புதிய ஆசிரியன்

ஓநாய்க் கிழவிக்கு இரையாவதோ சிறுமி?

(செப்.2 அகில இந்திய வேலைநிறுத்தத்தை ஒட்டி புதிய ஆசிரியன் இதழில் வெளியான கட்டுரை)

– எஸ்.வி. வேணுகோபாலன்

ஆகஸ்ட் 2002 பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் ஒரு முழு பக்க விளம்பரம் வந்திருந்தது. வெளியிட்டவர்கள், ஐ சி சி – இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு எனப்படும் முதலாளிகள் சங்கம். பிரதமர் வாஜ்பாய் அவர்களே, வேலை வாய்ப்புகளுக்கு எதிரான சட்டங்களை ஒழித்துக் கட்டுங்கள், வேலை வாய்ப்பு களுக்கான பெரிய மதகுகளைத் திறந்துவிட எங்களை அனுமதியுங்கள் என்று பெரிய எழுத்துக்களில் தலைப்பு!

ஆஹா, அடடா… இந்த நாட்டில் தொழிலாளர் நலனுக்கு ஆதரவாக முதலாளிகள் நிற்கத் துடிப்பதும், அதை நிறைவேற விடாது முட்டுக்கட்டை போடுவதாக சட்டங்கள் இருப்பதும் நாம் அதுவரை கேள்விப்படாத அதிர்ச்சிச் செய்தியாக இருந்தது. சரி, என்னதான் சொல்கிறார் கள் என்று விளம்பரத்தின் அடுத்தடுத்த (திரு)வாசகத்தையும், (திருப்பள்ளி) எழுச்சி முழக்கத்தையும் பார்த்ததும்தான் புலி தனது வரிகளை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாது என்பது பிடிபட்டது. நிறையப் பேரை அவர்கள் வேலைக்கு அமர்த்தத் துடித்தாலும், ஏற் கெனவே வேலையில் இருக்கும் யாரையும் நினைத்த நேரத்திற்குத் “தூக்க” முடியவில்லையாம். முன் அறிவிப்பு தரவேண்டுமாம், நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமாம்.

ஆஹா, இப்போது புரிகிறதா முதலாளிமார்களது தரும சிந்தனை! தொழில் தகராறு சட்டம் சரியில்லையாம், தொழிற்சங்கச் சட்டங்கள் சுத்த மோசமாம். அவற்றை அடியோடு தூக்கியெறிய வேண்டுமாம். “ரெட் ரைடிங் ஹூட்” என்ற குழந்தைகளுக்கான பிரபல சிறுகதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கதையில் வரும் சிறுமி காட்டில் வசிக்கும் தனது பாட்டியைத் தேடிச் செல்கையில் அதை அறிந்துவிடும் ஓநாய், அவளுக்கு முன்பாக ஓடிச் சென்று பாட்டியை அடித்து விழுங்கிவிட்டு பாட்டியின் உடை களைப் போட்டுக்கொண்டு கட்டிலில் படுத்தபடி சிறுமி வரவுக்குக் காத்திருக் கும், இவளையும் விழுங்குவதற்கு.

சிறுமி கதவைத் திறந்ததும் பாட்டி பேசுவது போலவே பேசியும் காட்டும். அந்த மாதிரி தொழிலாளி வர்க்கத்தை ரட்சிக்க வந்த வேடத்தில் காட்சி அளித்த மேற்படி விளம்பரத்தில், ஒரு கட்டத்தில் ஓநாய் மறைக்க முடியாத படி வெளிப்படுத்தியது போலவே முதலாளி வர்க்கத்தின் கோரப் பற்கள் நாக்கைத் துருத்தியபடி வெளிப் பட்டன. இப்போது முதலாளிகள் கஷ்டப் பட்டு கோரிக்கையெல்லாம் வைக்க வேண்டாம். இது நரேந்திர மோடி, மன்னிக்கவும், “நமோ”வின் ஆட்சிக் காலம்.

மோடி எங்கே சென்றாலும் மூலதனத்திற்குத்தான் முதல் வணக் கம் வைப்பார். எந்த நாட்டுக்குச் சென்றாலும் மூலதனத்தின் உடல் நலத்தைத்தான் விசாரிப்பார். எங்கா வது மூலதனம் அடியுதை வாங்கிப் படுக்கையில் கிடப்பதைப் பார்த்தால் பதறிப் போய்விடுவார். அவ்வளவு ஏன், மூலதனத்திற்கும் சேர்த்து டிக்கெட் போட்டுக் கொண்டுதான் விமானப் பயணமே மேற்கொள்வார். தொழிலாளர் நலனாவது, சட்டங்களா வது, நான்சென்ஸ், வளர்ச்சிக்கு எதிராகப் பேசுபவர்களுக்கு இந்தியா வில் இனி இடமில்லை.

மன்மோகன் சிங் – ப. சிதம்பரம் கூட்டணியே கதி கலங்கி நிற்கும் அளவுக்கு நரேந்திர மோடி – அமித் ஷா – அருண் ஜெட்லி கும்பல் விஷத்தைக் கக்கிக் கொண் டிருக்கிறது. மூலதனத்திற்கு இப்போது அடிப் படையில் நிலம் தேவை. பன்னாட்டு, உள்நாட்டு மூலதனத்தின் உடனடித் தேவையை நிறைவேற்ற நான்காவது முறை அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. நாடாளு மன்றம் ஒரு தேவையற்ற கூத்து அவர் களுக்கு. இருக்கவே இருக்கிறது அவசரச் சட்டம்!

நிலம் கையகப்படுத் தும் சட்டம் என்பது அத்தனை ஜன நாயக உரிமைகளையும் நிலத்தின் சொந்தக்காரரிடமிருந்து சேர்த்துப் பறிக்க வழிவகுக்கிறது. விவசாயி களின் வாழ்வாதாரத்தின் மடியில் தீக்குச்சி கொளுத்திப் போடுகிறது. உழைப்புச் சுரண்டலை இனி சட்டபூர்வமாகச் செய்வதற்குத்தான் தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தும் திருத்தப்படுவது. அதற்கு ராஜஸ்தான் மாநிலத்தின் பாஜக ஆட்சி கொண்டுவந்த சட்டத் திருத்தங்களே முன்மாதிரி. அதையே கடைப்பிடிக்குமாறு பிரதமர் அலுவல கம் மாநில அரசுகளுக்குச் சொல்லி விட்டது.

தனது பங்கிற்கு மத்திய அரசும் தொழிற்சாலைச் சட்டம் உள் ளிட்ட நலச் சட்டங்களில் முதலாளி களுக்கு ஆதரவான திருத்தங் களைச் செய்ய இறங்கியுள்ளது. இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டால், ஏழாவது மனிதன் அல்ல நூறாவது மனிதன் கிடைத்தால்கூட புதிய நிறுவனம் எதிலும் தொழிற் சங்கத்தை உருவாக்க முடியாது. கோரிக்கை முன்வைக்க முடியாது. ஒற்றைப் போராட்டம் நடத்த முடியாது.  அதற்கு நேரடி சாட்சியம்தான், மாருதி சுசுகி நிறுவனத்தின் 147 தொழிலாளர் கள் கடந்த 3 ஆண்டுகளாகச் சிறை யில் வாடிக் கொண்டிருப்பது. ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா,  ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் லாபத் தை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டுத் தொழிலாளரை நடுவீதியில் நிறுத்தி விட்டு ஓடிப்போனது.

எல்லாவற்றையும் தனியார்மயப் படுத்து. இந்தியாவின் ஆகப் பெரிய பொதுத்துறையாக இருக்கும் ரயில் வே துறையைப் பிய்த்துப் போட்டு விற்றுவிடு என்பதே ஆட்சியாளரது யோகா பிரார்த்தனை. இதைக் கூட்டுப் பிரார்த்தனைக் குரலாக மாற்றி விட் டால், மற்ற துறைகளையும் கிடைக்கிற காசுக்கு விற்றுப் போட லாம். பாதுகாப்புத் துறையிலும் அந் நிய முதலீட்டைக் கொண்டு வந்து விட்டால் வேறு என்ன வேண்டும்?

ஊழியர் சேமநல நிதி, காப்பீடு எல்லாம் பறிக்கப்படவும், பணி நிரந் தரத்திற்குப் போராடிக் கொண்டிருப் போரை பணிப் பாதுகாப்பே அற்றவ ராக்கவுமான திருத்தங்கள். காண் டிராக்டர்களுக்கு எந்தத் தடையு மின்றி சுரண்டும் சுதந்திரம். மானியங் கள் வெட்டு. பணமாற்றுத் திட்டம் என்ற பெயரில் ஏற்கெனவே எரிவாயு வில் செய்ததை அடுத்து, நியாய விலைக் கடைகளையும் இழுத்துப் பூட்ட முயற்சி. `வளர்ச்சிக்காக சாதா ரண மக்கள்தானே தியாகம் செய்ய வேண்டும்?

இந்தத் தேச விரோத அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக சிஐடியு, ஏஐடியுசி முதலான இடதுசாரி தொழிற்சங்கங்கள் மட்டுமல்லாது தாளமாட்டாத ஆவேசத்தோடு பாஜக வின் தொழிற்சங்கமான பாரதீய மஸ்தூர் சங் (பிஎம்எஸ்) அமைப்பே குரல் கொடுத்துவிட்டது. போராட்ட மேடையில்  காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி உள்பட இணைந்திருக் கிறது. வித்தியாசமான கட்சி, ஊழ லற்ற ஆட்சி, அச்சே தின் , வளர்ச்சியே தாரக மந்திரம், மினிமம் கவர்மெண்ட் மேக்சிமம் கவர்னன்ஸ் போன்ற  கவர்ச்சிகரமான மோசடி வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சி யைப் பிடித்த மோடி அரசின் முத லாண்டு நிறைவு நேரத்தில் மே 26 அன்று புது தில்லியில் கூடிய மத்திய தொழிற்சங்கங்கள், துறைவாரி சம் மேளனங்கள், மத்திய மாநில அரசு ஊழியர் அமைப்புகள், நிதித்துறை தொழிற்சங்கங்கள், பல்வேறு சங்கங் கள் என்ற வரிசையில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்றப் பேரவை யும் அடக்கம். தங்களது 12 கோரிக் கைகளை ஏறெடுத்தும் பாராததோடு, மேலும் தாக்குதலைத் தொடுக்கும் அரசுக்கு எதிராக செப் 2 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்துவ தென அறிவித்துள்ளது போராட்ட மேடை. நிலக்கரி, அஞ்சல் துறை, போக்குவரத்து, தொலைபேசித் துறை ஊழியர்கள் போராட்டங்களை வாழ்த் திய போராட்ட மேடை, நவம்பர் 23 முதல் மத்திய அரசு ஊழியர் தொடங்க இருக்கும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்தது. இதுவரை பார்த்திராத அளவில் பரந்துபட்ட பங் கேற்போடு ஒரு பிரம்மாண்டமான வேலை நிறுத்தத்தை நாடு தழுவிய அளவில் செப் 2 அன்று நடத்த எடுக்கப்பட்ட முடிவு ஆர்ப்பரிப்போடு எல்லா மாநிலங்களிலும் பற்றிப் பரவிக் கொண்டிருக்கிறது.  அனைத்துத் துறைகளும் இயக்கத்தை நிறுத்தித் தங்கள் எதிர்ப்பைக் காட்டவுள்ளன.

வலுவான ஒற்றுமையை, தேசத்தின் மனச்சாட்சியான குரலை, ஜனநாயக உணர்வோடு முன்னிற்கும் எதிர்ப் புணர்ச்சியை ஒழித்துக் கட்டவே ஆட்சியாளர்கள் சீர்திருத்தங்களை வேகப்படுத்திக் கொண்டிருக்கின் றனர். ரெட் ரைடிங் கதையில் ஓநாயை அடையாளம் கண்டு விழிப்புணர்வு பெறும் சிறுமியை அந்த வழியே வரும் தொழிலாளி ஒருவன்தான் காப்பாற்றி அரவணைத்துத் தனது கோடரியால் ஒரே போடு போட்டு, தந்திர ஓநாயை வீழ்த்தி, அதன் வயிற்றைக் கிழித்து மூதாட்டியையும் மீட்பான். தொழிற்சங்க ஒற்றுமையின் மாபெரும் சக்தி இந்த தேசத்தையும், அதன் உழைப்பாளி மக்களையும், வளத்தையும் பாதுகாக்கும் போராட் டத்தில் தன்னை நிரூபிக்கும். அராஜக ஆட்சியாளர் சதிகள் அனைத்தின் மீதும் செப் 2 அன்று ஓங்கி விழட்டும் அதன் சம்மட்டியின் முதலடி.

செப் 2: அகில இந்திய வேலை நிறுத்தக் கோரிக்கைகள்:

***தேசப் பொருளாதாரத்தைச் சீரழித்து வரும் தனியார்மய, தாராளமய சீர்திருத்தக் கொள்கை அமலாக்கங்களை உடனே நிறுத்த வேண்டும்.
* * குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ 15,000 வழங்கப்படவேண்டும்.
* * ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சிகளை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
* * பாதுகாப்புத் துறை, இன்சூ ரன்ஸ், வங்கிகளில் அந்நிய முதலீடு அனுமதிப்பது திரும்பப் பெற வேண்டும்.
* * 45 நாட்களுக்குள் தொழிற் சங்கப் பதிவு செய்யப்படவேண்டும் .
* * தொழிலாளர் நலச் சட்டங்களில் கொண்டுவரப்படும் தொழிலாளர் விரோத திருத்தங்கள் திரும்பப் பெற வேண்டும். தொழிற்சங்க உரிமை களின் மீதான தாக்குதல் நிறுத்தப் படவேண்டும்.
* * காண்டிராக்டு, கேசுவல் சுரண் டல் முறைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
* * துறைமுகங்கள் மற்றும் அஞ்சல் துறைகளை கார்பொரேட் மயமாக்கும் முடிவுகள் கைவிடப்பட வேண்டும்.
* * கல்வி, மருத்துவம் அனைத்து மக்களுக்குமான அடிப்படை உரிமை என்பது உரிய நிதி ஒதுக்கீடுகள் செய்து நடைமுறை சாத்தியமாக்கப்பட வேண்டும்.
* * ஏற்கெனவே மத்தியத் தொழிற் சங்கங்கள் முன்வைத்துள்ள 12 அம்ச கோரிக்கைகள் மீது பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும்.     

(sv.venu@gmail.com 94452 59691)

Related Posts