மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
“AHM சாரப் பார்க்கனும்.”
அன்பழகன் கை நீட்டிச் சுட்டவே என்னிடம் வந்தாள் அந்தக் குட்டி தேவதை.
“ என்னை ஏன் சார் கீழ உட்கார வச்சீங்க. பெஞ்ச் ல உக்கார வையுங்க சார்”
ஒன்றும் புரியாது போகவே திரு திருவென முழித்தேன்.
“ஏங்கிளாசு பாப்பாதான்” சேவியர் சொன்னான்.
இடது கையால் அவளை அணைத்தபடியே கேட்டேன்,
“ என்ன சாமி”
“ கீழ உட்கார முடியல. கால் வலிக்குது. பெஞ்ச் வேணும்”இப்பொழுதும் ஒன்றும் புரியாது போகவே திறு திறு என்று விழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
விழித்தேன்.
“ வேற ஒன்னும் இல்ல சார், ரெண்டு புள்ளைங்கள கீழ உட்கார வச்சோம்ல. அதுல ஒன்னுதான் இது”
சேவியர் சொன்னான்.
புரிந்தது.
திருப்புத் தேர்வுக்காக அறை ஒதுக்கிய போது இரண்டு ஆறாம் வகுப்பு குழந்தைகளுக்காக ஒரு அறை ஒதுக்க வேண்டி வந்தது. சிறு பிள்ளைகள் தானே என்று இருக்கிற அறை ஒன்றிலேயே கீழே உட்கார வைத்தோம். வந்து விட்டாள்.
சிரித்துக் கொண்டே சொன்னேன்,
”சரிங்க கிழவி, போங்க வரேன்”
“ பெஞ்ச் எடுத்துட்டு வாங்க” சிரித்துக் கொண்டே ஓடி விட்டாள்.
“சரியாந்திர வெடிப் புள்ளடா சேவி”
“6B னா சும்மாவா?”
அவன் வகுப்புக் குழந்தை அவள்.
எல்லோரும் என்னை நக்கலடித்தார்கள். அவளிடம் நான் வறுபட்டதில் எல்லோருக்கும் ஏகத்துக்கும் மகிழ்ச்சி.
போய் ஒரு பெஞ்ச் போட்டு அவளை உட்கார வைத்தேன்.
சிரித்தாள்.
இப்ப சந்தோசமா கிழவிக்கு. அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வந்தேன்.
சிரித்தாள்.பெரிய பெரிய பள்ளிகளெல்லாம் தங்கள் பள்ளிகள் உருவாக்கிய மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையில் பெருமை பட்டுக் கொள்வார்கள். உறுதியாய் சொல்லலாம்,நாங்கள் கங்குகளை தயாரித்து சமூகத்திற்கு தருகிறோம்.
முதலில் சேவியருக்கு கை கொடுக்க வேண்டும். சரியாய் வளர்த்திருக்கிறான்.
Recent Comments