பிற

ஏன் ‘பற்றி’ எரிகிறது ஏமன்? – 1

உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்று ஏமன். வளைகுடா பகுதியில் மிகப்பெரிய பணக்கார நாடாக இருக்கும் சவுதி அரேபியாவுடன் 1000 கிலோ மீட்டர் நீள எல்லையைக் கொண்டிருக்கும் நாடுதான் ஏமன். இன்று ஏமனில் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகள் நடத்திக்கொண்டிருக்கும் திணிக்கப்பட்ட போரின் காரணமாக, இரண்டு கோடி மக்களுக்கும் மேலாக குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஏமனில் தீவிரவாதம் அதிகரித்திருப்பதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏமனைக் காப்பாற்ற முயற்சிப்பதாகவும் உலக மக்களாகிய நமக்கு தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது.

உண்மை என்ன?

ஏமன் ஏன் பற்றி எரிகிறது? – என்பதை விளக்கும் நோக்கில் எழுதப்பட்டிருக்கிற கட்டுரை இது.

இக்கட்டுரை எழுத எனக்கு உறுதுணையாக இருந்தவர், எத்தியோப்பிய அரசின் தூதுவராக பணியாற்றியவரும், மத்திய கிழக்கு நாடுகள் குறித்து ஏராளமான நூல்களை எழுதியவருமான நண்பர் மொகம்மது ஹசன்.

நீண்ட நெடுங்காலமாகவே அமெரிக்காவின் உற்ற தோழனாக ஏமன் இருந்து வருகிறது. சமீப காலமாக ஏமனில் நடக்கிற கிளர்ச்சிகளும், அரசை எதிர்த்த ஆயுதப் போராட்டங்களும், ஏமனில் அமெரிக்காவின் இருப்பை அசைத்துப் பார்த்திருக்கிறது.

எங்கெல்லாம் அமெரிக்காவிற்கு வேண்டாத ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் போராடுகிறார்களோ, அங்கெல்லாம் “மக்கள் எழுச்சி” என்கிற அடைமொழியோடு அவர்களது போராட்டங்களை அமெரிக்கா ஆதரிக்கும். இதற்கு நேர்மாறாக, எங்கெல்லாம் அமெரிக்காவின் பொம்மை அரசாங்கங்களை எதிர்த்து மக்கள் போராடுகிறார்களோ, அங்கெல்லாம் “தீவிரவாதிகள்” என்கிற வார்த்தையோடு அம்மக்களின் போராட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன.

இது வரலாற்றில் திரும்பத் திரும்ப நடந்து கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் எல்லாம், அல் கொய்தா என்கிற பெயர் இணைக்கப்படுகிறது. தேசியவாத, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களுக்கெல்லாம் அல்-கொய்தா என்றோ அல்லது அதன் நட்பு இயக்கம் என்றோ பெயர் சூட்டப்படுகிறது. ஏமனிலும் அதுதான் நடக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளாக ஏமனை ஆட்சி செய்து வந்த அமெரிக்காவின் பொம்மை அரசு, ஒரு மிகப்பெரிய ஊழல்வாத அரசு. அப்படிப்பட்ட அரசை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்தனர். 1990 ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவிற்கு மிக நெருக்கமான அலி அப்துல்லா சாலே என்பவர்தான் ஏமனின் அதிபராக இருந்து வந்தார். எகிப்து, துனிசியா போன்ற நாடுகளில் அரபு வசந்தம் என்னும் பெயரில் மக்கள் கிளர்ச்சி நடந்ததை நாம் நன்கு அறிவோம். ஆனால், அதே காலகட்டத்தில் ஏமனில் ஜனநாயகத்தை விரும்பிய மக்கள், சாலேயின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடினர். அமெரிக்காவின் நட்பு வட்டத்திற்குள் இருந்த காரணத்தாலேயே, ஏமன் மக்களின் போராட்டங்கள் உலக மக்களுக்கு சொல்லப்படவில்லை. வடக்கு ஏமனில் போராட்டக் குழுக்களும் தெற்கு ஏமனில் தனிநாடு கோரும் குழுக்களும் ஏமன் அரசை எதிர்க்க துவங்கின. போராட்டங்களால், சாலேவின் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்று அமெரிக்கா அஞ்சியது.

ஏமனில் ஒரு ஜனநாயக அரசு அமைந்துவிட்டால், அந்நாட்டின் அண்டை நாடான சவுதி அரேபியாவில் இருக்கும் ஜனநாயக விரும்பிகளுக்கும் நம்பிக்கை கொடுத்துவிடும் என்று அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் அச்சமாக இருந்தது. அரசுக்கு எதிரான வடக்கு ஏமன் மக்களின் கிளர்ச்சியினை எகிப்து தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு கூட கண்டித்து, ஏமன் அரசுக்கு தனது ஆதரவையும் நல்கியது. ஆனால், லெபனானிலும் காசாவிலும் சிரியாவிலும் இஸ்ரேல் நடத்திய அட்டூழியங்களுக்குக் கூட அரபு நாடுகளின் கூட்டமைப்பு சமீப காலங்களில் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குலக நாடுகளின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட வளைகுடா ஒத்துழைப்புக் குழுவும், ஏமனின் கிளர்ச்சியாளர்களையே கண்டித்தது. பொருளாதார மந்த நிலையிலிருந்து இன்னமும் மீண்டு வராத அமெரிக்காவிற்கு, சவுதியின் ஆதரவு நிச்சயமாக தேவை. அதனால், அரபுலகத்தில் எந்த நாட்டிலும் தனக்கு எதிரான அரசு அமைவதை அமெரிக்கா விரும்பவில்லை. குறிப்பாக சவுதி அரேபியாவின் தெற்கே இருக்கும் ஏமனை எக்காரணம் கொண்டும் இழக்கத் தயாராக இல்லை. ஏமனிலோ, சவுதி அரேபியாவிலோ நிலையற்ற தன்மை உருவாகுமானால், அது தன்னுடைய பொருளாதாரத்தை பெரியளவில் பாதிக்கும் என்பதை அமெரிக்கா உணர்ந்தே இருக்கிறது.

ஏமன் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்:

ஏமனின் இன்றைய நெருக்கடிகளை புரிந்து கொள்வதற்கு, அதன் கடந்த கால வரலாற்றை அறிய வேண்டியது அவசியமாகிறது. “ஏமன் மக்கள் ஜனநாயகக் குடியரசாக” இருந்த தெற்கு ஏமனும், “ஏமன் அரபுக் குடியரசாக” இருந்த வடக்கு ஏமனும் 1990 இல் ஒரே நாடாக இணையும் வரையில் தனித் தனி நாடுகளாக இருந்தன. அவ்விரண்டு நாடுகளுக்கும் வெவ்வேறு வரலாறுகளும் உண்டு.

1962 இல் நிகழ்ந்த மக்கள் கிளர்ச்சியின் காரணமாக, மன்னராட்சியிலிருந்து குடியரசாக மாறியது வடக்கு ஏமன். அன்றிலிருந்து “ஏமன் அரபு குடியரசு” என்று வடக்கு ஏமன் அழைக்கப்பட்டது. அரபுலக சுதந்திரத்தை முன்னிறுத்திய எகிப்து அதிபர் நாசர், வடக்கு ஏமனின் ஆட்சி மாற்றத்திற்கு உதவியாக இருந்தார். அப்போது, அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா மற்றும் பழைய ஈரான் போன்ற நாடுகள் தங்களது படைகளை அனுப்பி, வடக்கு ஏமனில் மன்னராட்சியையே தொடர வைக்கவும் நாசரை பலவீனப்படுத்தவும் கடுமையாக முயன்றன. அதுவே கடுமையான போராக உருவெடுத்தது.

வடக்கு ஏமனுக்கு விடுதலை பெற்று தருவதற்காக, 10,000த்திற்கும் மேற்பட்ட எகிப்து படையினர் உயிரிழந்தனர். இறுதியாக வடக்கு ஏமனில் “ஏமன் அரபு குடியரசு” உருவெடுத்தது. என்றாலும் கூட அது பலம் பொருந்தியதாக இல்லை. ஒரு போர், எகிப்தையும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியது. புதிதாக உருவான ஏமன் அரபு குடியரசால், பெரியளவு கலாச்சார ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ வளர்ச்சியடைய முடியவில்லை. மன்னராக இருந்தவர், சவுதி அரேபியாவிற்கு தப்பியோடினார். வடக்கு ஏமனுக்கு சொந்தமான பல பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு விடுவிக்காமல் போனது சவுதி அரேபியா.

தெற்கு ஏமனின் வரலாறு சற்றே வித்தியாசமானது. அரபு நாடுகளையும் ஆப்பிரிக்காவையும் கடல் வழியாக இணைக்கிற குறுகிய ஆப்பிரிக்கப் பகுதிகளை ஆக்கிரமித்து ஜிபூடி என்கிற புதிய நாட்டை உருவாக்கி வைத்திருந்தது பிரெஞ்சு அரசு. அதற்குப் போட்டியாக, அரபுப் பிரதேசத்தில் தெற்கு ஏமனை ஆக்கிரமித்து வைத்திருந்தது பிரிட்டன். தெற்கு ஏமனில் ஆடன் துறைமுகத்தையும் உருவாக்கியது பிரிட்டன்தான். அந்நகரை அப்போதைய ஹாங்காங் என்று கூட சொல்லலாம். பிரிட்டன் தன்னுடைய காலனி நாடுகளிலிருந்து வேலையாட்களை கொண்டுவந்து சேர்த்தது. எல்லாவிதமான அதிகாரங்களையும் வைத்திருந்த பிரிட்டன் அதிகாரிகள், தங்களுக்கு அடுத்தபடியாக புலம்பெயர் இந்தியர்களையும் சோமாலியர்களையும் நடத்தினர். அவர்களுக்கும் கீழ்நிலையிலேயே ஏமன் மக்களை நடத்தினர்.

பிரிட்டன் ஆட்சி செய்த எல்லா காலனி நாடுகளிலும் இதனைத்தானே செய்தது. சிறுபான்மை மக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் இடையில் வெறுப்புத் தீயை மூட்டிவிட்டு, அதில் குளிர் காய்வதையே பிரிட்டன் வழக்கமாக வைத்திருந்தது. பிரிட்டனின் மற்ற காலனி நாடுகளிலெல்லாம் பிரிட்டன் ஆட்சியை எதிர்த்துப் போராடிய தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளை எல்லாம் ஏமனின் ஆடன் நகருக்கு நாடு கடத்தப்பட்டனர். அப்படி குவிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து பிரிட்டனின் ஆதிக்கத்தை எதிர்த்து ஏமனிலும் போராடினர். அதன் விளைவாகவே 1967 இல் தெற்கு ஏமன் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்று “ஏமன் மக்கள் ஜனநாயகக் குடியரசாக” உருவாகியது. கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள், பாத் சோசலிசவாதிகள் போன்றோர் இணைந்து ஏமன் சோசலிசக் கட்சியின் கீழ் ஆட்சியை நடத்தினர்.

தொடரும்….

Related Posts