அரசியல்

ஒரு சர்வாதிகாரியால் தன்னிலை கடக்க முடியுமா . . . . . . ?

048a5a5a0000044d-0-image-a-4_1431291777643

ஃபிடலின் இறப்புக்கு பின்னர்  ஃபிடலைப் பற்றிய , கியூபாவைப் பற்றிய  பல ஆயிரக்கணக்கான  கட்டுரைகளும் , எழுத்துக்களும் பல கோணங்களில் அனுதினமும் வந்துகொண்டிருக்கின்றன .  பி.பி.சி யும் , சி.என்.என்  னும் தினமும் சில மணி நேரங்களாவது கியூபாவையும், ஃபிடலை பற்றிய செய்தியையும் ஏதோ ஒரு வகையில் காட்டிக்கொண்டிருக்கின்றன (நல்ல ஸ்பான்சர் போல!!) . எழுத்துக்களிலும், காட்சி ஊடங்களிலும் , சமூக ஊடகங்களிலும் கூட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஃபிடலைப்பற்றியும், கியூப அரசாங்கத்தைப் பற்றியும்  அவதூறூகளும் , வசைச் சொற்களும் கூட மிக அதிகமாக வந்த வண்ணம் உள்ளன .  இவை அனைத்திலும் உள்ள சாராம்சம் “ஜனநாயகத்திற்கான குரல்”  என்பதுதான். ஃபிடலுக்கே உரிய நையாண்டி மிகுந்த  வார்த்தைகளில் கூறுவதானால் ” வால்ஸ்ட்ரீட் முற்றுகையின் போதும் , ஈராக் ஆக்கிரமிப்பின் போதும் , லிபிய தாக்குதலின் போதும் , மனிதத்திற்காக கூக்குரலிடாத இந்த திடீர் ஜனநாயகவாதிகள் கியூப ஜனநாயகத்தின் மீது மட்டும் கொண்டுள்ள எல்லையற்ற ஆர்வமும் , கியூப மக்களின் மீது கொண்டுள்ள அக்கறையும் , ஆச்சர்யத்தையும்  நெகிழ்வையும் ஊட்டும் விஷயமாகும்”. இந்த திடீர் அக்கறைக்கு பதில் கூறும் விதமாக, ஆதாராப்பூர்வமாக புள்ளி விவரங்களோடு  பல்வேறு கட்டுரைகள் பல மொழிகளில் வந்திருந்தாலும் அவற்றை தமிழ் கூறும் நல்லுலகிற்கு நவில்வது  இந்த நேரத்தில் நமது கடமையாகிறது .

ஃபிடல் இறந்தவுடன் பல்லாயிரகணக்கானோர் அமெரிக்காவில் உள்ள மியாமியின் மினி கியுபாவில் (கியூபாவிலிருந்து வெளியேறியவர்கள்) ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஆர்ப்பரித்தார்கள் என்ற செய்தியை வெளியிடாத ஒரு ஊடகம் நமக்கு தெரிந்த வரை இல்லை. பிடலின் சொந்த மகள் கியூபாவை விட்டு வெளியேறியதை எப்போதும் குறிப்பிட்டு காட்டும் ஊடகங்கள் இம்முறை  அதை  மிக அதிகமாகவே காட்டிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. சில ஊடகங்களும் வலைதளங்களும் கியூபாவிற்கு விடுதலை கிடைத்தது போல கொண்டாடுவதையும் பார்க்க முடிகிறது. பொதுவாக இவ்வகை ஃபிடல்/கியூப அரசு எதிர்ப்பை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1. அமெரிக்க , ஏகாதிபத்திய நாடுகளுடைய  ஏகோபித்த ஆசிர்வாதத்துடனும் , பண உதவியுடனும்  பொதுவெளியில் கட்டவிழ்த்து விடப்படும்  பொய்கள், திரிக்கப்பட்ட  உண்மைகள்.

2. கியூபாவில் நடப்பது என்ன? கியூபாவை சூழ்ந்திருக்கும் ஆபத்துகள் என்ன? ஃபிடலின் உயிருக்கான விலையை நிர்ணயிப்பது யார்? என ஒன்றுமே தெரியாமல் சில பேட்டிகளையும், முதலாளித்துவ அறிவு ஜீவிகளின் உணமையை திரித்து எழுதப்பட்ட கட்டுரைகளையும் படித்து விட்டு கதறும் அரை வேக்காட்டு கூப்பாடுகள்.

3. கியுபாவில் வாழ்ந்து, அதன் அரசு முறையை அறிந்துகொண்டு, அதை சூழ்ந்திருக்கும் ஆபத்து, பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றை புர்ந்து கொண்டும் , கியூப அரசின் தவிர்க்க முடியாத சில  இயலாமையையும், நிர்வாக கோளாறுகளையும், நடைமுறைச்சிக்கல்களைய்யும், தனி மனித உணர்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வரும் நியாயமான விமர்சனங்கள் .

இதில் எந்த வகையை எடுத்துக்கொண்டாலும் , வரும் விமர்சனங்களில்  பெரும்பாலானவை ஃபிடல் என்னும் தனி மனிதனை விமர்சனம் செய்யாமல், தாக்காமல் வருவது இல்லை.  பாடிஸ்டா அரசின் கீழ் இருந்த இருண்ட கியூபாவை , ஒரு நவீன கியூபாவாக மாற்றியதில் ஃபிடலின் பங்கு பிரதானம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால்  கியூப அரசு  என்பதும், கியூப கம்யூனிஸ்ட் கட்சி என்பதையும் கட்டமைக்கப்பட்டதன் நோக்கமும், விதமும் தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டதாகும். இதை பல முறை ஃபிடலே கூறி, செய்தும் காட்டியிருக்கிறார் என்பது ஏன் பலருக்கு புரியமாட்டேன் என்கிறது என்று தெரியவில்லை. இவ்வாறு புரியாதவர்கள்  ஃபிடலின் கடைசி உரையயும்,  ரால்,  கடந்த கியூப  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஆற்றிய உரையையும் ஒரு முறை படிக்க வேண்டும்.

இரண்டு உரைகளின் முக்கிய சாராம்சமும் ஒன்றே. “நான்” என்ற தனிநபரை கொண்டு கியூப கம்யூனிஸ்ட் கட்சி இயங்கவில்லை என்பதே அவர்களுடைய உரையில்  கவனிக்க வேண்டியது. 1959-ல் இருந்து 2016 வரை  தலைமை பொறுப்பில் இருந்த ஃபிடல், ரால் மேலும் புரட்சியை துணை நின்று நடத்திய சக தோழர்கள் அனைவரும் ஜனநாயகத்திற்கான மாற்றத்தை கியூபாவில் முன்னெடுத்திருக்கிறார்கள். அவற்றில் சில முக்கியமானவைகள்

  • 1992 முதல் கியூப கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இல்லாமல் முக்கியமான கட்சிகள் என்று வரையறை செய்யத்தகுந்த 8 பிற கட்சிகளும் , மேலும் சிலவும் கியூபாவில் உள்ளன .
  • கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எந்த கட்சியும் தேர்தல் பிரச்சாரம் என்று நம்மூர் போல கோடி கோடியாக செலவு செய்து மைக் செட் பிடித்து போலியாக கத்திக்கொண்டிருக்க அங்கு அனுமதி இல்லை. மக்கள் ஊழியம் செய்து, மக்களுக்காக  உழைப்பது யாராக இருந்தாலும் 50% மக்களின் ஆதரவு இருந்தால் கண்டிப்பாக அரசியல் நிர்ணைய சபையில்  இடமுண்டு.
  • பல கட்சிகளில் ஒன்றாக கியுப கத்தோலிக கிருத்தவர்கள் கட்சியும் அங்கு அடக்கம். ஆனால் இறை ஊழியம் மட்டும் செய்தால் போதாது மக்கள் ஊழியமும் செய்ய வேண்டும்!!! அப்போதுதான் மக்கள் அங்கீகரிப்பார்கள்.

1959-ல் புரட்சி நடந்து முடிந்த பின்னர் பிடல் ஆற்றிய முக்கியமான முதல் சில உரைகளில், ஹவானாவில் ஜீலை 26 castro-1959அன்று ஜனநாயகம்  குறித்து ஆற்றிய உரை மிக முக்கியமானதாகும். ”ஏட்டளவில், பொது வெளியில் ஸ்பீக்கரில் ஜனநாயகம் மக்களாட்சி என கத்திகொண்டே மக்களை ஏமாற்றுவதுதான்  உங்கள்  மொழியில் ஜனநாயகம் என்றால் கண்டிப்பாக அது போல ஒரு போலி ஜனநாயகத்தை நீங்கள் கியூபாவில் இனி பார்க்க முடியாது ” என மிகத்திட்டவட்டமாக உறுதியுடன் ஃபிடல்  பிரகடனம் செய்த உரை அது. ஆப்ராஹாம் லிங்கனை மேற்கோள் காட்டிதான் அந்த உரையை ஃபிடல் தொடங்கவே செய்தார்.

பல சந்தர்ப்பங்களில் ஜனநாயகம், மத சுதந்திரம் ஆகியவற்றை பற்றி ஃபிடல் பேசியும் எழுதியும் உள்ளார். மதம், மத சுதந்திரம் குறித்து மிக நீண்ட ஒரு உரையாடலை ஃபிரே பிரேட்டொ என்ற டோமினிக்கன் பாதிரியாருடன் ஃபிடல் நடத்தி இருக்கிறார். தமிழ் உட்பட பல மொழிகளில் அது புத்தகமாக வந்துள்ளது. அந்த 23 மணி நேர நீண்ட உரையாடலில் பிடல் வலியுறுத்தியது “ஒடுக்கப்பட்டவர்களுக்காக , ஏழை எளியவர்களுக்காக உழைப்பாளிகளின் நலனுக்காக நீங்கள் செய்யும் காரியங்கள் கிறித்துவின் பெயராலேயே செய்தாலும் அதில்  கம்யூனிஸ்ட்டுகளாகிய எங்களுக்கு  உங்களுடன் ஒத்துழைப்பதில் எந்த பிரச்சனையும் இருக்கபோவதில்லை, அதே சமயம்  ஏகாதிபத்தியத்தால் ஏற்படும் இன்னல்களுக்கு கம்யூனிஸ்ட்டுகளின் மீது பழி சுமத்தும் வேலையை கிறுத்துவின் பெயரால் செய்து கொண்டிருந்தால் அது போல முட்டாள்தனமான காரியங்கள் பரவுவதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க இயலாது” என்பதுதான். ஃபிடல் இறந்த செய்தியை கேட்டு ஃபிரே பிரேட்டொ விடுத்த இரங்கல் செய்தியில்  ”இருபதாம் நூற்றாண்டு கண்ட சிறந்த தலைவர் பிடல்” என கூறியிருப்பதே பிடல் என்னும் கம்யூனிஸ்ட்டினுடைய மதம்/மத சுதந்திரம்  பற்றிய ஆழ்ந்த புரிதலுக்கு சான்றாகும்.

ஃபிடலின் சர்வாதிகாரம் என கதறும் முதலாளித்துவ ஊடகங்கள், ஏகாதிபத்தியம் கியூபாவின் மீது விதித்திருக்கும் அராஜகமான பொருளாதார தடையை வசதியாக மறந்துவிட்டுதான்  கதறலை ஆரம்பிப்பார்கள். கியூப நாட்டில் ஜனநாயகம் இல்லை அங்கு உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்கிறார்கள் என்ற போலி குற்றச்சாட்டுக்கு பதிலாக பல முறை பிடல் சர்வதேச சமுகத்தின் பிரதிநிதிகளை கியூபாவிற்கு வந்து பார்த்துவிட்டு பேசும்படி பதிலளித்துள்ளார். பலர் அவ்வாறு சென்று வந்து பார்த்து எழுதிய எழுத்துக்கள் ஏராளமுண்டு. அவற்றில் பல நியாயமான விமர்சனங்களோடு  கியூபாவின் ஜனநாயகம் மற்ற ஏட்டளவு ஜனநாயகங்களை விட சிறந்த நடைமுறை என கூறியிறுப்பதே ஃபிடலின் ஜனநாயகத்தன்மைக்கு ஒரு சான்று.

ஜனநாயகத்தின் முக்கியமான குறியீடுகளுள் ஒன்று பெண் விடுதலை, ஆண் பெண் சமத்துவம் ஆகியன. இதில் அமெரிக்காவை விட மட்டுமில்லை பல மேற்குலக நாடுகளை விட கியூபா பல மடங்கு முன்னேற்றமடைந்துள்ளது. மொத்த தொழிலாளர் எண்னிக்கையில் 45 % பெண் தொழிலாளிகளாவர்.  டாக்டர்கள், உயர் தொழில்நுட்பம் தெரிந்த வேலையாட்களில் 50% முதல் 60% பெண்களே. எந்த ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியின் கீழும் பெண்கள் இவ்வளவு சுதந்திரமாக இருந்ததாக வரலாறு இல்லை.

யாவற்றிற்கும் மேலாக அகிம்சையின்  தேசம் என மார்தட்டிக்கொள்ளும் நம்மில் இருந்து, புளுகுவதை ஒரு லாபம் ஈட்டும் தொழிலாகவே பார்க்கும்  ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசுகள் வரை இன்னும் மரண தண்டனையை வழங்கிக்கொண்டு இருக்கின்றன.  கியூபாவில் அது தடை செய்யப்பட்டு 13 வருடமாகிறது!! ஃபிடல் என்னும் ஆளுமையின் ஜனநாயகத்தன்மையை பற்றி கூறிக்கொண்டே போகலாம். அது கண், காது, பகுத்தறிவு சிந்தனை என்ற மூன்று புலன்களும் வேலை செய்பவர்களுக்குத்தான் போய் சேரும் . இம்மூன்று புலன்களும் இல்லாதவர்களுக்கு சொல்லி பிரயோஜனமும் இல்லை.

கடைசியாக ஒன்று, ஃபிடல் என்பது ஒரு தனிமனிதன் அல்ல, “நான் இல்லை என்றாலும் கியூபாவில் சோசலிசம் முன்னோக்கி செல்லும். கியூப கம்யூனிஸ்ட்டுகள் உலகிற்கு ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டாய் இருப்பார்கள்”.  இது பிடலின் கடைசி வரிகள். உலகில் எந்த சர்வாதிகாரியும் இதுபோல் கூறவில்லை. சர்வாதிகாரிகளால் தன்னிலை கடந்து , “நான்” என்ற ஒன்றை வார்த்தையைத்  தாண்டி  சிந்திக்க இயலாது.

– சீத்தாராமன்.

 

Related Posts