Kaaka_Muttai[1]மழையில் ஸ்லோ மோஷனில்..

வில்லனை ஓட ஓட வெட்டும் காட்சிகள் இல்லாத..

சண்டைக்காட்சிகளில், ஹீரோவின் கால் தரையிலேயே பதியாமல் வானிலேயே சுற்றி 100 பேரை அடித்து வீழ்த்துகிற சோதனைகள் இல்லாத..

நான் யார் தெரியுமா ?
என் பேரு ஏன் மாஸ் தெரியுமா?
என் பேரு ஏன் சுறா தெரியுமா?
போன்ற வசனங்கள் இல்லாத..

திரைக்கதை டொக்கடிக்கும் போதெல்லாம்,
மெழுகுச் சிலைப் போன்ற பெண்ணுடன் டூயட் என்ற பெயரில் ஹீரோ பண்ணும் அழிச்சாட்டியங்கள் இல்லாத..

எப்பபாரு வீர வசனம் பேசும் ஆண்கள், செண்டிமென்ட்டுகளில் கரையும் பெண்கள்.. போன்ற நாடக மாந்தர்கள் இல்லாத…

கார்கள் பறக்காத, புல்லட்கள் க்ளோஸ் அப்பில் சீறாத

பெண்களை இழிவு படுத்தி 4 காமெடி காட்சிகள், 10 வசனங்கள், 2 பாட்டுகள் இல்லாத

ஒரு சினிமாவை, அதாவது ஒரு நிஜ சினிமாவை பார்ப்பதற்கே மனம் அவ்வளவு நிறைவாக இருந்தது, அதனை வழங்கிய இயக்குனர் மணிகண்டனுக்கு ஒரு சல்யூட்.

கதைக் களம்

சைதாப்பேட்டையில் ஓடும் சாக்கடை நதியான அடையாற்றின் கரையோரம் இருக்கும் சேரி தான் கதைக்களம்அங்கு வாழும் சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்பட்டு, அதற்கு எடுக்கும் முயற்சிகள் தான் திரைக்கதை பயணம்

திரைக்கதை மதிப்பீடு

சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மனிதர்கள், வறுமையை உற்சாகமாக நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் அவர்களது வாழ்வு, அவர்கள் அருகே மற்றொரு உலகமாய் இயங்கும் நவீனத்தை நோக்கிய அவர்களது ஈர்ப்பும் ஏக்கமும்..

இந்த முரணில் உதிரிகளாக்கப்பட்டு சமூகத்தில் Small Anti Elements களாக ஆக்கப்பட்டிருக்கும் சேரி இளைஞர்கள், tiny anti elements களாக உந்தப்பட்டுக் கொண்டிருக்கும் சேரி பாலகர்கள்..

அவர்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதி, இந்தச் சூழலிலும் நேசத்தின், சுயமரியாதையின், நம்பிக்கையின் கதகதப்பு நிறைந்த அவர்களது வாழ்வு..

இதுவே திரைக்கதையின் கச்சா பொருள். இந்த கச்சாப் பொருட்கள் தன் முரண்களினூடாக இயங்க இயங்க அற்புதமான நிகழ்வுகள் பொறிபட்டு தெறித்து திரைக்கதையை அமைக்கின்றது.

தூங்கும் போது ஒன்னுக்குப் போன டவுசரை பாத்திரத்துக்குள் சிறுவன் மறைப்பது

காக்கா முட்டையை உடைத்து ஆசையுடன் சிறுவர்கள் குடிப்பது…

பீட்சா வாங்க முடியாத நிலையில் தோசையிலே பீட்சா தயாரித்து சிறுவர்களுக்கு கொடுக்கும் பாட்டி…

நாய் விற்பது, குடித்து விட்டு மட்டையாகும் குடிமகன்களை வீட்டில் கொண்டு விட்டு காசு சம்பாதிக்க முயற்சிப்பது…
என பீட்சா மற்றும் நல்ல உடை வாங்க சிறுவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள்.

சேரி லும்பன் இளைஞர்கள் இருவர் பணம் சம்பாதிக்க எடுக்கும் முயற்சிகள்…

என சிறப்பம்சங்களை சொல்லிக் கொண்டு போனால் மொத்தப் படத்தையுமே சொல்ல வேண்டும்.

திரைக்கதை நேர்மறை அம்சங்கள்

  1. வறுமையை கதைக்களமாகக் கொண்டிருக்கும் படம்ஒரு காட்சியில் கூட வறுமையை கசக்கிப் பிழிந்து பார்வையாளர்களிடம் கழிவிறக்கம் தேடவில்லை
  2. எந்த விடயமும் over romanticize, fantacise செய்யப்படாமல் உயிரோட்டத்துடன் கையாளப்பட்டிருக்கிறது..
  3. வாழ்வின் எதார்த்த முரண்களினூடாகத்தான் எத்தனை படைப்புகள் கருக்கொண்டிருக்கின்றன என்பதை அழகாக காட்டுகிறது திரைக்கதை.
  4. படம் எந்த ஒரு ஃப்ரேமிலும் பிரச்சாரம் செய்யவில்லை , போதனைகள் செய்யவில்லை..
  5. ஆனால் வறுமையின் துயரம் ஒவ்வொரு ஃப்ரேமிலும் நம் நெற்றிப் பொட்டில் அறையப்படுகிறது
  6. சமூக முரணின் படிம சாட்சியாய் படம் பேசுகிறது

சிறுவர்கள், அவர்களின் அம்மா, பாட்டி, அவர்களின் நண்பர் பழரசம், சிறு திருட்டுக்கள் செய்யும் சேரி இளைஞர்கள், பீட்சா கடை முதலாளியின் நண்பர், எம்.எல்.ஏ என இந்த கதாபாத்திரங்களின் வார்ப்பும் அங்கு உறைந்திருக்கும் சமூகத்தின் முரண் சூழலும் தங்கள் தேவையை நோக்கி ஒவ்வொரு கதாபாத்திரங்களும் இயங்குவதும்.. என திரைக்கதை வாழ்வின் ரகசிய மடிப்புகளை காட்சியாக மீட்டுகிறது.

திரைக்கதை எதிர்மறை அம்சங்கள்

உண்மையில் எதிர்மறை அம்சங்கள் எதுவும் இல்லைஎன்னைப் பொறுத்த வரையில்

படம் பார்த்தவுடன் எழுந்த உணர்வோட்டம்

வாழ்க்கையிலிருந்து விடுபட்டு.. கற்பனா உலகினுள் சஞ்சரிக்கச் செய்யும் படைப்பை விட, வாழ்வின் முரண் படிமங்களினூடாக.. உள் இயங்கும் மனிதக் கூறுகளினூடாக வாழ்வையும் ,சமூகத்தையும், சக மனிதர்களையும் தரிசிக்கச் செய்து, வாழ்வோடு ஒரு உரையாடலை நிகழச் செய்வதே முழுமையான படைப்பு.. காக்கா முட்டை அப்படியொரு உரையாடலை நிகழ்த்துகிறது

சில காட்சிகளில் முழுக்க காட்சி படிமங்களோடு மட்டும் சென்றிருக்க அவரால் முடியுமென்றாலும்அளவான வசனங்களுடன் கூர்மையான காட்சிமொழியைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

ஏதோ பெருசா நடக்கப் போகுது டோய்ஏதோ adventure நடக்கப் போகுது டோய்என்ற நமது Fantasy மன நிலையின் எதிர்ப்பார்ப்புகளை நொறுக்கி ஆனால அதை விட வலுவான காட்சிகளை வழங்குகிறது திரைக்கதைநம்மிடையே வார்க்கப்பட்டிருக்கும் fantasy ரசனையை மெலிதாக satire ம் செய்கிறது திரைக்கதை.

Children of heaven , Baran ஜனரில் நம் தமிழ் படைப்பு ஒன்று என்பதை நினைக்க நினைக்க மகிழ்ச்சி பொங்குகிறதுமீண்டும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி மணிகண்டன் சார்.

ஒவ்வொரு முறையும் தமிழ்ச் சூழலில் இத்தகைய படைப்புகள் வந்து.. தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தும் போதும் ஏ.வி.எம் வகையறா பகாசுர நிறுவனங்கள் சகலகலவல்லவன்களின் வாயிலாக தனது கைங்கர்யத்தை நிகழ்த்தும்..

தமிழுக்கு , காக்கா முட்டையிலிருந்து பல நல்ல படைப்புகள் பொறிபட காத்திருக்கின்றன..அதற்கு முன் இந்த பகாசுரன்களின் கையில் காக்கா முட்டை சிக்கினாலும் உடையாது என்ற நம்பிக்கையுடன் நான்..

ஆம், முட்டையை கைகளில் அமுக்கி உடைக்க முடியாது தானே..

அருண் பகத்


Related Posts