சமூகம்

“கற்பை” அழிப்போம்

சில மாதங்களுக்கு முன் நாடெங்கும் போராட்டங்களை கிளப்பிய “நிர்பயா” வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ள முதல் வழக்கு இது தான் (?).

தூக்கு தண்டனை சரியா தவறா என்ற விவாதங்கள் இரண்டு கேள்விகளுக்குள் அடங்கி விடுகின்றன. தூக்கு தண்டனை ஒரு மனிதஉரிமை மீறலா? உயிரை பறிக்கும் உரிமை அரசிற்கு உண்டா? இது முக்கியமான விவாதம் என்றாலும் இதை விட முக்கியமான ஒரு விஷயம் மிக எளிதாக மறக்கப்படுகிறது. பாலியல் வன்முறையின் மீதும் பாதிக்கப்பட்ட பெண்களின் மீதும் இந்த சமூகமும் ஆட்சியாளர்களும் கொண்டுள்ள பார்வை மிக பிற்போக்காக உள்ளது. இது ஆழமான விவாதத்திற்குரியது.

தூக்கு தண்டனை:

டெல்லி வழக்கில் தண்டனையை கேட்டு மகிழ்ந்தவர்கள் பலர் உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இருக்கும் ஆதங்கத்தை சக மனிதன் என்ற முறையில் எவராலும் நன்கு உணர முடியும். ஆனால் ஒரு சமூகமாக நாம் கேட்க மறக்கக் கூடாத பிரதான கேள்வி- இது தனி மனித குற்றமா? இந்த கேள்வியை குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்குடன் அல்ல, மாறாக விஷயத்தை பரந்த நோக்குடன் அணுகுவதற்காக கேட்க வேண்டியிருக்கிறது.

நான்கு பேருக்கு தூக்கு தண்டனை அளிப்பதன் மூலம் இது ஒரு சமூகப் பிரச்சனை என்ற உண்மை மறைக்கப்படுகிறது. மறுக்கப்படுகிறது. சமூகப் பிரச்சனைக்கு தனி மனிதர்களை கொல்வதன்/ தண்டிப்பதனால் முற்றுப்புள்ளி வைக்க முடியமா?

ஆடைக் கட்டுப்பாடு:

இந்த தீர்ப்பு வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் தமிழக அரசு கல்லூரிகளில் ஆடைக் கட்டுப்பாட்டை விதித்தது. நாட்டில் பெருகி வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் முயற்சியாம் இது. இதே போல் இந்தாண்டின் ஆரம்பத்தில் புதுவை அரசும் மாணவிகள் துப்பட்டா அணியாமல் கோட் அணிவதால் பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும் என்று கூறியது. பாலியல் குற்றங்களுக்கு பெண்களின் ஆடை தான் காரணம் என்றப் பார்வைக் கொண்ட அரசு பாலியல் வன்முறைகளை தடுக்க எந்தவொரு உண்மையான முயற்சியையும் எப்படி எடுத்து விட முடியும்?

ஒரு லட்சத்து அறுபத்தி முப்பத்தி மூன்றாயிரத்து நானூற்று எழுபத்தி எட்டாவது முறையாக கூறுகிறார்கள் ”பாலியல் வன்முறைக்கு பெண் தான் காரணம்” என்று. ஆனால் எத்தனை கோடி முறை இதை கூறினாலும் இது உண்மையாகாது. இதை உணரும் வரை சமூக மாற்றமும் நிகழாது. முற்போக்கு பெண்கள் அமைப்புகள் சொல்லி சொல்லி அலுத்துப் போன விஷயமானாலும் திரும்பவும் இங்கு கூறுவது அவசியம். ஒன்றரை வயது குழந்தையும், எண்பது வயது மூதாட்டியும் எந்த “கவர்ச்சி”யான ஆடையை அணிந்தார்கள்? விளக்கமாற்றுக்குக் கூட புடவை கட்டினால் விட்டு வைக்காத வக்கிர ஆண்களை கொண்ட சமூகம் இது.

மும்பை பத்திரிகையாளர் பாலியல் வன்முறை:

இதற்கிடையில் நடந்த இன்னொரு சம்பவம் மும்பை பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது. பொதுவாக பெண்கள் இரவில் கூட பாதுகாப்பாக வெளியில் சென்று வருவது இயல்பாக இருந்த மும்பை நகரில் பாலியல் வல்லுறவு சம்பவம். எட்டு மாதங்களுக்கு முன் எழுச்சி பேரலைகள் பொங்கி தூக்கு தண்டனை கிடைக்குமளவிற்கு விளைவுகள் ஏற்படுத்தின. ஊடகமும் இதில் பெரும் பங்கு ஆற்றியது. எனினும் போராட்டங்கள், விவாதங்கள், இவற்றின் தாக்குதல் கொஞ்டம் கூட இல்லாதது போல் மீண்டும் இன்னொரு சம்பவம்.  இந்த சம்பவத்திலும் அந்தப் பெண் இரவில் கும்மிருட்டில் சென்றாரா, உச்சி வெயிலில் சென்றாரா, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஏன் சென்றார் போன்ற அபத்தமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அவ்வாறு கும்மிருட்டில் இரவில் நடந்து தான் போகட்டுமே. ஆண்களுக்கு இரவிலும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலும் கண்ணியம் 7 சென்டிமீட்டர் குறைந்து விடுமோ?

இவை மூன்றும் நமக்கு உணர்த்துவது- பாலியல் வன்முறையை தனி மனித குற்றமாக்குவது பிரச்சனைக்கு தீர்வாகாது. பாலியல் வன்முறைப் பற்றி சமூகத்தின் பார்வை, நிர்வாகத்தின் பார்வை மாற வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியாக்குவதோ அல்லது, “பாவம். அவளது மானமே போய்விட்டது, இனிமேல் யார் கல்யாணம் செய்துக் கொள்வார்” என்று கூறுவதோ பெண்ணை இழிவுபடுத்தும் செயலே. மேலும் ”பூவை கசக்கி விட்டான், களங்கப்பட்டு விட்டாள், நாசமானாள்” என்று வசனம் பேசி திரியும் அனைவரும் பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்த “கற்பு” என்ற ஒன்று அழிக்கப்பட்டு விட்டது என்ற பிற்போக்குத் தனமான ஆணாதிக்க சிந்தனையை வற்புறுத்தி திணிப்பவர்கள் தான். இன்னமும் சில ஊடகங்கள் “கற்பழிப்பு” என்ற வார்த்தையே பிடிவாதமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் எல்லோருக்கும் உரக்கச் சொல்ல விரும்புவது- இது பாலியல் வன்முறை. ஒரு பெண்ணின் உடல் மீது அவள் விருப்பமில்லாமல் ஏவப்படும் மனித நேயமற்ற செயல். இதில் வெட்கப்பட வேண்டியது அந்தப் பெண் அல்ல. அந்த ஆண் வெட்கப்பட வேண்டும். இப்படி கொடூர சம்பவங்களை நடக்க அனுமதிக்கும் இந்த சமூகம் வெட்கப்பட வேண்டும்.

இங்கு எழுத்தாளர் சொஹைலா அப்துல் அலி கூறுவதை நினைவு கூற விரும்புகிறேன். அவர் 1980களில் தனது 17வது வயதில் மும்பையில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். உடன் சென்ற அவரது நண்பரும் தாக்கப்பட்டார். “பாலியல் வன்புணர்வு கொடுமையானது தான். ஆனால் சமூகம் கூறும் அபத்தமான காரணங்களுக்காக அல்ல. நீங்கள் அத்துமீற படுகிறீர்கள் என்பதால், உங்கள் உடலை வேறொருவன் கைப்பற்றி விடுகிறான் என்பதால். உங்கள் தந்தையின், அண்ணனின் “மானம்” பறி போய் விட்டதால் அல்ல.

எனது நற்குணம் எனது பிறப்புறுப்பில் உள்ளது என்ற கருத்தாக்கத்தை நான் மறுக்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேண்டியது ஆறுதல். மூட்டை மூட்டையாய் அறிவுரைகள் அல்ல. நான் தாக்கப்பட்ட அடுத்த வாரம் பக்கத்து ஊரில் ஒருவர் தாக்கப்பட்டார். அவர் வீட்டுக்கு ஒடி வந்து தீக்குளித்து இறந்து விட்டாராம். இந்த சம்பவத்தை என்னிடம் கூறியவர் அந்த பெண்ணின் செயலை மனம் நெகிழ்ந்து பாராட்டினார். நல்லவேளை எனது பெற்றோர்கள் எனக்கு இதை புரியவைக்கவே இல்லை” என்று நியூ யார்க் டைம்ஸில் சமீபத்தில் எழுதினார். போலீஸில் புகார் அளிக்க செல்லும் போது இவரை நடத்திய அநாகரிகமான விதத்தையும், கேட்ட அவமரியாதையான கேள்விகளையும் ’மனுஷி’ பத்திரிகையில் பதிவு செய்துள்ளார் தனது பெயரையும் புகைப்படத்தையும் வெளியிட்டே.

1980களில் சொஹைலா அப்துல் அலியை துரத்திய புறச்சூழல் தான் இன்றும் நிலவுகிறது. பெண்ணை குற்றம் சொல்லும் அக்கம் பக்கத்தினர், இரண்டாம் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் காவல் நிலையங்கள், இவை எதற்கும் அசையாத அரசு. 20ஆண்டுகளுக்கு மேலாக நம் சமூகம் முன்னோக்கி செல்லவே இல்லையா?

இந்தக் கட்டுரை கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படவில்லை. இங்கு எழுப்பிய கேள்விகளை படிக்கும் அனைவரும் உரத்த குரலில் ஒன்றாக எழுப்ப வேண்டும் என்பதற்காக எழுப்பப்பட்டது.

நன்றி- இளைஞர் முழக்கத்தில் வெளியான எனது‍ கட்டுரை

Related Posts