பிற

கருத்துரிமையின் கழுத்தில் வைக்கப்படும் துப்பாக்கி …

(பேராசிரியர் கல்புர்கி கொல்லப்பட்டுள்ள பின்னணியில், கருத்துரிமைக்கு எதிரான வன்முறையாளர்களைக் கண்டித்த போராட்டங்கள் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளன. நானும் கல்புர்கி (https://web.facebook.com/iamkalburgi) என்ற முழக்கத்தோடு தொடங்கியிருக்கும் போராட்டத்தில் மாற்று படைப்பாளிகளும் இணைகிறோம். வாசகர்களின் ஆதரவையும் கோருகிறோம் – ஆசிரியர் குழு)

எஸ்.வி. வேணுகோபாலன்

மீண்டும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது ஒரு பயங்கர படுகொலை. கருத்துரிமையை சகிக்காத வெறிக் கும்பலின் அடுத்த கை வரிசை கர்நாடக மாநிலம் தார்வாரில் நடந்தேறியிருக்கிறது. கன்னட மொழியின் ஓர் அற்புத படைப்பாளியை, கல்வெட்டு ஆய்வாளரை, முற்போக்குச் சிந்தனையாளரை வஞ்சம் தீர்த்துக் கொண்டுவிட்டனர். மல்லேஷப்ப மடிவலப்பா கல்புர்கி அடையாளம் தெரியாத நபர்களால் மிக அருகில் குறிவைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். புனே நகரின் மூடநம்பிக்கை எதிர்ப்பு அறிவியலாளர் நரேந்திர தபோல்கர், கோலாப்பூரின் கம்யூனிஸ்ட் போராளி கோவிந்த் பன்சாரே இருவரும் எந்த முறையில் திட்டமிட்டு தாக்கிக் கொல்லப்பட்டனரோ, அதே விதத்தில் பறிக்கப்பட்டுவிட்டது கல்புர்கி அவர்களது இன்னுயிரும்! ஃபாசிச சக்திகளின் வெறியாட்டம், கொலைக்குப் பின்னரும் அடங்காத அவர்களது பேச்சில், எழுத்தில் வெடிக்கிறது. நல்லிணக்கம், சமத்துவம் போன்ற சொற்களை அறவே வெறுக்கும் வலதுசாரி தீவிரவாதத்தின் அராஜகத்தின் உண்மை முகம் இது.

இத்தனை பெரிய மனிதரின் படுகொலை செய்தி நாட்டின் பிரதமரையோ, பா ஜ க தலைமையையோ சிறிதும் அசைக்கவில்லை. வன்மம் மிகுந்த அரசியலை நடத்துபவர்களுக்கு ‘எதிரி’ ஒருவன் தொலைந்தான் என்பதை மீறிய செய்தி என்ன இருக்கிறது ? ஆனால், அவர்களது அமைப்பின் அடியாள் ஒருவன் உற்சாகம் பொறுக்க முடியாமல் டுவீட்டரில் உளறிக் கொட்டிவிட்டான். பஜ்ரங் தளத்தைச் சார்ந்த புவித் ஷெட்டி என்பவன் அவசர அவசரமாக இணையதளத்தில் கொட்டிய அந்த நஞ்சு இது:

“அப்போது யு ஆர் அனந்தமூர்த்தி. இப்போது எம்.எம்.கல்புர்கி.

இந்து மதத்தை இழிவு செய்பவர்கள் நாய் போலத்தான் (சுட்டுக் கொல்லப்பட்டு )

சாக வேண்டி இருக்கும். அன்பு, கே.எஸ்.பக்வான் அவர்களே,

நீங்கள்தான் அடுத்து (எங்கள் இலக்கு).”

பின்னர் அதேவேகத்தில் அதை அவன் நீக்கிக் கொள்ளவேண்டிய கண்டனத்தை அதைக் கடந்துபோன பலரும் ஏற்படுத்தினர். பல்லாண்டுகள் ஆய்வுகள் நடத்தித் தாம் கண்டடைந்த முடிவுகளை வெளிப்படையாக சமூகத்திற்கு வழங்கும் வேலையைத் தான் செய்தார் கல்புர்கி. ஒரு மொழியின் உள்ளத்தைத் தொட்டுத் தழுவி நெகிழ்ந்து உலகு அதனை இன்புறக் காணும் மொழியியலாளர் அவர். இலக்கிய இதயம் அவருடையது. வசன இலக்கியம் என்று கொண்டாடப்படும் கன்னட இலக்கிய ஆதி கால படைப்பிலக்கியத்தின் குவிமையத்தைச் சென்றடைந்த மேதைமையோடு அவர் துணிச்சலாகச் சில கருத்துக்களை எழுதவும், பேசவும் செய்தவர். லிங்காயத் பிரிவினர் எழுப்பிய உரத்த கண்டனத்தை அடுத்து, மிக்க வேதனையோடு தமது பதிப்பினைத் தாமே திருத்தி எழுதிவிட்டு, “இது எனது இலக்கிய வாழ்க்கையின் மரணம்” என்று சொல்லவும் செய்தார். (எழுத்தாளர் பெருமாள் முருகன் முக நூலில் இப்படித்தானே பதிவிட்டார்!).

கன்னட இலக்கிய உலகின் பெருமிதமிக்க படைப்பாளிகளுள் ஒருவரான யு ஆர் அனந்தமூர்த்தி அவர்களது நினைவு நாள் நிகழ்வில் அண்மையில் பேசுகையில், சிலை வழிபாட்டுக்கு எதிரான அவரது குரலை கல்புர்கி தாமும் எதிரொலித்தார். சிறுவயதில் தாம் கடவுள் சிலை என்று சொல்லப்பட்டவற்றின் மீது சிறுநீர் கழித்ததாகவும் எந்தக் கடவுளும் தம்மை எதுவும் செய்துவிடவில்லை என்றும் சொல்லி இருந்தார் அனந்தமூர்த்தி. கல்புர்கி இந்துத்துவ அமைப்புகளின் கண்டனத்திற்கு ஆளானார். அவரை எச்சரிக்கவும், மிரட்டவுமாக குரல்கள் எழுந்தன. அன்பை போதிக்கும் மதம் என்று சொல்லிக் கொண்டே சிறுபான்மை மதத்தவரை ஈவிரக்கமின்றி எரித்துக் கொன்றுகொண்டிருக்கும் இந்துத்துவ வெறியாளரை விடவும் அவர்கள் மதத்தை இந்த படைப்பாளிகள் அதிகம் கொச்சை செய்துவிடவில்லை.

விஷயம் அதுவன்று. மக்களைக் கேள்வி கேட்கப் பழக்கும் யாரையும் ஆதிக்கவாதிகளுக்குப் பொறுக்காது. அவர்களது அகராதியில் விவாதம், கருத்து மாறுபடல், உண்மை கண்டறிதல் போன்றவற்றுக்குப் பக்கங்கள் கிடையாது. ஏற்றுக் கொள், கீழ்ப்படி, சொல்வதைச் செய் அல்லது செத்து மடி. 77 வயது முதியவரை நெற்றிப்பொட்டில் எதிர்பாராத நேரம் சுட்டுவிட்டு ஓடும் சாகசத்திற்கு என்ன பெயர்? கயவாளித்தனம் என்றா, கோழைத்தனம் என்றா, அயோக்கியத்தனம் என்றா?

பிள்ளையார் பால் குடிக்காது, பேய், பிசாசு என்று எதுவும் கிடையாது. பில்லி சூனியம் எல்லாம் பொய் என்று ஊர் ஊராகத் தெளிவித்துக் கொண்டிருந்த காரணத்திற்காகப் பழி தீர்க்கப்பட்டார் நரேந்திர தபோல்கர். சத்ரபதி சிவாஜி இஸ்லாமியருக்கு எதிரானவர் கிடையாது, பேதமற்று ஏழை எளிய மக்களுக்கு நன்மை செய்தவர் என்று வரலாற்றை நேர் செய்து கொடுத்ததற்காகவும், கோட்சேவுக்கு எப்படி சிலை எழுப்புவீர்கள் என்று காவிக் கூட்டத்தை நேருக்கு நேர் எதிர்த்துக் கேட்டதற்காகவும் வஞ்சம் தீர்க்கப்பட்டார் கோவிந்த் பன்சாரே. இப்போது விழிப்புணர்வாளர் வரிசையில் கல்புர்கி பலி வாங்கப்பட்டிருக்கிறார்.

மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் இன்றுவரை தபோல்கரைக் கொன்றதற்காக ஒற்றை ஆள் கைது செய்யப்படவில்லை. பன்சாரேயின் கொலையாளிகள் இன்னும் பிடிபடவில்லை. கல்புர்கி மறைவு ஏற்படுத்திய அதிர்ச்சியில் நேரே விரைந்து சென்று அஞ்சலி செலுத்திய மாநில முதல்வர் சித்தராமையா கல்புர்கியின் உயிரைப் பறித்தவர்கள் தப்ப முடியாது என்று மக்களுக்கு உறுதி அளித்துள்ளார். மக்கள் ஒற்றுமைக்கு சவால்கள் அதிகம் சூழும் காலத்தில் வாழ்கிறோம் நாம். நாம் இழந்திருக்கும் உயிர் விலைமதிப்பற்றது. அதனாலேயே தார்வார் நகரம் உடனடியாக எழுந்து நின்று மனிதச் சங்கிலியாகத் தங்களைப் பிணைத்துக் கொண்டு நின்றது. கொலையாளிகளைக் கண்டனம் செய்து உரத்து முழங்கியது. மாமனிதர் மறைவிற்குக் கண்ணீர் பொழிந்தது.

அரசு மரியாதைகளுடன் நடைபெற்றது கல்புர்கி அவர்களது இறுதி நிகழ்ச்சி. தபோல்கர் குடும்பம் மொத்தமும் பின்னர் அவரது பாதையில் அறிவியல் விழிப்புணர்வுப் பயணக் களத்தில் இறங்கி விட்டது. குடும்பத்தினர் அவரது நினைவு நாள் சங்கம்த்தின்போது மட்டுமே ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான உழைப்பாளி மக்கள் கம்பீர செவ்வணக்கம் செலுத்தித்தான் பன்சாரே அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். கல்புர்கி மறைவு, கன்னட மக்களை சாதி, இன, மத வேறுபாடுகளைக் கடந்து தங்கள் பொது எதிரியை அடையாளம் காணத் தூண்டவே செய்திருக்கிறது. படைப்பாளிகள் மட்டுமல்ல, பாட்டாளிகளும் அந்தத் திசைவழியில் திரளவே உறுதி மேற்கொண்டு சென்றிருக்கின்றனர். வகுப்புவாதிகளின் கொட்டம் அடக்கப்பட்டாக வேண்டும். அடக்கப் படும்.

(நன்றி: வண்ணக்கதிர்)

Related Posts