இதழ்கள் இளைஞர் முழக்கம்

காஷ்மீரின் நாள்பட்ட ரணத்தில் பீச்சப்படும் பெல்லட் குண்டுகள் சு.பொ.அகத்தியலிங்கம்.

5788e1bc96872

முகம் முழுவதும் குண்டுகளால் துளைக்கப்பட்ட ஒரு இளைஞனின் முதல் படத்தைப் பாருங்கள். இது குறித்து ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழுக்கு ஷேர்-இ-கான் மருத்துவமனை மருத்துவர் வஷீம் ரஷீது கூறும்போது, “முகம் முழுவதும் இரும்புக் குண்டுகள் பாய்ந்த நிலையில் அந்த இளைஞர் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சனிக்கிழமை கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். ஆனால் அவர் அப்போதே பார்வை இழந்திருந்தார்.அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மண்டை ஓடு, உதடுகள், மூக்கு, மூளை என பல்வேறு பகுதிகளிலும் இரும்புக் குண்டுகள் பாய்ந்துள்ளன. அவரது நிலைமை மோசமாகவே இருக்கிறது” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “கடந்த 2010-ம் ஆண்டு முதல் போலீஸார் இத்தகைய இரும்புக் குண்டுகளை கொண்டு இயங்கும் துப்பாக்கியை பயன்படுத்தி வருகின்றனர். எங்கள் மருத்துவமனைக்கு நிறைய பேர் இதே பாதிப்புடன் வந்திருக்கின்றனர்” என்றார். இந்தப் படமும் செய்தியும் வெளியானது 2015 மே 25 .
இரண்டாவது படம் 26 ஜூலை தி `ஹிண்டுவில் வெளியாகியுள்ள கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. மேலும் கொத்துக் கொத்தாய் பாயும் பெல்லட் குண்டுகள் தோலையும் தசையையும் ஊடுருவி தைக்கிறது . அவற்றை மருத்துவர் அகற்றுகிறார் .

2010 முதல் இக்குண்டுகளால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் சோகம் வெளி உலகை உலுக்க வில்லை ஆனால் தற்போது அங்கு நடக்கும் போராட்டமும் மோதலும் இந்த குண்டுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துவிட்டது . ஏனெனில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கும் மேற்பட்டோரின் பார்வையும் பறிபோயுள்ளது .

1988 முதல் இன்றுவரை 47,234 சம்பவங்களில்;14,738 பொதுமக்களும், 6,271 பாதுகாப்புப் படையினரும், 23,094 தீவிரவாதிகளும் உயிரிழந்துள்ளதாக அரசின் அதிகார பூர்வச் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. இது உண்மையில்லை என்பதை அறிய பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. அனுபவம் போதும். ஆம் இந்த ஆண்டு இதுவரை 129 பேர் செத்திருப்பதாகவும் அதில் வெறும் 9 பேர் மட்டுமே பொதுமக்கள் என்றும் அரசு சொல்வது பச்சைப்பொய். இந்த மாதத்தில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானோ அல்லது தீவிரவாதக் குழுக்களோ சொல்லும் பல லட்சம் பேர் என்கிற கணக்கு மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரம் என நிராகரித்துவிடலாம். கடந்த முப்பது வருடங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு, கண் பார்வை இழப்பு, உடலுறுப்பு இழப்பு என ஏதேனும் வகையில் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில், கல்வி, வாழ்க்கை அனைத்தும் குதறி எறியப்பட்டு வாழுகிற அம்மக்களின் சோகம் சொல்லில் அடங்கா . ஏன் ?

இதன் வரலாறு நெடியது. ஜம்மு-காஷ்மீர் எனப்படும் இம்மாநிலம் மூன்று முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியது. அவை ஜம்மு, காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு, லடாக் பகுதிகள். இம்மாநிலத்தில் 12க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. எனினும், காஷ்மீரி, டோக்ரி, பஹாரி, லடாக்கி, உருது ஆகியவை முக்கியமான மொழிகள். இங்கு இஸ்லாமியர்கள் 70 சதவீதம், அடுத்து இந்துக்கள் 25 சதவீதம். மீதமுள்ளவர்கள் புத்த மதத்தினரும் சீக்கியர்களும். புத்த மதத்தினர் லடாக் பகுதியில் மட்டுமே வசிக்கின்றனர்.

1846 ல் பிரிட்டிஷார் அவர்களின் தேவைக்கு ஜம்முவையும் காஷ்மீரையும் இணைத்து டோக்ரா அரசன் குலாம் சிங்கிடம் தாரைவார்த்ததிலிருந்து தலைவலி தொடங்கியது .விடுதலைப் போராட்ட காலத்தில் ஷேக் அப்துல்லா தலைமையில் அரசாட்சிக்கு எதிராக நடந்த போராட்டம் மிக முக்கியமானது. 1946இல்,’டோக்ரா ராஜாவே, காஷ்மீரை விட்டு வெளியேறு’ என்னும் போராட்டம் வெடித்தது. ‘சுதந்திரக் காஷ்மீர் எங்கள் பிறப்புரிமை’ என்னும் முழக்கம் தோன்றியது

இந்து அரசனான ஹரிசிங் (கரண்சிங்கின் தந்தை) தன் ஆட்சியையும் பதவியையும் துறக்க மனமில்லாததால், முதலில் பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ளப்பேரம் பேசினார். தன் அரசப் பதவியையும் அதிகாரத்தையும் இழக்காத வகையில் அந்த இணைப்பு இருக்கவேண்டும் என்பதே அவரது நிபந்தனை. 1947 ஆகஸ்டில், பாகிஸ்தானுடன் அதற்கான ஒப்பந்தமும் செய்து கொண்டார். அதேசமயம் அப்துல்லாவும் தேசியமாநாட்டுக் கட்சியினரும் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதை எதிர்த்தனர். காஷ்மீர் சுதந்திரநாடாக இருக்கவேண்டும் அல்லது இந்தியாவுடன் இணைய வேண்டும் என்பதே ஷேக் அப்துல்லா நிலைப்பாடு. அப்துல்லாவுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்தது. பாகிஸ்தானும் படையெடுத்து வந்து ஒரு பகுதியைக் கைப்பற்றிவிட்டது. எனவே வேறுவழியின்றி 26 அக்டோபர் 1947 அன்று நிபந்தனையுடன் கூடிய இணைப்புச் சாசனத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார்.

இந்தியாவுடன் காஷ்மீர் இணையும் போது அம்மாநிலத்துக்கு சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டன . அவை 370 வது சட்டப்பிரிவானது . அதன்படி காஷ்மீர் முதல்வர் பிரதமரென அழைக்கப்படுவார் . எந்தச் சட்டமாயினும் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின் அதனை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமுலாக்க அம்மாநில சட்டசபை ஒப்புதல் பெற வேண்டும் அம்மாநிலத்தின் தனித்தன்மை, பண்பாடு பாதுகாக்கப்படும். இப்படி மாநில உரிமைகளை மதிக்க வழி செய்யும் சட்டம் அது .ஆனால் இது நேரு தொடங்கி இன்றுவரை நீர்த்துப் போகச் செய்யப்பட்டு விட்டது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கவர்ணராய் இருந்த ஜெக்மோகன் சிங் பிரச்சனையை இடியாப்ப சிக்கலாக்கினார் . 370 சட்டப்பிரிவையே தொலைத்துக் கட்ட மோடி அரசு முயல்வது எரிகிற தீயில் பெட்ரோலை வார்த்துவிட்டது .முதல்வர் பதவிக்காக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள மெஹபூபா செயலற்று நிற்கிறார் . பெல்லட் குண்டு தன்னைக் கேட்டு ஏவவில்லை என்கிறார்; பத்திரிகை சுதந்திரத்தின் கழுத்தை நெரிப்பது தனக்குத் தெரியாது என்கிறார். அப்படியாயின் இதனை இயக்கும் இந்த சர்வ வல்லமை பொருந்திய இரும்புக் கரம் எதுவென கேள்வி எழுகிறது .

இதற்கிடையில் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் தன் விஷமப் பிரச்சாரத்தை தொடர்கிறது. காஷ்மீரில் பிற மாநில இந்துக்கள் நிலம் வாங்க முடியாத கொடுமை என ஒப்பாரி வைக்கிறது. அங்குள்ள முஸ்லீம்களே எல்லாம் அமுக்குவது போன்ற பிரம்மை. உண்மை என்னவெனில் நாட்டில் எல்லையோர மாநிலங்களில் நிலம் வாங்க அந்த மாநில குடிமக்களைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை. இமாச்சல பிரதேசமும் எல்லையோர மாநிலமே அங்கும் சில மாவட்டங்களில் பிறர் நிலம் வாங்க முடியாது. அப்படி நிலைமை இருக்க இமாச்சல பிரதேசத்தில் குல்மனாலியில் பிரியங்கா வீடுகட்ட இடமும் சிறப்பு அனுமதியும் அங்கிருந்த காங்கிரஸ் ஆட்சி வழங்கியது கடும் விமர்சனத்துக்குள்ளாகியதை யாரும் மறந்திருக்க முடியாது. வடகிழக்கிலுள்ள எல்லையோர மாநிலங்களிலும் இது போல் பிற மாநிலத்தவர் நிலம் வாங்க தடையுண்டு . மேலும் அந்த மாநில பண்பாடு மற்றும் தனித்துவத்தைப் பாதுகாக்க சில விஷேட உரிமைகளும் சலுகைகளும் உண்டு .அவற்றைப் போற்றிப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும், மாநில உரிமைகளை காப்பதும், விரிவுபடுத்துவதும் காலத்தின் தேவை . ஆனால் ஆட்சியாளர்கள் எதிர் திசையில் பயணிப்பது கவலை அளிக்கிறது .
இந்தியா என்பது ஒரு ஒற்றையாட்சி நாடல்ல ‘இந்தியா ஒரு உபகண்டம்; அரசியல் சட்டப்படியே கூட “இந்திய ஒன்றியம்” என்பதே உண்மை. கூட்டாட்சியே இந்திய ஒன்றியத்தின் ஆட்சி நெறி; ஆனால் நடப்பில் அது இல்லாமல் மத்திய அரசென்றும், மத்தியில் அதிகாரக் குவிப்பென்றும் காங்கிரஸ் பயணித்தது. சங்பரிவார் ஆட்சியோ மோடி ஆட்சியோ “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என முழக்கமிட்டு இந்தியாவின் வலுவான பன்மை முகத்தை சிதைக்க கங்கணம் கட்டி நிற்கிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியான காஷ்மீர் பள்ளத்தாக்கில், கேள்வி கேட்பாரின்றி ராணுவப் படைகளுக்கு அதீத அதிகாரத்தை வழங்கியுள்ள ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் பயன்பாட்டின் காரணமாகவும், கடந்த இரண்டாண்டுகளாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக அரசு அளித்துவரும் ஊக்கம் காரணமாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் ஜம்மு காஷ்மீரில் நடத்தி வரும் நுணுக்கமான மதவெறி அரசியல் காரணமாகவும், இளைய தலைமுறை முஸ்லிம் இளைஞர்கள் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பிடியில் சிக்கும் அபாயம் தீவிரமடைந்துள்ளது. புர்ஹான் வானி என்ற இளைஞன், தீவிரவாதப் பாதைக்கு சென்றதும், அவர் கொல்லப்பட்ட நிலையில் அவருக்காக லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதும் இதையே உணர்த்துகிறது. புர்ஹான் வானி (22) காஷ்மீரின் புதிய தலைமுறை கல்விப் பின்புலம் வாய்ந்த போராளிகளில் ஒருவர். இவர் இந்தியாவிடமிருந்து காஷ்மீர் விடுதலை பெற வேண்டும் என்று தனது கோரிக்கையை சமூகவலைத்தளங்கள் மூலம் பரப்பி வந்தார். இவரை பாதுகாப்புப் படையினர் என்கவுண்டர் செய்ய சற்றும் எதிர்பாராதவிதமாக எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் இளைஞர்கள் சாலைகளில் போர் புரியத் தொடங்கினர். கடும் வன்முறை வெடித்து.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் எல்லொருமே பாகிஸ்தானின் கையாட்கள் என்பது வடிகட்டியy182735831566017 அறியாமையே; தீவிரவாதிகள் பாகிஸ்தான் பின்புலத்தோடு செயல்படலாம் ஆனால் வளர்ச்சியின்றி, புதிய உயர் கல்வி நிலையங்களின்றி, வேலைவாய்ப்பின்றி, அடிப்படை கட்டமைப்புகள் எதுவுமின்றி, 24 ஒ 7 மணி நேரமும் துப்பாக்கியும் கையுமாய் ராணுவம் ரோந்து சுற்றும் ஒரு மாநிலத்தில் இளஞர்கள் விரக்தியின் விழிம்புக்கு விரட்டப்படுவது வியப்பானதல்ல. இந்த விரக்தியில் முட்செடிகள் தானே முளைக்கும். அரசாங்கம் இத்தனை ஆயிரம் கோடி அத்தனை ஆயிரம் கோடி என்று அறிவித்ததெல்லாம் சுயநலமிகள் பாக்கெட்டுக்கு போனதன்றி மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. 2013ல் ஒரு பத்திரிகையாளர் குழுவில் ஸ்ரீநகர் சென்ற போது நேரடியாவே இந்த தகிக்கும் உண்மை சுட்டது .

இப்போதும் காஷ்மீருக்கு மேலும் மேலும் இராணுவத்தை அனுப்பாதீர் மருத்துவர்களை அனுப்புங்கள் என சீத்தாராம் யெச்சூரி சொன்னது பொருள்பொதிந்த வாதம்.“மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையிலான மெஹபூபா முப்தியின் அரசோ அல்லது மோடியின் தலைமையிலான மத்திய அரசோ காஷ்மீரில் பிரச்சனைகள் குறித்து எந்த அரசியல் பேச்சுவார்த்தை நடத்தவும் விருப்பம் காட்டவில்லை அல்லது அம்மாநிலத்தில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகள், கோரிக்கைகளை தீர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பிரதமர் மோடி, இதுவரை அப்பாவி மக்கள் 30க்கும் மேற்பட்டோர் வரை இறந்துள்ள காஷ்மீர் பிரச்சனை குறித்து உடனடியாக ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. 3 போலீசார் காணாமல் போய்விட்டதாக செய்திகள் வந்துள்ளன. புர்ஹான்வானியின் இறுதி ஊர்வலத்தில் இதுவரை 25 ஆண்டுகளாக இல்லாத அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். புர்ஹான்வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் துயரமான சம்பவங்கள் இதுவரை நடைபெறாதவை. ஏராளமான உயிர்ச் சேதமும் கோடிக்கணக்கான மதிப்பில் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளன. கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடும் அதன் விளைவாக இறுதிச்சடங்குகளின் போது அமைதியாகப் போராடியவர்கள் கொல்லப்பட்டதும் போராட்டங்கள் தீவிரமடையவே வழிவகுத்தன. கடந்த பல நாட்களாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வந்தாலும் அமர்நாத் யாத்திரை அமைதியாக முடிந்தது. அதில் கலந்து கொண்ட பக்தர்கள் யாரும் தாக்கப்படவில்லை. அது மட்டுமல்ல, மாநிலத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட எந்த சுற்றுலா பயணியும் தாக்கப்படவில்லை. அமர்நாத் பக்தர்கள் சென்ற ஒரு பஸ் விபத்துக்குள்ளாகி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிர் விட்டார்; ஆனால் மொத்த பயணிகளையும் தோளிலும் வாகனங்களிலும் சுமந்து பலமைல் சென்று உயிர்காத்தனர் என்பது வெறும் செய்தியா ?

கலவர சூழலிலும் இறந்து போன இந்து உடலை சுமந்து அவர்களுக்குரிய முறையில் இறுதிச் சடங்கு செய்வதிலும் அங்குள்ள முஸ்லிம்கள் காட்டிய மனிதப் பண்பு தற்செயலானதல்ல. அவர்களின் செழுமையான மரபின் தொடர்ச்சி. இன்றும் அன்பு பாசம் பொங்கும் மனித நேயவாதிகளாவே உள்ளனர். காஷ்மீரில் மதவெறித் தாக்குதல்கள் எப்போதும் நடந்ததில்லை .இது காஷ்மீர் குறித்த நம்பிக்கையை அளிப்பது மட்டுமல்ல, இம்மாநில மக்களின் பன்முகத்தன்மையை காட்டுகிறது. எனவே காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளைப் போல நடத்த வேண்டாம் என்று இந்திய மக்களையும் அறிவுத்துறையினரையும் மீடியாவையும் வேண்டிக்கொள்கிறேன்” என மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தாரிகாமி விடுத்துள்ள வேண்டுகோள் களயதார்த்தத்தை சொல்லுகிறது.

காஷ்மீர் மிகுந்த கவலை அளிக்கிறது. எனினும் புர்ஹான்வானி மோதல் கொலையில் கொல்லப்பட்டதன் எதிரொலி என்பதாகமட்டும் நிகழ்ச்சியைச் சுருக்கிப் பார்க்கக்கூடாது. நாள் பட்ட காயமும், ரணமும் உருவாக்கியுள்ள அமைதியின்மை இது. மோடி அரசின் மூர்க்க வெறியும் அதற்குத் துணை போகும் மாநில அரசும் நிலைமையை மேலும் முற்ற வைத்துவிட்டது. வஞ்சகத்தில் வீழ்த்த இது ஒன்றும் மாகாபாரதப் போரல்ல; மக்களின்உணர்வு. சங்பரிவார் உணராவிடில் தேசம் பெரும்விலை கொடுக்க வேண்டிவரும். ஜனநாயக சக்திகள் விழித்தெழாவிடில் தேசமே பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளநேரிடும்.

Related Posts