அரசியல்

கச்சநத்தம் – மலர்களால் மூடப்படும் மலம் . . . . . . . . . !

சிவகங்கை கச்சநத்தத்தில் நடந்த படுகொலைகளுக்கு பின்னே முதற்கட்டமாக அனைவருமே பரவலாக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பின் இரண்டொரு நாள் கழிந்ததும் “சாதி மட்டுமே அந்த விவகாரத்தில் பிரச்சனையில்லை” என்று அந்தக் கொலைகளின் காரணம் கொஞ்சம் மென்மையாக்கப்படும் பாணி உருவானது, அதை தொடர்ந்து “அந்த கொலை குறித்த எதிர்வினைகள் வலுவாக இல்லையே?” என்று கேள்வி எழுப்ப அதற்கு பதிலாய் மேலும் அந்த கொலைக்கான காரணங்களாக அது “இரு தரப்பினருக்குள் நடந்த தொழில் சண்டை” என்று அப்பட்டமான கருத்துக்களை பார்க்க முடிகிறது.

முதலில்; ஒரு பிரச்சனையை மூடி மறைக்க, அந்த போக்கை திசை திருப்ப நாம் அரசியல்வாதிகள் இல்லை. நம்மை சார்ந்தவரை அது பாதித்துவிடுமே என்கிற மனோபாவத்தில் இதையெல்லாம் அணுகத் தொடங்க கூடாது, அதன் காரணமாகவே விவாதப்பொருளாக வேண்டியதை மூடி மறைத்தால், அது மருத்துவரிடம் நோயை மறைப்பதற்கு சமம்.

சம்பவம் நடந்த பகுதிக்கு அருகிலுள்ள ஆவரங்காடு பகுதி சாதிவெறி உச்சத்தில் கோரத்தாண்டவமாடும் பகுதி, இங்குள்ள அகமுடையார்களின் சாதிய ஆதிக்கத்தை வெறும் “கால் மேல் கால் போட்டு டீ கடையில் டீ குடித்ததால்” நடந்த வன்முறை என்று சுருக்கி விட முடியாது. சொல்லப்போனால் கால் மேல் கால் போட்டதால் கொலை நடந்தது என்கிற செய்தியே இந்த கொலைகளை வலுவிழக்கச்செய்யும் மென்மையான குற்றச்சாட்டு தான்.

இதை தாண்டிய சாதிய அடக்குமுறை அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பள்ளர் சமூகத்தினரின் ஆடு, கோழி ஏன், நாய் கூட அகமுடையார் சமூகத்தவரால் கொல்லப்படும் கொடூரங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. பள்ளர்களின் வீடுகள் தாக்கப்படுவது, குறிப்பிட்ட அவர்களது பகுதியில் தொழில் நிமித்தமாய் கடை வைத்துக்கொள்ளும் உரிமை, தொழில் தொடங்குவதற்கான நிலை என்று, எந்த அடிப்படை சமத்துவமும் சாத்தியப்படாத பகுதியாக அங்கே பள்ளர்களின் மீதான சமூக அடக்குமுறை நடந்து கொண்டிருக்கிறது.

இச்சம்பவம், இதையெல்லாம் விவாதிப்பதற்கான சூழலை உருவாக்கி கொடுத்திருக்கிறது, இதை தொடர்ந்து அம்மக்கள் இதையெல்லாம் எதிர்க்கொண்டு வரும் காலத்தில் முறியடிப்பதற்கான சூழலை அரசுகளும், இயக்கத்தாரும், சமூக செயற்பாட்டாளர்களும் செய்ய முயல வேண்டும் என்பது இறந்த அந்த மூன்று உயிர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

சந்தையூர் பிரச்சனையிலேயே நான் இதை தான் எழுதினேன், அந்த சுவர் தீண்டாமை சுவரா இல்லையா என்பது இரண்டாம் கட்ட விவகாரம், அதனினும் கொடுமையான தீண்டாமை அங்கே பறையர்களால் அருந்ததியர்களுக்கு இழைக்கப்படுவது கண்கூடு, பின்னே அந்த இடத்தில் தீண்டாமையைச் சுவர் இருந்தால் என்ன? இல்லையென்றால் என்ன? தீண்டாமைச் சுவர் இருப்பதற்கான எல்லா தகுதியும் அந்த இடம் கொண்டிருந்தது.

கச்சநத்தத்திற்கும் அதையே தான் சொல்கிறேன், கால் மேல் கால் போட்டு டீ குடித்ததால் வெட்டினார்கள் என்பது உண்மையோ பொய்யோ, ஆனால் அதனினும் கொடுமையான அடக்குமுறை தீண்டாமை அங்கே இருக்கும் போது, இந்த காரணங்கள் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா என்ன?

அங்குள்ள அகமுடையார்கள் கல்வியறிவு பெறாதவராய் இருந்தாலும், அவர்களுக்கு அங்கே இருக்கும் சமூக அங்கீகாரம் கல்வி கற்ற பட்டதாரி பள்ளர் இளைஞர்களுக்கு இல்லை. சமூக விரோத தொழில்களின் மூலம் வரும் அச்சுறுத்தலையெல்லாம் நீண்ட காலமாக சட்டப்படியே அங்குள்ள பள்ளர் மக்கள் எதிர்க்கொண்டு வந்திருக்கிறார்கள், கண்டு கொள்ளாத காவல் நிலையத்தையே நம்பி இருந்திருக்கிறார்கள், காவல் நிலையில் நிறைய புகாரும் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த போராட்ட தொடர் நடவடிக்கையும், அடுத்தடுத்த பிரச்னையும், நீண்ட கால சாதிய அடக்குமுறையும் ஒன்று சேர்ந்து, இவர்களுக்கு குடைச்சலாக இருந்த இளைஞர்களை நாள் குறித்து கொலை செய்திருக்கிறார்கள். இதில் சாதிய பின்னணி  இல்லையென்பது அப்பட்டமாக எதையோ, யாரையோ, சாதி பற்றிய விவாதங்களை மூடி மறைப்பதற்கான ஏற்பாடு. மலத்தின் துர்நாற்றத்தை மலர்களால் தற்காலிகமாக மூடி வைக்கும் ஏற்பாடு.

இதை தொழில் போட்டி, இருசமூகத்திற்கான பிரச்னை, இதில் சாதியம் இல்லை என்றெல்லாம் ஜோடிப்பதின் மூலம் இது நாளை தீர்ந்து விடப்போவதில்லை. கஞ்சா விற்பது ஒரு தேசவிரோத குற்றமானாலும், அதை செய்யக்கூட சமூகத்தில் ஒரு அதிகாரம் தேவையாயிருக்கிறது, ஆள் பலம் தேவையாயிருக்கிறது. ஏற்கனவே காரணமின்றி ஒடுக்கப்படும் சமூகத்தில், கல்வி மட்டுமே நம்மை அங்கீகரிக்கச்செய்யும் என்பதை உணர்ந்த பள்ளர் சமூக மக்கள், கல்வியை நோக்கி நகர்கிறார்கள் ஒழிய, தொழில் போட்டி என்று சொல்ல கந்துவட்டியோ, சாராயம் காய்ச்சுவது, கஞ்சா விற்பதோ, அச்சமூகத்தின் தொழில்களாக அங்கே இல்லை.

இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்ட இந்த அடக்குமுறையை, குற்றம் நடந்ததும் உடனே நேரில் சென்று ஆறுதல் சொல்லவும், துணையாய் நிற்கவும், இதை தீர்க்கவும்,  அரசியல்வாதிகள், இயக்கத்தார்கள், முற்போக்கு சக்திகள் முன்னின்று ஏதேனும் முயற்சிகள் செய்யக்கூடிய அதிவேக தொழில்நுட்ப தகவல் பரிமாற்ற 4 ஜி காலத்திலாவது இதற்கான முயற்சிகள் தொடங்கட்டும், அதற்கு முன் குறைந்தபட்சம் உண்மையை ஒப்புக்கொள்வோம், பேசுவோம், விவாதிப்போம், அது தான் தொடக்கம்.

கத்திரி வெயிலில் கூட காயாத மலம் சாதி, அதை மலர்களால் மூடாதீர்கள்.

– வாசுகி பாஸ்கர்

Related Posts