இதழ்கள் இளைஞர் முழக்கம்

கானல் நீரா உயர் கல்வி – கே.எஸ்.கனகராஜ்

கல்வியை பற்றி பேசும் போது மொத்த சமுகத்தை பற்றி பேசுகிறோம் என்பார் கல்வியாளார் பாவ்லொ பிரைரெ .சமூக வளர்ச்சிக்கான கருவிகளுள் ஒன்றாக கல்வி கருத படுகிறது . அதுவும் இந்தியா போன்ற எழுத்தறிவில் பின்தங்கிய ஒரு நாட்டில் ஏராளமான இயற்க்கை கனிம வளங்களும் , அவற்றுக்கு நிகராக மனித வளமும் குவிந்து கிடக்கும் நாட்டில் ,கல்வி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது .நமது நாடு விடுதலை பெற்ற போது ,எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 14 சதவிகிதம் மட்டுமே .இதில் பெண்கள் , தலித் மக்கள் , சிறுபான்மையினர் எழுத்தறிவு விகிதம் மிக சொற்பமே . பத்து ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் எழுத்தறிவு அளிப்பத்தே நமது இலக்கு என 1952 ல் அன்றைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு சொன்னார் . ஆனால் அதை இன்றுவரை எட்ட இயலவில்லை .

பள்ளி செல்லும் வயதில் சுமார் 8 கோடி குழந்தைகள் , இன்று பள்ளிக்கு போகாமல் உள்ளனர் . உயர்கல்வி நிலை அதைவிட மோசம் .நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதில் உயர்கல்வியின் பங்கு அளப்பரியது . துறை சார்ந்த திறன் படைத்த இளைஞர்களை உருவாக்கவும் ,பல்வேறு துறைகளில் ஆய்வுகளையும் , ஆராய்ச்சிகளையும் செய்து நாட்டின் வளர்ச்சிக்கு நேரடியாக பங்கேற்கக் கூடியது . அதனால் தான் 1962 ல் அமைக்கப்பட்ட கோத்தாரி கல்விக்குழு அறிக்கை உயர்கல்விக்கு பெரும் முக்கியத்துவம் அளித்தது . மத்திய மாநில அரசுகள் கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதம் செலவிடவேண்டும் என்றது . கோத்தாரி கல்விக்குழுவின் பரிந்துரைகளை புறக்கணித்தன் விளைவு தான் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது . வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி கற்கும் மாணவர் எண்ணிக்கை 40 லிருந்து 45 சதவிகிதம் வரை உள்ளது . நம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் கூட 25 லிருந்து 30 சதவிகிதம் உள்ளது .நம்மை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் கூட இந்த சதவிகிதம் அதிகம் . ஆனால் நம் நாட்டில் 14 சதவிகிதம் பேரே உயர்கல்வி வாய்ப்புகளை பெறுகின்றனர் .கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இது 9 சதவிகிதமாக இருந்ததது . 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் உயர்கல்விக்கு போகும் மாணவர் எண்ணிக்கையை 2015 க்குள் 25 சதவிகிதமாக உயர்த்த போவதாக அறிவித்தார் .

ஆனால் ,” மத்திய அரசு இதற்கென எதுவும் செய்ய போவதில்லை . தனியாரை இத்துறையில் ஊக்குவிக்க போகிறோம் .அவர்களால்தான் இதை சாதிக்க முடியும்” என்று சொன்னார் . அவர் சொன்னதை போலவே தனியாருக்கு தங்கு தடையின்றி அனுமதி வழங்கப்பட்டது .பத்து ஆண்டுகளில் கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகியது . புதிய பல்கலைகழகங்கள் துவங்கப்பட்டன .உயர்கல்விக்கு போகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .ஆனால் ,அரசின் இலக்கான 25 சதவிகிதத்தை எட்ட இயலவில்லை . அதிகரித்துள்ள இந்த எண்ணிக்கைக்கு பின்னும் பல பலவீனங்கள் உள்ளன .நாடு முழுவதும் உள்ள தலித் மாணவர்களில் வெறும் 5 சதவிகிதம் பேர் தான் உயர்கல்வியை எட்ட முடிந்துள்ளது .அதிலும் ஏராளமான தடைகளை தாண்டித் தான் வரமுடிகிறது .உயர்கல்வியை முடிப்பதற்குள் எத்தனை ரோகித் வெமுலா க்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது .சிறுபான்மையினர் வெறும் 3 சதவிகிதம் பேர் தான் உயர்கல்வி வாய்ப்பை பெறுகின்றனர் .இட ஒதுக்கிடு இல்லாத தனியார் கல்வி நிலையங்களுக்குள்கையில் பணம் இல்லையென்றால் தலித் மற்றும் சிறுபான்மையினர் நுழைய முடியாத நிலை உள்ளது.

தனியாரை தங்கு தடையின்றி அனுமதித்ததன் விளைவு இன்று நாட்டில் உள்ள கல்லூரிகளில் 68 சதவிகிதம் தனியாருடையவை .அதுவும் நாடு முழுவதும் பரவலாக கல்லூரிகள் அமையவில்லை .7 மாநிலங்களில் ( உத்திர பிரசேதம் , பீகார் , மகாராஷ்டிரா ,கர்நாடகம் , ஆந்திரா , தெலுங்கானா ,தமிழ்நாடு ) 62 சதவிகித கல்லூரிகள் பரவி உள்ளன .வடகிழக்கு மாநிலங்களில் பெயரளவுக்கு கூட தனியார் கல்லூரிகள் துவங்கப்படவில்லை .

இன்றைக்கு பெருகியுள்ள தனியார் கல்லூரிகளில் கல்விதரம் என்பதுவும் கேள்விக்குறியாகி உள்ளது .இலாபம் மட்டுமே நோக்கமாக கொண்ட இக்கல்வி நிலையங்கள் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் ,அடிப்படை வசதிகள் ,ஆய்வகங்கள் , மாணவர் திறன் வளர்ப்பு பயிற்சிகள் ,கல்விநிலைய ஜனநாயகம் போன்றவற்றில் மிக மோசமாக உள்ளன . விழுப்புரம் தனியார் சித்த மருத்துவ கல்லூரியே சான்று . தனியார் பொறியியல் கல்லுர்களில் படித்து முடிக்கும் மாணவர்களில் 20 சதவிகதம் பேர் தான் பொறியாளர் வேலைக்கு தகுதியானவர்களாக உள்ளனர் என ஒரு ஆய்வு சொல்கிறது .இந்த ஆண்டு தமிழ் நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கையில் ஒரு லட்சம் இடங்கள் காலியாக உள்ளன . 13 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை . தனது கல்லூரியில் முதுநிலை பட்டம் படிக்கும் மாணவரை கொண்டு இளநிலை வகுப்புகளை நடத்தும் கல்லூரிகள் பல உள்ளன .நிகர்நிலை பல்கலைகழகங்கள் தனி ரகம் . அவற்றில் மாணவர் சேர்க்கை ,கட்டணம் ,பாடத்திட்டம் என எவற்றிலும் அரசு தலையிட முடியாது . வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் , உள்நாட்டு பணக்கார மாணவர்களுமே இதன் வாடிக்கையாளர்கள் . அப்பல்கலை கழகங்கள் அமைந்துள்ள இடத்திற்கு அருகே உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் அங்கு சேருவது பற்றி யோசிக்ககூட முடியாது .

கடந்த இருபது ஆண்டுகளில் கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகி இருந்தாலும் , அதில் பெரும் அசமத்துவம் நிலவுகிறது .தனியார் எண்ணிக்கை அளவுக்கு அரசு கல்லூரிகள் பெருகவில்லை . கிட்டத்தட்ட அரசு புதிய கல்லூரிகள் துவங்கும் பொறுப்பிலிருந்து நழுவிகொண்டது .தனியார் கல்லூரிகளால் உயர்ந்துள்ள மாணவர் எண்ணிக்கையில் சமூகநீதி வெளிப்படவில்லை . மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும் ,அது ஆசிரிய பயிற்சி , துணை மருத்துவ படிப்புகள் என உயர்ந்துள்ளதே அன்றி மருத்துவம் , தொழில் நுட்ப படிப்புகள் போன்றவற்றில் எதிரொலிக்க வில்லை . ஆய்வு படிப்புகளில் மாணவிகள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது . கல்வி தரமும் வீழ்ந்துள்ளது .இந்த சுழலை மாற்றி அமைக்க வேண்டியுள்ள முக்கிய தருணத்தில் , அனுபவங்களில்ருந்து பாடம் கற்று கொள்ளவேண்டி உள்ளது .

ஆனால் , மோடி அரசு அதை செய்ய தயாராக இல்லை . அது கல்வி வணிகமாக மாறியுள்ள இந்நிலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறது . பன்னாட்டு வியாபாரிகளை இந்திய உயர்கல்வி துறைக்குள் அழைத்து வர தயாராக உள்ளது .உயர்கல்வியில் தரம் , சமத்துவம் ,வாய்ப்புகள் ஆகிய மூன்றும் சமமான முக்கோணம் போல இருக்கவேண்டும் . ஆனால் ,இன்று அதில் பெரும் அசமத்துவம் உள்ளது . அதை சரிசெய்ய வேண்டிய தருணத்தில் மேலும் அசமத்துவம் உருவாக்க உள்ள வேலையை மோடி அரசு செய்கின்றது .உலக வர்த்தக அமைப்பு , கடந்த டிசம்பரில் கென்யா வில் நதத்திய மாநாட்டில் இந்தியாவும் கலந்து கொண்டது .

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் சட்டப்படி கல்வி ஒரு வணிகப் பொருளாக மாறும். சட்டப்படி கல்வி வியாபாரம் பொருளாக இல்லாத இன்றைய சூழலில் தனியார் முதலாளிகளின் கல்வி கொள்ளை தங்குதடையின்றி தொடர்கிறது என்றால் ழுஹகூகூ ஒப்பந்தத்தில் நமது நாடு கையெழுதிட்டால் என்னநிலமை உருவாகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசு கல்லூரிகள், பல்கலைக்கங்கள் இல்லாமல் போகும். இடஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை என அனைத்து விதமான சலுகைகளும் மறுக்கப்படும்.

நமது மொழி கலாச்சாரம், பன்பாடு என அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு சேர்வதேச கார்ப்பரேட் முதலாளிகளுக்காக உழைக்கும் மனித எந்திரங்களை உருவாக்குவதே கல்வியின் இலக்காக மாற்றப்படும்.

பல இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் என பன்முகத்தன்மையுள்ள நமது நாட்டில், சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள கோடிக்கணக்கான மக்கள் வாழும் நம் நாட்டில் கல்வி கொடுக்கும் பொறுப்பிலிருந்து அரசு முழமையாக விலகிக்கொண்டு தனியாரிடம் ஒப்படைத்தால் அது மிகவும் மோசமான விளைவுகளையே உருவாக்கும். உலக முதலாளிகளின் நலனுக்காக கோடிக்கணக்கான இந்திய மக்களின் நலநன புறக்கணித்து  ஒப்பந்தத்தில் கையெழுத்திட நினைக்கும் அரசை தடுத்திட அனைத்து தரப்பு மக்களும் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கே.எஸ்.கனகராஜ்

Related Posts