அரசியல்

காகிதப் பணம் போனால் கள்ளப்பணம் போகுமா?

இந்தியாவின் ஜிடிபியில் 12 சதத்தின் அளவிற்கு நோட்டு அச்சடிக்கப்பட்டிருக்கிறது. புழக்கத்தில் இருக்கிறது. இது எப்படி தீர்மானிக்கப்படுகிறது. ஏன் அது 10 சதவீதமாக இல்லை அல்லது 20 சதவீதமாக இல்லை. பத்து சதவீதமாக இருந்தால் என்ன நடக்கும் 20 சதவீதமாக இருந்தால் என்ன நடக்கும்?  கருப்புப் பணச் சர்ச்சையை ஒட்டி எனக்கு எழுந்த இந்தக் கேள்விக்கு விடை காணுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

 

முதலாளித்துவ அளவுகோள்கள் (Metrics) சரியானது என்ற அனுமானத்திலிருந்து துவங்குகிறேன். காரணம் ஜிடிபி கணக்கிடும் முறை பற்றிய மாற்றுக் கருத்து எனக்கு உண்டு. எனினும் ஆங்கிலேயே மார்க்சிய பொருளாதார நிபுணர் மைக்கேல் ராபர்ட் ஜிடிபிக்கு அளிக்கும் விளக்கம் எனக்கு திருப்தியளிப்பதாக இருப்பதால் அதை எடுத்துக் கொள்கிறேன். ஜிடிபி முதலாளித்துவ முறையில் உற்பத்தி செய்யப்படுவதையே அது பெரும்பாலும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. எனவே ஜிடிபி அடிப்படையிலேயே பணத்தின் அளவு பற்றிய விவாதம் நடத்துவதில் தவறில்லை என நினைக்கிறேன்.

 

அடுத்தது பணஓட்டத்தின் வேகம் (Velocity of Money) இது சம்பந்தமாக மார்க்ஸ் எழுதிய மூலதனத்தின் மூன்றாவது தொகுதியில் பேசப்பட்டுள்ளது. ஓட்ட வேகம் அதிகரித்தால் பணத்தின் தேவை குறையும் என்கிறது அந்த விதி. இது மார்க்ஸ் மட்டுமல்ல அனைவரும் ஏற்றுக் கொண்ட விதிதான். ஓட்ட வேகத்தை அளவிடுவது எப்படி? ஜிடிபியை ஒட்டுமொத்த பணத்தால் வகுத்தால் கிடைப்பது பண ஓட்டத்தின் வேகம். இதை இப்படி எளிமையாக விளக்கலாம். உதாரணத்திற்கு ஒரு மென்பொருள் பொறியாளர் ஒருவர் முடிதிருத்தகத்தில் 100 ரூபாய் செலுத்தி முடிவெட்டிக் கொள்கிறார். சவரத் தொழிலாளி அந்த 100 ரூபாயை கொடுத்து அரிசி வாங்குகிறார். அரிசி உற்பத்தியாளர் அவருக்கு தேவையான இடுபொருள் வாங்குவதில் அந்த 100 ரூபாயைச் சேர்க்கிறார் அல்லது உர உற்பத்தியாளனுக்கு கொடுத்து அந்த 100க்கு உரம் வாங்குகிறார். உர உற்பத்தியாளன் தன்னுடைய உர ஆலையை மேன்மைப்படுத்தும் மென்பொருளை வடிவமைக்க அதே மென்பொருள் பொறியாளரிடம் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த அத்துணை பரிமாற்றத்திலும் சமதைவிதி செல்லுபடியாகிறது என்ற நியாயமான அனுமானத்தை வைத்துக் கொள்வோம். இப்பொழுது புறப்பட்ட இடத்திற்கே 100 ரூபாய் வந்துவிட்டது ஆனால் அது 4 மடங்கு மதிப்பை கைமாற்றுவதற்கு உதவியிருக்கிறது. அதாவது மதிப்பளவான 400ஐ பரிவர்த்தனை செய்ய 100 பணம் தேவைப்படுகிறது. எனவே பண ஓட்ட்த்தின் வேகம் 400/100 = 4 ஆகும் இதையே பெரியளவில் பேசினால் ஜிடிபி என்பதும் மொத்த பணத்தின் அளவும் வந்துவிடுகிறது.

 

இதற்கு அடுத்தது காகிதப்பணமும் கடன்செலவாணிப் பணமும் – இரண்டும் பணம்தான். காகிதப் பணமானது உயர்நிலை உலோகத்துக்கு மாற்றாக வந்தது போல் காகிதப் பணத்துக்கு மாற்றாக கடன்செலாவணிப் பணம் வந்துவிட்டது. முதலாளித்துவ உற்பத்தி முறை வளர வளர இது பெருக்கும் என்பது மார்க்ஸின் கணிப்பு. காகிதப் பணத்தின் ஓட்டத்தையும் வேகத்தையும் கணக்கிடுவது சிரமம். என்னுடைய உதாரணத்தில் கூறப்பட்டதைப் போல் ஒவ்வொரு காகிதப் பணத்தையும் துரத்திக் கொண்டு சென்று அது புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்வதற்குள் எத்தனை மடங்கு மதிப்புகளை கைமாற்றியிருக்கிறது என்று விபரங்களை கண்டுபிடித்து அவற்றின்  சராசரியை கணக்கிட்டு பண ஓட்டவேகத்தை அறிவிக்கலாம். இது சிரமமான காரியம். ஆனால் கடன்செலாவணியின் சுற்றோட்டத்தின் மூலம் பணத்தின் ஓட்ட வேகத்தை துல்லியமாக கணக்கிடலாம். காரணம் ஓரு சுற்று சுற்றி முடிந்தவுடன் அது நேர் செய்யப்பட்டு விடுகிறது அல்லது அதன் மதிப்பு போய்விடுகிறது. அதாவது Aயின்கடன் Bக்கு,  Bயின்கடன் Cக்கு,  Cயின்கடன் Dக்கு,  Dயின்கடன் Eக்கு,  Eயின்கடன் Aக்கு என்றானால் யாரும் யாருக்கும் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் Eயின் பொருள் Dக்கு சென்றிருக்கும்,  Dயின் பொருள் Cக்கு சென்றிருக்கும்,  Cயின் பொருள் Bக்கு சென்றிருக்கும்,  Bயின் பொருள் Aக்கு சென்றிருக்கும்,  Aயின் பொருள் Eக்கு சென்றிருக்கும். இவை எல்லாமும் வங்கி பரிவர்த்தனையில் நடப்பதால் அடையாளம் காணமுடியும். அப்படி அடையாளம் கண்டே இந்திய ரிஸர்வ் வங்கி கடன் செலாவணியின் ஓட்டம் 1.3 என்கிறது.  அதாவது 1 ரூபாய் கடன் 1.3 ரூபாய் மதிப்பையே சுற்றியோட வைக்கிறது. சமதை விதியின்படி ஒரு ரூபாய் மதிப்புள்ள பண்டத்தை மாற்ற 1 ரூபாய் மதிப்புள்ள தங்கம் வேண்டும். பரிவர்த்தனை நடந்து கொண்டே இருக்குமானால் ஒவ்வொரு முறையும் தங்கம் கைமாற வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக வாய்ச்சொல் போதும். கடன் செலாவணி என்ற வாய்ச்சொல் அல்லது கடன்பத்திரம் போதும். இது தங்கமாக இருக்கையில் 1:  1 என்று விகிதமானது கடன் செலாவணியாக மாறுகையில் 1.3: 1 ஆக இருக்கிறது

 

அடுத்தது காகிதப் பணத்திற்கும் கடன் செலாவணிப் பணத்திற்கும் உள்ள  விகிதம் 6 என்கிறது ரிஸர்வ் வங்கி  கடன் செலாவணி இல்லாமல் இருந்தால் காகிதப்பணத் தேவையானது 6 மடங்கு இருக்கும். அதாவது 6 X  1.3 = 7.8 ரூபாய் மதிப்புள்ள பண்டம் சுற்றியோட ஒரு ரூபாய் மதிப்புள்ள காகித நோட்டு இருந்தால் போதும். எனவே காகிதப்பணத்தின் அளவைவிட 7.8 மடங்கிற்கு பண்டங்கள் இருக்கும். சுற்றோட்ட வேகம் மாறாதிருக்கும் பட்சத்தில் பண்ட உற்பத்தி அதிகரித்தால் ஒவ்வொரு 7.8 ரூபாய் மதிப்பு உற்பத்திக்கும் 1 ரூபாய் நோட்டு அடிக்க வேண்டும். சுற்றோட்ட வேகம் அதிகரித்தால் மார்க்ஸ் கூறியபடி பணத்தேவை குறையும். அதாவது 7.8 ரூபாய்க்கு பதிலாக 8 ரூபாய் பண்டத்திற்கு ஒரு ரூபாய் நோட்டு போதும். மாறாக சுற்றோட்ட வேகம் குறைந்தால் பணத்தேவை அதிகரிக்கும்.

 

2008ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக சுற்றோட்ட வேகம் குறைந்திருக்கிறது. இதைச் சொல்வதற்கு தத்துவஞானமும் பொருளாதார ஞானமும் அவசியம் இல்லை. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ பொருளாதாரங்களான அமெரிக்க, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் ஆகியவற்றை எடுத்துக் கொள்வோமானால் 2008ல் இருந்த பணச்சுற்றோட்ட வேகமானது 1.94, 1,29, 0.7 2015ல் 1.5, 1.05, 0.55 என்றாகியது.

 

ஜப்பானில் காகிதப்பணத்திற்கும் ஜிடிபிக்கும் உள்ள விகிதம் 20 சதவீதம் என்கிறார்கள் இந்தியாவில் இது 12 சதவீதமாக இருக்கிறது ஆனால் சுற்றோட்ட வேகத்தைப் பாருங்கள் இந்தியாவில் 1.3 ஆகவும் ஜப்பானில் 0.55 ஆகவும் இருக்கிறது. மிகையுற்பத்தி நடைபெற்றால் சுற்றோட்ட வேகம் குறைவது இயல்புதான். அத்துடன் குறுகிய கைமாற்றலிலேயே உற்பத்திப் பண்டம் நுகர்வுக்குச் சென்று சுற்றோட்டத்திலிருந்து விலகினாலும் சுற்றோட்ட வேகம் குறையும். சுற்றோட்ட வேகத்தை காகிதப்பணத்தைக் கொண்டு கணக்கிடுவதில்லை கடன்செலாவணியைக் கொண்டு கண்க்கிடுகிறர்கள் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

 

இந்தியாவில் காகிதப்பண/ஜிடிபி விகிதம் அதிகமாக இருப்பதாலேயே கருப்புப்பணம் சேர்கிறது என்றொரு வாதத்தை முன்வைத்து வேலைகளை இந்திய அரசு செய்து வருகிறது. அப்படியானால் ஜப்பானில் இதைவிட அதிகமாக கருப்புப் பணம் உற்பத்தியாகியிருக்க வேண்டும். ஊழல் நாட்டு தரப்பட்டியிலில் ஜப்பானானது இந்தியாவிற்கு கீழேதான் இருக்கிறது.(இந்தியா 38 புள்ளிகள் பெற்று 168 நாடுகளில் 76வது இடத்தில் இருக்கிறது. ஜப்பான் 75 புள்ளிகள் பெற்று இதே 168 நாடுகள் பட்டியலில் 18வது இடத்தில் இருக்கிறது – Transparency International  கணக்கிடும் ஊழல் குறியீட்டு எண்) கருப்புப் பண உற்பத்திக்கு முன்வைக்கும் சங்பரிவார அமைப்பினர் வைக்கும் முதலாளித்துவ வாதங்கள் எல்லாம் கொச்சைப் பொருளாதாரவாதத்தில் கூட சேர்த்துக் கொள்ள முடியாது. ராமர்பிள்ளை வகையாறாவிலேயே சேர்க்க வேண்டும்.

 

ஆக காகிதப் பணத்தின் அளவை தீர்மானிப்பது முதலாளித்துவ உற்பத்திமுறையில் நடைபெறும் மூலதனச் சுற்றோட்டமே – காரணம், மூலதனமானது திறனுடைய உற்பத்திப் பொருட்களாகவும். உற்பத்தி பண்டங்களாகவும் பணமாகவும் இருக்கிறது. இந்த மூன்று வேடத்தையும சுற்றோட்டத்திலிருக்கும் மூலதனமானது மாறி மாறி வரிசைத் தொடரில் அடுத்தடுத்து பூணுகிறது. காகிதப் பணமும் கடன் செலாவணிப் பணமும் சேர்த்தே சுற்றோட்டத்திற்கு உதவி புரிகிறது. சுற்றோட்ட வேகமே உபரி உற்பத்தியை (அதாவது லாபத்தை) அதிகரிக்க முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு உபரி உற்பத்தியை அதிகரிக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஓட்டவேகம் கூடும் அவ்வளவுக்கு அவ்வளவு பணத்தேவை அதிகரிக்கும். இவற்றில் கடன்பணத்திற்கும் காகிதப்பணத்திற்கும் உள்ள விகிதாச்சாரமே காகிதப்பண அளவை தீர்மானிக்கிறது. இந்த விகிதாச்சாரமானது முதலாளித்துவ உற்பத்திமுறை வளர வளர அதிகரிக்கும் என்று மார்க்ஸ் கூறியதை இதுவரை எடுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

 

 

Related Posts