அரசியல்

காவல்துறைக்கு சங்கம் அவசியமா?

தமிழ்நாடு காவல் துறையிலிருந்து சங்கம் வைக்க அனுமதி கோரி மீண்டும் குரல் எழுந்துள்ளது.  வழக்கம் போல அரசு அதனை அங்கீகரிக்க மறுக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து தொழில்களிலும் சங்கம் வைத்து தமது பிரச்சனைகளை தீர்க்க உரிமை உள்ள நாட்டில் காவல்துறைக்கு மறுக்க பல காரணங்களை அரசும் உயர்மட்ட அதிகாரிகளும் முன்வைக்கின்றனர். பல காரணங்கள் என சொன்னாலும் சுத்தி வளைத்து சொல்ல வருவது காவல்துறையின் ஒழுக்கம் கட்டுப்பாடு போய்விடும் எனும் ஒரே காரணம்தான்.

அரசின் பார்வைக்கு ஒழுக்கம் எனப்படுவது யாதெனில் எதிர் கேள்வி கேட்காமல் நடப்பதே. அதே கொள்கைதான் சங்கத்தை ஆதரிக்காத உயரதிகாரிகளுக்கும். அதிலும் தற்போது கான்ஸ்டபிளாக படித்த இளைஞர்கள் வருவதும் விபரமாக எதிர்கேள்விகளை சமூக வலைதளங்களில் வைப்பதும் அரசிற்கும் அதிகாரிகளுக்கும் அச்சத்தை கொடுத்திருக்கலாம் எனில் ஆச்சர்யமில்லை.

காவல்துறை என்றாலே லஞ்சமும் வன்முறையும்தானே நியாபகத்திற்கு வருகிறது. அதெல்லாம் ஒழுக்க, கட்டுப்பாடு என்ற வகையில் அடங்காதா என்ன? ஒழுக்கம் என்பது அதனை சார்ந்தல்லவா இருக்கணும்?

நீ என்னிடம் எதிர்  கேள்வி கேட்காமல் வேலை செய். நான் உனது தவறுகளை கண்டு கொள்ளாமல் உனக்கு அதிகாரங்களையும் சலூகைகளையும் தருகிறேன் என்பதுதான் அரசு மற்றும் உயரதிகாரிகளின் ஒழுக்க தந்திரம்.

1977ல் வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு தலைமையிலான ஆட்சியில் அங்கு காவலர்களுக்கு சங்கம் வைக்க அனுமதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி 2012ல் மம்தா பானர்ஜி அவற்றை கலைக்கும்படி உத்தரவிட்டார். நீதிமன்றம் சென்ற சங்கத்திற்கு எதிராக மம்தாவின் அரசு கருத்து கேட்பு குறைகேட்பு நடத்தப்பட்டு காவலர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என வாதிட்டது. அதனை ஏற்ற நீதிமன்றம் காவலர்களின் வாதத்தை ஏற்காமல் மம்தாவிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

அதுதான் கருத்து கேட்பு குறை தீர்ப்பு எல்லாம் கேட்கிறார்களே அப்புறம் ஏன் சங்கம்னு பங்கம் செய்றாங்கன்னு நீங்க கேட்கலாம். குறை கேட்கும் உயரதிகாரிகள் புடத்தில் போட்ட தங்கங்கள் அல்லவே. உயரதிகாரிகள் தமது வீட்டு வேலைகளுக்கு காவலர்களை பயன்படுத்துவதை அதிகார துஷ்பிரயோகம் செய்வதை அவர்களிடமே குற்றமாக முன்வைத்தல் என்பது நீதி கேட்டு ராஜபக்க்ஷேவிடம் நிற்கும் கதையாக போகும்.

ஒரு காவலர் ஸ்டேசனில் டியூட்டிக்கு ஆளில்லாமல் இருக்கும் நிலையில் உயரதிகாரிகள் வீட்டு வேலைக்கு காவலர்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என நேரடியாக ரிப்போர்ட் செய்திட இயலுமா என்ன?

அப்படியே செய்துட்டாலும் அவர் தன்னை கடினமான கோர்ஸ்களுக்கும் வேறு ஊர்க்கு டிரான்ஸ்பர் செல்லவும் தயாராக இருக்க வேண்டும். தனியாளாக ஒருவர் பேசுவதற்கும் ஒரு சங்கமாக ஒட்டுமொத்த குரலாக பேசுவதற்குமான இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்வீர்கள் எனில் சங்கத்தின் அவசியம் எளிதாக புரிந்துவிடும். வங்காள அரசின் வாதம் லாஜிக்காக இருக்கலாம். ஆனால் யதார்த்தத்தில் அது சாத்தியமற்றதாகும்.

2016ல் கர்நாடகாவில் ஜுன் மாதத்தில் முறையில்லா நீண்ட நேர டியூட்டி, சீனியர் அதிகாரிகளின் தொந்திரவு (harassment) போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கிட்டத்தட்ட 60000 காவலர்கள் மாஸ் லீவ் எடுத்து போராட்டம் செய்யவிருந்ததை அடுத்து கர்நாடகா போலிஸ் அசோசியசேன் தலைவர் கைது செய்யப்பட்டார். கருத்து கேட்பும் குறை தீர்க்கும் செயல்கள் அங்கு நடக்காமலில்லை. ஆனால் பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை என்பதே இத்தகைய போராட்டங்கள் சொல்லும் செய்தியாகும்.

சமீபத்தில் சென்னை  நெல்லை ரயிலில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. ஒரு ஸ்டேசனில் இருக்க வேண்டிய மொத்த காவலர்களில் பாதி பேர் ஆர்டர்லிகளாக உயரதிகாரிகள் வீட்டில் சேவை செய்து வருவதாகவும் எஞ்சியிருக்கும் காவலர்களுக்கு இதனால் அதிக பணிச்சுமை வருகிறது என வருத்தப்பட்டார். கட்சி ரீதியாக, ஜாதிய ரீதியாக இரு பக்கத்து ஆட்களிடமும் ஆமாம் போட்டு பகை சம்பாதிக்காமல் இரவு வீடு வரும் வரை அன்றைய நாள் உத்தரவாதமில்லை என அவர் சொன்னபோது காவலர்க்கே பாதுகாப்பில்லை என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம். இன்று ஒரு பேருந்து ஓட்டுனரை தவறாக கை வைத்துவிட்டால் மாநிலம் முழுவதும் தட்டி கேட்க சங்கங்கள் இருக்கும் போது நாடு ரோட்டில் வெட்டி போட்டால் கூட கேட்க நாதியில்லாமல் இருக்கிறார்கள் காவலர்கள். அரசியல் அராஜகம், பண நாயகம், ஜாதிய கட்டப் பஞ்சாயத்துகள், பொது மக்களின் கேலிப் பார்வை, சமூக வலைதளங்களில் காணப்படும் எதிர்ப்பு என அனைத்தும் சுமக்கும் காவலர்கள் மீது நமக்கு பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இவைகள் அனைத்தையும் சுமக்கும் அவர்கள்  காந்தி தேசத்தின் புத்தர்களாகத்தான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.

சங்கம் என்றதும் கான்ஸ்டபிள்கள் தரப்பில் அதிகமாக ஆதரவு நிலவுவதை காணலாம். ஏனெனில் காவல்துறை போன்ற துறைகள் இந்த பார்ப்பனிய சமூக அமைப்பினை போன்றே செயல்படுகின்றன. அடுக்கு நிலை முறையில் எத்தனை கீழே இருக்கிறாயோ அத்தனை வாய் மூடி கிடக்க சொல்கிறது விதிமுறைகளும் அடக்குமுறைகளும். பார்ப்பனிய அடுக்குமுறையை அப்படியே நகலெடுத்து செயல்படுகின்றன பாதுகாப்புத் துறைகள். உயர் ஜாதி, கீழ் ஜாதி போன்றே உயரதிகாரிகள் கீழ்மட்ட காவலர்களை பெரும்பாலும் மதிப்பதில்லை.

கிட்டத்தட்ட 20000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக செய்திகள்  கூறுகின்றன. அதுபோக ஆர்டர்லிகள், ஆபிசில் கணக்கர்கள் என டியூட்டிக்கு ஆளில்லாமல் அல்லாடுகிறது காவல்துறை. மற்ற அரசு பணியாளர்களின்  Grade pay 2400 எனில் காவலர்களுக்கு 1900 மட்டுமே. தென்னிந்தியாவில் மிகக் குறைந்த சம்பளம் தமிழ்நாடு காவல்துறைக்கு என ஆங்கில நாளிதள் செய்தி குறிப்பிடுகிறது.

எவ்வித பணி கால அளவீடும் இல்லாத நிலையில் குறைந்த சம்பளமும் பெற்று புழுதியிலும் மழையிலும் புரளும் காவலர்கள் எளிதாக தடம் மாறி சம்பளத்தை ஈடு செய்யும் கிம்பளத்தை நாடுகிறார்கள். அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்க்கப்படாத நிலையில் பேசப்படாத நிலையில் போராட இயலாத சூழலில் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். மகளிர் காவலர்கள் உயரதிகாரிகளின் பாலியல் ரீதியான அத்துமீறல்கள், மிரட்டல்கள் மற்றும் காவல்துறையில் இருப்பதாலே திருமணம் மறுக்கப்படும் நிலை என நித்தம் நித்தம் சந்திக்கும் பல பிரச்சனைகளை முறையிட குரலில்லாமல் நிற்கின்றனர்.

அப்படியென்ன கோரிக்கைகளை காவலர்கள் வைக்கிறார்கள் என பாருங்கள்…

  1. தகுதியான சம்பளம்
  2. முறையான பணி நேரம்
  3. உயரதிகாரிகள் வீட்டில் வேலைக்காரர்களாக காவலர்களை பயன்படுத்துவதை தடை செய்தல்
  4. 2003க்கு பின்னால் சேர்ந்த காவலர்களுக்கு பென்சன்
  5. பணியில் இறக்கும் காவலர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கிட வேண்டும்.

இவற்றில் நியாயம் இல்லையென ஒதுக்க இயல முடியுமா என்ன?. ஒரு நல் அரசு விரும்பினால் பிரச்சனைகளை உடனுக்குடன் கவனமெடுத்து தீர்த்து வைத்தால் சங்கங்களிற்கு அவசியமில்லாது போய்விடும். ஆனால் நிலைமை அப்படியல்லவே? ஒரு விளையாட்டு வீரனின் சிக்சர்க்கு அளிக்கும் மதிப்பு கூட பணியிலிருக்கும் போது இறக்கும் காவலர்க்கு கிடைக்க வாய்ப்பில்லை. அவர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த மூன்று லட்சம் ரூபாயைத்தைதான் அவர்களுக்கு தருகிறார்கள்.

தற்போது ஏழாவது ஊதிய கமிசன் பரிந்துரையை அமல்படுத்த கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான சங்கங்களோடு பேசி வருகிறது அரசு. காவலர்கள் சார்பாக யார் பேசுவது? காவலர்களின் நிலையை யார் பரிந்துரைப்பது? உயரதிகாரிகளுக்கு கீழ்மட்ட காவலர்களின் வலிகள் தேவைகள் எதுவும் தெரியாத நிலையில் நேரடியாக காவலர்கள் பேச காவலர்கள் சங்கம் அரசினால் அங்கீகரிக்கப்படுதல் அவசிய தேவையாகும்.

காவலர்கள் அரசின் அம்புகள் அவ்வளவே, அவர்களின் வன்முறை, அதிகார திமிர், லஞ்சம் என அனைத்தும் விமர்சிக்கப்படவும் திருத்தப்படவும் அவசியமானதே. அதற்காக அவர்களின் உரிமைகளை கேட்க அவர்களுக்கு வாய்ப்பு மறுப்பது நீதியல்ல. எங்கே பற்றாக்குறை நிலவுகிறதோ அங்கே தவறுகளும் பிரச்சனைகளும் தோன்றித் தீரும் என்பது இயல்பானது.

தமிழ்நாட்டில் இதற்கு முன் இருமுறை சங்கங்கள் அமைக்கப்பட்டு உள் அரசியலாலும் ஈகோவாலும் உயரதிகாரிகளால் செயல்படாமல் முடங்கியதாக செய்திகள் இருக்கின்றன. கட்சி, ஜாதி, மத ரேங்க் விருப்பு வெறுப்பின்றி காவலர் என்ற ஒற்றை அடிப்படையில் தனது உரிமைகளை பெற்று மக்களுக்கான காவலர்களாக நண்பர்களாக தமிழ்நாடு காவல்துறை செயல்பட வேண்டும். தமிழகத்தின் கட்சிகள் இயக்கங்ககள் ஜனநாயக சக்திகள் காவலர்கள்தான் அரசு விட்ட அம்பாக நம்மை குத்தினாலும் அதனை தள்ளி வைத்துவிட்டு அவர்களுக்காக குரல் எழுப்ப வேண்டும்.

தமிழ்நாடு காவலர் சங்கத்தின் இந்த பேஸ்புக் பக்கத்தில் நீங்கள் மேலும் பல பிரச்சனைகளை அறிந்து கொள்ளலாம்… ஆதரவளிக்கலாம்…

– சதீஷ் செல்லதுரை

Related Posts