இதழ்கள் இளைஞர் முழக்கம்

கறுப்பு ஆடுகள் தப்பிக்க வெள்ளை ஆடுகள் பலிகடா? எம். தாமு

15577683_1158187200938291_672805844_n

வாக்குக்கு பணம் கொடுப்பது, கள்ளக்கடத்தல், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் சப்ளை செய்தல், ஹவாலா மோசடி, பல ஆயிரம் கோடி வரிச்சலுகை பெறுவது, விஜய்மல்லையா போல் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி கட்டாமல் இருப்பது, கிரிகெட் சூதாட்டம், 100 டன் பொருட்களை ஏற்றுமதி செய்து 50 டன் பொருட்களுக்கு மட்டும் கணக்கு காண்பிப்பது, இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது, 2ஜி, ஆயுதபேரம் போன்ற ஊழல்களில் ஈடுபடுவது, வரி ஏய்ப்பு செய்வது, ரியல் எஸ்டேட் தொழில், சமூக விரோத செயல்களின் மூலும் வருமானம் ஈட்டுவது, அரசுப்பணிக்கு பெரிய அளவில் லஞ்சம் பெறுவது போன்ற ஏதாவது ஒரு செயலில் ஒருவர் ஈடுபடுவேயாரானால் அவரிடம் கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணம் இருக்கும் என்பது நிச்சயம்.

இங்கிலாந்தை மிஞ்சும் இந்தியா:

வல்லரசு நாடுகளின் பட்டியலில் உள்ள இங்கிலாந்து, சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ள தொகை 390 பில்லியன் டாலர், (ஒரு பில்லியன் 100 கோடி) வாடிய வயிறும் வதங்கிய உடலோடு வறுமையில் வாடும் இந்தியாவில் உள்ள முதலாளிகள் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ள பணம் 1456 பில்லியன் டாலர். இத்தொகை இங்கிலாந்தை காட்டிலும் 3 மடங்கு அதிகமாகும். இது வெறும் சுவிஸ் வங்கியில் மட்டும் தான், சுவிஸ் போன்ற 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்திய பிரபலங்கள் தங்களது கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்

அன்னிய முதலீடு என்ற பெயரில் பெரும் பகுதி கறுப்பு பணம் இந்தியாவிற்குள் முதலீடு செய்யப்படுகிறது இந்தியாவில் கறுப்பை வெள்ளையாக்கி இந்தியாவில் முதலீடு செய்வதில் மொரிசீயஸ் நாடு முதன்மையில் உள்ளது. 2015 ஆண்டு மட்டும் மொரீசீயஸ் நாட்டின் மூலம் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட தொகை 54706 கோடி அனைத்தும் கறுப்பு பணமாகும். வெளிநாட்டு பெட்டகங்களில் உள்ள கறுப்பு பணத்தை காக்க அன்று காங்கிரசும் இன்று பாஜகவும் பாடுபட்டு பணியாற்றி வருவது நாடும் நாட்டு மக்களும் அறிந்ததே.

மோடி நிகழ்த்திய படுகொலைகளும்-நியாயப்படுத்தும் நியாயவான்களும்:

கசாப்பு கடைகாரனிடம் ஆடு எப்படி கருணையை எதிர்பார்க்க முடியாதோ அது போல் கறுப்பு பண காவலரான மோடியிடம் கருணையை எதிர்ப்பார்க்க முடியாது என்பதற்கு இச்சம்வங்கள் உதாரணம்.

நவம்பர் 8 அன்று இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவிக்கிறார்

  • நவம்பர் 9 அன்று அதிகாலையில் மும்பையில் கிரண் என்ற பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டு வீட்டிலேயே குழந்தை பிறக்கிறது பிறந்த குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போகிறது, தனியார் மருத்துவமணைக்கு தூக்கி செல்கிறார்கள் மருத்துவர்கள் பார்த்து உடனே குழந்தையை இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் எனவே பணத்தை கட்டினால் சிகிச்சை தொடங்குவோம் என்கிறார்கள். பெற்றோர்களின் கைகளில் இருந்த பணத்தை கொடுக்கிறார்கள் அதுவரை அவர்களுக்கு அப்பணம் செல்லாது என்பது தெரியாது மருத்துவமணை நிர்வாகம் இது செல்லாத நோட்டுகள் என கூறி வாங்க மறுத்து சிகிச்சை அளிக்க மறுத்துவிடுகின்றனர் சற்று நேரத்தில் அக்குழந்தை இறந்து விடுகிறது, மோடியின் பலிபீடத்தில் பச்சிளம் குழந்தை முதல் பலியாக்கப்பட்டது.
  • குஜராத் மாநிலம் சூரத்தில் இரு குழந்தைக்கு தாயான ஒரு பெண்மணி தனது கையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தும் இரு நாட்களாக பசியால் துடித்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வாங்கி தரமுடியாமல் துடித்து போகிறார். தன் கண் முன்னே குழுந்தைகள் அழுவதை கண்டு பார்க்க பொறுக்க முடியாமல் கையில் பணம் இருந்தும் பயனில்லையே என எண்ணி தூக்கு மாட்டி செத்து போனார்.
  • ஜார்கண்ட் கட்சிலா மாவட்டத்தில் 12 வயது நிரம்பிய நந்தினி நமதா என்ற பெண்ணுக்கு மலேரியா நோய் தாக்கி மூளையில் தொற்று ஏற்பட்டு கவலைக்கிடமாக இருந்தார். சிறுமியின் தகப்பனார் தனது மகளை பக்கத்து ஊரான ஜாம்ஜெட்பூரில் உள்ள மருத்துவமணைக்கு அழைத்து செல்வதற்காக டாக்சியை அழைத்தார் டாக்சி டிரைவர் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததின் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் போகும் நிலை ஏற்பட்டு அச்சிறுமி துடிதுடித்து செத்து போனார்.
  • ஆந்திராவில் மகளின் திருமணத்திற்கு சேர்த்து வைத்த பணம் செல்லாது என்பதை அறிந்தவர் மாரடைப்பால் மரணமடைந்தார், சாகுபடிக்காக கந்து வட்டிக்கு வாங்கி வைத்திருந்த பணம் செல்லாது என அறிந்த விவாசாயி மண்ணுக்கு தெளிக்க வைத்திருந்த மருந்தை குடித்து மரணித்து போனான். இப்படி பச்சிளம் குழந்தை துவங்கி 75 வயது மூதாட்டி வரை என 75 க்கும் மேற்பட்டவர்கள் மோடியின் 500, 1000 செல்லாது என்ற அறிவிப்பால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
  • 650 கோடி ரூபாய் செலவில் தனது மகளுக்கு திருமணம் செய்த ஜனார்தனன் ரெட்டிக்கும் டிசிஎஸ், மகிந்திரா, அதானி, அம்பானி, போன்றவர்களுக்கும், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மோடியின் 500, 1000 செல்லாது என்கிற அறிவிப்பு முன்கூட்டியே தெரிந்ததை போல் வங்கி வாயில்களில் வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கும், வாழ்க்கையை முடித்து கொண்டவர்களுக்கும் தெரிந்திருந்தால் மோடியின் பலிபீடத்தில் 75 க்கும் மேற்பட்டவர்கள் மரணித்திருக்க மாட்டார்கள்.

மோடியின் இத்தகைய நடவடிக்கையை சில நியாயவான்கள் நியாயப்படுத்துகிறார்கள், ஆலமரம் சாய்ந்தால் சிறு எறும்புகள் நசுங்கத்தானே செய்யும், புது படத்திற்கும், கிரிகெட் பார்ப்பதற்கும் டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் நிற்பது போல் எடுத்து கொள்ளுங்கள், என ஆன் லைனில் வாழ்க்கையை நடத்தும் பேர் வழிகள் அன்றாடம் மளிகை கடைகளில் மளிகை பொருட்கள் வாங்க 500, 1000 நோட்டுகளை மாற்ற வங்கி வரிசையில் நிற்கும் சாமனிய மக்களை பார்த்து ஆலோசனை கூறுகிறார்கள்

எட்டி பிடிக்க முடியாத உயரத்திலா 500, 1000 ரூபாய் நோட்டுகள் உள்ளன?

மோடியின் நடவடிக்கையை நியாயப்படுத்திட அதிகார வர்க்கமும், அரசியல் அரிச்சுவடி அரியாத அறிஞர்களும் சாதரண மக்கள் கரங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் கிடையாது அவர்களிடத்தில் வெறும் 5 ரூபாயும், 10 ரூபாய் நோட்டுகள் மட்டும் தான் வைத்திருக்கிறார்கள் என்று வேற்று கிரக வாசிகள் போல் வேடிக்கையாக பேசி வருகிறார்கள், நான் அன்மையில் கொடுங்ககையூர் குப்பை வளாகத்திற்கு சென்றேன் அங்கே சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்கள் குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து அதன் மூலம் வரும் வருவாயை வைத்து வாழ்க்கையை நடத்துபவர்கள்.

மோடியின் அறிவிப்பு உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியாத என்று அங்குள்ளவர்களிடம் கேட்டறிந்தேன், மூன்று தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் 23 வயதான வெள்ளையம்மா என்கிற பெண் 500, 1000 செல்லாது என்கிற அறிவிப்பு மறுநாள் காலையில் தான் தெரியும் என்னிடம் இருந்தது இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே, எனது குழந்தை பாலுக்காக அழுத போது என்னால் பால் வாங்க இயலவில்லை, பசித்தபோது உணவு வாங்க முடியவில்லை வங்கியில் கணக்கு இல்லை, இரண்டு நாட்களாக இரு நோட்டுகளை வைத்து எதுவும் செய்ய முடியாத போது எதுக்கும் பயனற்ற இந்த ரூபாய் நோட்டு இருந்து என்ன பயன் என்று கோபத்தில் கிழித்து எறிந்துவிட்டேன் என்று கோபத்தோடு கூறினார்.

சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவான குறவர் சமூகத்தை சார்ந்தவரிடம் விசாரித்தேன் குப்பைகளை சேகரிப்பதின் மூலம் தான் எங்கள் வாழ்க்கை ஓடுகிறது, எங்களின் ஒட்டு மொத்த சேமிப்பே 2000 லிருந்து 5000 வரை தான் அதுவும் நாங்கள் எங்கள் டிரங்கு பெட்டிகளில் தான் வைத்து கொள்வோம், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது தெரிந்த உடன் வங்கி கணக்கும் இல்லாததாலும், ரூபாயை மாற்ற இயலாததாலும் மிகவும் சிரமப்பட்டோம் இன்னும் அந்த தொகையை மாற்றாமல் இருக்கிறோம் என்று கதறினார். இப்படி மோடியின் அறிவிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய சாமனிய மக்கள் தான் என்பதே உண்மை. கடல் தாண்டி கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள கறுப்பு ஆடுகளை கசாப்பு கடைக்கு கொண்டு வராமல் வெறும் 500, 1000 ரூபாய்களை மட்டுமே வைத்து வாழ்க்கையை ஓட்டும் வெள்ளை ஆடுகளை கசாப்பு கடையில் வெட்டுவதுதின் மூலம் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது என்பது தான் நிதர்சன உண்மை.

Related Posts