காந்தியின் உயிரைக் குடித்த மூன்று தோட்டாக்கள்!


எதுவொன்று நடக்கக்கூடாது என்று அவர் கவலைப்பட்டாரோ, அது எந்தத் தடையுமின்றி நடந்துகொண்டிருக்கிறது; அதை மிகச் சிறப்பாக நடத்துவதற்காக ஒத்திகை பார்க்கிறார்கள். அப்படி ஒன்று நடக்குமானால், நல்லவேளை அதையெல்லாம் பார்க்க நான் இருக்கமாட்டேன் என்று சொன்னதைப் போலவே அவர் இன்று நம்மோடு இல்லை. மதம் என்கிற பெயரில் நடத்தப்படுகிற சூதாட்டங்களுக்கு மக்கள் இரையாகிவிடக் கூடாது என எண்ணியே தன் வாழ்நாளின் இறுதிகாலத்தைக் கழித்த அவர் இதோ..
இதே நாளில்தான் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் மீது பாய்ந்தது மூன்று குண்டுகள். ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் உள்நோக்கம் நிகழ்த்திய அந்தப் படுகொலையின் செயல்திட்டங்கள், அது நிகழ்ந்து 70 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் இப்போதும் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மகாத்மா காந்தி. உலக ஆளுமைகளால் போற்றப்படும் இந்திய ஆளுமை. மதச்சார்பின்மை என்ற தத்துவ வகையினத்தை, அரசியல் சொல்லாடலாக இந்த நாட்டில் அறிமுகம் செய்து வைத்தவர். தத்துவ வரலாற்றில் மத்திய அல்லது இடைக்காலம் என அழைக்கப்படுகிற காலகட்டத்தில் அரசு, கல்வி, மருத்துவம், தத்துவம், இலக்கியம் போன்ற எல்லாமே மதம் சார்ந்தவையாக இருந்தன. 15ஆம் நூற்றாண்டுகளில் வந்த நியூட்டன், கலிலியோ போன்றவர்கள் பகுத்தறிவை முன்னிறுத்தி தத்துவத்தில் இருந்து மதத்தைப் பிரித்தனர். இதையே அவர்கள் மதச்சார்பின்மை என்று குறிப்பிட்டனர். இதனை அரசியல் சொல்லாடலாக, இந்திய அரசின் ஆணிவேராக இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவர் காந்தி. சுதந்திரத்திற்குப் பின் உருவாக இருக்கும் அரசு எந்த மதத்தையும் சாராததாக இருக்கவேண்டும். புதிய குடியரசை மதத்தில் இருந்து பிரித்துவிடவேண்டும் என எண்ணினார் அவர்.

இந்திய சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்த சமகாலத்தில், காந்தி மதச்சார்பின்மை குறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தார். இத்தனைக்கும் அவர் நாத்திகர் அல்ல. தீவர கடவுள் நம்பிக்கையும், சொந்த மதப்பற்றும் கொண்டவர். சாதியக் கட்டமைப்பையும் ஆதரித்தவர்.

 

மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம் என்பதில் உறுதியாக இருந்த அவர், 1942ம் ஆண்டு தன்னுடைய பத்திரிகையில், “மதத்தின் பெயரால் மனிதர்களுக்குள் வேறுபாடுகளை ஏற்படுத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்றவற்றில் மதம் ஊடுருவக் கூடாது. வருவாய், காவல்துறை, நீதி, உணவு, ஆரோக்கியம், சுகாதாரம், பொது இடங்களில் பழகுதல் போன்றவற்றில் ஒரு இந்துவின் தேவையும் ஒரு முஸ்லிமின் தேவையும் எவ்வாறு வேறுபட முடியும்? யதார்த்த வாழ்க்கையில் எத்தனை தனி மனிதர்கள் உள்ளனரோ அத்தனை மதம் உள்ளது. ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய கல்வி, சிந்தனை, அறிவு இவற்றின் மூலம் தன்னுடைய மதத்தை எந்த அளவிற்கு கடைபிடிக்கவேண்டும், எந்த கருத்துகளை ஏற்றுகொள்ளவேண்டும் என்று முடிவுசெய்த பிறகே கடைபிடிக்கிறான். எனவே, மதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம். அரசியலிலோ, சமூகத்திலோ மதம் ஊடுருவ கூடாது” என எழுதியிருக்கிறார்.

மதத்தில் இருந்து அரசைப் பிரித்துவிட வேண்டும். மத நம்பிக்கை என்கிற தனிநபர் விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது. பொதுமக்கள் தங்கள் நம்பிக்கையை பொதுச்சட்டத்தை மீறாத வகையில் பின்பற்றலாம், பிரச்சாரம் செய்யலாம் என்பது மதச்சார்பற்ற அரசின் விதிகளுக்குள் வரும். எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கும், மத அமைப்பிற்கும் அரசின் நிதி ஒதுக்கப்படமாட்டாது. மத விஷயங்களில் அரசு தலையிடாது என்றாலும், தீண்டாமை போன்ற அடிப்படை மானிட நெறிகளுக்கு புறம்பான செயல்களை மதம் கடைபிடிக்குமானால், அரசு தலையிட்டு முடிவெடுக்கும் உரிமை உண்டு. இப்படி மதச்சார்பற்ற ஒரு குடியரசு இருக்க வேண்டும் என்று அவர் தன் இறுதி நாட்களில் கனவுகண்டார்.

‘இந்தியா சுதந்திரமடைந்த பிறகு இருநாடுகள் பிரிவதில் துளியும் விருப்பம் இல்லாதவராக இருந்தார். இந்த நாட்டில் இந்து, கிறித்தவர், முஸ்லிம், பவுத்தர், சமணர் என இருக்கும் பல்வேறு மதங்களை உள்ளடக்கிய மதச்சார்பற்ற, அனைவருக்கும் சம உரிமை வழங்கக்கூடிய ஒரு நாட்டை கட்டமைக்க வேண்டும்’ என்று காந்தி எண்ணினார். அதை ‘புவிசார் தேசியம்’ என்பார்கள். அதேசமயம், பெரும்பான்மை மக்களுக்காக மட்டும் இருக்கிற, மற்ற சிறுபான்மையினரை கலவரத்தின் பேரால் விரட்டிவிட்டு, ‘கலாச்சார தேசியத்’தை உருவாக்க நினைத்தார்கள் இந்துத்துவவாதிகள். ஆனால், அவர்களது துரதிர்ஷ்டவசமோ, இந்த தேசத்தின் அதிர்ஷ்டவசமோ இந்தியா ஒரு சுதந்திர, மதச்சார்பற்ற அரசாக வலுப்பெற்றது. காந்தி 1930களில் இருந்து ஐந்து முறை கொலை முயற்சிக்கு ஆட்படுத்தப்பட்டார் என்று ஒரு தகவல் சொல்கிறது. ஐந்தாவது முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த கோட்சேவால் அது நிறைவேற்றப்பட்டது.

இன்று பெரும்பான்மை மக்கள் நலன்சார்ந்த அரசு என்ற பெயரில் வந்திருப்பவர்கள் மதச்சார்பின்மையை விலைபேசுகிறார்கள். மதச்சார்பற்றவர்களை விருந்தாளிக்குப் பிறந்தவர்கள் எனக்கூறி அசிங்கம் செய்கிறார்கள். ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கிவிடுவோம் என்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர். அதைப்பற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள் அதிகாரமேடையில் அமர்ந்திருப்பவர்கள்.

இந்திய அரசியல் தத்துவ அறிஞர் ஆஸிஷ் நந்தி, ‘கடைசி ஆண்டுகளில் காந்தியும், கோட்சேவும் ஒரே திசை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தனர். கோட்சே காந்தியைக் கொல்வதை நோக்கியும், காந்தி கொல்லப்படுவதை நோக்கியும் அந்தப் பயணங்கள் அமைந்திருந்தன. காந்தியின் கொலை, காந்தி, கோட்சே இருவரும் கையொப்பமிட்டு வெளியிடபட்ட ஒரு கூட்டறிக்கையாக அமைந்தது’ என குறிப்பிடுகிறார். தன் மீது பாய்ந்த குண்டுகள் தமது உயிரைக் குடித்துக் கொண்டிருப்பதை காந்தி நன்கு உணர்ந்தார். மதச்சார்பின்மை என்ற துப்பாக்கியில் இருந்து அந்த குண்டுகள் வெடித்திருந்தன. அந்தக் கொலையில் சிதறி உறைந்த காந்தியின் குருதி, பாசிசத்தை படரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.