சமூகம்

கல்வி உரிமை வரலாறு

– ச.சீ. இராஜகோபாலன்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பாரதி கூறிய சமயத்தில் தமிழ் நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் 20 சதவீதத்திற்கும் குறைவே. சங்க காலத்திலேயே பெண்டிர் உட்பட அனைவரும் கற்றுத் தேர்ந்திருந்தனர் என்பார் கல்வெட்டு ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன். வேதகாலத்தில் மக்கள் யாவரும் கற்றவர் என்றும் பெருமை கொண்டாடப்படுகின்றது. பிளேட்டோ காலத்திலேயே ஏதென்ஸ் மக்கள் அனைவரும் கல்வி பெற்றவர் என்றும் பதிவுகள் உள்ளன. இவை எல்லாம் உண்மையென்று எடுத்துக் கொண்டால் மனிதன் அடைந்திருக்கக்கூடிய பல்துறை வளர்ச்சி சொல்லில் அடங்காது. அனை வரும் கற்றவர் என்ற நிலையினின்று கல்லாதவர் பெரும்பான்மையோர் ஆனது எவ்வாறு என்ற விளக்கம் கிடைக்காது.

மேற்காண் பெருமைப்படுத்தலில் எல்லாம் மக்கள் என்றால் உயர்தட்டு மக்களை மட்டும் கணக்கில் கொண்டிருந்தன. கிரேக்க நாட்டில் பெரும் பான்மையாக இருந்த உழைப்பாளி வர்க்கத்திற்குக் குடியுரிமை கூட இல்லாத நிலை இருந்துள்ளது. வேத காலத்தினின்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுப் பிற்கு பெரும்பான்மையோர் உள்ளாகினர் என்பதும் வரலாறுதானே?

ஏகலைவன் வாழ்ந்ததும் அக்காலத்தில்தான். கல்வி மனிதனின் அடிப் படை உரிமையாக ஏற்கப்படவில்லை. ஒரு மிகக் குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே கல்வி ஒடுங்கியிருந்தது. 17-ஆம் நூற்றாண்டில் இயந்திரப் புரட்சி ஏற்பட்டது. உற்பத்தித்துறையில் புதிய கருவிகள் உருவாக்கப்பட்டன. தொழிலாளர் ஓரளவு கல்வி பெற்றவராக இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

எனவே ஜெர்மனி உள்ளிட்டு பல ஐரோப்பிய நாடு களிலும் கல்வி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் அது உரிமையாக்கப்படவில்லை என்பது அன்றைய சமூக அமைப்பின் தன்மை. பிரிட்டன் தொழிற்புரட்சியின் பயன்களைப் பெற்றும் கல்வியைக் கட்டாயமாக்க முன்வரவில்லை. 1870-ஆம் ஆண்டில் தான் இங்கிலாந்தில் கட்டாயக் கல்விச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் பள்ளியம் கட்டாயமாக்கப் படவில்லை. ஒவ்வொரு குழந்தை யும் கல்வி பெறுவதை உறுதி செய்வது பெற்றோருடைய கடமை என்றுதான் சட்டம் சொல்லியது. அக்கல்வியைப் பெற பள்ளிக்குச் செல்லலாம், பெற் றோர் தாமே கற்பிக்கலாம் அல்லது தனி ஆசிரியரைக் கொண்டு வீட்டிலேயே கல்வி பெற ஏற் பாடு செய்யலாம். வர்க்க பேத மிக்க அன்றைய இங்கிலாந்தில் பிரபுக்களின் குழந்தைகள் பாமரர் குழந்தைகளோடு ஒன்றாகப் படிக்க முன்வரமாட்டார்கள். குழந்தைகள் கற்க வேண்டியது மட்டும் கட்டாயமாக்கப்பட்டது. இந்த சட்டம் பிரிட்டனின் பிற பகுதிகளான ஸ்காட்லாந்து, வேல், அயர்லாந்து பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படவில்லை. எனவே அப்பகுதி மக்கள் கல்வி உரிமை வேண்டிப் போராடினர். அவர்கள் போராட்டத்தைக் கண்டு இந்தியாவிலும் கல்வி கட்டய மாக்கப்பட கோரிக்கைவிடப்பட்டது.

ஆனால் பிரிட்டிஷார் நமது கோரிக்கையை ஏற்க மறுத்தனர். சில சுதேசி சமஸ் தானங்களில் மக்கள் சார்பான மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்களில் ஒருவர் பரோடா சமஸ்தா னத்தை ஆண்ட சாயாஜி ராவ். அவர்தாமே முன்வந்து 1893-ஆம் ஆண்டில் தம் சமஸ்தானத்தில் கல்வியைக் கட்டாயமாக்கிய தோடு அல்லாமல் இலவசமாக வழங்கிடவும் ஏற்பாடு செய்து முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அவரைத் தொடர்ந்து மேலும் சில சமஸ்தானங்களிலும் கட்டாயக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தேசியவாதிகள் இச்சமஸ்தானங்களைப் போல் பிரிட்டிஷார் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் கட்டாயக் கல்வி கொணர்ந்திட வற்புறுத்தினர். ஆட்சியாளர்கள் அசையாது இருந்த நிலையில் இந்திய ஊழியர் சங்க நிறுவனரும் சுதேசிய வாதியுமான கோபால கிருஷ்ண கோகலே இந்தியா முழுமைக்கும் கட்டாயக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த ஒரு இலட்சம் ரூபாய் ஒதுக்க வேண்டுமென்று 1906-ஆம் ஆண்டில் மத்திய சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானம் விவாதத்திற்கே ஏற்கப்படவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அவர் இக் கோரிக்கை யை வலியுறுத்தித் தீர்மானம் கொண்டு வந்தும் அவை எதையும் பிரிட்டிஷ் அரசு ஏற்க மறுத்து சட்டமன்றத்தில் வாக்கெடுப் பிற்கே விட மறுத்தது.

1911-ஆம் ஆண்டில் கோகலே கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. எதிர்த்து வாக்காளித்தோரில் பெரும்பாலோர் இந்தியர் என்பது வெட்கக்கேடு. நாட்டுப் பற்று மிக்க இந்தியர் மனதை இந்நிகழ்வு மிகவும் நோகச் செய்தது. அதனால் தம் வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் கட்டாயக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்தனர். அதன் படி பம்பாய் நகராட்சியில் அதன் தலைவர் வித்தல்பாய் படேல் (வல்லபாய் படேலின் அண்ணன்) 1917-ஆம் ஆண்டில் கட்டாயக் கல்வியைக் கொணர்ந்தது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். இதன் விளைவாக நாட்டில் பல பகுதிகளிலும் கட்டாயக் கல்வி அமுலாக்கப்பட்டது.

1920-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் ஆரம்பக் கல்விச் சட்டத்தை சென்னை சட்டமன்றம் நிறைவேற்றியது. மிக அற்புதமாக இன்றளவும் பயன்தரக் கூடியதாக அச்சட்டம் அமைந்தது. பள்ளி தொடங்க உட்கட்டமைப்பு வசதி, விளையாட்டுத் திடல், மாணவர்க்குத் தேவையான அமர்விடம் மற்றும் வெளிக்காற்று அளவு போன்றவை துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் அருகமைப் பகுதி நிர்ணயிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை முறை வகுக்கப்பட்டுள்ளது. நிலவரி, சொத்து வரி மீது கல்வி செஸ் விதிக்கப்படவும் அந்த தொகையை உள்ளாட்சி அமைப்புகள் பள்ளிகளை மேம்படுத்தப் பயன்படுத்தவும் வகை செய்யப்பட்டது. பள்ளி ஆய்வும் ஒவ்வொரு மாணவரது வாசிப்புத் திறன், கணிதத் திறன் ஆகியவற்றைச் சோதித்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஆக ஆரம்பக் கல்வி முழுமையும் தரமானதாக வழங்கிட இச்சட்டமும், விதிகளும் வற்புறுத்தின என்றால் மிகையாகாது. அன்னியர் ஆட்சிக்கேற்ப சில குறைகள் இருந்தாலும் இன்றளவும் கல்வி அளிக்க எடுக்கப்பட்ட முயற்சி களில் சாலச் சிறந்ததும் முழுமையானதும், தெளிவானதும் அச் சட்டமே என்று திட்டவட்டமாகக் கூற முடியும். மாவட்டக் கழகங்கள், நகராட்சிகள், உதவி பெறும் தனியார் நிறுவனங்களின் பொறுப்பிலும் பள்ளிகள் இருந்தன. அரசு நேரடி நிர்வாகத்தில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களோடு இணைந்தவையும், இஸ்லாமியப் பெண் டிர்க்கென சிலவும் மட்டுமே இருந்தன. கல்வித்துறை ஆய்வும் மான்யம் வழங்கலுக்கு மட்டுமே பொறுப்பேற்றது. இத்தகைய சிறப்பு மிக்க சட்டம் அனைவரையும் கற்றவராக்கத் தவறியது ஏன் என்பதற்கு ஒரு தனிக் கட்டுரை எழுத வேண்டும். விடுதலைக்குப் பின் எடுக்கப்பட்ட முயற்சிகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

வேண்டுகோள்

இதுகாறும் எனக்குத் தோன்றிய கருத்துக்களை புதிய ஆசிரியனில் கட்டுரைகள் வாயிலாகத் தெரிவித்து வந்துள்ளேன். கட்டுரைக்கான கருப்பொருளை நானே தெரிவு செய்தேன். அதற்கு மாறாக வாசகரது விருப்பங்களை அறிந்து அதற்கேற்பக் கட்டுரைகள் அமைவது சிறப்பாக இருக்கு மென்று கருதுகின்றேன். தம் விருப்பத்தினை வாசகர்கள் தெரிவிக்க வேண்டுகின்றேன்.

 

Related Posts