இதழ்கள் இளைஞர் முழக்கம்

கவுரவத்தின் பெயரால் கனவான்களே! – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

நெடுந்துயர் சுமக்க தன்னை நீண்ட கடுந்துயர் பயணத்திற்கு தயர்படுத்திக் கொண்டவள். பதினான்காண்டுகள் கடுமையாக அலைகழிக்கப்படுவோம் என தெரிந்தே வனாந்தரத்தின் ஆழத்தில் இறங்கியவள். கணவன் இராமனை நம்பி சோதனைகளை உதட்டின் மெல்லிய சுழிப்பால் புறம்தள்ளி பின்தொடர்ந்தவள் அவள். இராவணனின் அசோகவனத்தில் மீது மரியாதை இருப்பினும் நம்பிக்கை கனவுகளை சுமந்து மீட்கும் நாளுக்காக பிரிவுற்றிருந்தவள் அவள். கடுமையான தருனங்களை பலகாலம் சுமந்தவள், அப்போதெல்லாம் படாத மனவலியை இந்த கணப்பொழுதில் அனுபவித்தாள். நடப்பது துர்சொப்பனத்தின் தொடர்ச்சி என நினைத்தாள். பிரிவு முடிந்து வாழ்வின் வசந்தத்தை மீட்கும் நேரம்.. சந்தேகத்தின் பெயரால் தீயின் முன் நின்றாள்.

இராவணனின் நிழல் தீண்டாத இராவணச் சிறையில் இராமன் நினைவில் மூழ்கி திளைத்ததால் பசலை படர்ந்த உடலில் வியர்வை வழிய, நீயும்தான் என்னைவிட்டு பிரிந்திருந்தாய் ஆகவே இருவரும் சோதனையில் இறங்கலாமா? எனப் போன்ற ஆயிரம் கேள்விகளை தீ படர்ந்த கண்களில் தேக்கி ராமனை நோக்கினாள். அவள் பார்வையின் வெம்மை தாளாமல் நிலம் நோக்கி குனிந்த ராமன் சொன்னான் நசுங்கிய குரலில் சொன்னான் ” (மனு) தர்மத்தை காக்க, ராஜ குடும்பத்தின் கவுரவம் காக்கப்பட தீயில் நீ இறங்கதான் வேண்டும் ஜனகனின் மகளே” தனது பிறப்பின் பயனே வர்ணங்களை காப்பதுதான் என சம்புகனின் உயிரை கொய்து நிருபணம் செய்த இராம கதை இது. வர்ண தர்மத்தின் இராஜ நீதி காக்க, இப்போதும் இதை கட்டிக்காக்க “கடவுள் இராமன் சீதையை தீயில் இறக்கியது, செய்தது சரியே” என பட்டிமன்றங்களில் சிகைபிளக்கும் வாதங்களை முழங்கிக்கொண்டே இருக்கின்றனர். கவுரவத்தின் பெயரால் பலியெடுப்பதும் பலிகொடுப்பதும் சமூகத்தின் பொதுபுத்தியில் கடவுளின் பெயராலே பதிய வைக்கப்பட்டுள்ளது. அத்தகைய சமூகமாய் நமது சமூகம் விளைவிக்கப்பட்டுள்ளது.

விளைவின் அறுவடையாய் வர்ணங்களை தோற்றுவித்த மத கவுரவம், வர்ணங்களின் பிரிவுகளான சாதி கவுரவும், சாதிகள் கட்டிக்காக்கும் குடும்ப கவுரவம் என விஸ்தாரமாய் வளர்ந்து மனித உயிர்களை பலிவாங்கிக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக இப்போது சாதிகள் கட்டிக்காக்கும் குடும்ப அமைப்பே அதிவேகமாய் காவுகளை கேட்கிறது. இன்னொரு பக்கம் ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் தலித்துக்களாகவே நடத்தப்பட்டார்கள் என்பதை, 1829 வரை கணவன் இறந்த பின்னும் அவனது கவுரவத்தை நிலைநாட்ட உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்த மண் இது என்பதையும் சேர்த்தே புரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் வளர்ந்த நாகரீகத்தின் உச்சத்தில் மனித சமூகம் இருப்பதாக நம்பப்படும் இக்காலத்தில்தான் இந்த அவமானம் தொடர்கிறது. இளம் காதலர்களின் உயிர்களை முந்திரி மரத்தில் கட்டிவைத்து ஊரே சேர்ந்து நின்று விறகுகளை அடுக்கி உயிரோடு எரிக்கும் கொடூரத்தை எப்படி ஏற்பது? அவர்கள் செய்த குற்றம் சாதிமறுப்பு திருமணம் செய்ததுதான். அப்படியெனில் நமது சமூகம் நாகரீக சமூகம் என கம்பீரமாக முழங்கும் முகத்தை எங்கு வைத்துக்கொள்வது? சாதி மறுப்பு திருமணம் இப்படியெனில் சில காதல் திருமணங்களையும் ஏற்காத கொலை செய்யும் ஒரு சில போக்கும் தொடர்வதை எவ்வகையில் சேர்ப்பது?

கற்பிதம் செய்யப்படும் காரணங்கள்..

சாதிய சமூகத்தில் தங்களின் கவுரவத்தை கட்டிக்காக்கவும், அதற்காக எந்த விலையையும் தருவதற்கு தயாராய் இருக்கும் குடும்பங்களே பெரும்பான்மையாய் இருக்கிறது. நாகரீகம் கருது இதில் பெரும்பான்மையான குடும்பங்கள் புலம்பல்களுடன் நிறுத்திக்கொள்கின்றனர். ஆனால் இந்த புள்ளியை கடக்கும் குடும்பங்கள் கொலைகளில் இறங்குகின்றனர். கவுரவ கொலைகள் என்ற பெயரால் நடக்கும் இந்த ஆணவ கொலைகள் இழந்த தாங்களின் குடும்ப கவுரவத்தை மீட்கும் என்ற நம்பிக்கைதான் இக்கொலைகள் வளர காரணமாகி நிற்கிறது.

இந்தியாவில் பல காரணங்களுக்காக ஆணவ கொலைகள் நடைபெறுகின்றன. பல சம்பவங்களில் செய்யப்பட்ட கொலை, ஆணவ கொலை என்று தெரியாமல் கூட போய் விடுகிறது. இந்த ஆணவ கொலைகளில் முதல் மற்றும் முக்கிய காரணமாக இருப்பது சாதி. சாதி மாறி திருமணம் செய்வதை அருவறுப்பான நிகழ்வாய் பார்க்கும் கேவலம் இப்போதும் நடக்கிறது. வேறு சாதி ஆணை திருமணம் செய்யும் பெண்ணை, பெண்ணின் வீட்டார், தங்கள் குடும்ப கவுரவம் பாதித்து விட்டது என்று கொலை செய்து விடுகின்றனர். சாதி ஆதிக்க குடும்ப பெண்ணை ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞன் காதலித்தால் அவனை கொலை செய்வதும் நடக்கிறது.

இதுவல்லாமல் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை பெண் புறக்கணிப்பது, விருப்பமுடைய வேறு ஆணுடன் சென்று விடுவது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அப்பாவி பெண்ணை வீட்டில் சேர்த்தால் தங்கள் கவுரவம் போய் விடுமென அந்த பெண்ணை கொலை செய்வது. மறுமணம் செய்ய விரும்பும் பெண்ணை அழிப்பது. கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பாமல், விவாகரத்து கோரும் பெண்ணை கொல்வது. குறிப்பாக, ஒரே கோத்திரத்தை சேர்ந்த ஆண் – பெண் திருமணம் செய்தால், அவர்கள் அண்ணன், தங்கை முறை என்பதால், அவர்களை கட்டப் பஞ்சாயத்து செய்து, ஆண் – பெண் இருவரையும் கொல்வது போன்ற பல காரணங்களுக்காக, இந்தியாவில் ஆணவ கொலை அதிகமாக தலை தூக்கியுள்ளது.

தான் தூக்கி வளர்த்த குழந்தையை கொஞ்சமும் இரக்கமில்லாமல் கொன்றழிப்பதின் மனநிலை கவுரவத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுவதுதான் அநியாயம். இதயமற்ற இந்த கொடுஞ்செயலை ஒரு ஊரே கூடி நியாப்படுத்துவது அதைவிட அநியாயமாய் இருக்கிறது.

இந்திய நாடு முழுவதும்..

ஏதோ அங்கொன்று இங்கொன்று என இல்லாமல் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் வெளி உலகத்திற்கு தெரிந்தும், தெரியாமலும் ஆணவ கொலைகள் நடக்கின்றன. குறிப்பாக, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், பீகார், உ.பி., மாநிலங்களில், ஆணவ கொலைகள் அதிகம் நடக்கின்றன. ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திரர்கள் மத்தியில், ஆணவ கொலைகள் அதிகம் நடக்கின்றன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய மாவட்டமான, “தரன் தாரன்’ மாவட்டத்திலும் ஆணவ கொலைகள் அதிகளவில் நடக்கின்றன. இதற்கு அடுத்து தமிழகத்தில் தொடர்ந்து பல ஆணவ கொலைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

தீர்ப்பும் தீர்வும்…

இந்திய நாட்டின் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டதிற்கும், நீதி துறைக்கும் சவால்விடும் அளவு சாதி பஞ்சாயத்துக்கள் வளர்ந்து நிற்கின்றன. இவைகள்தான் ஆணவ கொலைகளை முடிவு செய்யும் இடமாகவும் இருக்கிறது. அங்கு அவர்களுக்கென தனி சட்டம், நீதிமன்றம், தீர்ப்புகள் என அந்த உலகமே வேறு. அங்கு பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்பவரின் மீது நடவடிக்கை சாதியையெட்டி மாறும். ஆனால் பெண்களுக்கு மட்டும் அங்கு எப்போதும் நீதி கிடைக்காது. ஆனால் ஆணவ கொலை குறித்து பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுப்பியது கொஞ்சம் நம்பிக்கையை விதைத்தாலும் ஆணவ கொலைகள் நிற்பதாய் இல்லை.
இதுபோன்ற ஆணவ கொலைகளை தடுக்க உத்தரவிடக்கோரி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சக்தி வாகினி என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தது. இம்மனு, நீதிபதிகள் ஆர்.எம்.லொதா, ஏ.கே.பட்நாயக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்குமாறு, மத்திய அரசுக்கும், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 8 மாநில அரசுகளுக்கும் தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்பொரு முறை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தாகாரத் எழுதிய கடிதத்தில், “ஜனநாயக விரோதமாக, சாதி அடிப்படையிலான வேறுபாட்டு எண்ணங்கள் மற்றும் நம்பிக்கையால் பாதிக்கப்படும் இளம் ஜோடிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். எனவே, இதுபோன்ற ஆணவ கொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு உறுதியான நடவடிக்கையாக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும். என்றார். இதுவரை முழுமையான பாதுகாப்புக்கான சட்டம் இல்லை என்பதுதான் வேதனை.

ஆணவக் கொலையை செய்பவர்களின் வழக்கை அரிதிலும் அரிதாக கருதி, அத்தகைய குற்றவாளிகளுக்கு அனைத்து நீதிமன்றங்களும் மரணத்தன்டணை வழங்க வேண்டும் என்று கவுரவக் கொலை தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். ஆணவ கெலைகள் காட்டுமிராண்டிதனமான ஒன்று, இது தேசிய அவமானம். அநாகரிகமான நடத்தைகளை தடுத்து நிறுத்துவது மிகவும் அவசியமானது. கவுரவக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கும் அனைவரும், தங்களுக்கு மரணத்தன்டணை காத்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் தீர்ப்பு கூறுகிறது.
ஆனால் வெறும் தன்டனைகள் மட்டுமே ஒரு குற்றத்தை தடுத்து நிறுத்திவிட முடியாது. குற்றத்தின் சமூக உளவியளில் மாற்றத்தை கொண்டுவராமல், குற்றத்தை தடுத்து நிறுத்திவிட முடியாது..

சாதியால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் அதன் அடிப்படைகளை களயாமல் மாற்றம் காண முடியும் என்பது வெறும் கற்பிதமே!

Related Posts