புத்தகம் பேசுது‍

ஒரு தோழியின் கதை

ஒரு தோழியின் கதை | இரா.நடராசன் | புக்ஸ் பார் சில்ட்ரன் | பக்: 64 | விலை:40/- 

ஒரு தோழியின் கதைக்குள் போகும் முன் இப்புத்தகத்தின் ஆசிரியரை பற்றி கொஞ்சம் பேசியாக வேண்டும். ஒரு பக்கம் மொழிபெயர்ப்பு பணிகள் இன்னொரு பக்கம் கல்வி சார் உளவியல் குறித்த ஆய்வுகள், அறிவியல் புனைவுகள், சிறார் இலக்கியம், கட்டுரைகள் என நீளும் படைப்பாக்கத்தின் அனைத்து தளத்திலும் தன் ஆளுமையை விஸ்தரித்திருக்கும் எழுத்தாளர் நடராசன் அவர்களின் சமீபத்திய வரவான “இது யாருடைய வகுப்பறை” தமிழக ஆசிரியர், மாணவர்கள், கல்வி சார் அமைப்புகள் மத்தியில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் இத்தகைய தொரு சூழலில் ஒரு தோழியின் கதை என்கிற இப்புத்தகத்தின் மூலம் மீண்டும் ஒரு சிறார் இலக்கியம் கொடுத்திருப்பது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.

இது ஒரு கதைபுத்தகம் என்பதையும் தாண்டி நடுநாட்டு வரலாற்றையும் அதனையொட்டிய  புனைவின் மூலம் மிகசிறப்பான கதைகளை உருவாக்கி சிறுவர்களின் மனங்களை மட்டுமல்லாது மற்றவர்களின் வாசிப்பு மனோநிலையையும் கவர்ந்திருக்கிறது இப்புத்தகம். நெய்தல் நிலத்தையும் மருதநிலத்தையும் தன்னகத்தே கொண்டு பரந்து விரிந்துகிடக்கும் நடுநாட்டு பழங்கதைகளையும்  நாட்டுபுற தன்மையையும் இந்நிலத்தை செப்பனிட்டு ஆண்டு வந்தவர்களான திருத்தொண்டர்கள் எனப்படும் களப்பிரர் ஆட்சி முறையையும் அவர்களின் நெறிதவறா தன்மையையும் கதையோடு இணைத்து  சொல்வதோடு கதைக்குள் கதை  அதற்குள் இன்னொரு கதை என  பயணப்படும் இக்கதைக்குள் வரும் மூன்று சிறுவர்களை மட்டுமல்லாது வாசிக்கும் நம்மையும் கதைக்குள் கட்டிப்போட்டு விடுகிறது.

மெய்யாகிலும் பொய்யாகிலும் எல்லா காலத்திலும் கதை சொல்வதற்க்கென்றே  பாட்டிகள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதால் பழங்காலக் நடப்புகள் யாவும் கதைகளாக பாட்டிகளின்  மூலமே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு வருகிறது.  நிலவில் வடை சுட்ட கதையிலிருந்து இன்னும் தமிழ் பாட்டிகள் நம்முடைய தலைமுறையிலும் தொடர்ந்து வருவது பழமையின் சுவடுகள் அழியாமல் பாதுகாக்கும் ஒரு வழி முறை என்பதால் இக்கதையை வழிநடத்தி செல்பவளாகிறாள் குருவிப்பாட்டி.

சித்ரா பௌர்ணமியின் போது மட்டுமே வெளிச்சம் பெரும் அந்த அற்புத மாளிகையின் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கதைகளை ஒன்றன்பின் ஒன்றாக  வாசிக்கும் சிறுவர்கள்  வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வாசிக்க முடியுமென்பதால் மூன்று சிறுவர்களும் அவர்களுக்கு வழிகாட்டிய குருவி பாட்டியும் இணைந்து வாசித்து மகிழ்வது நெகிழ்ச்சி.

திருத்தொண்டர் தன் மகளெனும் பாராமல் செய்த தவறுக்காக சிறைவைத்த மகள் தூங்காமல் இருப்பது கண்டு வேதனையுற்று அவளுக்கு ஒரு தோழியை ஏற்பாடு  செய்ய தோழியின்  சேவையும் நட்பும் நெருக்கமாகியும் தூங்காமல் இருக்கும் நிறைமதியை தூங்கவைக்க கதை சொல்வதென்ற ஏற்பாடு நடைபெறுகிறது. பலரும் வந்து பல கதைகளை சொல்லி அவர்களின் கதைக்குள் இருக்கும் புதிர்களுக்கு விடைகள் கேட்க அதற்க்கு தகுந்த விடை கொடுத்து அனுப்பிய வாரே  இருக்கிறாள் தோழி சித்திர வர்த்தினி. அத்தனை கதைகள் கேட்டும் தூங்காத  நிறைமதியின் விழிகளை இறுதியில் தன்  கதையை சொல்லி தூங்கவைத்து தோழியாக இருந்த  சித்திர வர்த்தினி வர்த்தமானனாக தன் இயல்பு உருவத்திற்கு மீண்டு  நிறைமதியை மணம்முடித்து சிறையிலிருந்து விடுவிப்பதாக நிறைவு பெறுகிறது கதை.பல வண்ணங்களால் அழகுற தீட்டப்பட்டிருக்கும் புத்தகத்தின் முன்னட்டையில் துள்ளி குத்திக்கும் சிறுமியைப்போலவே வாசித்து முடித்த பின் நம் மனதையும் சிறுவர்களாக்கி துள்ளிகுதிக்க வைக்கிறது இக்கதை புத்தகம் என்பதில்  ஆச்சரியமேதுமில்லை.

நன்றி: புத்தகம் பேசுது மார்ச் 2014

Related Posts