இலக்கியம் பிற

ஒன்னும் பேசாதவங்க ஊர்ல உளறுவாயன் ராசா . . . . . !

jeyamohan_2710244f

முன்னுக்கு வருகிற பிரச்னைகள் மீது எல்லோரும் ஆளாளுக்கு ஏதாவது சொன்னது போக அறுதியான உண்மை என்கிற ஒன்று இருக்குமல்லவா, அதை நான்தான் சொல்லப்போகிறேன் என்பது போல எழுதுவது ஜெயமோகனின் வாடிக்கை. விட்டுப்போன மிச்சம் மீதிகளை கலந்துக்கட்டி ஏதாவது சொல்வதற்கு சால்ஜாப்பாக ‘உடனடியாய் கருத்து சொல்வதில் எப்போதும் தயங்குகிறவன்’ என்று மிகுந்த அடக்கத்தோடு தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளவும் தயங்கமாட்டார். உடனே, முன்னணி எழுத்தாளர்களெல்லாம் மூடிக்கொண்டிருக்கும் போது (வாயைத்தான்) இவராவது வாய் திறந்து அருளியிருக்கிறார் பார்த்தீர்களா என்று சிலர் குதியாளம் போடுவார்கள். ஆனால் இவர் திறப்பது வாய்தானா என்று சந்தேகிக்கும்படியாக அவ்வளவு துர்நாற்றம்.

ஓலைப்பாயில் ஒன்னுக்கடித்தாற் போல எப்போதும் லொடலொடவென ஏதாவது இவர் பேசிக்கொண்டேயிருப்பதால் அவற்றுக்குள் போய் பார்ப்பதற்கு பலரும் அலுப்படைந்துவிடுகிறார்கள். அவற்றில் நிரம்பியிருக்கும் பொய்களுக்கும் பிழைகளுக்கும் விஷமங்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நாம் வேறுவேலையே பார்க்க முடியாது என்பதாலும் கூட கடந்துபோய்விடுகிறார்கள். சிலரோ, வாய்வைக்காத இடமே இல்லை என்னுமளவுக்கு எல்லாவற்றைப் பற்றியும் எழுதுவதால் அவர் முக்கியமான ஆளுமை என்று பாரட்டக் கிளம்பிவிடுகிறார்கள். இப்படியான சூழலால் உற்சாகம் பெற்றுள்ள ஜெயமோகனுக்கு, மாற்றுக்குறைவான உண்மைகளை தான் ஒருபோதும் பேசுவதில்லை என்று பீற்றிக்கொண்டே புளுகித் திரிவது சுளுவாகிப் போய்விடுகிறது. இவ்வாறு சொல்வதற்கு அவரது சமீபத்திய இரண்டு கட்டுரைகளே கூட போதுமான ஆதாரங்கள்.

1.) எம்.எம்.கல்புர்கி கொல்லப்பட்ட போது கடும் கொந்தளிப்போடு இவர் கட்டுரை ஒன்றை (செப்-1) எழுதியிருப்பதாக நண்பர்கள் சிலர் தெரிவித்தனர். நியாயமாகப் பார்த்தால் கல்புர்கி கொலைக்காக சந்தோசப்படக்கூடிய இந்த ஆள் எதற்காக ஆவேசப்படணும் என்கிற சந்தேகத்தோடு அதை படித்தேன். ஆமாம், சந்தேகத்தோடுதான் படித்தேன். என் சந்தேகம் வீண்போகவில்லை.

அறச்சீற்றம் பொங்கி அண்டா அண்டாவாய் வழியும் அந்தக் கட்டுரைக்கு நடுவில் அவரது இந்துத்துவ திருகுதாள வேலை ஈஈயென பல்லிளித்தது. மேலும் கீழும் நடப்பியல் உண்மைகளை அடுக்கி அவற்றுக்கு நடுவே ‘கர்நாடகத்தின் மிகப்பெரிய சீர்திருத்தவாதியான பசவண்ணர் இந்துமதத்திற்குள் உருவாக்கிய ஒரு துணைமதம் வீரசைவம்…’ என்கிற வரலாற்றுப்பொய்யைச் சொருகியிருக்கிறார். இந்தப் பொய்யை அவரே புனைந்தாரா அல்லது 2007 ஆம் ஆண்டு காலச்சுவடு இதழில் ‘கர்நாடகத்தில் வீரசைவம் இந்து மதத்தின் ஒரு பெரும்பான்மைப் பிரிவு’ என்று நஞ்சுண்டன் எழுதியிருந்ததை இரவலாகப் பெற்றாரா என்பது தெரியவில்லை.

‘அன்பார்ந்த ஜெ, உப்பு ஏன் உவர்க்கிறது புளி என் புளிக்கிறது? என்பது போன்ற அறிவார்ந்த கேள்விகளை ஓயாமல் கேட்டு தெளிவு பெறுவதையே தொழிலாகக் கொண்ட வாசகர்கள் யாரும், பசவண்ணரின் காலமாகிய 12 ஆம் நூற்றாண்டில் இந்துமதம் என்கிற ஒன்று இருந்ததா? குறைந்தபட்சம் இந்து என்கிற சொல்லேனும் புழக்கத்தில் இருந்ததா? என்கிற கேள்விகளை ஏனோ எழுப்பவில்லை. வேதவழிப்பட்ட பார்ப்பனீயத்தின் அட்டூழியங்களையும் சடங்குகளையும் சாதியப் பாகுபாடுகளையும் எதிர்த்து உருவான ஒரு இயக்கத்தை சந்தடிசாக்கில் இந்துமதத்தின் பொந்துக்குள் திணிக்கும் இந்துத்வ மோசடிக்காகத்தான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. வீரசைவம் இந்துமதத்தின் ஒருபகுதியல்ல என்கிற வரலாற்று உண்மையைச் சொன்னதற்காக முதல்முறையாக கொல்லப்பட்ட கல்புர்கிக்கு அஞ்சலி செய்வதாக ஏமாற்றி மறுபடியும் அவரை கொன்றிருக்கிறார் கருணைவான் ஜெயமோகன். திரிசூலத்தை ஒருசூலமாக்கி எழுதுகிறவரால் இதற்கும் குறைவான வன்மத்தை வெளிப்படுத்த முடியாதுதான்.

2.) காவல் துறையினரின் வாக்குமூலத்தை மட்டுமே மையப்படுத்தி பிபிஸி ஹிந்திப்பதிப்பில் எழுதப்பட்டிருந்த செய்திக்குறிப்பை ஆதாரமாகக் கொண்டு ‘நொய்டாவில் நிர்வாணம்’ என்றொரு கட்டுரையை (அக்-10) எழுதியிருக்கிறார் ஜெயமோகன். ‘பிபிஸி ஆதாரப்பூர்வமாக செய்தி’ வெளியிட்டிருக்கிறது என்று நம்பிவிட்ட பிறகு, அங்கு போய்வந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கையையோ, தலித் அமைப்புகளின் முறையீடுகளையோ பொருட்படுத்த வேண்டிய தேவை அவருக்கு உருவாகவில்லை. (வேண்டுமானால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், உண்மையறியும் குழுக்களின் நோக்கங்களை அவமதித்து அவர் விரைவில் கட்டுரையொன்றை எழுத வாய்ப்பிருக்கிறது).

இந்திய எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதில் விஜயகாந்த் மற்றும் அர்ஜூனை முந்திக்கொண்டு ஓடும் தேஷ்பக்தர் ஜெயமோகன் என்கிற உலகறிந்த விசயத்திற்கொப்ப, இணையவெளியில் உலவும் ‘இந்திய எதிர்ப்பு கும்பல்’ நொய்டா விசயத்தை சாக்கிட்டு மேற்கொண்டுள்ள இந்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் வரிகளை எழுதியுள்ளார்:

‘மிகையுணர்ச்சிக் கொந்தளிப்பாக தேசத்தையும் இந்து மதத்தையும் வசைபாடுவதற்கு ஒரு தருணம் தேவை, அவ்வளவுதான்.’

அவங்காயாவும் அப்பனும் கஷ்டப்பட்டு உருவாக்கிக் கொடுத்திருக்கிற நாட்டைக் காப்பாத்தணும் என்று அவரது புஜம் துடிப்பதில் நமக்கொன்றும் ஆட்சேபணையில்லை. ஆனால் அவர் அடுத்தடுத்துப் பேசும் பொய்களை கவனியுங்கள்.

அ.) நொய்டா தன்கர் சம்பவம் நடந்தது 07.10.2015 அன்று. இவர் 10.10.2015 அன்று எழுதும் கட்டுரையில் குறிப்பிடுகிறார் – ‘இது நடந்து சில காலம் ஆகிறது’ என்று. எவ்வளவு காலம் இருக்கும் ஜெயமோகன்? கி.மு.வா அல்லது கி.பி.யா என்று கேட்டால் உங்களுக்கு பிடிக்காது. மகாபாரதத்துக்கு முந்தியா பிந்தியா? என்பதையாவது சொல்லுங்கள்.

ஆ.) ‘இந்தியாவெங்கும் குற்றவாளிகள் போலீஸை எதிர்கொள்ளும் ஒரு வழிமுறை உண்டு, தங்கள் வீட்டு ஆண்களை போலீஸ் கைதுசெய்ய வந்தால் பெண்கள் தங்களை நிர்வாணமாக்கிக் கொள்வார்கள். போலீஸுக்கு எதிராக வந்து நின்று தடுப்பார்கள். கற்பழிப்பு போன்ற குற்றச்சாட்டு எழும் என்பதனால் போலீஸ் பின்வாங்கிவிடும்.’ சாராயக்கேஸ் பிடிக்கப்போன வடிவேல் அம்மணக்கட்டையாய் மாறும் காட்சியிலிருந்து இரவல் பெற்று எழுதப்பட்ட இவ்வரிகளில் இருக்கும் வக்கிரத்தை கவனியுங்கள். புகார் கொடுக்கப் போன சுனில் கவுதம் குடும்பத்தாரைப் பற்றி எழுதும் போது, இந்தியாவெங்கும் குற்றவாளிகள் போலீஸை எதிர்கொள்ளும் வழிமுறையைப் பற்றி குறிப்பிட வேண்டிய தேவை என்ன வந்தது? ஒருவேளை சுனில் கவுதமும் அவரது குடும்பத்தாரும் குற்றவாளிகள் என்று சொல்லும் ஆசையைத்தான் சுற்றிவளைத்து வெளிப்படுத்துகிறாரா? போலிஸாரின் பூட்ஸை நக்கிப் பிழைப்பதில் இதுவொரு புது “அறம்” போலும்.

இ.) ‘தருமபுரி, ஓசூர் மாவட்டங்களில் திருட்டை தொழிலாகக் கொண்டவர்களின் கிராமங்களில் இவ்வழக்கம் உண்டு. எப்போதுமே பெண் போலீஸுடன் மட்டுமே போலீஸ் அங்கே நுழைய முடியும். ஒருமுறை நிர்வாணமாக நின்றபடி போலீஸ் மேல் கல்வீசும் பெண்களை நானே கண்டிருக்கிறேன்.’ இந்த மூன்று வரிகளுக்குள் தான் எத்தனை பொய்கள்… தமிழகத்தின் 33-வது மாவட்டமாக ஒசூரை அந்த ஜெ அறிவிக்காவிட்டால் என்ன, இந்த ஜெ அறிவித்திருக்கிறார். ஒசூர் வட்டமா மாவட்டமா என்பதைகூட தெரிந்து கொள்ளாத இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரம், தருமபுரி, ஓசூர் மாவட்டங்களில் திருட்டை தொழிலாகக் கொண்டவர்களின் கிராமங்களில் இவ்வழக்கம் அதாவது- தங்கள் வீட்டு ஆண்களை போலீஸ் கைதுசெய்ய வந்தால் பெண்கள் தங்களைத்தாங்களே நிர்வாணமாக்கிக் கொள்ளும் வழக்கம் உண்டு என்று எழுதுகிறார்.

அரைநூற்றாண்டு காலமாக தருமபுரி, ஒசூர் பகுதிகளில் வாழ்ந்துவரும் எனக்கு தெரிந்து தருமபுரி மற்றும் ஒசூர் இடம் பெற்றுள்ள கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ‘திருட்டை தொழிலாகக் கொண்டவர்களின் கிராமம்’ என்று தனியாக எதுவும் இல்லை.

காவல்துறை ஆவணத்தில்கூட அப்படி அடையாளப்படுத்தப்பட்ட கிராமங்கள் எதுவுமில்லை. திருட்டைத் தவிர்த்த வேறு பல அரசியல் காரணங்களுக்காகவும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் குற்றப்பரம்பரை என்று நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டு கைரேகைச் சட்டத்திற்கு கீழ்ப்படுத்தப்பட்ட 160 சமூகப்பிரிவினரில் குறவர் / குறவா என்கிற ஒரே ஒரு பிரிவினர் மட்டுமே ஒன்றுபட்ட தருமபுரி மாவட்டத்தின் சில ஊர்களில் வசிக்கின்றனர் ( இவர்கள் மாநிலம் முழுவதும் 27 பெயர்களிலான பிரிவினராக உள்ளனர்). சுதந்திரம் பெற்ற பிறகும் காலனிய ஆட்சியாளர்களின் மனநிலையிலிருந்து விடுபடாத காவல்துறையின் பயிற்சிப்பள்ளியில் இப்போதும் “குறவா கிரைம்” என்பது தனிப்பாடமாக சொல்லித்தரப்படுவதை மூத்த பத்திரிகையாளர் எஸ்.விஸ்வநாதன் (ஃபிரண்ட்லைன், ஜூன் 8-21, 2002) அம்பலப்படுத்தியுள்ளார்.

இதனால்தான் எந்தவொரு திருட்டோ வழிப்பறியோ நடந்தாலும் குறவர் குடியிருப்புகளுக்குள் புகுந்து சிலரை தூக்கிப்போவதும் அவர்கள்மீது பழியைப்போட்டு கணக்கை முடிப்பதும் போலிசாரின் வாடிக்கையாக உள்ளதையும் அதற்கெதிராக அம்மக்கள் நடத்திவரும் போராட்டங்களையும் முனைவர் மணி.கோ.பன்னீர்செல்வம் (புதுவிசை-இதழ் 40, டிசம்பர் 2013) ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.

குறவர் மட்டுமல்லாது அந்தந்த வட்டாரங்களில் எண்ணிக்கை பலமற்ற சில சமூகப்பிரிவினரை, குற்றப்பரம்பரையினராக காவல்துறை திட்டமிட்டு பேணிவருகிறது. ராம்ஜி நகர், அஜீஸ் நகர் என்பவையெல்லாம் இவ்வாறு போலிஸ் தேவையிலிருந்து பேணப்படும் குற்றப்பகுதிகள் என்பதை கவனியாமல், அங்குள்ள ஒட்டுமொத்த மக்களையும் திருடர்களாக பார்ப்பது என்ன அறம்? கொடுமை என்னவென்றால் குற்றப்பரம்பரை என்று சட்டப்பூர்வமாக யாருமே இப்போது இல்லை – குற்றப்பரம்பரை என்று நோட்டிஃபை செய்யப்பட்ட சமூகங்கள் வலிமையான போராட்டங்களால் டி-நோட்டிஃபை செய்யப்பட்டுவிட்டன. ஆனால் காவல்துறைக்கும் ஜெயமோகனுக்கும் அவர்கள் இன்னும் குற்றப்பரம்பரையாகவே தெரிகிறார்கள்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஒசூர் பகுதியில் எந்த ஒரு கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களும் திருட்டைத் தொழிலாக கொண்டிருக்கவில்லை. எனவே ‘தருமபுரி, ஓசூர் மாவட்டங்களில் திருட்டை தொழிலாகக் கொண்டவர்களின் கிராமங்களில்’ என்று எழுதுகிற ஜெயமோகன்தான் அந்த கிராமங்கள் எவையெவை என்று இப்போது அறிவிக்கவேண்டும். போதாக்குறைக்கு ‘ஒருமுறை நிர்வாணமாக நின்றபடி போலீஸ் மேல் கல்வீசும் பெண்களை நானே கண்டிருக்கிறேன்’ என்றும் எழுதுகிறார். தான் கண்ணாரக் கண்ட அப்பேர்ப்பட்ட பெண்கள் வாழும் கிராமம் எது என்பதையும் அவர் அறிவிக்கவேண்டும்.

பொத்தாம்பொதுவாக இப்படி சொன்னால் யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்று போகிற போக்கில் பிதுக்கித் தள்ளிய இப்பொய்களின் மூலம் ‘தருமபுரி, ஒசூர்’ பகுதி மக்களை ஜெயமோகன் இழிவுபடுத்தியிருக்கிறார். ஓர் ஊரின் ஒட்டுமொத்தப் பெண்களும் அம்மணமாக நிற்கிறவர்கள் என்று பொறுப்பற்று எழுதியுள்ளதற்கு உரிய விளக்கத்தை தரும் அளவுக்கான நாணயத்தை அவரிடம் நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. தான் சொன்ன பொய்யை நிலைநிறுத்த யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தும் ஜெயமோகன் தன் வக்கிரத்தை நியாயப்படுத்த வெண்டைக்காயை தூக்கி விளக்கெண்ணெய்யில் போட்டதுபோல வளவளவென ஏதாச்சும் விளக்கங்கள் கொடுக்கவும்கூடும். அல்லது இதற்கெல்லாம் நான் எப்போதும் பதில் சொல்வதில்லை என்கிற எகத்தாளத்தோடு அடுத்தப் பொய்களை எழுதக்கூடும்.

இவ்வாறெல்லாம் சொல்வதால், ஜெயமோகனுக்கு உண்மையே தெரியாது என்பது பொருளல்ல. ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டை தொழிலாகக் கொண்டவர்களின் கிராமங்களில் இவ்வழக்கம் உண்டு’ என்று எழுதினால் அக்கம்பக்கத்தவர்களால் முதுகு பழுத்துவிடும் என்கிற உண்மை அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.

கொசுறு- ‘நம் இடதுசாரிகள், முற்போக்கினர் வெளிப்படுத்தும் எந்த உணர்ச்சியையும் நம்பமுடியாமல் அவர்களே நம்மை ஆக்குகிறார்கள்’ என்கிற கட்டுரையின் கடைசிவரி எனக்கு மிகவும் நிம்மதியைத் தந்தது என்பதை சொல்லத்தான் வேண்டும். ஜெயமோகனால் நம்பமுடிகிறபடி இடதுசாரிகளும் முற்போக்கினரும் இயங்கக்கூடாதல்லவா?

– ஆதவன் தீட்சண்யா, malaigal.com
2015 – அக்டோபர் 11

Related Posts