இதழ்கள் இளைஞர் முழக்கம்

ஒரு கண்ணில் வெண்ணெய்..ஒரு கண்ணில் சுண்ணாம்பு – பெ.சண்முகம்

 

மோடி அதிகாரத்திற்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவு பெறுகிறது. 2014 தேர்தல் நேரத்தில் பாரதீய ஜனதா கட்சி சகல பிரிவு மக்களுக்கும் வாக்குறுதிகளை வாரி வழங்கியது. அதில், விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை எந்த அளவுக்கு நிறைவேற்றியுள்ளது என்பதை பார்ப்போம். மோடி பிரதமராகிவிட்டால் “எல்லோருக்கும் நல்ல காலம் பொறக்கும். நல்ல காலம் பொறக்கும்” என்று குடு குடுப்பைகாரர்களைப் போல நாடு முழுவதும் பறந்து பறந்து நல்வாக்கு சொன்னார்கள். ஆனால் நல்லகாலம் சிலருக்கும் கெட்டகாலம் பெரும்பாலான மக்களுக்கும் வந்துள்ளது.

கிராமப்புற மக்களை பொருத்தவரை, இன்றைக்கும் வேளாண்மைதான் பெரும்பாலான மக்களுக்கு வேலைவாய்ப்பை தருகிறது. நாட்டு மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கிறது. பல்வேறு தொழிற்சாலைக்களுக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்து தருகிறது. கால்நடைகள், வனவிலங்குகளுக்கு தேவையானவற்றை தருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த துறையை அதற்குரிய முக்கியத்துவத்துடன் மத்திய அரசு கவனிக்கிறதா? என்பது கேள்விக்குறிதான்.

அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்னார்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் தற்கொலை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவோம். வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் கூடுதலாக தீர்மானிப்போம். இடுபொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கச் செய்வோம். கடன் கோருகிற அனைத்து விவசாயிகளுக்கும் 4 சதவீத வட்டியில் கடன் வழங்குவோம். பாசன வசதியை பெருக்குவோம், தேசீய ஊரக வேலை, உறுதி திட்டத்தை விவசாய பணிகளோடு இணைப்போம். என்பதுதான் அது.

இந்திய அரசாங்கம் கடைபிடிக்கும் கொள்கைகள் காரணமாக இந்திய விவசாயிகள் மரணத்தை தழுவிக்கொண்டிருக்கிறார்கள். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா? என்பதைப்போல விவசாயிகளின் தற்கொலை குறித்த செய்தி அன்றாடம் வெளிவந்து நமது மனங்களை ரணமாக்கிக் கொண்டிருக்கிறது. 2013ம் ஆண்டு வரை ஒரு நாளைக்கு 48 விவசாயிகள் தற்கொலை என்ற நிலையிலிருந்து 2016ம் ஆண்டு சராசரியாக ஒரு நாளைக்கு 52 விவசாயிகள் தற்கொலை என எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்பான பொதுநல வழக்கில், விவசாயிகள் தற்கொலையை தடுக்க என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்.” என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டது. அதற்கு மத்திய அரசின் சார்பில் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கிறோம் என்றார்கள். நீதிபதிகள் மீண்டும் கேட்டார்கள். நிவாரணம் என்பது இறந்த பிறகு வழங்குவது. நாங்கள் கேட்பது தற்கொலையே நடக்காமல் தடுக்க என்ன செய்கிறீர்கள் என்று ! அரசிடம் பதில் இல்லை. 1996க்கும் 2015க்கும் இடைப்பட்ட 20 ஆண்டுகாலத்தில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசீய குற்றபதிவு ஆவண அரங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவருக்குக்கூட மத்திய அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. தற்கொலை கணக்கில் பெண் விவசாயிகள் சேர்க்கப்படுவதில்லை. காவல்துறையில் விவசாய நெருக்கடியினால் என்று எப்.ஐ.ஆர். போட்ட கணக்கு தான் இந்த எண்ணிக்கை. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் எப்.ஐ.ஆர். போடவே பெரும் போராட்டம் நடத்த வேண்டும் அவ்வளவு சுலபமாக விவசாய பிரச்சனையால் தற்கொலை என்று வழக்கு பதிவு செய்வதில்லை. எனவே, இந்த எண்ணிக்கை உண்மையான கணக்கை பிரதிபலிக்காது.

சுவாமிநாதன் குழு தனது பரிந்துரையை 2006 அக்டோபர் மாதம் அரசிடம் அளித்தது. ஏறத்தாழ 11 வருடங்கள் ஆகிவிட்டது. தேசீய விவசாயிகள் கமிஷன் அமைத்த காங்கிரசும் அந்த குழுவின் பரிந்துரையை அமலாக்க கடுகளவும் முயற்சிக்கவில்லை. அதை சொல்லியே வாக்கு வாங்கி ஆட்சிக்கு வந்த பி.ஜே.பி. அரசும் கடந்த மூன்றாண்டு காலத்தில் அக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற எந்த அக்கறையும் காட்டவில்லை. மாறாக, இது தொடர்பான பொது நல வழக்கொன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த முடியாது. அப்படி அமல்படுத்தினால் அது “சந்தையை பாதிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டிலுள்ள மொத்த விவசாயிகளில் 27 சதவீதம் பேருக்கு மட்டுமே அரசு நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகிறது. அதிலும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள், வங்கி அதிகாரிகளுடன் நெருக்கமான உறவுள்ளவர்களுக்கே கடன் கிடைக்கிறது. ஏழை சிறு விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதில்லை. மீதமுள்ள 73 சதவீத விவசாயிகள் தனியார் கந்து வட்டிகாரர்கள் தனியார் வங்கிகள் நுண் நிதி நிறுவனங்கள், வர்த்தகர்களிடம் தான் கடன் பெறுகின்றனர். அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்குவோம் என்று சொன்ன மோடி அதற்காக துரும்பை கூட தூக்கிப் போடவில்லை.
இடுபொருட்களின் விலை பருவந்தோறும் ஏறிக்கொண்டேயிருக்கிறது. பன்னாட்டு கம்பெனிகள் இந்திய விவசாயத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்றன. உரம், விதை, பூச்சி மருந்து விற்பனை மூலம் பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளை லாபமடிக்கின்றன. உதாரணத்திற்கு 2005 முதல் 2015 வரை மான்சாண்டோ நிறுவனத்திற்கு கிடைத்த ராயல்டி தொகை மட்டும் 4471 கோடி ரூபாய் ஆகும்.

இப்படி விவசாயிகளுக்கென்று எதுவுமே செய்யாத இவர்கள் விவசாயிகளின் ஒரே உடமையான நிலத்தை அவர்களின் சம்மதமில்லாமலேயே பறிப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வந்தார்கள். நாடு முழுவதும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக அந்த விவசாயிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக அந்த சட்டத்தை நிறைவேற்றுவதிலிருந்து அரசு பின்வாங்கியது.

2015ம் ஆண்டு இந்தியாவின் 11 மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. 2016ம் ஆண்டு தென்மாநிலங்கள் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. பயிர்கள் கருகி விவசாயிகளின் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் அதிகரித்தது. இந்த நிலையில் தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் மத்திய அரசும், ரிசர்வ் வங்கி கவர்னரும் கடன் தள்ளுபடி, திருப்பி செலுத்த வேண்டுமென்ற மனப்போக்கை மாற்றிவிடும் என்றும், கடன் கொள்கையை பாதிக்கும் என்று கொஞ்சமும் இரக்கமின்றி தெரிவித்து விட்டனர்.

மத்திய அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது ஒன்றும் புதிதல்ல. 1989ம் ஆண்டு மதிப்பிற்குரிய வி.பி.சிங் அவர்கள் ஆட்சிகாலத்தில் 10235 கோடியும், 2008ம் ஆண்டு திரு.மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் 60 ஆயிரம் கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, மாநில அரசாங்கங்கள் பக்கம் கைகாட்டிவிடுவது மத்திய அரசின் விவசாயிகள் மீதான அக்கறையற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது.

முதலாளிகளுக்கு வழங்கும் உதவிகளை, சலுகைகளை விவசாயிகளுக்கு ஏன் தர மறுக்கிறார்கள். தொழில் வளர்ச்சி போலவே, வேளாண்மை வளர்ச்சியும் நாட்டுக்கு முக்கியமில்லையா? ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் என்ற முறையில் தான் விவசாயத்தை- விவசாயிகளை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு புறக்கணிக்கிறது. மத்திய அரசின் இத்தகைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் ஆட்சியாளர்களை மாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு துரோகம்:

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு 2007ம் ஆண்டு வழங்கப்பட்டது. பலகட்ட போராட்டத்திற்கு பிறகு 2013 பிப்ரவரி 19ந் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. 2016 செப்டம்பர் 20ந் தேதி காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. செப்-27ந் தேதி அக்டோபர் 4ந் தேதிக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று கறாராக உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவை ஏற்றுகொண்டது மட்டுமல்லாமல் அதற்கான பணிகள் துவங்கிவிட்டதாகவும் தெரிவித்தது.

திடீரென்று அக்டோபர் 3ந் தேதி அந்தர்பல்டி அடித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றித்தான் வாரியம் அமைக்க முடியுமென்று கர்நாடக மாநிலத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு தமிழகத்திற்கு பெருந்துரோகத்தை இழைத்தது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் மூலம் மத்திய பி.ஜே.பி அரசு தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பன்மாநில நதிநீர்தாவா சட்டம் 1956ன் படியும் அதற்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட திருத்த சட்டப்படியும், மேலாண்மைவாரியம் அமைக்கப்பட்ட பிறகு ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டுமென்று இருக்கிறதே தவிர, அமைப்பதற்கே பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றும் செயலில் பி.ஜே.பி அரசு ஈடுபட்டது.

விவசாயிகள் கொத்து கொத்தாய் செத்துமடிவதைப் பற்றி கவலைப்படாத ஆட்சியாளர்கள் பசுவை காப்பாற்றுகிறேன் என்று பிரச்சனையை திசை திருப்புகிறார்கள். பால் சுரப்பு நின்று போன பசுக்களை பராமரிப்பது விவசாயிகளுக்கு பெரும் சுமை. மாட்டு தீவனத்தின் கடுமையான விலை உயர்வின் காரணமாக கறவை மாடுகளுக்கே தீவனம் போதுமான அளவு வழங்க முடியாத போது வயது முதிர்ந்த மாடுகளை விவசாயிகளால் எப்படி பராமரிக்க முடியும். பசு பாதுகாவலர்கள் வேண்டுமானால் சந்தை விலையை கொடுத்து இத்தகைய பசுக்களை வாங்கிக் கொள்ளட்டும். மாறாக மாடுகளை விற்பதை தடுத்து, மாட்டு வியாபாரிகளை தாக்குவது, மாட்டுகறி வியாபாரிகளை கொலை செய்வது போன்ற வெறித்தனமான வகுப்பு வாத நடவடிக்கையால் விவசாயிகள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலையில் தான் இவர்கள் தீவிரம் காட்டுகிறார்கள்.

Related Posts