இதழ்கள் இளைஞர் முழக்கம்

கருத்துரிமை தாகங்கள் ஒடுக்குமுறை யாகங்கள்

  • அ. குமரேசன்

 

ஒரு பாட்டு அல்லது ஒரு செய்தி அவதூறாக இருக்கிறது என்றால், கடுமையாக அதை விமரிசியுங்கள். மறுப்புத் தெரிவுயுங்கள். நாட்டின் சட்டம் வழங்கியுள்ள வாய்ப்பின்படி, வழக்குப் போடுங்கள். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்குமானால் அதை அரசு நிறைவேற்றட்டும். ஆனால், நீதிமன்றங்களில் இப்படிப்பட்ட வழக்குகள் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படுகின்றன, அல்லது காலாவதியாகின்றன. ஆகவேதான், வழக்குப் பதிவு செய்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது அரசு. இது நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்பே அரசாங்கமே தண்டனை அளிக்கிற வேலையல்லவா?

பேரண்டத்தின் இந்தப் புவிப் புள்ளியில் மனித இனம் பரிணமித்து சமுதாயமாக உருவெடுத்து, இன்று அந்தப் பேரண்டத்தின் ரகசியங்களையே ஆராய்ந்து கண்டுபிடிக்கிற வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்றால் அதற்கு அடிப்படையாக ஆதி முதல் இருந்து வருவது கருத்து வெளிப்பாடுதான். நம் ஆதித்தாத்திகளும் தாத்தன்களும் அன்று தாங்கள் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை சக மனிதர்களுக்கு வெளிப்படுத்தாமல் விட்டிருந்தார்கள் என்றால், கானகத்தில் மற்றொரு விலங்கினமாக மட்டுமே சுற்றிக்கொண்டிருந்திருப்போம். சமூகங்களாகக் கூட்டுச் சேர்ந்து வாழத் தொடங்கியபின், தாங்கள் புரிந்துகொண்டதையும், புரிய வைக்க விரும்பியதையும் மற்றவர்களுடன் பகிர்ந்திடாமல் இருந்திருந்தால் மழைக்கும் வெயிலுக்கும் புயலுக்கும் பூகம்பத்திற்கும் நடுங்குகிறவர்களாகத்தான், மரணமடைந்தவர்களின் ஆவி என்று நம்பியதற்கு அஞ்சி ஒடுங்குகிறவர்களாகத்தான் வாழ்ந்துகொண்டிருப்போம்.

மிகப்பெரிய உயிரினமாக மண்பரப்பில் ஆளுமை செலுத்திக்கொண்டிருந்த டைனசோர்கள் இயற்கை மாற்றங்களுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ள முடியாமல் அழிந்தே போனது போல மனித இனம் அழியாமல் தாக்குப்பிடித்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் உற்றுநோக்கி அறிந்துகொண்ட உண்மைகளை அனைவருக்கும் பரிணமாறிக்கொண்டதுதான். மனித சமுதாயத்தின் முன்னேற்றம் என்று எதையெல்லாம் குறிப்பிட முடியுமோ அந்த முன்னேற்றங்கள் அனைத்துக்குமே அடிப்படை தகவல் தொடர்பும் கருத்து வெளிப்பாடும்தான். ஆம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது ஒரு உரிமை மட்டுமல்ல, அது மானுடத்தின் ஒரு அடிப்படையான குணம்.

அந்தக் குணத்தை அழிப்பதற்குத்தான் இந்தியாவில் காக்கி-வெள்ளையை பயிற்சிக்கான சீருடையாகவும் காவியை அரசியல் லட்சியமாகவும் கொண்டவர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். யார் இவர்கள்? விடுதலை பெற்ற இந்தியா, உலகின் வேறு பகுதிகளில் இஸ்லாமிய நாடுகளும் கிறிஸ்துவ நாடுகளும் இருப்பது போல, இந்து நாடாக இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறவர்கள். 1947 ஆகஸ்ட் 15ல் இந்திய மக்கள் வேறு வகையாக முடிவு செய்தார்கள். மதச்சார்பற்ற அரசை நிறுவினார்கள். அவரவர் தாங்கள் நம்பிடும் கடவுளை வணங்கித் தங்களது மதத்தைப் பினபற்றுவதற்கு, எந்தக் கடவுளையும் வணங்காமல் எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருப்பதற்கு அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்திய அரசமைப்பு சாசனம் உருவாக்கப்பட்டது. பொருளாதாரம், சுகாதாரம், கல்வியாதாரம் ஆகியவற்றில் பின்தங்கிய நிலையில் பிரிட்டிஷ் அரசால் விட்டுச்செல்லப்பட்ட இந்தியா, இவ்வாறு தன்னை மதச்சார்பற்ற நாடாகப் பிரகடனம் செய்ததன் காரணமாக உலக அரங்கில் தலைநிமிர்ந்து நின்றது.

எப்படியாவது இதனை மதச்சாயம் பூசிக்கொண்ட நாடாக மாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், அதனால் உலக அரங்கில் இந்தியா தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும் எனபதைப் பற்றிக் கவலைப்படாமல், திட்டமிட்ட முறையில் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்திக்கொண்டிருக்கின்றனர் ஆர்எஸ்எஸ் கூடாரத்தினரும், அதன் ஆசியோடு வெவ்வேறு முகங்களை மாட்டிக்கொண்டு வலம் வருகிற பல்வேறு கூட்டத்தினரும். பாரதிய ஜனதா கட்சியை ஒரு அரசியல் முகமாகக் காட்டி அரசு அதிகாரத்திற்கு வந்திருப்பது அந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி. கலாச்சாரப் பெருமை என்ற பெயரில் கடைந்தெடுத்த பிற்போக்குத் தனங்களை நியாயப்படுத்துவது ஒரு பகுதி. சாதி, மத அடிப்படையில் பாகுபாட்டுச் சிந்தனைகளையும் பகைமை உணர்வுகளையும் பரவலாக்குவது ஒரு பகுதி. மாற்றுக் கருத்துகளை ஒடுக்குவது மற்றொரு பகுதி. மாற்றுக் கருத்துகள் சொல்வோரையே ஒடுக்குவது இன்னொரு பகுதி.

உலகம் எத்தனையோ வகையான ஒடுக்குமுறைகளைப் பார்த்து வந்திருக்கிறது. அடிப்படையில் பார்த்தால், எல்லா வகையான ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெறுவதற்கான போராட்டங்களின் வரலாறுதான் மானுடப் பயணம் எனலாம். “இன்று வரையில் சமுதாய வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான்,” என்று கார்ல் மார்க்ஸ் – ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் இருவரும் எழுதினார்கள். அவர்கள் சுட்டிக்காட்டுவது சுரண்டல் வர்க்கத்தின் ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற உழைப்பாளி வர்க்கம் நடத்தி வந்துள்ள போராட்டங்களின் வரலாறைத்தான்.

ஒடுக்குமுறைகளிலேயே மிக மோசமானது கருத்து வெளிப்பாட்டு ஒடுக்குமுறைதான். சோறு இல்லாத ஒடுக்குமுறை, நடமாடக்கூடாது என்ற ஒடுக்குமுறை ஆகியவற்றை விடவும் மிகக்கொடூரமானது, நீ மனதில் நினைப்பதை வெளியே யாருக்கும் சொல்லக்கூடாது என்ற ஒடுக்குமுறைதான். வர்க்கம், இனம், மதம், சாதி, பாலினம் என்று எந்தக் களத்திலும் மேலாதிக்க சக்திகள் முதலில் கைவைப்பது கருத்துரிமையின் மீதுதான். நிலப்பிரபுத்துவம் கோலோச்சிய மன்னராட்சிக் காலத்தில் பரம்பரை முடியரசைத் தட்டிக்கேட்க முயன்றவர்கள் இருட்டுக் கொட்டடிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். நவீன முதலாளித்துவ உலகிலோ, உழைப்பாளி வர்க்க இயக்கங்களின் கருத்துகள் இருட்டடிக்கப்படுகின்றன. நம் நாட்டில் தனியார்மயமாக்கல்தான் சரியான வழி என்ற கருத்தைப் பரப்புகிற பெரு முதலீட்டு ஊடகங்கள், அதை மறுக்கும் கருத்துகளைப் பரிகசிப்பதை அல்லது முக்கியத்துவமின்றி வெளியிடுவதைப் பார்க்கிறோம் – வர்க்கச் சுரண்டல் சார்ந்த ஒடுக்குமுறைகளில் இதுவும் ஒன்று.

உலகத்தையே அடிமைப்படுத்த முயன்ற ஹிட்லர் தன்னை விமரிசித்தவர்களைச் சிறையில் அடைத்தது இனவாத ஒடுக்குமுறைக்கு பொருத்தமானதொரு எடுத்துக்காட்டு. இலங்கையில் தமிழ் மக்களின் சம உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த சிங்களப் பத்திரிகையாளர்களும் வாயடைக்கப்பட்டதைக் கண்டோம். ஒரு வீட்டில் மனைவியின் நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத கணவன் இறுதியாய்ப் பயன்படுத்துகிற சொற்கள்: “வாயை மூடு!” இந்தச் சொற்களில் பெண்ணின் கருத்தை ஒடுக்குகிற ஆணாதிக்கம் இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மதம், சாதி சார்ந்த ஒடுக்குமுறைகள் ஒரே ஓசையை எழுப்புவதற்காகத் தட்டப்படுகிற இரண்டு கைகள்தான். ஒரு வகையில் சாதிப் பிரிவினைகளையும், அதன் உயர்வு-தாழ்வு வன்மங்களையும் அங்கீகரித்த ஒரு ஏற்பாடுதான் இந்து மதம். அதனால்தான் இங்கே மதம் மாற முடிகிறதேயல்லாமல், சாதி மாற முடிவதில்லை! மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகளிலும் கூட சாதியப் பாகுபாடுதான் மையமாக இருக்கிறது!

எடுத்துக்காட்டாக, தற்போது நாடு முழுவதும் மாட்டுக்கறி எதிர்ப்பு என்ற பெயரால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள மதவாத அரசியலில், ஒரு பக்கம் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான – குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான பெரும்பான்மை மதவெறி வெளிப்படையாகத் தெரிகிறது. மஹராஷ்டிரா மாநில பாஜக அரசு மாட்டுக்கறி வைத்திருந்தால் அது கஞ்சா வைத்திருப்பதற்கு இணையான குற்றமாகக் கைதுசெய்யக்கூடிய அளவுக்கு சட்டம் கொண்டு வந்தது. அண்மையில் ராஜஸ்தான் மாநில பாஜக அரசு, சமணர்களின் பண்டிகையையொட்டி நான்கு நாட்களுக்கு மாட்டுக்கறி விற்கத் தடைவிதித்தது. இவர்களது மதவெறியூட்டல் திட்டத்திற்குத் தோதாக சமணர்களது நம்பிக்கை இருப்பதால்தான் இப்படிப்பட்ட தடையாணையைப் பிறப்பிக்க அந்த அரசு முன்வந்தது என்பதை விளக்க வேண்டியதில்லை.

ஒரு மதத்தினரின் நம்பிக்கையை அல்லது உணவுக் கோட்பாட்டை மற்ற மதத்தினரின் மீது சுமத்துவது என்ன நியாயம் என்ற கேள்விக்கு பதில் வரவில்லை. நாளை ரம்ஜானையொட்டி எல்லோரும் கறி பிரியாணி சமைக்க வேண்டும் என்றோ, கிறிஸ்துமஸ் விழாவையொட்டி யாரும் கேக் சாப்பிடாமல் இருக்கக்கூடாது என்றோ ஆணையிடப்படுமா என்ற மதச்சார்பற்றர்களின் கேள்விக்கும் பதில் வரவில்லை.

2014ம் ஆண்டுத் தேர்தலையொட்டி நடந்த தொலைக்காட்சி விவாதங்களின்போது, இவர்கள் சிறுபான்மையினருக்கு மட்டும் எதிரியல்ல, பெரும்பான்மையினருக்கும் எதிரிகள்தான் என்ற கருத்தை இடதுசாரிகள் முன்மொழிந்ததுண்டு. அப்படிச் சொன்னதற்கான விளக்கம் கேட்கப்பட்டபோது, இந்துக்களாக அடையாளப்படுத்தப்படுகிற தலித் மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரது உணவு மரபுகள் தொடங்கி அவர்களுக்கான சமூகநீதி ஏற்பாடாகிய இட ஒதுக்கீடு கொள்கை வரையில் தாக்குதலுக்கு உள்ளாவது சுட்டிக்காட்டப்பட்டது. மாட்டுக்கறி முஸ்லிம்களின் உணவுப்பழக்கம் மட்டுமல்ல, அது ஒரு பகுதி தலித்துகள் உள்ளிட்ட, “உயர்சாதிகள்” என்று தங்களைக் கூறிக்கொள்வோர் அல்லாத பெரும்பான்மை மதத்திற்கு உள்ளேயே உள்ள மற்ற பல பிரிவினரின் உணவாகவும் இருக்கிறது. சிறுபான்மை மதத்தினர், பெரும்பான்மை மதத்தின் பெரும்பாலான சமூகங்களைச் சேர்ந்தோர் இரு சாராரையும் பசுவதை எதிர்ப்பு என்ற ஒற்றைச் சாட்டையால் அடிக்கிற ஏற்பாடல்லவா இது?

கொடுமை என்னவென்றால், இப்படிப்பட்ட கேள்விகளைக் கருத்துகளாக முன்வைக்கிறவர்கள் மீதும் ஒடுக்குமுறைச் சாட்டை சுழற்றப்படுகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துப் பரப்புரை இயக்கத்தை நடத்தி வந்த நரேந்திர தபோல்கர், சமூகப் பாகுபாடுகளுக்கு எதிரான கண்ணோட்டங்களைக் கொண்டு சென்ற கோவிந்த் பன்சாரே, கர்நாடகத்தில் பகுத்தறிவுச் சிந்தனைகளை எடுத்துச் சொன்ன எழுத்தாளர் எம்.எம். கல்புர்கி ஆகியோர் மீது சாட்டையல்ல, துப்பாக்கித் தோட்டாக்களே பாய்ச்சப்பட்டன. இந்த மூவரின் கொலை தொடர்பாகவும் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. யாரும் தாங்கள்தான் இதைச் செய்ததாக அறிவித்துக்கொள்ளவும் இல்லை. இப்படி சட்டத்தின் பிடிக்குச் சிக்காமல் பதுங்கிக்கொள்கிறவர்கள்தான் கலாச்சார வீரர்கள்!

இதன் இன்னொரு பக்கமாக, பாஜக-வை விட தாங்கள்தான் ஒரிஜினல் தேசப்பற்றாளர்கள் என்று காட்டிக்கொள்ளும் சிவசேனா கட்சியினர், மும்பை நகரில், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரின் புத்தக வெளியீட்டை நடத்திய அப்சர்வர் ஆய்வு நிறுவன தலைவர் சுதீந்திரா குல்கர்னி முகத்தில் கறுப்பு மையை ஊற்றினர். ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் சுயேச்சை உறுப்பினரான ஷேக் அப்துல் ரஷீத், மாட்டுக்கறி விற்பனைக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை வரவேற்கும் வகையில் அளித்த விருந்தில் மாட்டுக்கறி வழங்கினார் என்பதற்காக அவர் மீது இந்து சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கறுப்பு மையைக் கொட்டிவிட்டு ஓடினார்கள். அதற்கு முன் அவர் சட்டமன்ற வளாகத்திற்கு உள்ளேயே, இதே காரணத்திற்காக, பாஜக உறுப்பினர்களால் தாக்கப்பட்டார்.

மாட்டுக்கறி எதிர்ப்பு அரசியலின் ஒரு உச்சமாக, உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி கிராமத்தில், முகமது அக்லக், தனது வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக “வதந்தி” பரப்பப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் கலாச்சார காவல் வீரர்கள் அவரை வீடுபுகுந்து இழுத்துவந்து அடித்துக்கொன்றார்கள். வதந்தியாக அல்லாமல் உண்மையாகவே அவர் மாட்டுக்கறி வைத்திருந்தால் கூட, அதுவும் அதற்குத் தடைச்சட்டம் எதுவும் விதிக்கப்படாத மாநிலத்தில், அவரைத் தாக்கலாமா? அதற்கான அதிகாரத்தைக் கொடுத்தது யார்?

பாஜக மத்திய ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து ஏதோ இதற்கென சிறப்பு உரிமம் வழங்கப்பட்டது போல இவர்கள் இப்படிப்பட்ட வன்முறைகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் மாண்பு கருத்துரிமையிலும் சகிப்புத்தன்மையிலும்தான் இருக்கிறது. இந்த இரண்டுமே காவுகொடுக்கப்படுவற்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திடும் வகையில் பல எழுத்தாளர்கள் தங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட சாகித்ய அகடமி விருதுகளைத் திருப்பிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் எழுத்தாளர்கள் கண்டனக் குரல் எழுப்பி வருகிறார்கள். தமிழகத்திலும், சாகித்ய அகடமி விருதுபெற்ற எழுத்தாளர்கள் 16 பேர், அந்த நிறுவனமே இந்தத் தாக்குதலுக்கு எதிராகத் திட்டவட்டமாகக் குரல் கொடுக்க வேண்டும், இதைத் தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இவ்வாறெல்லாம் குரல் எழுப்புகிறவர்கள், வேதங்களிலேயே கூட, இதிகாசங்களிலேயே கூட, மாட்டுக்கறி விருந்து பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது போன்ற வரலாற்றுச் சான்றுகளையும், மாட்டுக்கறியில் உள்ள சத்துகள் பற்றிய அறிவியல்பூர்வ தகவல்களையும், அதைத் தவிர்த்துவிட்டால் பெரும்பகுதி மக்களின் வாழ்வாதரமே பாதிக்கப்படும் என்ற பொருளாதாரப் புள்ளிவிவரங்களையும் ஆதாரப்பூர்வமாக முன்வைக்கிறார்கள். அதற்கு இவர்களது எதிர்வினை, அந்த ஆதாரங்களைத் தக்க சான்றுகளோடு மறுப்பதல்ல – மாறாக வசைமாரி பொழிவதும், வன்மமாகப் பேசுவதும், வன்முறையில் இறங்குவதுமாகத்தான் இருக்கிறது.

அண்மையில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், எழுத்தாளர் ஞாநி இதுபோன்ற கருத்தை வெளிப்படுத்தியபோது, அதில் தமிழக சிவசேனா கட்சியின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டவர், ஞாநியின் மீதே கறுப்பு மை கொட்டப்படும் என்று, அது ஒரு நேரடி ஒளிபரப்பு என்பதைப் பொருட்படுத்தாமல், மிரட்டலாகக் கூறினார். அதே தொலைக்காட்சி நிறுவனம், இவ்வாண்டு மகளிர் தினத்தன்று, தாலி மரபு பற்றிய ஒரு விவாதத்தை ஒளிபரப்ப இருந்தபோது, காலையிலேயே இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தோர் அங்கே திரண்டுவந்து வன்முறையில் ஈடுபட்டனர், செய்தியாளர் உள்ளிட்ட ஊழியர்களைத் தாக்கினர், தாலிக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு தரப்பாரும் வாதிட்டுப் பதிவான அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப விடாமல் தடுத்தனர்.

சமூக வலைத்தளங்களில் பெண்கள், முந்தைய காலங்களை விடவும் கூடுதலாகப் பங்கேற்கிறார்கள், சுதந்திரமாகத் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால், அப்படியெல்லாம் விட்டுவிட மாட்டோம் என்பது போல, மதவாதமும் சாதியமும் பெண்களின் சமத்துவ உரிமைகளை அனுமதிப்பதில்லை என்பதை மெய்ப்பிப்பது போல, இத்தகைய பெண்களைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி, சமூகவலைத்தளம் என்ற பொதுவெளியிலிருந்தே விரட்ட முயல்கிற திருக்கூட்டங்களும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. பிரான்ஸ் நாட்டிலிருந்து பெரியாரிய சிந்தனைகளைப் பதிவு செய்து வந்த தமிழச்சி என்பாரின் முகத்தை வரைகலை நுட்பத்தைப் பயன்படுத்தி சில ஆபாசப்படங்களோடு இணைத்து வெளியிட்டு அவரை இழிவுபடுத்த முயன்றார்கள். தமிழகத்தில் தலித் மக்களின் சிறிதளவு முன்னேற்றத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாத வன்மத்தோடு நிலவும் சாதிய நிலைமைகள் குறித்து எழுதிய பத்திரிகையாளர் கவின்மலர், தனிப்பட்ட முறையில் வக்கிரமான எழுத்துத் தாக்குதலுக்கு உள்ளானார். அவரைத் தாக்கி எழுதியவர்களுக்கு, அவர் தனது கட்டுரைகளில் குறிப்பிட்டிருப்பது உண்மையா இல்லையா என்று கூறுகிற நேர்மை இல்லாமல்போனது. அண்மையில், மாட்டுக்கறி உணவு உரிமைக்கு ஆதரவாகத் தானே கறி வாங்கிவந்து வீட்டில் சமைத்து உண்டதைப் படமாக வெளியிட்டார் நாடகக்கலைஞர் ஹேமா. தெருவில் பெண்ணோடு வாய்ச்சண்டையில் இறங்கிடும் ஒரு ஆண், அந்தப் பெண்ணின் நியாயமான கோபத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், இறுதியில் பெண்ணின் உடலுறுப்புகளைக் குறிப்பிடுகிற, அவளது உறவுகளை வம்புக்கு இழுக்கிற இழிவான வசவுகளில் இறங்குவானே, அதே போன்ற பின்னூட்டங்களை ஏராளமான கலாச்சாரக் காவலர்கள் பதிவு செய்தார்கள்.

இப்படியெல்லாம் நடப்பது தமிழகத்திற்குப் புதிதல்ல. கருத்துரிமை மீதான இப்படிப்பட்ட தாக்குதல்களின்போது அரசு மவுனமாக இருக்கிறது, அல்லது நேரடியாகவோ சுற்றிவளைத்தோ ஆதரவாக இருக்கிறது என்பதுதான் விசனத்திற்கு உரியது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவருடைய நாவலுக்காக அச்சுறுத்தலுக்கு உள்ளானபோது, அதில் தலையிட்ட அரசு அதிகாரி, கிட்டத்தட்ட ஒரு கட்டப்பஞ்சாயத்துதான் நடத்தினார். நொந்துபோன எழுத்தாளர் இனிமேல் தான் எதுவுமே எழுதவே போவதில்லை என்று அறிவித்தார். எழுத்துப் படைப்பாளி தனது பேனாவை மூடிவைக்க நேர்வது கொலைக்கு நிகரான கொடுமை. மற்றொரு எழுத்தாளர் ‘மதுரை வீரன் கதை’ என்ற புத்தகத்தை வெளியிடவிருந்தபோது, அந்தப் புத்தகம் தங்கள் சமூகத்தைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்று சிலர் கிளம்ப, அரசு எந்திரம் அந்தப் புத்தக வெளியீட்டைத் தடுத்தது. ‘மள்ளர் வரலாறு’ என்ற புத்தகத்திற்கும் இப்படித்தான் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர், அரசு அந்தப் புத்தகத்தையும் தடுத்தது. இப்படி பல நிகழ்வுகளைக் குறிப்பிட முடியும்.

கேரளத்தில், அனைத்துத் தரப்பினரின் மதிப்பைப் பெற்ற சிறந்த இலக்கியத் திறனாய்வாளரான பேராசிரியர் பஷீர் வால்மீகி ராமாயணம் பற்றிய ஒரு ஆய்வுத்தொடரை ‘மாத்ருபூமி’ நாளேட்டில் எழுதத் தொடங்கினார். ஹனுமான் சேனா என்ற அமைப்பினர் வந்து குதித்து, ஒரு முஸ்லிம் எப்படி ராமாயணம் பற்றி எழுதலாம் என்று கேட்டு அச்சுறுத்தினர். விளக்கங்கள் எதையும் அவர்கள் கேட்டுக்கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், ஐந்தாவது கட்டுரையோடு அந்தத் தொடரை நிர்வாகம் நிறுத்திக்கொண்டது. “எனது 75வது வயதில் என்னை ஒரு முஸ்லிமாகச் சுருக்கிவிட்டார்களே” என்ற அவரது வேதனைக்குரல் நாட்டின் மனசாட்சியை உலுக்க வேண்டாமா?

காலங்காலமாக இவர்களுடைய “ஆன்மீகப் பிரச்சாரங்கள்” சமுதாயத்தின் அனைத்து வெளிகளையும் ஆக்கிரமித்துக் கிடக்கின்றன. அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் போன்ற பொதுத்துறை ஊடகங்களிலேயே அதிகாலையில் தொடங்கி எத்தனை எத்தனை பக்தி உரைகள். தனியார் தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகள், பத்திரிகைகள் என எல்லாவற்றிலும் தெய்வ வழிபாட்டுப் பாடல்கள், அருளுரைகள், நட்சத்திர பலன்கள், ஜாதக சோதிடங்கள்… இதற்கெல்லாம் மாற்றாக, அறிவியல்பூர்வமான, பகுத்தறிவுக்காக வாதாடுகிற நிகழ்ச்சிகள், எழுத்தாக்கங்கள் உண்டா? மேற்படி ஆன்மிகக் கருத்துகளால், பகுத்தறிவாளர் மனம் புண்படுவதாகச் சொன்னால், இதையெல்லாம் நிறுத்திக்கொள்வார்களா?

ஆயினும், இவர்களை யாரும் தடுக்கவில்லை. இந்தக் கருத்துகளைச் சொல்லாதீர்கள் என்று அச்சுறுத்தவில்லை. அவர்களுக்குப் பிடித்தமான காவி வண்ண மையைக் கூட வீசுவதில்லை. தாங்கள் சொல்ல நினைப்பதைச் சொல்வதற்கான உரிமை இவர்களுக்கு இருப்பதை முற்போக்காளர்கள் அங்கீகரிக்கிறார்கள். அதே உரிமை மாற்றுச் சிந்தனையாளர்களுக்கும் இருப்பதை அங்கீகரியுங்கள், வாதிட வாருங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறார்கள்.

ஆனால், இப்படி மாற்றுக் கருத்துகளையும் மாற்றுக் கருத்துச் சொல்வோரையும் ஒடுக்குவதை நியாயப்படுத்தி, அதுவே இறைவனின் ஏற்பாடு என்பதாகப் புனிதப்படுத்துவது ஒரு தத்துவமாகவே அல்லவா ஊட்டப்பட்டு வந்திருக்கிறது. உயர் குடிப்பெண்கள், தேவ மகளிர் கூந்தலில் இயற்கையாகவே மணம் இருக்கிறது என்று பரமசிவன் பாட்டெழுத, யாராக இருந்தாலும் மலர்களைச் சூடுவதாலும் வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்வதாலும் செயற்கையாகத்தான் மணம் வீசுகிறதேயன்றி ஒருக்காலும் இயற்கை மணம் கிடையாது என்று இயற்கை அறிவியல் உண்மையைச் சொன்ன புலவர் நக்கீரன் நெற்றிக்கண் திறந்து எரிக்கப்பட்ட கதையை எவ்வளவு பயபக்தியோடு கற்பிக்கப்படுகிறது! அந்தக் கதையின் அடிக்கருத்தாக இருப்பது, அதிகார பீடத்திலிருப்பவர்கள் சொல்வதற்கு மாற்றாக யாராவது ஏதாவது சொன்னால் வன்முறையால் ஒடுக்கப்படுவார்கள் என்ற செய்திதானே? இத்தகைய கதைகள் கெட்டிப்படுத்துகிற தத்துவத்தின் வலிமையோடுதானே கருத்துரிமை ஒடுக்குமுறை யாகங்கள் நடத்தப்படுகின்றன?

இந்த ஒடுக்குமுறையால் பறிக்கப்படுவது சில எழுத்தாளர்கள் அல்லது சிந்தனையாளர்களின் கருத்து வெளிப்பாட்டு உரிமை மட்டுமல்ல. மாறுபட்ட கருத்துகள் மோதிக்கொள்ள, அவற்றைத் தெரிந்துகொண்டு, ஒப்பிட்டுப் பார்த்து, எது சரியானது என்று முடிவு செய்து தேர்ந்தெடுக்க மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமையும் புதைக்கப்படுகிறது. நெடும் போராட்டத்தின் பயனாக நிலைநாட்டப்பட்ட இந்த இரண்டு உரிமைகளும் களவாடப்படுவதை அனுமதிக்கலாமா என்ற கேள்வி எழ வேண்டும். மக்களிடையே பகைமையையும் பாகுபாட்டையும் வளர்த்துவிடும் விவகாரங்களால், நாட்டின் வளங்களை உலகளாவிய கார்ப்பரேட் பசிக்கு விருந்தாக்கிடும் துரோகங்கள் மீதான நியாய ஆவேசம் திசைதிருப்பப்படுகிற உண்மையும் புரிந்தாக வேண்டும்.

இந்தக் கேள்வியும் உண்மையும் மக்கள் மனங்களில் ஆழமாக பதிகிறபோது, கருத்து ஒடுக்குமுறைகள் கல்லறைக்கு அனுப்பப்பட்டுவிடும்.

Related Posts