அரசியல்

ஐ.டி ஊழியர்களும் . . . . . லே ஆஃப் அபாயமும் . . . . . .

ப்ராஜெக்ட், டெவலப்பர், டெஸ்டர், கிளெய்ண்ட், ஆன் சைட், ஆஃப் ஷோர் இதுமாதிரியான வார்த்தைகள் எல்லாம் ஐடி துறையில் அதிகம் உபயோகிக்கப்படுபவை. இவற்றை அதிகம் பயன்படுத்தும் ஐடி நிறுவன ஊழியர்கள் ‘லே ஆஃப்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே பீதியடைவர். இந்த ஒற்றை வார்த்தைக்கு அத்தனை வீரியம் உண்டா என்கிறீர்களா? நிச்சயம் உண்டு.. கணிசமான எண்ணிக்கையிலான ஊழியர்களை, தரம் குறைந்தவர்களாக மதிப்பிட்டு, அவர்களை வேலையைவிட்டு வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையே லே ஆஃப் எனப்படும்.
கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து லே ஆஃப் நடவடிக்கை குறித்த செய்திகள் தொடர்ச்சியாக ஆங்காங்கே பரவி வந்த நிலையில், இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இருந்து அவற்றின் உண்மை நிலவரத்தை நமக்கு விளக்கத் தொடங்கின சில செய்திகள். அப்போதும் கூட எத்தனை ஊழியர்கள் இதனால் வேலையிழப்பார்கள் என்ற தகவல்கள் முறையான செய்தியாக வெளியிடப்படாமல் இருந்தன. ஒவ்வொரு செய்தி ஊடகமும் குத்துமதிப்பாக ஒரு கணக்கைச் சொல்லிவந்த நிலையில், லைவ் மிண்ட் செய்தியில் மட்டும் 56,000 ஐடி ஊழியர்கள் நிகழாண்டில் வேலையிழப்பார்கள் என ஒரு செய்தியை அளித்தது. அதற்கு அடுத்த நாளே ‘ஹெட் ஹண்டர்ஸ்’ என்னும் நிறுவனம் தன்னிடம் உள்ள தகவல்களின் படி, ஆண்டொன்றுக்கு 1.75-2 லட்சம் ஊழியர்கள் என இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட 6 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்ற செய்தியை வெளியிட்டது.
பெரும்பாலும் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் துறையில் படித்த பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கும் இந்த மென்பொருள் துறையில், அந்தத் துறைக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் தான் பணியில் சேருகிறார்கள். பொறியியல் படித்தவர்களில் இந்தத் துறைதான் என்ற நெறிமுறை இல்லாமல், எல்லாத் துறைகளிலும் பயின்றவர்களை வேலைக்கு எடுத்துவிடும் ஐடி நிறுவனங்கள், பிற்காலத்தில் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி பணியிலுள்ளவர்களை வெளியேற்றி வந்துள்ளன. குறிப்பாக பென்ச் எனப்படும் ப்ராஜெக்ட் இல்லாதவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இத்தனை காலம் மறைமுகமாக நிகழ்த்தப்பட்டு வந்த இந்தக் கொடுமைகளை, தற்போது வெளிப்படையாக அறிவித்துவிட்டு அதை நேர்மையாக்கப் பார்க்கின்றன இந்த ஐடி நிறுவனங்கள்.
இந்த ஆண்டு அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றவுடன், இந்தியா மற்றும் வெளிநாட்டவர்களுக்காக வழங்கப்படும் H1B விசாக்களின் மீது கெடுபிடி காட்டியபோதே, லே ஆஃப் நடவடிக்கையானது எதிர்பார்த்த ஒன்றாக இருந்தது. இதற்குமுன் ஐடி நிறுவனங்களை தானியங்கி மற்றும் டிஜிட்டலாக்கும் நடவடிக்கை குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டு, அதுகுறித்த தகவல்கள் சுற்றறிக்கையாக அனைத்து ஐடி ஊழியர்களுக்கும் அனுப்பப்பட்டன. சமீபத்திய தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்ள முடியாத பல ஐடி ஊழியர்கள் இன்னமும் பணியில் இருக்கும் போது, அவர்களை விரட்டிவிடும் நோக்கமாகவே இது பார்க்கப்பட்டது.
இவ்வாறு லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலையிழக்கும் பட்சத்தில், அந்த இடங்களை நிரப்ப இளமையான ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற நிலையில், இவற்றை எதிர்த்துப் போராடத் தொடங்கியுள்ளன ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தொழிற்சங்கங்கள். முதலில் டிசிஎஸ் ஒட்டுமொத்தமாக 24,000 ஊழியர்களை வேலையிலிருந்து லே ஆஃப் செய்தபோதுதான் இந்தத் துறையில் தொழிற்சங்கங்களுக்கான எழுச்சி என்பது உருவானது. தற்போது அவர்களால் இயன்ற அளவிற்கு எதிர்வினை ஆற்றி வருகிறார்கள் என்பது நமக்குக் கிடைத்த தகவல்.
பலதரப்பட்ட துறைகளில் பயின்ற பொறியியல் பட்டதாரிகளை கூட்டம் கூட்டமாக வேலையில் சேர்த்துவிட்டு, காலத்திற்கேற்ப தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்ள முடியாதவர்கள் என ஒதுக்கி, வேலையில் இருந்து அவர்களை வெளியேற்றும் முயற்சியை ஐடி நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. இதுபோல நேரடியாக வெளியேற்ற முடியாத  ஊழியர்களை தொடர்ச்சியான மன அழுத்தம் தந்து வெளியேற்றுவதற்கு ஐடி நிறுவனங்களுக்கு சொல்லியா தரவேண்டும்? மேலும், இந்த லே ஆஃப் முறையின் மூலம் 35 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள மூத்த அதிகாரிகள்தான் வேலையிழப்பார்கள் என்கிறது ஹெட் ஹண்டர்ஸ் நிறுவனம். இதுதவிர, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் கோவை, திருச்சி போன்ற நகரங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தான் வேலையிழக்கும் வாய்ப்பு அதிகமெனவும் சொல்கிறது அதே ஹெட் ஹண்டர்ஸ் நிறுவனம்.
இதையெல்லாம் கவனிக்க வேண்டிய அரசு ஏதும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருப்பது, ஐடி ஊழியர்களை ஒதுக்கும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது. ஊழியர்களுக்கான பொதுவான சட்ட வரைவுகளில் ஐடி ஊழியர்களுக்கான உரிமைகளும் தெளிவான முறையில் சேர்க்கப்பட வேண்டும். இதற்கு அரசும் உரிய நடவடிக்கைகளை முன்நின்று செய்துதர வேண்டும்.
தரமற்றவர்கள் என ஐடி ஊழியர்களை வேலையிலிருந்து வெளியேற்றும் ஐடி நிறுவனங்கள் தான், அவற்றின் ஊழியர்களின் தரமுயர்த்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால், அந்தக் கடமைகளில் இருந்து தப்பி, அவற்றால் ஏற்படும் முதலீட்டு இழப்பைத் தவிர்த்து, புதிய ஊழியர்களை வேலையில் சேர்ப்பதன் மூலம் தங்களின் முதலீடுகளைப் பெருக்கும் முயற்சிகளையே தெளிவாக முன்னெடுக்கின்றன ஐடி நிறுவனங்கள்.
இந்த நடவடிக்கை குறித்து என் நண்பர், ‘இது ஐடி நிறுவனங்களின் வீழ்ச்சியா?’ என்று கேட்டார். உண்மையில் இதனால் ஐடி நிறுவனங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால், இந்த நிறுவனங்களை நம்பிவாழும் ஊழியர்களுக்கு இனி எதிர்காலமே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 2கோடி இளைஞர்கள் என மொத்தம் ஐந்து ஆண்டுகளில் 10கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என இந்தியப் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஐடி நிறுவனங்களின் இந்த வெளிப்படையான அறிவிப்பை எதிர்த்து ஒரு வார்த்தை கூட விடாத அவர்தான் இந்த நாட்டின் ரட்சகர்!
குறைவாக இருந்தாலும் காலம் இன்னமும் இருக்கிறது. துரிதமாக நடவடிக்கை எடுத்தால், பெரும்பாலான ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும். இது தொடருமானால் கிட்டத்தட்ட நேரடியாக 40லட்சம் பேர் பணிபுரியும் ஐடி துறையில் நிகழும் மாற்றங்கள், மோசமான விளைவுகளை நம் எதிர்கால சந்ததியின் மீது ஏற்படுத்தக் கூடும்!
– தேன்சிட்டு

Related Posts