அரசியல்

கிரீஸ் என்றொரு அடிமை -பேரா.ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்

கிரீஸ் நாட்டின் நெருக்கடி அடுத்தக்கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை ஏற்பட்டதற்காக ஜெர்மனி, கிரீஸ் அரசு மற்றும் ‘மூன்று முகங்கள்’ என அழைக்கப்படும் பன்னாட்டு நிதி நிறுவனம்(ஐஎம்எப்), ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி , ஐரோப்பிய ஆணையம் ஆகியவை கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கின்றன. இவர்கள் மீது பதிவு செய்வதற்கு ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த ஐந்தாண்டு காலமாக கிரீஸ் நாட்டின் துயரத்தை நான் நெருக்கமான முறையில் கவனித்து வருகிறேன். இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் பேசியிருக்கிறேன். கடந்த ஒரு வார காலமாக கிரீஸ் தலைநகர் ஏதென்சில் மக்களோடு மக்களாக சுற்றித் திரிந்தேன். சாதாரண குடிமக்களுடன் பேசினேன். இளைஞர்களோடு பேசினேன். முதியவர்களோடு பேசினேன். தற்போதுள்ள அதிகாரிகளுடனும் முன்பு இருந்த அதிகாரிகளுடனும் பேசினேன்.

கடைசியாக, கிரீஸ் நெருக்கடியின் தீவிரம் குறித்து நான் ஒரு முடிவுக்கு வந்தேன். அது என்னவென்றால், கிரீஸ் நெருக்கடி என்பது கிரீஸ் நாட்டையும் அது பின்பற்றுகிற யூரோ நாணயத்தையும் மட்டுமல்ல… அதையும் தாண்டி மிகப்பெரிய நாசகர விளைவை ஏற்படுத்தப் போகிறது என்பதுதான். இப்போது மீண்டும் கடன் கொடுத்து கிரீஸ் நாட்டை கடன் வலையிலிருந்து மீட்கப் போவதாகக் கூறி, பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் மேற்படி மூன்று முகங்களான ஐஎம்எப், ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி, ஐரோப்பிய ஆணையம் ஆகியவை கிரீஸ் நாட்டின் அடிப்படையான சட்டங்களை மாற்றுமாறு கூறுகின்றன. வரிவிதிப்பு, செலவினங்கள் பற்றி பல நிபந்தனைகளை விதிக்கின்றன. குறிப்பிட்ட சில சந்தைகளைப் பாதிக்கும் விதத்தில் உள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்றும்படி நிர்பந்திக்கின்றன. இதற்கு ‘மூன்றாவது புரிந்துணர்வு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் புதிய திட்டம் பற்றி நமக்கு தெரியவருவது என்னவென்றால், இவையெல்லாம் அமலானால் கூட அது கிரீசுக்கோ அல்லது அந்நாட்டிற்கு கடன் தருபவர்களுக்கோ எந்த பலனையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதுதான்.

இது பற்றிய விபரங்களை நான் ஆய்வு செய்தேன். ஒரு மர்ம தேசம் மேலும் பல மர்மங்களைச் சந்திக்கப் போகிறது என்றே நான் உணர்ந்தேன்.

1990களின் பிற்பகுதியில் உலக வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகராக நான் பணியாற்றினேன். அப்போது, பொருளாதார உதவி செய்வதாகக் கூறி பன்னாட்டு நிதி நிறுவனம் (ஐஎம்எப்) கிழக்கு ஆசிய நாடுகளில் பல திட்டங்களைச் செயல்படுத்தியது. செயல்படுத்தியது என்று கூறுவதைவிட நிர்பந்தமாகத் திணித்தது என்று சொல்லவேண்டும். அந்தத் திட்டங்களால் அந்த நாடுகளில் மிகக் கொடூரமான விளைவுகள் ஏற்பட்டதை- பேரழிவு ஏற்பட்டதை கிழக்கு ஆசியா முழுவதிலும் கண்ணால் கண்டேன்.இந்த நாடுகளில் அரசாங்கச் செலவினங்களில் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியது மட்டுமல்ல, அந்நாடுகளின் அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைத் திணித்தது. ஒருவர் நலனை பலியிட்டு மற்றொருவர் நலனை முன்நிறுத்தியது. நூற்றுக்கணக்கான நிபந்தனைகள்… சில சிறிய நிபந்தனைகள் , சில பெரிய நிபந்தனைகள், பல பொருத்தமற்ற நிபந்தனைகள், சில நல்ல யோசனைகள், பல மோசமான நிர்பந்தங்கள் என கிழக்கு ஆசிய நாடுகளை உலுக்கி எடுத்தது. இவற்றை அமலாக்க மற்ற நாடுகள் தங்களது பொருளாதாரக் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது.

நான், 1998ல் இந்தோனேஷியாவில் நடந்ததை நினைவு கூர்கிறேன். அந்த நாட்டின் ஒட்டு மொத்த வங்கிக் கட்டமைப்பையும் ஒரே நாளில் ஐஎம்எப் சிதைத்து அழித்ததை நேரில் கண்டேன். அப்போது வெளியான ஒரு புகைப்படம் எனது கண்ணில் நிழலாடுகிறது. இந்தோனேஷியாவின் பொருளாதார இறையாண்மையை அந்நாட்டின் ஜனாதிபதி சுகார்த்தோ, ஐஎம்எப் நிர்வாக இயக்குநராக இருந்த மிக்கேல் கேம்டெசசிடம் சரணாகதி அடையச் செய்த அந்தக் காட்சியை நினைத்துப் பார்க்கிறேன். அதற்கு சற்று முன்பு 1997 டிசம்பரில் கோலாலம்பூரில் நடந்த பேச்சுவார்த்தையில், இந்தோனேஷியாவின் வீதிகளில் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் மிகப்பெரும் வன்முறையும் ரத்த ஆறும் ஓடும் என்று எச்சரித்தேன். சரியாக ஐந்து மாதங்களில் ஜகார்த்தா வீதிகளில் கலவரங்கள் வெடித்தன. இந்தோனேஷியா முழுவதும் வன்முறை வெடித்தது. கிழக்கு ஆசியா முழுவதும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடிக்கு முன்பும் பின்பும் மிகப்பெரும் பயங்கரங்கள் நிகழ்ந்தன. இதேபோன்ற நிலைமைதான் ஆப்பிரிக்காவிலும் ஏற்பட்டது. இலத்தீன், அமெரிக்காவிலும் ஏற்பட்டது. குறிப்பாக அஜெண்டினாவில் வரலாறு காணாத கலவரங்கள் வெடித்தன. ஐஎம்எப் திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இந்த நாடுகளின் பொருளாதாரங்கள் எல்லாம் வீழ்ச்சியடைந்தன. வீழ்ச்சி இன்னும் தீவிரமடைந்து மீளமுடியாத பெரும் மந்தத்தில் அந்த நாடுகள் ஆழ்ந்தன. இந்தத் தோல்விகள் எல்லாம் படிப்பினைகளாக கற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதே போன்ற கொடூரமான, எந்தவிதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியாத திட்டங்கள் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் அமலாக்கப்பட்டன. இப்போது ஐரோப்பா முழுவதும் அதன் விளைவை அனுபவிக்கத் துவங்கியிருக்கிறது.

ஐஎம்எப் வரையறுத்த இந்தத் திட்டங்கள் அமலாக்கப்பட்டு விட்டன; இனி அதை தொடர்ந்து அமலாக்கினாலும் சரி, கைவிட்டாலும் சரி… கிரீஸ் போன்ற நாடுகளில் கடன்கள் என்றென்றும் தீர்க்க முடியாத அளவிற்கு இன்னும் அதிகரிக்கவே செய்யும். அன்றைக்கு அர்ஜெண்டினாவில் என்ன நடந்ததோ அதேதான் இப்போது கிரீசில் நடக்கிறது.

ஐஎம்எப் உள்ளிட்ட மேற்படி மூன்று முகங்களால் நிர்ப்பந்திக்கப்படும் கொள்கைகள் கிரீஸ் நெருக்கடியை இன்னும் ஆழமாக்கும்; மீள முடியாத பெரும் மந்தத்தில் ஆழ்த்தும். ஐஎம்எப் நிர்வாக இயக்குநராக இருக்கும் கிறிஸ்டின் லகார்டே இப்போது கூறுகிறார், கிரீசின் கடன்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது என்று. இதற்கு என்ன பொருள்? கிரீசின் கடன்களில் ஒரு கணிசமான பகுதியை தள்ளுபடி செய்வதுதான், கடன் மறுசீரமைப்பு என்பதன் பொருளாக இருக்க முடியும். ஆனால், கிரீஸ் அரசிடம் ஐஎம்எப் உள்ளிட்ட மேற்படி மூன்று முகங்கள் முன் வைக்கும் நிபந்தனைகள் பொருத்தமற்றவையாக உள்ளன. கிரீசின் கடன்கள் எதையும் தள்ளுபடி செய்யக் கூடாது என்று ஜெர்மனி கூறுகிறது. கடனைத் தள்ளுபடி செய்யாமல், (கடன் கொடுத்து அதைக் கொண்டு கடனை அடைக்குமாறு சொல்கிற) திட்டத்தில் ஐஎம்எப் முதன்மையாக இருந்து செயல்பட வேண்டும் என்று ஜெர்மனி வற்புறுத்துகிறது. ஆனால் எந்த விதத்திலும் திருப்பிச் செலுத்தவே முடியாத அளவிற்கு- தாங்க முடியாத அளவிற்கு கிரீசின் கடன்கள் இன்னும் அதிகரிக்கப் போகும் ஒரு திட்டத்தில் பன்னாட்டு நிதி நிறுவனமான ஐஎம்எப் எப்படிப் பங்கேற்க முடியும் என்பதுதான் தெரியவில்லை.

கிரீசில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்திற்கு அடிப்படைக் காரணம், சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் மிகப் பெரும் அளவில் அந்நாட்டு மக்களின் சமூக நலத்திட்டங்கள் அனைத்திலும் கடும் நிதி வெட்டு, வரி உயர்வு, மானியங்கள் வெட்டு என ஈவு இரக்கமின்றி தொடுக்கப்பட்ட தாக்குதல்களே ஆகும். இதன் விளைவாக 2008ம் ஆண்டு முதல் கிரீசின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 25 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. வேலையின்மை 25 சதவீதம் அதிகரித்தது.

இளைஞர்களின் வேலையின்மை 50 சதவீதமாக அதிகரித்தது. இத்தகைய சூழ்நிலையில் தற்போது மீண்டும் கடன் பெறுவதும், அந்தக் கடனுக்கான நிபந்தனைகளாக இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள கிரீஸ் அரசு ஒப்புக் கொண்டிருப்பதும் ஏற்கெனவே நிலவும் இந்த மனிதத் துயரத்தை இன்னும் தீவிரமாக்கும்.

2018ம் ஆண்டிற்குள் பட்ஜெட் உபரியை 3.5 சதவீதமாக அதிகரிப்பது என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள். நடப்பு ஆண்டிலேயே ஒரு சதவீதம் பட்ஜெட் உபரி ஏற்பட வேண்டும் என்று நிர்ணயித்துள்ளனர். இதன் பொருள் என்னவென்றால், ஒட்டுமொத்த செலவினங்களையும் வெட்டினால்தான் பட்ஜெட் தொகையில் உபரி ஏற்படும். நடப்பாண்டில் இந்த இலக்கு திட்டமிட்டப்படி எட்டப்படவில்லையென்றால் அடுத்த ஆண்டு முதல் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கை தானாகவே அமலுக்கு வந்துவிடும். இந்தக் கொடூரமான பற்சக்கரங்களில் இருந்து கிரீஸ் மக்கள் தப்பிக்கவே முடியாது. அதாவது, தற்போது கிரீஸ் அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கும் நிபந்தனைகள் என்பவை தானாகவே அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிர்மூலமாக்கும் என்பதுதான். வேலையின்மை தீவிரமடையும்; அதன் விளைவு, ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களின் கூலி இன்னும் கடுமையாக வெட்டப்படும். இதனால் கிரீஸ் மக்களின் வாழ்க்கைத் தரம் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடையும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் ஐஎம்எப் உள்ளிட்ட அந்த மூன்று முகங்கள் கவலைப்படப் போவதில்லை.

அரசாங்கம் இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிற மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், நாட்டிலுள்ள தொழிலாளர்களின் கூட்டுப் பேர உரிமையை ‘நவீனமயமாக்க’ப் போவதாக கூறுகிறது. இதன் பொருள் என்னவென்றால், தொழிற்சாலை மட்டங்களில் இனிமேல் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையே நடத்த முடியாது; தொழிற்சங்கமே நடத்த முடியாது என்பதுதான்.

பொதுவாக, கடன் கொடுப்பவர்கள் பேசுகிற ‘நியாயம்’ கூட இதில் இல்லை. 19ம் நூற்றாண்டு கடன் அடிமைகளின் சிறைக் கொட்டடியாக கிரீஸ் மாறப்போகிறது. சிறையில் அடைக்கப்பட்ட கடனாளிகள் தங்களது கடனை திருப்பிச் செலுத்த வருமானத்தைத் தேட முடியாது; அதே போல கிரீஸ் தனது கடனை திருப்பிச் செலுத்த எந்த வருமானத்தையும் தேட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது; கிரீசின் திருப்பிச் செலுத்தும் சக்தி முற்றிலும் நிர்மூலமாக்கப்படுகிறது; இது கிரீசை மரணப் படுகுழியில் தள்ளும்.

இதிலிருந்து மீள்வதற்கு கிரீஸ் அரசு, கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை- அதாவது முன்பு இந்தோனேஷியா செய்தது போன்ற சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் என்ன செய்தாலும், கிரீசை உலுக்கிக் கொண்டிருக்கும் உண்மையானப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. ஆனாலும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்யுமாறு மேற்படி மூன்று முகங்கள் நிர்ப்பந்திக்கின்றன. ஆனால் அது எப்படிப்பட்ட மாற்றங்கள் என்று முழுமையாக இரு தரப்புமே விவரிக்க மறுக்கின்றன. கிரீஸ் மக்கள் மட்டுமல்ல, பொருளாதார நிபுணர்களே கூட இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என்ன நடக்கிறது என்பது முழுமையாக தெரியாத நிலையில், கிரீஸ் மக்களிடம் ஒரு வித கண்மூடித்தனமான நம்பிக்கை பரப்பப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலை ஐஎம்எப் உள்ளிட்ட அந்த மூன்று முகங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகப் பூர்வமாகவே அனைத்தும் நடக்கிறது என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் உண்மையில் என்ன நடக்கும்?
கிரீஸ் மக்களின் அன்றாட உணவான பாலை எடுத்துக் கொள்வோம். கிரீஸ் மக்கள் தினந்தோறும் உள்நாட்டிலேயே பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு உடனுக்குடன் விநியோகிக்கப்படுகிற சுத்தமான பாலை பருகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நெதர்லாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் பால் உற்பத்தி நிறுவனங்கள் கிரீசில் தங்களது பாலை விற்பனை செய்திட நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றன. ஆனால் மிக நீண்ட தூரத்திலிருந்து கிரீசுக்கு பாலைக் கொண்டு வந்து அதைப் புத்தம் புதிய பால் என்று முத்திரை குத்தி விற்பதற்கு முயற்சிக்கிறார்கள். கடந்த ஆண்டு கிரீசுக்கு கடன் கொடுக்கும் போது, ஐஎம்எப் உள்ளிட்ட மேற்படி மூன்று முகங்கள், கிரீசின் உள்நாட்டு பால் பொருட்களின் அட்டைகளில் ‘புத்தம் புதிது’ என்று பொறிக்கப்பட்டிருக்கும் முத்திரையை அகற்றுமாறு நிர்பந்தித்தது. கிரீசில் இதுவரையிலும் எந்த பால் உற்பத்தியாளரும் தங்களது பாலை ஒருநாள் , இரண்டு நாள் என இருப்பு வைத்து விற்பதற்கு அனுமதியில்லை. ஆனால், மேற்கண்ட நிபந்தனைக்குப் பிறகு ஐந்து நாள் வரையிலும் இருப்பு வைத்து விற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் விளைவு, பல ஐரோப்பிய நாடுகளில் பால் உற்பத்தி நிறுவனங்கள் கிரீசுக்குள் தாராளமாக புகுந்தன. இருப்பு வைத்த பாலை விலைகுறைத்து, புத்தம் புதிய பால் என்று விற்றனர். இதன் விளைவு, கிரீஸ் உள்நாட்டு பால் உற்பத்தியாளர்கள் வரலாறு காணாத இழப்பைச் சந்தித்தார்கள். இது ஒரு உதாரணம். இதே போல பல துறைகளில் கிரீசின் சிறு தொழில் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். அதை நம்பி பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் இப்போது மரணத்தின் பிடியில் சிக்கியிருக்கின்றன.

இதை விவாதிக்கும் போது, வெளிநாட்டு நிறுவனங்கள் தாராளமாக உள்ளே வந்தால் கிரீஸ் மக்களுக்கு தரம் குறைந்த பொருள்தான் கிடைக்கும் என்றாலும், குறைந்த விலையில் பலன் கிடைக்கிறதே என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆனால் நடைமுறையில் விலைக்குறைப்பு என்பது உண்மையில் அந்த நுகர்வோரை சென்றடைவது இல்லை. பாலின் தரம் குறைந்திருக்கிறது என்ற விபரமோ அல்லது விலை குறைக்கப்பட்டுள்ளது என்ற விபரமோ எந்த நிறுவனத்தாலும் நுகர்வோருக்கு தெரிவிக்கப்படுவதே இல்லை. இதை, கடந்த ஒரு வாரத்தில் நான் கிரீசில் மேற்கொண்ட ஆய்வு உறுதி செய்கிறது.

இதில் கவனித்துப் பார்க்க வேண்டிய பிரச்சனை என்னவென்றால், கிரீசின் பொருளாதாரத்திலும் சரி, அரசியலிலும் சரி… வங்ககிள், ஊடகங்கள் உட்பட அனைத்து முக்கியத் துறைகளையும் செல்வம் மிகுந்த வெகு சில பெரும் பணக்காரர்களே கையில் வைத்துள்ளனர். இந்த பெரும் பணக்காரக் கும்பல்தான் கிரீஸ் நாட்டின் ஆளும் வர்க்கம். இவர்கள்தான் இதற்கு முன்பு இருந்த பிரதமர் ஜார்ஜ் பபான்ரியோ, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகத்தையும் ஓரளவிற்கு முற்போக்கான வரிக்கட்டமைப்பையும் அறிமுகப்படுத்த முயன்ற போது அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவர் முன்வைத்த சில முக்கிய சீர்திருத்தங்கள் அமலாகி இருந்தால், நிச்சயம் அது கிரீஸ் ஆளும் வர்க்கத்தினரின் நலன்களை பாதித்து இருக்கும். எப்போதும் வரிசீர்திருத்தங்களைப் பேசும் ஐஎம்எப் உள்ளிட்ட மேற்படி மூன்று முகங்கள், ஆளும் வர்க்கத்தினருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நிலை உருவான போது அதற்கு எதிராகப் பேசின. ஆளும் வர்க்க பெரும் முதலாளிகளின் பக்கமே அவை எப்போதும் போல் நின்றன.

பொதுவாக ஐஎம்எப், அதிக வரி விதிப்பால் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றி எச்சரிப்பது வழக்கம். ஆனால் கிரீசில் மட்டும் ஐஎம்எப் உள்ளிட்ட மேற்படி மூன்று முகங்கள், அந்த நாட்டு குடிமக்களின் வருமான அளவு மிக மிக மோசமான நிலையிலேயே இருக்கும் போதிலும் மிக மிக அதிகமான வரி விதிப்பை மேற்கொள்ளுமாறு வற்புறுத்துகிறது. சமீபத்தில் கிரீசில் ஆட்சிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் இந்த நிர்பந்தத்தை ஏற்றே செயல்பட்டுள்ளன. இந்த தவறான வரிக்கொள்கை அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிர்மூலமாக்குவதற்கு உதவிக் கொண்டிருக்கிறது.

நிதிக் கட்டமைப்பு சரியான முறையில் செயல்படாத ஒரு நாட்டில், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன் கிடைக்கப் பெறுவதற்கு வாய்ப்பே இல்லாத ஒரு நாட்டில், ஐஎம்எப் மற்றும் ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி ஆகியவை அங்குள்ள சிறிய சிறிய வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்தும் வருடத்தின் துவக்கத்திலேயே அனைத்து வரிகளையும் செலுத்தியாக வேண்டும் என்று நிர்பந்திப்பது-இன்னும் சொல்லப்போனால் அந்த நிறுவனங்கள் லாபம் எதுவும் சம்பாதிப்பதற்கு முன்பே அவற்றை நிர்பந்திப்பது, கடைசியில் வரிஏய்ப்பில் போய்த்தான் முடியும். இந்த நிர்ப்பந்தத்தை மேலும் அதிகப்படுத்தினால் சிறிய நிறுவனங்கள் வேறு வழியின்றி தானாகவே மூடுவிழா காணும். அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு அதிகரிக்கும். கிரீசில் அதுதான் நடந்தது. இது இன்னும் தீவிரமாகப் போகிறது.

கிரீஸ் நாட்டை கடனிலிருந்து மீட்பதாகக் கூறி, ஐஎம்எப் உள்ளிட்ட மேற்படி மூன்று முகங்கள் தற்போது திணித்துள்ள மீட்புத் திட்டங்களில், தனது விருப்பத்திற்குரிய தீர்வுகளையே முன்வைத்துள்ளன. இது கீரீசை எந்த விதத்திலும் பாதுகாக்காது. மீட்பு என்பது கிரீசுக்கு வெறுமனே பணம் கொடுப்பது என்பது மட்டுமல்ல; கிரீசுக்கும் ஐரோப்பாவின் இதர நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு நலன்கள் சார்ந்த கொடுக்கல் வாங்கல்கள், வர்த்தகப் பரிவர்த்தனைகள், மக்களின் உறவு எல்லாம் அடங்கியிருக்கிறது. ஆனால் சாதாரண குடிமக்களின் நலன்களைப் பலியிட்டு அந்நாட்டை மீட்கவே தற்போது முயற்சி நடக்கிறது. இதைத்தான் நான் இந்தோனேசியாவில் கண்டேன்.

ஆனால் இப்போது நாம் நடத்தும் இந்த விவாதங்கள் எல்லாம் உண்மையில் தத்துவார்த்த நிலைப்பாடுகள் மற்றும் அரசு அதிகாரம் ஆகியவற்றைப் பற்றித்தான். இது, இடதுசாரிகளுக்கும் வலது சாரிகளுக்கும் இடையில் நடக்கும் ஒரு இயந்திரத்தனமான விவாதம் அல்ல. இந்த அரசியல் போராட்டத்தில் சிலர் மட்டுமே மிகச் சரியாக பேசுகிறார்கள். இடதுசாரி என்று சொல்லும் கிரீசின் சிரிசா அரசாங்கத்தின் மீது ஐஎம்எப் உள்ளிட்ட மேற்படி மூன்று முகங்கள் திணித்துள்ள மிகக் கடுமையான நிர்ப்பந்தங்கள், நாளைக்கே ஐரோப்பாவின் எந்த நாட்டிற்கும் ஏற்படலாம். ஐஎம்எப் அமைப்பைப் பொறுத்தவரை கிரீஸ் மீது தான் திட்டமிட்டப் படி ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை திணித்து விட்டோம் என்ற வெற்றிப் பெருமிதம்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை கிரீஸ் மீது தற்போது திணிக்கப்படும் எந்தக் கொள்கையும் வேலை செய்யாது; மாறாக அது முடிவில்லாத பெரும் மந்தத்தில் போய்த்தான் முடியும்; இன்னும் மோசமான அளவிற்கு வேலையின்மையை உருவாக்கும்; ஏற்றத்தாழ்வு வரலாறு காணாத அளவிற்கு அதிகரிக்கும். இதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.

அதே நேரத்தில் ஜனநாயக நடவடிக்கைகளின் மீது நான் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறேன்.கிரீசின் பொருளாதாரத்திற்கு எது நன்மை பயக்கும் என்று ஆட்சியாளர்கள் கருதுகிறார்களோ அதை அந்த மக்களிடம் விவாதித்து அவர்களையும் ஏற்றுக் கொள்ளச் செய்து மட்டுமே அமலாக்க முடியும்; கட்டாயப்படுத்தி அமலாக்க முடியாது. கிரீசில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவான கருத்துக்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன.

இன்றைய நிலைமையில் கிரீஸ் அரசாங்கம் ஒரு கைப்பற்றப்பட்ட நிலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த பத்தாண்டுகளாகவே இங்கு அரசியல் என்பது அசிங்கமானதாகவே மாறிவிட்டது. கடைசியில், அனைத்திற்கும் காரணம் இதுதான் என்று ஐஎம்எப் கூறப்போகிறது. எல்லா நாடுகளிலும் அது இப்படித்தான் கூறியிருக்கிறது.

(கட்டுரையாளர்: பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அறிஞர்; கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர்)

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

Related Posts