இதழ்கள் இளைஞர் முழக்கம்

கல்வித்துறையில் இனி எமர்ஜென்சியே எப்போதும்…- இல.சண்முகசுந்தரம்

girl-students-l

அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலப்பாடங்களுக்குத் தேசிய அளவிலான பொதுக் கலைத்திட்டம் வடிவமைக்கப்படும். சமூக அறிவியல் போன்ற மற்ற பாடங்களுக்கு கலைத்திட்டத்தின் ஒரு பகுதி நாடு முழுவதும் பொதுவாக இருக்கும். மற்ற பகுதிகளை மாநிலங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.

மோடி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில், பத்தி 4.5ல் கலைத்திட்டம் – புதுப்பித்தலும், தேர்வுமுறைச் சீர்திருத்தங்களும் என்ற தலைப்பின் கீழான கொள்கை முனைவுகளில் மூன்றாவதாக சொல்லப்பட்டுள்ள ஆலோசனை இது.

மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதியில் நாடு தழுவிய தேர்வு வைப்பது என்ற ஆலோசனையும் இதன் தொடர்ச்சியாக பத்தாவது ஆலோசனையாக கூறப்பட்டுள்ளது.

ஆக, பள்ளிக்கான கலைத்திட்டம் தீர்மானிப்பதையும், பொதுத்தேர்வு நடத்துவதையும் இனி மத்திய அரசே செய்துகொள்ளுமாம். ஏற்கனவே, உயர்கல்வியும், தொழிற்நுட்பக்கல்வியும் மத்திய அரசின் கைகளில் தான் இருக்கின்றன. பள்ளிக்கல்வியில் மட்டும் தான் மாநில அரசிற்கு கொஞ்ச அதிகாரங்கள், உரிமைகள் இருந்தன. அதையும் புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி பறித்துக் கொள்ளப் பார்க்கிறார் மோடி.

எதையெடுத்தாலும் ஏக் பாரத் என்று சொல்லும் பாஜக, இப்போது கல்விக்கொள்கையிலும் மாநிலங்களுக்கான அதிகாரம் என்றில்லாமல் ஒரே பாரதம் என்று பேசத்துவங்கியுள்ளது. கல்வியில் சில மாற்றங்களைக் கொண்டு வருவது என்றில்லாமல் இந்தியாவின் மொத்தக் கல்வியையும் மாற்றும் வகையிலான கல்விக் கொள்கையை முன்மொழிந்திருப்பதுதான் இப்போதைய பெரும் ஆபத்தாகும்.

பலவிதமான ஆபத்துகள் பொதிந்துள்ளதை பலரும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர் என்றபோதிலும், மாநில சுயாட்சிக்கு மொத்தமும் ஆப்படித்துவிட்டு கல்வியை மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான ஏற்பாட்டை சதிச்செயலாக செய்வதுதான் ஆபத்திலும் பேராபத்தாகும்.

கல்வியை காவிமயமாக்குவது, சமஸ்கிருத மொழியை கற்றுத்தருவது என்ற பாஜகவின் நோக்கங்களெல்லாம் அமலாக வேண்டுமானால், கலைத்திட்டத்தை தீர்மானிப்பது மத்திய அரசாக இருக்கவேண்டுமல்லவா. அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. இப்போது என்ன ஏற்பாடு உள்ளதெனில், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக்குழு என்றழைக்கப்படும் (என்சிஇஆர்டி) அமைப்பானது கலைத்திட்டத்துக்கான வரைவு ஆலோசனைகளை அளிக்கும். அதை அடிப்படையாகக் கொண்டு, மாநில அரசு உருவாக்கும் பாடத்திட்டக்குழுவானது மாநிலத்தின் தன்மை மற்றும் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்கிக் கொள்ளும் என்பதேயாகும்.

இப்படியிருந்தால் என்னாகும்? பாஜக சொல்லும் பாடங்கள் இடம் பெறுவதற்கான உத்திரவாதம் இல்லாமல் போகுமல்லவா! ஆக, பாஜக என்ன சொல்கிறதென்றால், கணிதம், அறிவியல், ஆங்கிலம், சமூக அறிவியல் என எல்லாவற்றையும் நானே தீர்மானித்துக் கொடுத்துவிடுகிறேன். அந்தப் பாடப் புத்தகங்களை அச்சடித்துக் கொடுக்கும் வேலையை மட்டும் மாநில அரசு செய்தால் போதும் என்கிறது.

ஏனெனில், கல்வி பொதுப் பட்டியலில் இருக்கிறது அல்லவா. எனவே, மாநில அரசுக்கும் கொஞ்சம் கடமைகள் வேண்டுமல்லா. ஆக, அந்தக் கடமை என்னவெனில், பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யும் கடமையாகும்.
அதென்ன பொதுப்பட்டியல் என்ற குழப்பம் பலருக்கு உண்டு. எனவே, முதலில் அதைக்கொஞ்சம் பார்த்துவிட்டு அப்புறம் கல்வி கொள்கைக்கு வருவோம்.

இந்திய அரசியலைப்புச்சட்டத்தில் உள்ள ஏழாவது பட்டியல் என்பது மாநில மற்றும் மத்திய அரசுக்கான அதிகாரம் குறித்துப் பேசுவதாகும். இதில் மத்திய அரசுப்பட்டியல், மாநில அரசுப்பட்டியல், பொதுப்பட்டியல் என்ற மூன்று வகையான பட்டியல்கள் உண்டு. மத்திய அரசுப்பட்டியலில் 97 துறைகள் உள்ளன. அது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் இருக்கும்.

மாநிலப் பட்டியல் என்பது 66 துறைகளைக் கொண்டு இருந்தன. அதில் இருந்த கல்வியும், விளையாட்டும் 1978ல் அவசர நிலை ஆட்சிக்காலத்தில் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் இப்போது மாநில அரசின் கட்டுப்பாட்டில் 64 துறைகள் மட்டுமே உள்ளன.

பொதுப்பட்டியல் என்பது மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் இணைந்து நிர்வாகம் செய்துகொள்ளும் துறைகள் என்று சொல்லப்படுபவை ஆகும். மின்சாரம், தொழிற்சாலைகள், காடுகள் என்ற துறைகளோடு சேர்த்து 1978ல் விளையாட்டும், கல்வியும் இணைக்கப்பட்டதால் இப்போது இதில் 49 துறைகள் உள்ளன. இதில் உள்ள துறைகளுக்கு சட்டமியற்றும் அதிகாரமும் மாநில அரசுக்கு உண்டு. இருப்பினும் இப்போது மோடி ஆட்சியின் கீழ் நடைமுறையில் இதிலுள்ள ஒவ்வொரு துறையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் படிப்படியாக கொண்டு வரப்படுகிறது என்பதே உண்மையாகும்.

ஆயினும், மத்திய அரசின் பட்டியலுக்கு அதை முழுவதுமாய் மாற்றவும் மாட்டார்கள். ஏன் தெரியுமா?
உதாரணத்திற்கு, புதிய கல்விக்கொள்கையில் சொல்லப்பட்டுள்ள மேற்சொன்ன ஆலோசனைகள் மட்டுமில்லாது மற்ற ஆலோசனைகளையும் பார்த்தால், மொத்தக் கல்வித்துறையிலும் தீர்மானிக்கும் சக்தியென்பது மத்திய அரசுதான் என்றாலும், கல்வியை மத்திய அரசுக்கு மாற்றும் ஆலோசனை மட்டும் சொல்லப்படவில்லை, ஏன் தெரியுமா?

ஏனெனில், கல்விக்குத் தேவையான முழுப்பணத்தையும் மத்திய அரசால் ஒதுக்கமுடியாது என்பது மட்டுமே காரணமாகும். மாநில அரசின் நிதி ஒதுக்கல் தேவையாக உள்ள ஒரே ஒரு காரணத்தால் மட்டும் தான் மோடி இது குறித்து பேசவில்லையேயொழிய, இல்லையெனில், கல்வியின் அதிகாரம் முழுமைக்கும் நிச்சயம் மத்திய அரசின் கீழ் அதிகாரப்பூர்வமாய் வந்திருக்கும். ஆம். அப்படியானதோர் மோசமான முன்மொழிவுகள் புதிய கல்விக்கொள்கையின் எல்லா அம்சங்களிலும் நிறைந்திருப்பதே உண்மையாகும்.

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பலவிதமான பிரச்னைகள் வந்துள்ளன. ஆனால், மாநில அரசு நடவடிக்கை எடுக்காது. காரணம் கேட்டால், மத்திய அரசின் கீழுள்ள துறைகளை கை காட்டும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்நுட்ப நிலையங்களிலும் இதே நிலைதான். கல்லூரிகள் இயங்குவது தமிழகத்திற்குள், பாதிக்கப்படுவது தமிழக மாணவர்கள். ஆனால், தமிழக அரசு தலையிட முடியாது. ஏனெனில், அத்துறையின் அதிகாரம் மாநில அரசுக்குக் கிடையாது. தமிழக அரசு ஒரு மருத்துவக் கல்லூரியை துவங்க வேண்டுமெனில், மத்திய அரசின் துறைகள் அனுமதித்தால்தான் முடியும்.

மத்திய அரசு அனுமதித்தால்தான் மாநில அரசு ஒரு பள்ளிக்கூடம் கூட துவங்கமுடியும் என்றளவிற்கு இதே நிலை பள்ளிகளுக்கும் ஏற்பட்டால் என்னாகும் என நினைத்துப்பாருங்கள். ஆம். அப்படியானதோர் நிலை நிச்சயம் வரப்போகிறது.

இப்போதே, இங்கு என்ன நடக்கிறது எனில், தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை அரசே தீர்மானிப்பது குறித்தான சட்டம் இயற்றியதற்கே, அதாவது அமல்படுத்திட அரசு தயாராக இல்லாதபோதே தனியார் பள்ளிகளெல்லாம் மத்திய அரசின் கீழுள்ள சிபிஎஸ்இ யின் கீழ் இணைய ஆரம்பித்துவிட்டன. இந்தச்சூழலில் கலைத்திட்டங்கள், பொதுதேர்வுகள் என எல்லாமே மத்திய அரசின் கீழ் வந்துவிடும் எனில், என்னாகும்?

தனியார் பள்ளிகளுக்கு அதுதானே வசதியாய் இருக்கும். மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பள்ளி என்ற போர்டை மாட்டிவிட்டால், இன்னும் கொஞ்சம் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம். அதைவிட முக்கியமானது என்னவென்றால், எந்த நிலையிலும் எந்தக் கட்டுப்பாட்டையும் மத்திய அரசு விதிக்காது என்பதுதான். ஏனெனில், நாட்டில் கல்வி கொடுக்க இனி மத்திய அரசு முழுவதும் நம்பப்போவது தனியார் கல்வி நிலையங்களை மட்டும்தான், மாநில அரசைக்கூட அல்ல.

இந்த இலக்கை நோக்கிய முதற்கட்டமாக, மோடி அரசு அறிவிக்கப்போகும் திட்டம் தான் அரசுப்பள்ளிகளை மூடும் திட்டம், இப்போது புதிய கல்விக் கொள்கை 2016ல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை குறைவாகவும், போதிய கட்டமைப்புகள் இல்லாதவையாகவும் இருக்கும் பள்ளிகளை அடையாளங்கண்டு பதிவு செய்ய ஒவ்வொரு மாநிலமும் விரிவான முயற்சிகளை மேற்கொள்ளும் என 4வது தலைப்பான பள்ளிக்கல்வியின் கீழுள்ள ஆலோசனைகளில் முதலாவது பத்திசொல்கிறது.

இதை வாசித்த உடன் நாமென்ன நினைப்போம் எனில், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள போதிய கட்டமைப்புகள் இல்லாத பள்ளிகளை அடையாளங்கண்டு, அவைகளை சிறப்புத் திட்டங்களின் கீழ் மேம்படுத்திட கூடுதல் நிதி ஒதுக்கி, கட்டமைப்புகளை விரிவுபடுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்திட அரசு திட்டமிடும் என நினைப்போம்.

ஆனால், அடுத்த வரி என்ன சொல்கிறது தெரியுமா?

செயல்படாத பள்ளிகளை இணைத்து கூட்டான பள்ளிகளாக செயல்படச் செய்வார்களாம். இதன் மூலம், மனிதசக்தி, உழைப்பு மற்றும் பொருள்சார் கட்டமைப்பும் சரியாகப் பயன்படுத்தப்படுமாம். கல்விச்செயல்பாடும், செலவு கட்டுப்பாடு மேலாண்மை என்று சொல்லப்படும் சிக்கனத்தன்மையும் மேம்படுமாம். அதாவது, சுருங்கச் சொன்னால், மாணவர்கள் குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை தொடர்ந்து நடத்துவது அரசுக்கு வீண் செலவு என்று சொல்கிறது புதிய கல்விக் கொள்கை.

அதுமட்டுமல்ல, அத்தகைய அரசுப்பள்ளிகளை மூடிவிட வேண்டும் எனவும் கொள்கைபூர்வமாய் அறிவிக்கிறது பாஜகவின் கல்விக் கொள்கை. ஏற்கனவே, இங்கு ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் காலமிது. ஆனால், இதுவரை மாநில அரசால் இதை நியாயப்படுத்த முடியவில்லை. இச்சூழலில் அரசுப் பள்ளிகளை மூடுவது என்பது அரசின் கொள்கையாக அறிவிக்கப்பட்டால் என்னாகும்?

ஒவ்வொரு அரசுப்பள்ளி மூடப்படும்போதும் இது மத்திய அரசின் உத்திரவு, எனவே மூடுகிறோம், இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என தமிழக அரசு சொல்லும். மத்திய அரசு என்ன சொல்லும்? இந்தக் குறிப்பிட்ட பள்ளியை மூடச்சொல்லி நாங்கள் சொல்லவில்லை, மாணவர் எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு முயற்சிக்கவில்லை, அதனால் ஏற்பட்ட பாதிப்பு இது என மாநில அரசைக்குறை கூறித் தப்பிக்கும். ஆக, மொத்தத்தில் அரசுப் பள்ளிகள் மூடப்படும். இந்த சதிக்குத்தான் புதிய கல்விக் கொள்கை என பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, உயர்கல்வி என்பது பெரும்பாலும் தனியார் ஆதிக்கத்தில்தான் உள்ளது. பள்ளிக் கல்வியிலும் தனியார் ஆதிக்கமே கோலோச்சுகிறது. அரசுப்பேருந்து நுழையாத ஊரின் சந்துபொந்துகளுக்குள் கூட தனியார் பள்ளியின் பேருந்துகள் நுழைந்து வீட்டு வாசற்படிகளிலிருந்து மாணவர்களை அள்ளிக்கொண்டு செல்லும் சூழலில், இருக்கும் அரசுப்பள்ளிகளையும் மூடப்போகிறோம் என்பது யாருக்குச் சாதகமானது? ஆக, காசுக்கேற்ற கல்வி என்பதே புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் அரசால் அறிவிக்கப்பட்டால்..?

புதிய கல்விக்கொள்கையின் மற்றொரு அறிவிப்பையும் இத்தோடு சேர்த்துப்பார்த்தால் இன்னும் சில ஆபத்துகளும் தெரியவரும். அதாவது, இந்தியக் கல்விப்பணிக்கு என அதிகாரிகளை மத்திய வாரியம் மூலம் உருவாக்கப்போகிறார்களாம். அதாவது, மாவட்டக்கல்வி அலுவலர் முதல் கல்வித்துறை செயலாளர்கள் வரை அனைத்துவிதமான கல்விப்பணிகளுக்கும் மத்திய அரசே நியமனம் செய்யும் நிலை வரும். ஏற்கனவே உயர்கல்வி முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்நிலையில் கல்வித்துறை அதிகாரிகளையும் மத்திய அரசே நியமிக்கையில், பள்ளிக் கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கும்?

தமிழ்மொழியே தெரியாத ஆட்சிப்பணி அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் இருப்பதுபோல், டமில் நாடு கல்வித்துறைக்கும் வருவார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? டமில் பழ்ழியான கவர்ன்மெண்ட் ஸ்கூலைப் பார்த்து டுமீல் டூமில் என சுடுவார்கள். உள்ளுக்குள் அகமகிழும் இரு அரசுகளும் ஆளுக்கொருவர் மீது அறிக்கை விட்டு காமெடி செய்வார்கள். அல்லது, ஒவ்வொரு பள்ளி மூடப்படும்போதும் பிரதமருக்கு கடிதம் எழுதிடும் வேலையைத் துவக்கிவிடுவார் தமிழக முதல்வர்.

போதாதென்று, பன்னாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிக்கும் இன்னொரு அறிவிப்பும் இருக்கிறது புதிய கல்விக் கொள்கையில். தமிழ்நாடு மாநில அரசின் அனுமதியே இல்லாமல் அமெரிக்க பல்கலைக்கழகம் இங்கு தன்னுடைய வியாபாரக் கிளையை துவங்கிட அனுமதிக்கப்படலாம். கமிசன் மட்டும் தானே அமைச்சர்களுக்குத் தேவை. அது நிச்சயம் கிடைத்துவிடும். மாநில அரசின் உரிமைகள்…? படிப்புக்காலத்தின் இறுதியில் ஒரு மாதம் அமெரிக்காவில் படிக்கலாம் என்று சொன்னால் போதாதா? நம் மாணவர்களும், பெற்றோர்களும் விண்ணப்பம் வாங்க முதல்நாளே போய் வரிசையில் நின்றுவிடுவார்கள். அரசு வங்கிகள் கடனளிக்கும். ஆக, அமெரிக்கக் கல்வியை நாமே சென்னையிலேயே கற்றுக்கொள்ளலாம். இந்தியப் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பாஜகவின் அற்புதமான இந்தக் கல்விக் கொள்கையை எப்படிப் புகழ?

ஆக, மோடியின் நோக்கம் கல்விக்கொள்கையில் சீர்திருத்தங்கள் கொண்டுவருவதல்ல. இந்தியக்கல்வி மொத்தத்தையும், தனியாரின் கையில் ஒப்படைப்பதேயாகும். உயர்கல்வியை மட்டும் தனியார் கையில் ஒப்படைப்பதோடு அவருக்கு திருப்தி ஏற்படாது என்பதால், மாநிலங்களின் அதிகாரங்களையும் தன்கையில் எடுத்துக்கொண்டு, பள்ளிக் கல்வியையும் மொத்தமாய் தனியார் மயப்படுத்தப் பார்க்கிறார்.
வரிச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மாநிலங்களுக்கென வருவாயைப் பறித்தவர், இப்போது கல்வி சீர்திருத்தம் எனப்பேசத் துவங்கியிருக்கிறார். சீர்திருத்தங்கள் என்ற வார்த்தையே இப்போது இந்தப் பொருளில் தான் பயன்படுத்தப்படுகிறது.

நெடுஞ்சாலை, தொலைபேசி, எரிபொருள் விற்பனை என ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தம் என பேசப்பட்ட போதெல்லாம், அங்கு தனி ஆணையம் உருவாக்கப்பட்டதும், அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு அளிக்கப்பட்டதும் தான் நிகழ்ந்திருக்கின்றன. அதனால் தான், பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லையென்று கூறி ஒவ்வொரு முறையும் தப்பித்துவிடுகிறது மத்திய அரசு. சாலையின் சுங்கக் கட்டணம் நெடுஞ்சாலை ஆணையத்தின் முடிவு என்று கூறப்படுவதுபோல், இனி கல்விக்கட்டண உயர்வுகள் எல்லாம் கல்வி ஆணையங்களின் முடிவு என்று சொல்லப்பட்டு அரசுகள் அதிலிருந்து நழுவிப்போகும் நிலை வரும். கல்வித்துறையின் அனைத்தும் தற்சார்பு ஒழுங்குமுறை ஆணையங்களின் கீழ் வரும்.

ஒவ்வொரு துறையிலும் இப்படியே நடந்தா, மாநிலத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை குறைந்து, கமிசன் வாய்ப்புகளும் கரைந்து போய்விடுமே என்று கழகக் கண்மணிகள் கலங்கிப்போனதின் விளைவே, இரு கட்சிகளும் சட்டமன்றத்தில் கல்விக்கொள்கை குறித்து பேசிக்கொண்டதின் பின்னணியாகும்.
மாநிலங்களுக்கு என ஒரு கல்வியமைச்சரோ. பல கல்வியமைச்சர்களோ இருந்துகொள்ளலாம். அதையெல்லாம் இந்தக் கல்விக்கொள்கை தடுக்காது என்ற ஒரே ஒரு வரியை மோடி சொல்லிவிட்டால் போதாதா?

Related Posts