பிற

காதல் செய்வோம்…

வாழ்வின் பல உன்னத
தருணங்களை
தரவல்லது
காதல்..

காதலிக்காத
கடவுள்கள் இங்குண்டு..
காதலிக்காத
புரட்சிக்காரன் இங்கு யாருண்டு..

பகத்சிங்க்கு கூட
காதலி இல்லையே தவிர
காதல் குறித்த பார்வையுண்டு..

காற்றில் பரவும்
மெல்லிசையை விடவும்
இனிதானது..
கைப்பேசி வழியே
காதுகளை வந்தடையும்
காதலியின் குரல்..

மொட்டவிழும் பொழுதுக்காய்
காத்திருக்கும்
புகைப்பட கவிஞனின் பதற்றத்துக்கு
சற்றும் குறைவற்றது..

ஒற்றை எழுத்தில்
வந்து சேரும் குறுஞ்செய்திக்காக
காதலிப்பவன் புரியும் தவம்..

எல்லோராலும்
போராட முடிவதில்லை
ஆனால் எவராலும்
காதலிக்காமல் இருக்க இயலவில்லை..

போராட்டங்கள்
அரசுக்கு எதிரானது..
காதல்
நடைமுறையில் உள்ள
சமூகத்துக்கு எதிரானது..

சாதி
மதம்
வர்க்கம்
இவை இச்சமூகம் நமதல்ல..
இதற்கு எதிரான
யுத்தமே காதல்..

மறைந்த கவிஞர் வாலியின்
வரிகளில் அழைக்கிறோம்..

இளைஞனே
காதல் தவம்புரி..

எமதருமபுரி
ஆகாமல்

சமதருமபுரி
ஆகட்டும்
தமிழகம்…

– எஸ். ஜான்பால்.

Related Posts