பிற

ஒரு துளி மையில் கரைக்கப்படும் காலம் பெற்றெடுத்த உரிமைகள்!

மத்திய அரசு ஆடைத் துறை ஏற்றுமதி மேம்பாட்டுக்கும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் என்று சொல்லி ஒரு சிறப்பு தொகுப்பை அறிவித்துள்ளது. நேற்று (ஜூன் 22) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

ஏற்றுமதியை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை பெருக்கவும் அரசு உதவி செய்தால் அதை வரவேற்போம். இன்னும் சொன்னால் அரசு இன்னும் கூடுதலாக உதவி செய்ய வேண்டும் என்பதே நம் நிலைபாடு!

ஆனால் தற்போது இந்த சிறப்புத் தொகுப்பில், தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை நீர்த்துப் போகச் செய்து, காலப் போக்கில் இல்லாமல் போகச் செய்யும் வேலையை மிகத் தெளிவாகச் செய்துள்ளனர்.

குறிப்பாக இந்திய தொழிலாளர் சட்டப்படி, எந்தவொரு தொழிலாளியும் வேலைக்குச் சேர்ந்த நாள் முதலாய் அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடிக்க வேண்டும் என்பது ஒரு விதி. ஆனால் நடைமுறையில் அதை முதலாளிகள் எப்படி அமல்படுத்துகிறார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. தற்போது இந்த சட்ட விதியைப் புறந்தள்ளி, தொழிலாளிகள் விருப்பப்பட்டால் பி.எப். திட்டத்தில் சேரலாம், இல்லாவிட்டால் விட்டுவிடலாம் என்று கூறியுள்ளனர்.

பல தொழிலாளிகள் இன்று வாழ்வதற்கானப் போராட்டத்தில் எதிர்காலத்திற்கான சேமிப்பு எதற்கு? இப்போதே பற்றாக்குறை வாழ்க்கையாக இருக்கிறதே என்று, பி.எப். பணத்தையும் கொடுத்தால் பரவாயில்லை என்று நினைக்கின்றனர். ஆனால் எதிர்கால வாழ்க்கைக்கான பாதுகாப்பு  வேண்டாம் என்று பி.எப்.,ஐ அவர்கள் நிராகரிக்கவில்லை. தற்போது தொழிலாளர்களின் இக்கட்டான நிலையை நன்றாகப் புரிந்து கொண்டு, அவர்களது இயலாமையை பயன்படுத்திக் கொண்டு, பிஎப் திட்டத்தை மொத்தமாகக் காவு வாங்குவதற்கு வழி திறந்துவிட்டுள்ளது இந்த சிறப்புத் தொகுப்பு!

இத்துடன் புதிதாக வேலைக்குச் சேரும் தொழிலாளி ரூ.15 ஆயிரத்திற்குக் கீழ் சம்பளம் பெற்றால் (?) (அதுதானே எதார்த்தம்!) அவருக்கு முதலாளி செலுத்த வேண்டிய பி.எப். பங்களிப்புத் தொகை 12 சதவிகிதத்தை மத்திய அரசே முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாம்.

அதாவது தொழிலாளி விரும்பினால் சேரலாம், அப்படியும் சேர்ந்தால் அவருக்கு முதலாளி தர வேண்டிய பங்களிப்புத் தொகையை அரசு கொடுத்துவிடுமாம், அப்புறம் காலப் போக்கில் இத்தகைய பங்களிப்பு என்பதே நடைமுறையில் இல்லை என்ற சொல்லிவிடலாம் அல்லவா?

ஓவர்டைம் நேரத்தை அதிகரித்து சட்ட விதியைத் தளர்த்தியுள்ளனர். நடைமுறையில் ஆயத்த ஆடைத் துறையில் தொழிலாளிகள் சராசரியாக நாளொன்றுக்கு 12 மணி நேரத்துக்குக் குறைவில்லாமல் வேலை செய்கின்றனர். இதுவும் அவர்கள் விரும்பிச் செய்வதில்லை, கடுமையான நெருக்கடி, விலைவாசி உயர்வை சமாளிக்க கூடுதலாக உழைத்தால்தான் முடியும் என்ற நிலையில் ஓவர்டைம் வேலையைச் செய்கின்றனர். ஒரு தொழிலாளி கூடுதல் நேரம் உழைப்பது மட்டுமில்லை, அவரது குடும்பமும் சேர்ந்து பாடுபடுகிறது! வாழ்க்கையை ஓட்ட!!

ஆனால் ஓவர்டைம் சட்டத்தில் மூன்று மாதத்துக்கு அதிகபட்சம் 50 மணி நேரத்துக்கு மேல் ஓவர் டைம் செய்யக் கூடாது என்று உள்ளது. இது தொழிலாளியின் தேக ஆரோக்கியத்தை குறைந்தபட்சம் பாதுகாக்க அவசியமானதாகும். ஆனால் தற்போது வாரம் 8 மணி நேரம் மிகாமல் ஓவர்டைம் வேலை என்று சொல்லியுள்ளனர். இதன்படி மூன்று மாத காலத்துக்கு 96 மணி நேரம் ஓவர்டைம் வேலை செய்யலாம் என்று சொல்ல முடியும். அப்படி ஓவர்டைம் செய்யும்படி சட்டப்படி கட்டாயப்படுத்த முடியும்.

வாழ்க்கை நெருக்கடியில் ஆலையில் சிக்கிய கரும்பாகப் பிழியப்பட்டு சக்கையாகத் தூக்கி எறிவதைப் போலத்தான் இந்த துறையில் அதிகபட்சம் 40, 50 வயதுக்குள்ளாக ஆகப்பெரும்பாலான தொழிலாளிகள் உழைப்புச் சக்தியை இழந்து கிழடு தட்டிப் போகிறார்கள். இதையே இப்போது சட்டப்பூர்வாக மாற்றிவிட்டனர் பாஜக ஆட்சியாளர்கள்.

இன்னொன்று, தொழிலாளியின் நிரந்தர வேலைத் தன்மையைப் பறித்துள்ளனர்!

ஆண்டுக்கு 240 நாட்கள் ஒரு தொழிற்சாலை வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் ஆடைத் தொழில் ஆண்டு முழுவதும் வேலை நடைபெறாத, அவ்வப்போது நடைபெறும் பருவ காலத் தொழில் (?) என்பதால் 150 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கினால் போதுமாம்! இதன்படி இனிமேல் நிரந்தரத் தொழிலாளர்கள் என்பதில்லை. ஒருவர் 240 நாட்கள் வேலை செய்தால்தான் நிரந்தரப்படுத்தப்படுவார், அவருக்கு சட்டப்படி ஊதிய உயர்வு, அலவன்ஸ், இதர சலுகைகள் கிடைக்கும். இப்போது 150 நாட்கள்தான் எனும்போது, தொழிலாளிக்கு நிரந்த அந்தஸ்து கிடைக்காது. எனவே சட்டப்படி அவருக்குரிய சலுகைகள் தர வேண்டியதில்லை என்றாகிவிடும்.

இப்போதே திருப்பூரில் நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை மிக சொற்ப அளவில்தான் இருக்கிறது. ஆகப்பெரும்பாலும் பீஸ் ரேட், காண்ட்ராக்ட் எனப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகத்தான் இருக்கின்றனர். சட்டப் பாதுகாப்பு என்பது ஏட்டளவில்தான் இதுவரை இருக்கிறது. நடைமுறையில் சட்டப் பாதுகாப்பு இல்லை. ஏட்டளவில் இருந்த சட்டப் பாதுகாப்பையும் தற்போது நீக்கிவிட்டனர். இப்போதுள்ள வரைமுறையற்ற உழைப்புச் சுரண்டல் என்பதையே சட்டமாக்கிவிட்டனர்.

பேய்கள் அரசாண்டால் பிணந்திண்ணும் சாத்திரங்கள்! என்பது போல, கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்குச் சாதகமான பாரதிய ஜனதா அரசு தொழிலாளர்களுக்கு நேர் எதிரான விசயங்களை எவ்வித கூச்சநாச்சமும், குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அமல்படுத்த தயாராகிவிட்டனர். ஆண்டாண்டு காலமாகத் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் ஒரு துளி மையில் இடப்பட்ட கையெழுத்தில் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மன்மோகன் சிங் தலைமையிலான அரசு தொழிலாளர் சட்டத்தை சீர்திருத்த வேண்டும் என்று சொல்லி வந்தது. தற்போதுள்ள பாஜக அரசும் மேலும் அதிக சீர்திருத்தம் கொண்டதாக மாற்றி சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற காத்திருக்கிறது. மொத்தமாக சட்டத்தைத் திருத்தினால் அனைத்துத் தொழிலாளர்களின் கவனத்திற்குச் சென்று ஒருமுகமான எதிர்ப்பைத் திரட்டுவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே தற்போது அந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற தருணம் பார்த்து அமைதியாகக் காத்திருக்கிறது. ஆனால் துண்டு துண்டாக, பகுதி பகுதியாக அந்தந்த தொழிலைப் பிரித்து அதில் இத்தகைய சீர்திருத்த சட்டங்களை அமல்படுத்தினால் ஒருமுகமான எதிர்ப்பு ஏற்படாதல்லவா? அதைச் செய்யலாம் என்ற வியூகத்துடன் ஆடைத் துறையில் இத்தகைய தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களை அமலாக்கத் துணிந்துள்ளனர். இங்கே சீர்திருத்தம் என்று சொல்வதை, வரைமுறையற்ற சுரண்டலுக்கு வழி செய்து கொடுப்பது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஆயத்த ஆடைத் துறை என்பது நாடு முழுவதும் மிகக்கேந்திரமான வேலைவாய்ப்பு வழங்கும் துறையாகும். இதில் மூலதனத்தின் நலனை பாதுகாக்கவும், உழைப்பாளர் நலனைக் காவு வாங்கவும் தேவையான களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது மோடி அரசு.

அந்தோ பரிதாபம், அன்றாட வாழ்க்கைக்கான போராட்டத்தில் இவை எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் இயந்திரமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய தொழிலாளர்கள். இவர்களுக்கு இந்த விசயத்தை அம்பலப்படுத்தி கிளர்ச்சிக்கு தயாராக வேண்டியது காலம் இடும் கட்டளையாக நம் முன் விழுந்துள்ளது!

வே.தூயவன்

Related Posts