அரசியல் சமூகம்

காவிக் கூட்டமே தலித்கள் மீது மட்டும் ஏன் இந்த குறி?

guja

நம் நாட்டில் இன்று ஒரு சில சமூகத்தை மட்டும் அடக்க நினைக்கும் மதவெறிக் கும்பலை நாம் கண்டுகொள்ளாவிட்டால் அந்தச் சமூகம் மிகவும் மோசமான ஒருநிலைக்கு தள்ளப்படும், மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் படும் துயரத்தை நாம் ஒன்று சேர்ந்து தட்டிக் கேட்க வேண்டாமா ? இன்று பெரும்பாலும் அனைத்து ஊடகங்களால் மறைக்கப்படும் செய்திகள் இவை என்றால் தலித் மற்றும் சிறுபான்மையினர்கள் மீது தாக்கப்படும் தாக்குதலும் வன்முறையும்தான். தலித் சமுகம் ஒரு நலிவடைந்த சமூகம் முன்னுக்கு வரவேண்டும் என்றால் அரசுதான் அவற்றை ஊக்கப்படுத்தி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவேண்டும் ஆனால் இந்த மோடி அரசாங்கம் அவர்களை முன்னேற விடாமல் முட்டுக்கட்டையைப் போட்டு பின்னோக்கித் தள்ளுகின்ற வேலையைச் செய்து வருகின்றது.

அதிலும் பிஜேபி அரசு அதனுடைய தாய் அமைப்பான RSS சொல்லும் அனைத்தையும் வாலாட்டிக் கொண்டு அப்படியே செய்து வருகின்றது. ஓட்டுப் போட்ட மக்களிடம் விசுவாசத்தைக் காட்டாமல் கார்பரேட் முதலாளிகளிடமும் RSS யிடமும் விசுவாசத்தைக் காட்டுகின்றது. தலித் மக்களின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளாமல் அவர்களின் அடிப்படை உரிமைகளான கல்வியிலும், உணவுப் பழக்கவழக்கங்களிலும் இருந்து தொடங்கினார்கள். தலித் முஸ்லீம் என அனைத்துச் சிறுபான்மையினரும் விரும்பி உண்ணும் உணவாக மாட்டுக்கறி இருப்பதை அறிந்து பசு என்பது புனிதம் என்ற பெயரில் அதனை உண்பதற்குத் தடை விதித்தது. அது ஒரு காரணி உயிர் வாழ்வதற்குத் தேவையான அதிகப்படியான ஆற்றல் அவற்றில் உண்டு என்பதை அறியாமல் அந்த மூடர் கூடம் அவற்றுக்கு தடை விதித்து.

அதையும் மீறி உண்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை என்ற பெரியரில் பசுவதைப் பாதுகாப்பு பிரிவினர் என்று பிஜேபி யின் குண்டர்கள் ஆடைகளை ஊருவி அவர்கள் ஆயுதங்கள் கொண்டு தாக்கினார்கள் , இதனை எதிர்த்துப் பல மாநிலங்களில் வலுவானப் போராட்டங்கள் நடைபெற்றது. ஆனாலும் இன்னும் இவை ஓய்ந்தபாடில்லை.
அடுத்த தாக்குதலாக கல்வி நிலையங்களில் தலித், சிறுபான்மையினர், பழங்குடியினர் என அவர்களுக்குக் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் ஆய்வுப் படிப்புக்கான ஊக்கத்தொகை என அனைத்தையும் நிறுத்திவைக்கும் வேலையைச் செய்தது, இதற்காகப் போராடிய மாணவர்களின் மீது வழக்கு தொடரப்பட்டது. இன்னும் சில மாணவர்கள் கல்வி நிலையங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இதில் ரோஹித் வெமுலா இறப்பின் மூலம் ஒரு மாணவனின் போராட்டத்தை நாம் அனைவரும் அறிந்தோம், அதன்பின் தொடர்ச்சியாக ஆலிகர் பல்கலைக்கழகத்தைச் சிறுபான்மையினர் பல்கலைக்கழகமாக இருந்ததை மாற்றவேண்டும் என்று ஆனாலும் அவற்றின் முயற்சி தற்போது வெற்றியை தொடாவிடிலும் ஆட்சி முடிவதற்குள் அடைய வேண்டும் என்று என்னும் இந்த காவிக் கூட்டம்.

இதுமட்டுமா இன்னும் ஏராளம் JNU மாணவர் பேரவை தேர்தலில் இடதுசாரி மாணவர் இயக்கத்தின் வெற்றியை பிளவுபடுத்த நினைத்து அவர்கள் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துகிறார்கள் என்றும் அவர்களில் போராடுபவர்கள் மீது தேசத்துரோகி என்னும் முத்திரைக் குத்துவதுடன் தேசத்துரோக வழக்குகளை மாணவர்கள் மேல் பதிவு செய்தனர். ஒரு முற்போக்கு மாணவர் இயக்கம் நடத்திய போராட்டம் உலகளவில் மோடி ஆட்சியைக் காறி உமிழ வைத்தது. வாசகர் வட்டம் தடை செய்தது மட்டும் மாணவர்கள் சிறையில் இருந்து விடுதலை என பெரும் போராட்டக்களங்களை சந்தித்தது.

இதில் நாம் யோசிக்க வேண்டிய முக்கியமானவை இவை என்றால் கடந்த வருடம் அதாவது முடிவடையாத இந்த வருடத்தில் கல்வி நிலையங்களில் மாணவர்களின் தற்கொலை இறப்பு மொத்தம் 25 பேராகும். அதிலும் 23 மாணவர்கள் தலித் மாணவர்கள்தான். அவர்களால் படிப்பு வரவில்லை என்று தற்கொலைச் செய்துகொள்ளவில்லை அவர்களின் உதவித் தொகை என்னும் உரிமை மறுக்கப்படுகின்றது போராடினால் எளிதில் இவர்கள் மத்தியில் எதுவும் கிடைக்கபோவதில்லை என்று தற்கொலைக்கு ஆளாக்கப்பட்டனர். மலம் அள்ளும் கூலித் தொழிலாளர்கள் மகன் மலம்தான் அள்ள வேண்டும் என்று அந்த மாணவர்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றனர். காலம் வெகுதுரமில்லை காவிக் கூட்டம் ஒருநாள் குனியும் அன்று அவையும் மலம் அள்ளும்.

இன்னும் ஒரு படி மேலே சென்று முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என அவர்களின் கருத்துச் சுதந்திரம் பாதிக்கும் வகையில் அவர்களின் படைப்புகளை வெளியிட மறுத்துவிட்டார்கள். மேலும்அவர்களை அவமானப்படுத்தும் வகையில் அவர்கள் மீது கருமை சாயம் புசப்பட்டது. இதில் பலர் தங்களின் படைப்புக்கு கிடைத்த உயரிய விருதுகளை திருப்பிக் கொடுத்தனர். இதைவிட நமது நாட்டிற்கு வேறு கேவலம் ஒன்று வந்துவிடப் போகிறதா என்ன? இன்னும் சில இடங்களில் தலித் ஆசிரியர்களை மாணவர்கள் மத்தியில் பாடம் எடுக்க அனுமதிப்பது கிடையாது, கற்றுக் கொள்ளவேண்டிய இடத்திதிலும் தீண்டாமைக் கொடுமை என்றால் சமுதாய மாற்றம் எங்கு இருந்து தொடங்கப்படவேண்டும் என்பதே இங்கு கேள்விக்குறியாகிறது??.

மலிந்து போன அரசியல் தன்மையைக் கடைப் பிடிக்கும் பிஜேபி அரசு மாடு உண்ணுவதற்கு தாக்கியதற்குப் பதிலாக புதிதாக மாட்டின் தோலை உரித்த சில இளைஞர்களை அவர்களின் சிலரையும் இந்த காவிக் குண்டர்கள் வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.அதனை இந்தக் காவலி(ல்)துறை வேடிக்கை பார்த்தது. இதனால் கோபம் கொண்ட தோல் உரிக்கும் சமூகத்தினர் இறந்த மாட்டின் உடலை அரசு அலுவலர்களில் வீசி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் தாக்கப்பட்டத்திற்கு பாராளுமன்றத்தில் இடதுசாரி தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல தலைவர்கள் குரல் எழுந்துள்ளது மக்களின் குரல் மட்டும்தான் தனக்கென என்று அமைதி காக்கின்றது.

நிதித்துறையில் உள்ள ஒரு நீதியரசர் தலித்துகளுக்கு இடஒதிக்கீடு தேவையில்லை என்பதனை வழக்கு விசாரணையில் அவருடைய சொந்தக் கருத்தாக இருக்கும் அவற்றை பதிவு செய்கிறார். சிலர் அவர் மீது பதவி நீக்கம் தீர்மானம் எடுக்கின்ற பொழுதில் அதை இன்னும் மாற்றிப் பதிவு செய்கிறார். இது போன்ற காரியங்கள் இறையாண்மையை பாதிப்படைய செய்யும் செயலாகும். அதுவும் நீதித்துறையில் இருப்பவர்கள் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அறிவியலையும், விஞ்ஞானத்தையும் நம்பி இன்று செவ்வாயையும் புதனையும் தொட்டுகொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் தலித் வீட்டிற்கு சென்றதையும் சாப்பிட்டதையும் பெரிய அளவில் தம்பட்டம் அடிப்பதால் அவர்களை இவர்கள் இப்போதுதான் மனிதனாக மதிக்கின்றோம் என்கின்ற போக்குகளைக் கொண்டுள்ளதாக தெரிகின்றது. இதனை உரியபரிசீலனை செய்து பார்க்கவேண்டும், அவர்களில் சிலர் அவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுங்கள் என்று பிரச்சாரம் செய்வது எந்த மனநிலையைக் குறிக்கும். இப்போது நமது கேள்வி என்ன என்றால் அவர்கள் ஏன் இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுக்கவேண்டும் . அரசியலமைப்பு சட்டத்தின்படி இடஒதுக்கீடு என்பது இன்றியமையாத ஒன்று அதனைப் பிரச்சாரத்தால் தடுத்துவிட்ட நினைக்கின்றது இந்த காவிக்கும்பல். இது மிகப் பெரும்பான்மைக் கருத்தை இதனைப் பதிவு செய்யவேண்டிய தருணமிது “இந்திய அரசியலமைப்பு கொடுத்துள்ள உரிமைகளை நாங்கள் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும், அது கையேந்திக் கேட்கும் பிச்சையல்ல, எங்களது உரிமை. சமையால் எரிவாயு மானியம் போல் இதனையும் மக்களை ஏமாற்றி வாங்கிவிட்ட முடியாது. அது எங்களின் வாழ்வியல் உரிமை”. விட்டுக்கொடுப்பது முடியாத ஒன்று அதனைப் பற்றி தற்போது பேசுவதன் மூலம் மக்கள் மத்தில் பிரிவினையினால் அவர்களை பிளவுபடுத்த நினைக்கின்றனர்.

இன்னமும் சில சமூகத்தினர் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கிறனர். உதாரணமாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இடஒதுக்கீடு வேண்டும் என்கின்றனர். இடஒதுக்கீடு மூலம் நலிந்த சமுகம் குறிப்பாக பட்டேல் இனத்தவர்கள் ஒரு மற்றதை சந்தித்துள்ளனர். ஆனாலும் அவை முழுமையான மாற்றமல்ல மாற்ற வேண்டியவை நிறைய உண்டு. முழுமையான மாற்றத்திற்கு அனைத்து தரப்பினரையும் தயார்படுத்துவோம். மறைந்து கொண்டிருப்பது மக்களின் இயல்பு, தவறுகளை எடுத்துரைப்பது எங்களின் இயல்பு. மாற்றப்பட வேண்டியது அரசு மட்டுமல்ல இந்தச் சமூகமும்தான்.

ரௌத்திரம் பழகு
இரா.பிரேம் குமார்

Related Posts