்துக்கும் மனிதனுக்குமான உறவு மகத்தானது. நமது நாட்டில் சாதி ஆதிக்கத்தை ஒழிக்க நிலச்சீர்திருத்தத்தை பரவலாக்க வேண்டும். அதுவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மாண்பை கொடுக்கும்.

 – நேர்காணல்: சீதாராமன்

Related Posts