இதழ்கள் இளைஞர் முழக்கம்

கல்வி, மதம் என இரண்டிலும் பாதிக்கப்படுவது பெண்களே. குற்றம் கடிதல் பிரம்மாவுடன் ஓர் உரையாடல் இல.சண்முகசுந்தரம்

கல்வி, மதம் என இரண்டிலும் பாதிக்கப்படுவது பெண்களே.

குற்றம் கடிதல் பிரம்மாவுடன் ஓர் உரையாடல்

இல.சண்முகசுந்தரம்

யாரிடமும் துணை இயக்குனராய் இருந்த அனுபவம் கூட இல்லாமல் ஒரு திரைப்படம் இயக்குவது இப்போது சாத்தியம் ஆகியிருக்கிறது, எனினும் எப்போதும் அது அத்தனை சுலபமல்ல. எல்லாருக்கும் சாத்தியமுமல்ல.

முதல் திரைப்படத்திலேயே விருதுகள் வாங்குவது உழைப்பாலும், அறிவாலும் சாத்தியம் தான் எனினும், சர்வதேச விருதுகள், தேசிய விருதுகள் என பல விருதுகள் கிடைப்பது எப்போதாவது தான் நிகழக்கூடும். யாருக்கேனும் தான் சாத்தியமாகக் கூடும்.

இரண்டும் இப்போது நிகழ்ந்திருக்கிறது. அதுவும் ஒருவருக்கே என்கையில் நிச்சயம் ஆச்சரியம் தானே. எளிமையாய் பழகும் இயல்புள்ள இளைஞர். பேசும் வார்த்தைகளில் மனசின் சாரல் தெறிக்கிறது. எனக்கு சினிமாவைப்பத்தி அதிகம் தெரியாது, நானொன்னும் பெரிய ஆள் கிடையாது என ஏதோ ஒரு வாக்கியத்திற்கிடையில் சுலபமாய் சொல்லிவிட்டு, அடுத்த விசயத்திற்கு தாவிச்சென்றுவிடும் அளவிற்கான இயல்பான மனிதர்.

தேடலில் இருந்து தான் எல்லாமும் கிடைக்கப்பெறுகிறது, நமக்கான இடம் கிடைக்கப்பெறும் வரை தேடிக்கொண்டேதான் இருக்கவேண்டும், அதுவரை சோர்வடையாமல் அலைந்து திரிவதே வேட்கையுள்ள மனிதனின் இயல்பு என்ற அனுபவத்தைச் சொல்கையில், தன்னை முன்னிறுத்தாமல் சொல்லும் வார்த்தைகள் அவரிடம் அநேகம் கிடைக்கின்றன.

அவர் வீட்டுக்குச் சென்ற அந்த நேரம் மதிய உணவுக்கானது. பலர் காத்திருக்கின்றனர். அடுத்த நிகழ்ச்சிக்கான தொடர் அழைப்புகளுக்கிடையிலும், அவசரம் காட்டாது பேச முடிகிறது.

இனி, அவருடனான எளிய உரையாடலில் இருந்து..

நாம்: உங்களைப் பற்றிய அறிமுகமாய் கொஞ்சம் சொல்லுங்கள்.

பிரம்மா: நான் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை பூர்விகமாய் கொண்டவன். எனினும் படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான். சிபிஎஸ்இ பள்ளி, பின்பு அரசுப்பள்ளி எனப்பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, லயோலாவில் படிப்பு. பின்னர், கிரெசண்டில் எம்பிஏ பயின்றேன். நாடகங்கள் எனது உயிர்.

என் கல்லூரிக்காலம் முழுவதும் நாடகம் குறித்த ஆர்வத்தாலும், பயிற்சியாலும் நிரம்பியிருந்தது என்பதே என் துவக்கம். மைமிங், ஸ்கிட் எனச்சொல்லப்படும் ஊமை நாடகம், குறும்நாடகங்களில் தேசிய விருது வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் விளம்பரக்கம்பெனி, நிதி நிறுவனம் எனப் பல நிறுவனங்களில் வேலை செய்தேன் என்றாலும் என்னால் அங்கு நிற்க முடியவில்லை. ஒவ்வொரு இடத்திலிருந்தும் வேக வேகமாய் வெளியே வந்தேன். படைப்பின் மீதுதான் கவனம் இருந்தது. கலைத்துறை மீதான ஆர்வம் இருந்தபோதும், அதில் என்ன செய்யப்போகிறோம் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. எது எனக்கான வேலை என்பதில், இன்னும் நிறையத் தெரியத்தெரிந்துகொள் என்று எதையோ தேடியலையச் சொன்னது மனசு. நானும் தேடத் துவங்கினேன்.

நாம்: சினிமாவுக்கு எப்போது வந்தடைந்தீர்கள்?

பிரம்மா: நண்பர் உதயப் பிரகாசுடன் சேர்ந்து ஒரு நாடகக் குழுவைத் துவங்கினோம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாடகப்பயிற்சி தருவது எனக் கொஞ்சம் விசாலமான இடத்தை வந்தடைந்தேன். தமிழ்நாடெங்கும் வீதிநாடகங்களில் பங்கேற்றேன். அநேகம் கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேன். நிறையத் தலைப்புகளில் அரசு சாரா நிறுவனங்களுக்காகவும் நாடகப் பிரச்சாரங்களில் பங்கேற்றிருக்கிறேன். நாடகம் ஒரு வாய்ப்பை எனக்கு உருவாக்கிக் கொடுத்தது. ஏராளமான இளைஞர்கள் என்னோடு சேர்ந்திருந்த காலமது. கார்பரேட் நிறுவனங்களுக்கு அதன் ஊழியர்களுக்காக மனிதவளப் பயிற்சி அளிப்பதற்காக நாடகங்கள் கொடுத்திருக்கிறோம்.

அதன் பின்னர், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வளரிளம் பருவத்து மாணவர்களுக்கான கருத்துக்களை நாடகங்களாய் கொண்டு சென்றேன். அப்புறம் வேறோரு அரசு சாரா நிறுவனம், பின்னர், பீகார், காஷ்மீர் எனப் பல மாதங்கள் கடந்தன. அப்புறம், தமிழ்நாட்டில் இருக்கிற சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு எல்லாப் பள்ளிகளுக்கும் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த மாணவர்களோடு பழகவும், உரையாடவும் கிடைத்த வாய்ப்புகள் எனக்கு அநேகம் கற்றுக்கொடுத்தன. எந்த மாதிரியான குற்றங்களுக்கு ஆளாகிறார்கள், அதன் பின்னர் என்னாகிறார்கள் எனவும் தெரிந்துகொள்ள முடிந்தது. பின்னர், அமெரிக்காவிற்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், இது எல்லாமே நாடகங்களால் கிடைத்த வாய்ப்புகள் தான்.

அப்போதுதான் எனது நண்பர்களில் சிலர் குறும்படங்கள் இயக்கிக் கொண்டிருப்பதை நான் கவனித்தேன். பாவேல், சைமன் ஆகியோர் செய்துகொண்டிருந்த குறும்பட முயற்சிகளைக் காணும்போதுதான், அந்த ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது. அப்போதுதான், இளைஞர்கள் ஏன் வாக்களிக்கவேண்டும் என்ற குறும்பட ஆலொசனை தோன்றியது, என் நண்பர் கிறிஸ்டி சிலுவப்பன், அவர் தான் குற்றம் கடிதல் தயாரிப்பாளர். அவரிடம் கேட்டேன். செய்து முடித்தேன். யூ டியுப்பில் பலர் பார்த்துப் பாராட்டியதால் எனக்குள் சினிமா ஆர்வம் அதிகமானது.

இன்னொரு குறும்படம் செய்யலாம் எனத்தோன்றியது. பழைய சுவர், புதிய சித்திரம் என்றொரு படத்தை ஹேபிடேட் என்ற அரசு சாரா நிறுவனத்துக்காக செய்தேன்

நாம்: கல்வி குறித்த திரைப்படம் என்பது எதிலிருந்து தோன்றியது.

பிரம்மா: என் தேடல்களில் நான் அதிகம் கற்றுக்கொண்டது கல்விநிலையங்களில் இருந்தும், மாணவர்களிடம் இருந்தும் தான். நான் அரசுப்பள்ளியிலும், தனியார் பள்ளியிலும் படித்தவன். தனியார் பள்ளி மாணவனுக்கு கிடைக்கும் எந்த வாய்ப்பும் அரசுப்பள்ளி மாணவனுக்குக் கிடைப்பதில்லை. அரசுப்பள்ளி மாணவனுக்கு கிடைக்கும் வாய்ப்பு தனியார் பள்ளி மாணவனுக்கும் கிடைப்பதில்லை. வாய்ப்பு என நான் சொல்வது வேலைவாய்ப்பு சார்ந்தவை அல்ல. வாய்ப்பு என நான் சொல்வது கல்விகற்கும் சூழலையும், அந்த மாணவப் பருவத்து வாழ்க்கையையும் தான் சொல்கிறேன். இது அவர்களின் தவறோ அல்லது பெற்றோருடைய தவறோ அல்ல.

இது ஒரு அமைப்பு ரீதியான பெருங்குறைபாடு ஆகும். இன்றைய கல்விச்சூழலின் பெரும் குறையாகும் இது. இரு வேறு அமைப்பு முறைகள், சூழல்கள், வாய்ப்புகள் என ஒரு தேசத்தின் கல்வித்தளத்திற்குள்ளேயே முரண்பாடுகளால் நிறைந்த கல்விமுறை உருவாக்கப்பட்டிருப்பது ஒரு பாகுபாடு ஆகும். மனிதர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் நல்லவர்களாகவே இருக்க நினைப்பினும், அமைப்பு முறை அப்படி உருவாக அனுமதிப்பதில்லை. கல்விக்கு இதில் பெரும் பங்குண்டு எனக்கருதுகிறேன். கற்றுக்கொடுக்கப்படும் சூழல், வளர்த்தெடுக்கப்படும் சூழல் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, வாழ்க்கையை அமைத்துக்கொள்வது நமது நாட்டில் எளிதானதல்ல.

நாம்: பாலியல் குறித்த விழிப்புணர்வடங்கிய கல்வி, இரு வேறு மதப்பின்னணி கொண்டோரின் வாழ்வு எனக் குறிப்பாய் பேசியதன் பின்னணியென்ன?

பிரம்மா: ஆண்- பெண் பழக்கத்தில் எது சரி, எது தவறு, ஆண் என்பவன் யார், பெண் என்பவள் யார் என்பது கல்வியில் மிக முக்கியமான ஒன்றாகும். பாலியல் குறித்த ஒருவருடைய பார்வையில்தான் அவர் வாழ்வின் பெரும்பகுதி சிந்தனைகளும், பழக்கங்களும் உருவாகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. பாலுணர்வு குறித்த விசயங்கள் ஒவ்வொரு மனிதரிடயேயும் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இதனால் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அவர்கள் பல நேரங்களில் மனுசிகளாய் கூட பார்க்கப்படுவதில்லை. இது ஒருவகையான புறக்கணிப்பு ஆகும். பாரபட்சம் ஆகும். இந்த நிலையை சரியான கல்வியால் மாற்ற இயலும். பாலியல் குறித்த கல்வியில் இது சாத்தியம்.

மற்றொரு விசயம் மதம். நமது நாட்டில் சாதி, மதம், இனம் என நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகளை மறந்து வாழத்தெரிந்தவர்களாக இருந்த சூழல் இப்போது கொஞ்சங்கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறது. நான் அமெரிக்காவில் இருந்தபோது பல்வேறு நாட்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, சாதி என்ற வார்த்தைக்கான விளக்கத்தை பலவாறு, பலமணி நேரம் சொல்லிக்கூட புரிய வைக்கமுடியவில்லை. இந்து மதம் அந்த மதத்துக்குள்ளே இத்தனை சாதி, அந்த சாதிக்குள்ளே இத்தனைப் பிரிவு என்றெல்லாம் உலகத்தில் எங்கே சொன்னாலும் யாருக்கும் அது புரியாது.

ஒவ்வொரு நாட்டுத் திரைப்படமும் அந்த நாட்டுப் பிரச்னையை, அங்குள்ள மக்களின் வாழ்வை, அவர்களின் முன்னேற்றத்திற்கான கருத்தைச் சொல்லும்போது நான் என்னுடைய நாட்டின் பிரச்னையைப் பத்தி தானே சொல்லமுடியும். மதம் இந்த நாட்டின் முக்கியப் பிரச்னை என்று நான் நினைக்கிறேன்.

குறிப்பாக, இரு வேறு மதத்தினர் திருமணம் செய்துகொள்ளும்போது அதில் சிக்கல் ஏற்பட்டால், பிரச்னை ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படப் போவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். ஆக, கல்வி, மதம் என இரண்டிலுமே பாதிக்கப்படுவது பெண்களாக இருப்பதால் இப்படியான ஒரு கதையை நான் யோசித்தேன்.

நாம்: மதம் எனும் பழமைவாதம் அரசியலொடு சேர்த்துப்பேசப்படும் காலமிது. பாலியல் கல்வி எப்படி புரிந்துகொள்ளப்பட்டது? சாத்தியம் தானா?

பிரம்மா: இந்தப் பழமைவாதம் என்பது எப்போதும் இருப்பதுதான். அது எப்போதும் புதுமையை எதிர்த்துக்கொண்டே தான் இருக்கும். இந்தப்போராட்டம் நடைபெறாமல் நாம் ஒருபோதும் முன்னேறிச்செல்ல முடியாது. நாம் அடைந்துள்ள எல்லா முன்னேற்றங்களும் பழமைவாதத்தை எதிர்த்துப் போராடிப்பெற்றதுதான். இன்னும் சொல்லப்போனால், பழமைவாதம் எப்போதெல்லாம் வலுவாய் முன்னெடுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் தான் அதற்கெதிரான போராட்டமும் வலுவாய் முன்னெடுக்கப்படும்.

குறிப்பாக, பழமைவாதம் எப்போது வாய் திறந்து பேசுகிறதோ, எப்போது நம்மை அழுத்துகிறதோ அப்போது தான் அதன் மீதான பலகீனங்களை மக்கள் புரிந்துகொள்ள முடியும். அப்போதுதான் அந்த விவாதங்கள் எழும். அதற்கெதிராய் கிளம்ப இயலும். அதுவரை, பழமைவாதம் என்பது, சிலரால் எதிர்க்கப்பட்டாலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருக்கும். ஆனால், எப்போது அது தன் வாய் திறந்து பேசுகிறதோ அப்போது நவீனத்தின் முன்னால், புதுமையின் முன்னால், மாற்றத்தின் முன்னால் அது தோற்றுப்போகும். ஆனால், அது ஒரு போராட்டம் மூலமே சாத்தியம். அந்தப் போராட்டத்தை நாம் நடத்திக்கொண்டே இருக்கவேண்டும். கார்ல் மார்க்ஸ் காலத்தில் இருந்த பழமைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் தானே அவர் வாழ்க்கை.

உதாரணத்திற்கு, இப்போது எழுத்தாளர் பெருமாள் முருகன் நிகழ்வை எடுத்துக்கொள்ளுங்கள். யாரெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள், எங்கே, என்ன செய்கிறார்கள், எப்படிச் செய்கிறார்கள், என்ன திட்டத்தோடு உள்ளார்கள், அவர்களை யார் யாரெல்லாம் ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டியிருக்கிறது என்பதை அந்த நிகழ்வு நடக்கையில் தானே நமக்கே தெரிகிறது. அதன் பின்பு தானே, அந்தப்போராட்டம் வலுவடைகிறது. பெருமாள் முருகனுக்காக, கருத்துரிமைக்காக ஒத்த கருத்துள்ளவர்கள் இணைவதும் பொதுஎதிரி உருவானபின்புதானே சாத்தியமாகிறது. எனவே, பழமைவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் எனில், அது தன் வாய் திறந்து பேசிய பின்பே அது சாத்தியம்.

என்னுடைய படமும் இந்தப் பழமைக்கு எதிரான ஓரு குரல் தான். பாலியல் குறித்த கல்வி என்பது இன்று அவசியம் என்ற இந்தக் குரல் காலத்தின் குரல்.

உதாரணத்திற்கு ஒன்று சொல்லவேண்டும். பாலியல் குறித்த கல்வி என்றால் அதை மதப் பழமைவாதிகளும், பிற்போக்காளர்களும் எதிர்க்கிறார்கள். ஆனால், ஆபாசமும், கவர்ச்சியும் இன்று இல்லாத துறை எது? தொலைக்காட்சிகளில் நிறைந்து கிடக்கிறது. திரைப்படங்களில் இருக்கிறது. செய்திகளில் கூட வர ஆரம்பித்துவிட்டது. விளம்பரம் என்பதே ஆபாசம் மூலமாகத்தான் சொல்லப்படுகிறது. படுக்கை அறைக்காட்சிகள் கூட திரையில் அதிகம் காட்டப்படுகிறது. இத்தனையும் காட்டும்போது, ஒருவர் பாலுணர்வால் தூண்டப்படுகிறார். கிளர்ச்சியூட்டப்படுகிறார். இது பெரிய தவறுகளுக்குக் காரணமாகிவிடுகிறது.

ஆனால், பாலியல் என்றால் என்ன, ஆணை ஒரு ஆண் எவ்வாறு பார்க்கவேண்டும் என்று துவங்கி ஒரு பெண்ணை எவ்வாறு பார்க்கவேண்டும், அவர்களது உரிமைகள் என்ன, நமது உரிமைகள் என்ன, எவ்வாறெல்லாம் பாலியல் தாக்குதல்கள் ஒரு சிறுமிக்கும் சிறுவனுக்கும் ஏற்படும், நாம் எவ்வாறு பாதுகாப்பாய் இருக்கவேண்டும், உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்பது என்ன, அதனால் நாம் எப்படி மாறுகிறோம், அதை எவ்வாறு புரிந்துகொள்வது, எது நமது உரிமை, எது கடமை, ஏன் பெண்ணை மதிக்கவேண்டும், ஆண்-பெண் நட்பில் சமத்துவம் ஏன் அவசியம், எது சட்ட விரோதம், அதற்கு என்ன தண்டனை என்று சொல்லித்தருவது எப்படித் தவறாய் இருக்க முடியும்?

விபரமே தெரியாத வயதிலேயே ஒருவனுக்கு பாலியல் வக்கிரத்தை இங்கு ஏற்படுத்திவிடுகிறார்கள். ஆனால், கல்வியால் அதை மாற்றமுடியும் என்றால் பழமைவாதிகள் கூச்சலிடுகிறார்கள். 18 வயது வரை ஒருவருடைய கண்ணை மூடி வளர்த்து, நேரடியாய் அவரை 18வது வயதில் சமூகத்தில் பழக விடுவது என்பது இன்று சாத்தியம் தானா? ஒரு பெண்ணுக்கு கல்யாணம் செய்துகொடுத்துவிட்டால் அவளுக்கு எல்லாப்பாதுகாப்பும் கிடைத்துவிடுமா? வளரிளம் பருவத்து சிறுவனிடம் இருந்து பாலுணர்வு தொடர்பான காட்சிகளையோ, செய்திகளையோ முற்றிலும் இன்று மறைக்கமுடியுமா? செய்யவேண்டும் எனக் கண்ணை மூடிச் சொல்கிறார்களே, அதுதான் பழமைவாதம். அதை நாம் எதிர்த்தே ஆகவேண்டும்.

குறிப்பாக, இன்றுள்ள சமூக ஊடகங்கள் மூலமாக சரியாகப்போராடினால், பழமைவாதம் கட்டாயம் தோற்கடிக்கப்படும். அதற்கான காலமே இது. எனவே, இது பழமைவாதத்திற்கு எதிராய் வலுவாய் போராட வேண்டிய காலம். இன்னும் வீரியமாய் செயல்பட வேண்டும் நாம்.

நாம்: பாலியல் கல்வி வேண்டாம் என்கிறார் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர், வேண்டும் என்கிறார் ஆட்டோக்காரர். இது கல்வித்துறையின் பலகீனமா?

பிரம்மா: அது கல்வித்துறையில் மட்டுமல்ல, இன்றைய சமூகத்திலும் உள்ள முரண்பாடாகும் அது. கிராமக்கதைகளில், பணியிடங்களில் கூட பாலியல் குறித்து பேசும் பழக்கம் நம்மிடையே இருந்து வந்துள்ளது. கி.ரா கதைகளை வாசித்தால், நம்மவர்கள் எப்படி கலகலப்பார்கள் இருந்திருக்கிறார்கள் என்பது புரியும். இன்றைக்கும் படிக்காத பாமர மக்களிடையே பேசும் பேச்சுகளில் பாலியல் குறித்த தெளிவு இருக்குமேயொழிய, வக்கிரம் இருக்காது.

ஆனால், இன்று என்ன நடக்கிறது?

படித்தவர்கள் என்ற பெயரில், நாகரீகம் என்ற போர்வையில், தொழிற்நுட்பம் என்ற வளர்ச்சியைக் காட்டி வக்கிரம் முன்னிறுத்தப்படுகிறது, ஆபாசமும், கவர்ச்சியும் இரசிக்கப்படுகிறது. ஆனால், கி.ரா. கதைகளில் வரும் பேச்சுகள் போன்று யாரேனும் பேசினால், அது அநாகரீகம் என்றழைக்கப்படுகிறது. அப்படியெனில், நாகரீகம் என்பது என்ன?

ஆட்டோக்காரர்கள் என்றால் வெளிப்படையானவர்கள் என்பது மட்டுமல்ல, இன்றைக்கு அவர்கள்தான் அதிகம் தெரிந்தவர்கள், மக்களோடு பேசுபவர்கள் அவர்கள் தான் என்பதே என் கருத்தாகும். அவர்கள் மட்டுமல்ல, சாதாரண மக்கள் எல்லாருமே அப்படித்தான். அவர்கள் எதையும் மறைக்க மாட்டார்கள். அதனால் தான், சாதாரண மக்களில் ஒருவராக ஆட்டோக்காரர் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். கதையில், அவர் ஓர் இடதுசாரி. ஒரு கம்யூனிச எண்ணம் உள்ளவர் ஆவார். எனக்கு இடதுசாரிகளைப் பிடிக்கும் என்பதால் நான் அப்படிக் காட்டினேன். இன்னும் நிறையக் காட்ட விரும்பினேன் இது சார்ந்து. ஆனால், இயலவில்லை.

ஊடகங்களை விமர்சிக்கிறீர்களே என்று கூட சிலர் கேட்டார்கள். ஊடகங்களே தேவையில்லை என்றோ அல்லது மோசம் என்றோ நான் சொல்லவில்லை. ஒரு விமர்சனத்தை மட்டுமே முன்வைத்தேன். ஊடகவியலாளர்கள் பலரே முன்வைக்கும் விமர்சனம்தான் அது. ஆகவே தான். ஊடகங்களால் வரவேற்கப்பட்ட படமாக இது மாறியுள்ளது. இளைஞர்களால் இரசிக்கப்படும் படமாகவும் இது மாறியிருக்கிறது. காரணம், கருத்தும், கதையும் தான்.

நாம்: இப்போதும் படம் வெளிவந்துவிட்டது. பலர் பாராட்டுகிறார்கள். உங்கள் அனுபவமென்ன?

பிரம்மா: குறைந்த செலவில் எடுக்கப்பட்டுக் கிடைத்த வெற்றி என்பது மிக முக்கியம் எனக்கருதுகிறேன். வெகுமக்களுக்கான திரைப்படமாக, எளிய மக்களின் வாழ்வை, பிரச்னையை, அவர்களின் மொழியில், இன்னும் எளிமையாய், இன்னும் சிறப்பாய், அவர்களின் இரசனைக்கேற்ப திரைப்படமாய் செய்யவேண்டும் எனக்கருதுகிறேன்.

நாடகத்துறையின் மீதான அவரின் காதல் அதிகமாகியிருப்பதை பேட்டியின் போது உணரமுடிகிறது. இன்னும் நாடகங்கள் நிறைய செய்யவேண்டும் என அடிக்கடி சொல்கிறார்.

சிறந்த தமிழ்படம் என தேசிய விருதையும், சர்வதேச விருதுகளையும் அடைந்த பிறகும் வீதி நாடகங்களில் வந்துநிற்பேன் எனச்சொல்லும் மனம் இருக்கிறது பிரம்மாவிற்கு.

என்னைப் பாராட்ட வேண்டாங்க, கூச்சமா இருக்கு, விமர்சனம் செய்யுங்க அதான் தேவை, படைப்புக்கு விமர்சனம் தான் தேவை என்கிறார்.

வாழ்த்துக்களோடு விடைபெற்றுக்கொண்டோம்.

Related Posts