அரசியல்

கல்வியை காவிமயமாக்குகிறதா ”புதிய கல்விக் கொள்கை” . . . . . . . ?

Classroom_KG_Students_Running

எழுபது வருட சுதந்திர இந்தியாவில் இன்னும் அறுபது கோடிப் பேருக்கு மேல்  எழுதப்படிக்கத் தெரியாத அவலநிலை. இந்த நிலைமையை மாற்ற இதுவரையும் எந்த புதிய கல்வி முயற்சியும் இல்லை. இந்த நிலைமையை மாற்றப் போவதாக மத்தியில் உள்ள பிஜேபி அரசு தனது வாய்ப்பினை பயன்படுத்தி இந்து கல்வி முறையையும், குருகுல கல்வியையும் அமல்படுத்த துடிக்கின்றனர். புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் அறிவித்திறன் வளர்ச்சிக்கும் ஏற்றதாக அமைத்திருக்க வேண்டும் என்கின்ற விதிமுறையும் சட்டமும் உண்டு. ஆனால் ஆண்ட மற்றும் ஆளும் மத்திய அரசு அனைத்துமே மாணவர்களின் நலமின்றி முதலாளிகளுக்கு வாலையாட்டிக் கொண்டு அவர்களின் வளர்ச்சிக்கு எவை உதவுமோ அதனைப் பாடத்திட்டமாக மாற்றி மாணவர்களை இயந்திரமாக மாற்றும் வேலையை மட்டும் செய்தும் செய்துகொண்டும் வருகின்றனர். மேலும் புதிய கல்விக் கொள்கைகளிலும் எந்த மாற்றமும் இல்லை.

முதலில் வந்த கல்வித் திட்டம் 1968 ஆம் ஆண்டு டி.எஸ். கோதாரி குழு தேசிய கல்விக் கொள்கைக்கான அறிக்கைகளை வெளியிட்டது. அவை நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதாக அமைந்தது. அதில் ஆரம்பக் கல்வியை தேசிய அளவில் பரவலாக்குவது, உயர்நிலை மற்றும் தொழில்நுட்ப கல்வியைச் சர்வதேச தரத்தில் உயர்த்துவது என அவற்றில் வலயுறுத்தப்பட்டது. ஆனால் போதிய செயல் திட்டமின்றியும், நிதி வசதி இன்றியும் அவை முழுமை பெறாமல் போனது.அதன் பின்பு வந்த ராஜீவ்காந்தி அரசு 1985 ஆம் ஆண்டு ஒரு புதியக் கல்விக் கொள்கைகளை கொண்டுவந்தது. அந்த அறிக்கை தேசிய அளவில் விவாதத்திற்கு ஏற்பாடு செய்து ஒன்பது மாதங்கள் விவாதம் நடைபெற்றது . அந்த விவாதத்தில் நாடு முழுவதும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,கல்வி வல்லுநர்கள், நிர்வாகிகள் மற்றும் பல துறைச் சார்ந்தோர் தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர். விவாதம் முடித்த பிறகு 1986 ஆம் ஆண்டு மனிதவள மேம்பட்டு அமைச்சகம் அதனை மக்களவையில் வைக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஆலோசனை முடித்தபிறகு வெளியிட்டது, அதில் தேசிய ஒருமைப்பாடு, கலாச்சார மேம்பாடு மும்மொழித் திட்டம், அனைவருக்கும் சமமான கல்வி, தேசிய கல்வி முறையை உருவாக்குதல், கல்வித் துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல் என்பவை முக்கிய அம்சமாக இருந்தது. அதில் மும்மொழி திட்டத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டுமே பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டது. பின்பு மும்மொழித் திட்டத்திற்கு எதிராகப் பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தது. அதன் பின்பு  இந்தி மொழி முக்கியத்துவத்தைத் துரத்தியது அந்தப் போராட்டம்.

தற்பொழுது 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிஜேபி அரசு புதிய கல்விக் கொள்கை 2016 என்ற கல்வி அறிக்கையை ஜனவரி மாதம் 2015 ஆம் ஆண்டு இந்தக் கல்விக் கொள்கையை விவாதத்திற்கு முன்வைத்துள்ளது.அந்த அறிக்கை குழுவில் ஐந்து பேர் மட்டுமே அதிலும் ஒருவர் மட்டுமே கல்வி நிலையைங்களில் தொடர்புடையவர். 217 பக்கங்கள் கொண்ட அறிக்கைகள் இதுவரையும் முழுமையாக சமர்ப்பிக்காமல் இழுத்ததடிக்கும் வேலைகளை செய்கின்றது. இதனை அறிந்த சிலர் கல்வியை வணிகப் பொருளாக மாற்றக்கூடாது, ஒற்றைக் கட்டமைக்க கல்வித் துறைகளை பயன்படுத்தக் கூடாது என்று பல கடிதங்களை அனுப்பியதன் விளைவாக 32 பக்கம் மட்டுமே அதுவும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டது. பின்பு அவர்கள் இதுவரையும் நாடுமுழுவதும் 2.75 இலட்சம் கருத்தறிவு கூட்டம் நடத்தப்பட்டதாகவும், சமுக வலைத்தளங்கள் வழியே 29,0௦௦ மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டது என பொய்களைக் கூறி அறிக்கை சமர்ப்பிக்கும் வேலையைச் செய்கின்றனர்.

மேலும் இந்தக் கல்விக் கொள்கைகளில் சமஸ்கிருதத்தை பயிற்சி மொழியாக மாற்றவும் பாடத்திட்டத்தில் கொண்டுவரும் திட்டமும் நடைபெறுகின்றது. இந்தத் திட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பல மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களை குழந்தைத் தொழிலுக்கு அனுப்பும் வேலையைச் செய்ய முயற்சிகின்றது. மாணவனின் கல்வி தகுதி என்ன என்பதனை அவர்களைத் தீர்மானிக்க விடாமல் இவர்கள் தீர்மானிப்பது என முடிவு செய்துள்ளனர்.தற்போது வரையும் எட்டாம் வகுப்பு வரை கட்டாயம் தேர்ச்சி என்பதனை குறைத்து ஐந்தாம் வகுப்பு வரையும் அந்த முறையைக் கொண்டுவர முயற்சிகள் நடைமுறை கொண்டு செல்கின்றனர். இதில் அதிகம் பதிக்கப்படுவது தலித் மற்றும் சிறுபான்மையினர் நலிவடைந்தவர்கள். மேலும் பனிரண்டாம் வகுப்பு மாணவர்களை மதிப்பெண்கள் என்ற பெயரில் அவர்களைக் கலைகள், விளையாட்டு, சிந்தனைகள் என அணைத்து தரப்பிலும் அவர்கள் பாதிக்கின்றன இதிலும் இந்தத் திட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வி போகவேண்டும் என்றால் தேசிய அளவிலான பொதுத் தேர்வை நடத்துவதன் மூலம் மாணவர்கள் அதிகமான மன உளச்சலுக்கு ஆளாகும் நிலைமை ஏற்படும். அப்படித் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெறாத மாணவர்களின் நிலைமை என்னவாகும்?.மேலும் இதன் மூலம் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,பேராசிரியர்கள்,கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம், ஒரு சமுதாயத்தில் ஒரு பெரும் பகுதியே பாதிக்கப்படும் இந்தத் திட்டத்தினால்.

இந்தக் கொள்கை பன்னாட்டு மயமாக்கும் போக்கு என்பது வெளிப்படையாக தெரிகின்றது. உலகப் பல்கலைக் கழகங்களுக்கு இந்தியாவில் நம்முடைய கல்விக் கதவுகளை திறந்தது விடுவதன் முலம் உள்ளூர் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கும் நாம் நாட்டின் வளர்ச்சிக்கும் ஒருகாலும் உதவாது என்பது பற்றி மோடி அரசுக்குத் தெரியவில்லையா!.

கல்வியை வணிகப் பொருளாக மாற்றி அதனை வாங்கும் சக்தி உள்ளவரிடம் மட்டும் விற்கும் நிலைமையை பிஜேபி அரசு செய்துவருகின்றது.

நாம் உணர்வை வலுவாக வெளிப்படுத்துவோம்! கல்வியளிக்கும் கடமையிலிருந்து அரசாங்கம் பின்வாங்கக்கூடாது, ஏனெனில் அது அரசின் கடமை அப்படிப் பின்வாங்குவது தேர்ந்தெடுத்த மக்களுக்குச் செய்யும் துரோகம். மக்களாட்சியில் அரசாங்கம் அடிக்கடி மாறலாம் அவ்வாறு மாறும்போது ஆளும் அரசாங்கம் தன்னுடையக் கொள்கைகளை கல்வித்துறையில் ஊடுருவதை நாம் தடுக்கவேண்டும் ஏனெனில் அரசாங்கம் தற்காலிகம் ஆனால் கல்வி நிரந்தரம். இந்தக் கொள்ளை மக்களுக்கு ஏற்றதில்லை என்பதனை அனைவரிடம் எடுத்துரைப்போம்.

நாட்டின் கல்வி திட்டத்திக்கு அனைத்து தரப்பினரும் குறிப்பாகச் சிறுபான்மையினர், தலித்கள் என அனவருக்கும் ஏற்ற கல்வி திட்டதைக் கொண்டுவர எங்கும் முழங்குவோம்!!

 

ரௌத்திரம் பழகுவோம்.

இரா.பிரேம் குமார்.

Related Posts