கிரேக்க நெருக்கடி: விடிவு சாத்தியமா? – 1 – பீட்டர் மார்டின்ஸ்

peter_mertens[1]ஐரோப்பிய அதிகார மையத்திடமிருந்து கிரேக்கத்தை பணியவைக்கிற ஆணை வெளிவந்து சில வாரங்கள் கடந்துவிட்டன. இச்சூழலில், கிரேக்கத்தின் நிலையினை ஆய்வு செய்துபார்க்க வேண்டியது அவசியமாகிறது. “பெல்ஜியம் தொழிலாளர் கட்சி”யின் தலைவர் பீட்டர் மார்டின்ஸ், “எவ்வளவு தைரியம் அவங்களுக்கு?” (Hoe Durven Ze) என்றொரு நூல் எழுதியிருந்தார். அந்நூல் பெல்ஜியத்தில் அதிகம் விற்பனையான நூல்களில் ஒன்று. அந்நூலில் கிரேக்கத்தின் நிலைகுறித்து அப்போதே மிகவிரிவாக எழுதியிருந்தார். சமீபத்தில் அவர் கிரேக்கம் பற்றிய மிகநீண்ட கட்டுரையொன்றினை De Wereld Morgen என்கிற பெல்ஜியப் பத்திரிகையில் டச்சு மொழியில் எழுதியிருக்கிறார். அதில், ஜெர்மனி எவ்வாறு 2011 முதலே  ஐரோப்பிய பகுதி முழுவதும் தனது ஆளுமையை செலுத்தி அதிகாரத்தை கைப்பற்றியது என்பதை 13 தலைப்புகளில் குறிப்பிட்டு, மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். இருப்பினும், அவர் கிரேக்கத்தின் இன்றைய நிலை கோடிக்கணக்கான ஐரோப்பியர்களை சிந்திக்க வைத்துள்ளது என்று நம்பிக்கையுடன் கட்டுரையை முடித்துள்ளார்…

[தமிழில்- தீபா சிந்தன்]

1. ஐரோப்பிய மக்கள் மீதே நெருக்கடியைத் திருப்பி அனுப்புகிறார்கள் ஐரோப்பிய அதிகார மையத்தினர்

ஜூலை 17 ஆம் தேதி இடைவிடாது நடந்த 17 மணிநேர பேச்சுவார்த்தைக்குப்பின்னர் கிரேக்க அரசைப் பணியவைத்து ஐரோப்பிய அதிகார மையம் போட்ட ஒப்பந்தம், அந்நாட்டை சிலுவையில் அறைந்ததற்கு ஒப்பானது. அதனால், எவ்வித பலனும் அம்மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை. ஆலந்தின் நிதியமைச்சர் ஜெரோன் டெய்செல்ப்ளூம், பெல்ஜிய நிதியமைச்சர் யோஹான் வான் ஓவர்த்வேல்ட்ட் ஆகியோர் மட்டுமே இதனை ஒப்புக்கொண்டனர்.

யுரோ குழுமத்தின் தலைவரும், ஐரோப்பாவின் நிதியமைச்சருமான ஜெரோன் டெய்செல்ப்ளூம் ஜூலை 14 ஆம் தேதி “முன்னெப்போதையும் விட தற்போது யுரோ சிறப்பாக செயல்படுவதாக” அறிவித்தார். ‘வீழ்வதற்கு முன்னால் பெருமைப்பட்டு என்ன பயன்?’ என்று ஆலந்தின் சமூக ஜனநாயகவாதியான அவருக்கும் புரியாமல்தான் போயிருக்கிறது. நெருக்கடியில் இருப்பவர்களை மீண்டும் தொடர்ந்து வந்து தாக்குவதே ஐரோப்பிய அதிகார மையத்தின் கோட்பாடு என்பது கிரேக்கப் பிரச்சனையிலும் உறுதியானது. தொடக்கம் முதலே யூரோ நாடுகளில் இருந்த அடிப்படியான ஏற்றத்தாழ்வுகளை களைய அவர்கள் முற்படவில்லை. ஐரோப்பாவில் நிலவி வரும் மீளமுடியாத கடன் நெருக்கடிகளை தீர்க்கும் வழிமுறைகள் சொல்லப்படவில்லை. கிரேக்கத்தின்  நிலைமையை சரி செய்யவும் அவர்கள் உதவவில்லை. கிரேக்கத்துடன் ஐரோப்பிய அதிகார மையம் கையெழுத்திட்ட ஒப்பந்தமானது, நெருப்பின் மேல் போர்த்தப்பட்ட கம்பளிக்கு சமமாகும். ஒரு வினாடி நெருப்பை அணைப்பதுபோலத் தோன்றும். ஆனால், அது நெருப்பை தற்காலிகமாக மறைத்திருக்கிறது என்றும், இறுதியில் நெருப்பிற்கு அக்கம்பளியும் இரையாகும் என்பதும்தான் எதார்த்தமான உண்மை.

நடைமுறைக்கு சாத்தியமற்ற கோரிக்கைகளை திணித்து, யுரோவிலிருந்து கிரேக்கத்தை  வெளியேற்ற ஜெர்மனின் நிதியமைச்சர் வோல்ப்காங் முயற்சி செய்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஜெர்மனோ அவையெல்லாம் வெறும்  வதந்திகளே என்று மறுப்பு தெரிவிக்கிறது. ஆனால், நெருக்கடியை சமாளிக்க இவை எதுவும் உதவவில்லை என்பதே உண்மை.  இன்னும் சில வாரங்களில் ஒப்பந்தந்தில் குறிப்பிட்ட 86 பில்லியன் யுரோவைத் தவிர, மேலும் 53.3 பில்லியன் யுரோ தேவைப்படும். இவையனைத்திற்கும் மேலாக கிரேக்கத்தின் தற்போதைய கடன் தொகை 350 பில்லியன் யுரோவாக இருக்கிறது. கிரேக்க மக்களால் இக்கடனை திருப்பி செலுத்தமுடியும் என்று முட்டாள்கள் கூட நம்பமாட்டார்கள்.

கிரேக்கர்களுக்கு நிதயுதவி அளித்து கடனிலிருந்து அந்த தேசத்தை மீட்போம் என்று சிலர் சூளுரைப்பது வெறுமனே கட்டுக்கதை. கிரேக்கத்திற்கு வழங்கப்படுவதாக தெரிவித்திருக்கிற பணமும் அந்நாட்டிற்கு போய்சேரப்போவதில்லை; மாறாக, கடன் கொடுத்தவர்களுக்கே மீண்டும் பழைய கடனுக்கான வட்டியாகத்தான் போகப்போகிறது. இந்த ஒப்பந்தங்கள் யாவும் மீண்டும் கிரேக்கத்தை படுகுழியில் தள்ளவே பயன்படும்.

அத்தியாவசியப் பொருட்களைக்கூட வாங்கும் திறன் மக்களிடம் குறைந்துகொண்டே வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பிய அதிகார மையத்தின் ஒப்பந்தப்படி, இனிவரும் பல பத்தாண்டுகளுக்கு கிரேக்கத்தின் செலவைவிட குறைந்தபட்சம் 3.5 சதவீதம் அளவாவது வருமானம் அதிகமாக இருக்கவேண்டும். இது நிச்சயமாக சாத்தியமே இல்லாத இலக்கு. மேலும், அந்நாட்டின் அரசுக்கு சொந்தமாக இருக்கிற 50 பில்லியன் யூரோ அளவிற்கான சொத்துக்களை கட்டாயமாக விற்றேயாக வேண்டும். 2011 லும், ட்ராய்கா இதே போன்றதொரு கட்டுப்பாட்டை விதித்தது. அப்போது 3.2 பில்லியன் யுரோ சொத்துக்களை விற்கவைத்தது. ஐரோப்பிய அதிகார மையம் பிறப்பிக்கும் இதுபோன்ற ஆணைகளை செயல்படுத்தத்தவறினால், கிரேக்கம் ஒப்பந்ததை மீறியதாகவும், அதனாலேயே அவர்கள் நெருக்கடியில் சிக்கிக்கொள்வதாகவும் உளறிக்கொட்டுவார்கள்.

இதேநிலை, முன்பு 109 பில்லியன் யுரோ கடன் வழங்கும்போதும் போதும் ஏற்பட்டது. ட்ராய்காவின் கணிப்பின்படி, கிரேக்கப் பொருளாதாரம் சற்று தொய்வடைந்தாலும், மீண்டும் வெகுவிரைவில் பெரிய அளவில் வளரவேண்டும் என்பதே. ஆனால், இறுதியில் என்ன நடக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. பொருளாதார நெருக்கடியால் கடன் அதிகரித்து, இறுதியில் கடனை திருப்பி செலுத்தும் காலஅவகாசம் நீட்டிக்கப்படவேண்டிய நிலைதான் ஏற்பட்டது. மேலும் 130 பில்லியன் யுரோ தேவைப்பட்டது. 90 சதவீத பணமும் மீண்டும் ஐரோப்பிய பெருமுதலாளிகளுக்கே முன்புவாங்கிய கடனுக்கான வட்டியாக, மீண்டும் சென்றுசேர்ந்தது. கிரேக்கத்தில், 15 இலட்சம் மக்கள் வேலையில்லாமலும், 30 இலட்சம் மக்கள் வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்ந்தும், மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சமூக பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமலும் அவதிப்பட்டனர். டிராய்க்காவின் அதிரடி சிக்கன நடவடிக்கைகளால்  குழந்தைகள் பசியாலும், பட்டினியாலும் வாடினர். பெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளை கவனிக்க முடியாமலும் பள்ளியில் சேர்க்கக்கூட பணமின்றியும், அநாதை விடுதிகளில் கொண்டு சேர்த்தனர். இதற்கு முன்னர் இரண்டுமுறை செயல்படுத்திய சிக்கன நடவடிக்கைகளால் ஏற்பட்ட விளைவுகளிலிருந்து எந்தப்பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை ஐரோப்பிய அதிகார மையத்தினர். அதற்குபதிலாக, அவற்றைவிடவும் மிகமோசமான உத்தரவுகளோடு மீண்டும் வந்திருக்கிறார்கள். ஆனால், கிரேக்கம் மீண்டுவந்துவிடவேண்டுமாம்.

“ஒரே செயலை மீண்டும் மீண்டும் ஒரேமாதிரியாகவே செய்துவிட்டு, ஒவ்வொருமுறையும் வெவ்வேறுவிதமான முடிவுகளை எதிர்பார்ப்பதற்குப் பெயர்தான் முட்டாள்தனம்”

என்ற ஐன்ஸ்டீனின் கூற்றுக்கு ஏற்பவே நடந்துகொள்கிறது ஐரோப்பிய அதிகார மையம்.

இப்படியே தொடர்ந்தால், கிரேக்கத்தால் நெருக்கடியிலிருந்து மீளவே முடியாது. எனவே, இதேபோன்ற நெருக்கடிகளோடு மீண்டும் மீண்டும் வருவார்கள். கிரேக்கத்திற்கு மேலும் எந்த உதவியும் செய்யமுடியாது எனச்சொல்லி யூரோவிலிருந்து அவர்களை விரட்டும் வரையோ அல்லது, கிரேக்கமே வேறுவழியின்றி வெளியேறுகிற சூழலை உருவாக்கும்வரையோ, இப்படித்தான் ஒப்பந்தங்களும் நிபந்தனைகளும் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், யூரோ என்பதும் ஐரோப்பிய ஒன்றியம் என்பதும் மக்கள் நலனையோ ஜனநாயகத்தையோ சிறிதும் கொள்கையாகக்கொண்டிராத ஒரு அரைவேக்காட்டு நிதி ஒன்றியம் என்பதுதான். யூரோவை ஆட்சி செய்வது ஜெர்மன் என்கிற ஒரே தேசமும், ஆர்டோலிபரலிசம் என்கிற ஒரே மதமும்தான். (முதலாளித்துவமும் சந்தைப்பொருளாதாரமும் மக்களை சரியாகச் சுரண்டுகிறதா என்று எப்போதும் அரசு நோட்டமிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பதையும், அவ்வாறு சுரண்டுவதற்கு உதவவேண்டும் என்பதையும்  நோக்கமாகக் கொண்டதுதான் புதிய தாராளமயக்கொள்கை. அதன் ஜெர்மன் பதிப்புதான் ஆர்டோலிபரலிசம்)

2. தன்னுடைய உறுப்பு நாடொன்றின் பாராளுமன்றத்தையே குழிதோண்டிப் புதைத்திருக்கிறது ஐரோப்பா

ஐ.எம்.எப் – ஐரோப்பிய ஆணையம் – ஐரோப்பிய மத்திய வங்கி (ட்ரோய்கா என அழைக்கப்படுகிறது) ஆகியவற்றின் அனுமதிபெற்ற பின்னர்தான், எந்த மசோதாவாக இருந்தாலும், கிரேக்க பாராளுமன்றத்திலோ அல்லது மக்கள் மன்றத்திலோ தாக்கல் செய்யப்படமுடியும் என்கிற நிலையிருக்கிறது. ட்ரோய்கா என்கிற ஐரோப்பாவின் அதிகார மையம் சொல்வதுதான் இறுதித்தீர்ப்பாக இருக்கிறது. கடந்த ஜூலை 15லும், ஜூலை 22லும் ட்ரோய்கா விதித்த கெடுபிடிகளை கட்டாயமாக ஏற்கவேண்டிய நிலைக்கு கிரேக்கம் தள்ளப்பட்டது. பாராளுமன்றம் என்பது, வெறுமனே காலனிய இராஜ்ஜியத்தின் அதிகாரவார்த்தைகளை அமல்படுத்தும் ஒரு அடிமைக்கூடமாக ஆக்கப்பட்டிருக்கிறது. அதுவும், சிலமணிநேரங்களே அவகாசம் வழங்கப்பட்டு, அதற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும் என்கிற நிர்பந்தம் வேறு.

ஜூலை 15 ஆம் தேதி ட்ரோய்காவின் கட்டளைகளை கிரேக்கப் பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடும்போது, கிரேக்க பாராளுமன்ற அதிபர் தன்னுடைய எதிர்ப்பையும் கோபத்தையும் தெரிவித்தே தனது அறிக்கையை வெளியிட்டார்,

“இந்நாள், ஐரோப்பா மற்றும் கிரேக்க ஜனநாயக அமைப்பின் கருப்புதினம். ஐரோப்பிய அதிகார மையத்தின் வெக்கங்கெட்ட மிரட்டல் ஒப்பந்தத்தை வாக்கெடுப்பிற்கு விடுவதற்குமுன்னர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வெறும் இரண்டரை மணிநேரம்தான் இருக்கிறது என்பதால், கிரேக்க பாராளுமன்றத்திற்கும் இது ஒரு சோகமான நாள். கிரேக்கத்தின் இறையாண்மையையும், பொதுச்சொத்தையும் மிரட்டலின்மூலம் காவுகேட்டிருக்கிற நாள். இந்த மிரட்டலுக்கு பாராளுமன்றம் நிச்சயமாக அடிபணிந்துவிடும் என்பதும் தெரிகிறது. பாராளுமன்றத்திற்கு மட்டுமல்ல, நம் மக்களுக்கும், மறைமுகமாக இன்னபிற நாட்டு மக்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கிற அச்சுறுத்தல் இது.”

என்றார். அவர் சொன்னதுபோல, பாராளுமன்றமும் அடிபணிந்தது.

நமது நாட்டின் அரசிற்குச் சொந்தமான இரயில்வே துறை, பொதுப்போக்குவரத்துத் துறை, விமான நிலையம், குடிநீர் விநியோகத்துறை, துறைமுகம் என அனைத்தையும் விற்று, அதிலிருந்து 50 பில்லியன் யூரோக்கள் திரட்டி, அதனை மொத்தமாக லக்சம்பர்கில் ஒரு நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டும் என்றும், அந்நிறுவனத்தை வேறு ஏதோ ஒரு நாடு நிர்வகிக்கும் என்று நம்முடைய அரசுக்கு யாராவது கட்டளையிட்டால் எப்படி இருக்கும்? அப்படி திரட்டப்பட்ட பணத்தில், 50 சதவீதத்தை அயல்நாடு வட்டிக்காரர்களுக்கு கொடுக்கவேண்டும், மேலும் 25 சதவீதத்தை உள்நாட்டு வங்கிகளுக்கு கொடுக்கவேண்டும் என்றும் ஆணையிட்டால், நாம் சும்மா இருப்போமா? அதைத்தான் ஐரோப்பிய அதிகார மையம், கிரேக்கத்திற்கு செய்திருக்கிறது.

பெல்ஜியத்தின் முன்னாள் பிரதமராக இருந்த கீ வேர்ஹோப்ஸ்டட்டின் நிறுவனமான சோபினா, கிரேக்கத்தின் குடிநீர் விநியோக நிறுவனத்தை தனியார்மயமாக்கியதில் முக்கிய பங்காற்றியது என்பதை ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். அதோடு மட்டுமல்ல, இம்முறை கிரேக்கத்தின் 50 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான சொத்துக்களை லக்சம்பர்கில் ஒரு நிறுவனம் உருவாக்கி, அதில் முதலீடு செய்யவேண்டும் என்று ஐரோப்பிய அதிகார மையம் சொல்லியிருக்கிறது. அத்தீர்மானத்தில், முதலில் லக்சம்பர்கிற்கு பதிலாக ஜெர்மனியின் பெயர்தான் இருந்தது. அதுவும், ஜெர்மனியின் நிதியமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில்தான் இது நடக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் கடுமையாக முயன்று, லக்சம்பர்கிற்கு மாற்றியிருக்கிறார். ஆனாலும், அந்த புதிய நிறுவனம் ட்ரோய்காவின் கட்டுப்பாட்டில்தான் வரப்போகிறது. இடம் மாறினாலும், கண்காணிப்பாளர்கள் மாறவில்லை.

இதுபோன்ற நேரங்களில் நடக்கும் விற்பனையை “திவால் விற்பனை” என்று பொருளாதார அழைக்கின்றனர். அதாவது, கிரேக்கத்தின் பொக்கிஷங்களை சந்தையின் விலையைவிட மிகமிகக் குறைவான விலைக்கு விற்றுவிடுகிற திட்டம்தான் அது. கழுகு தனக்கு பிடித்தமான உணவிற்காக வானில் வட்டமிடுவதைப் போல, இத்தகைய சூழ்நிலையில் அடிமாட்டு விலைக்கு திவாலான தேசத்தின் வளங்களை அபகரிக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கும். டென்மார்க் , சீனா , பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் கம்பனிகள் கிரேக்கத்தின் முக்கிய துறைமுகங்களான தெசலோனிக்கி மற்றும் பிரேஸ் போன்றவற்றை கைப்பற்றத் துடிக்கின்றன. கிரேக்கத்தின் மின்வாரியத்துறையை கைப்பற்ற பெல்ஜியமும், இத்தாலியும், சீனாவும் காத்துக்கொண்டிருக்கின்றன. அந்நாட்டின் முக்கிய சுற்றுலாதளங்களில் இருக்கும் 14 விமான நிலையங்களையும் எடுத்துக்கொள்ள  ஜெர்மனியின் ப்ரபோர்ட் நிறுவனம் முயற்சிக்கிறது. ரஷியாவின் கேஸ்ப்ரோம்   நிறுவனமோ, கிரேக்கத்தின் எல்பே என்கிற எண்ணை நிறுவனத்தின் மீது கண் வைத்திருக்கிறது. ஒரு நாட்டின் எந்தெந்த வளங்கள் மீதெல்லாம் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு விருப்பம் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் அந்நாட்டுக்கு நெருக்கடி கொடுத்து விற்கவைப்பதும், அயல்நாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் உள்ளூர் நிறுவனங்களை மூடவைப்பதும்தானே காலனியாதிக்கம். அதுதான் கிரேக்கத்தின் மீதும் திணிக்கப்படுகிறது.

கிரேக்கத்தின் அங்கமாக இருந்த பல தீவுகள் விற்கப்பட்டன.

“11 க்கும் மேற்பட்ட தீவுகள் மிகக்குறைந்த விலையில் நீங்கள் வாங்கலாம். 6.9 மில்லியன் யூரோக்களுக்கு, நாப்சிகா தீவு உங்கள்வசமாகும். லினரி தீவினை 4 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கலாம். ஒம்போரி தீவு 50 மில்லியன் யூரோ விலை.”

என்ற விளம்பரமெல்லாம் ஜெர்மனியின் பிரபல இணையதளத்தில் (finanzen100.de) வெளியானது. வாரன் பப்பெட் கூட, ஏகன் கடலில் 15 மில்லியன் யுரோவிற்கு, சொந்தமாக தீவு ஒன்றை வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடரும்…

தமிழில்

-தீபா சிந்தன்

About தீபா சிந்தன்