இதழ்கள் இளைஞர் முழக்கம்

ஏன் தமிழகம் போராட வேண்டும்? – தீபா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்த 18 பேர் மற்றும் 6 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இது ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது அல்ல. கடந்த வாரம் நடந்து இருக்கிறது. இதில் மீட்கப்பட்ட தேவி (35) ஐந்தாவது முறை கர்ப்பமாக இருந்த போது மீட்கப்பட்டுள்ளார். இவர்களது குழந்தைகளையும் வேலையில் ஈடுபடுத்தியுள்ளான் அந்த செங்கல் சூளை முதலாளி. பல நேரங்களில் பெற்றோர்கள் தப்பித்துப் போகக்கூடாது என்று குழந்தைகளை கடத்தி வைத்து விடுவார்களாம். பள்ளிக்கூடமோ படிப்போ அல்லது விளையாட்டோ இவர்களுக்கு இல்லை. 21ம் நூற்றாண்டு மற்றும் வளர்ச்சி வளர்ச்சி என்று பேசிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இது போன்ற செய்திகள் நமக்கு என்ன உணர்த்துகிறது? எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விட்டதா என்ன?

தூத்துக்குடி மக்களுக்காக போராட்டம் செய்த வாலிபர் சங்கத் தோழர்களை கைது செய்கிறது, ரிமாண்டில் சிறையிலடைக்கிறது தமிழகக் காவல்துறை. ஆனால் பலமுறை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த பிறகும் வேலை செய்யும் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் தரம் தாழ்ந்து கருத்துக்கள் கூறிய எஸ்.வி.சேகரை கைது செய்ய மறுக்கிறது காவல் துறை. தேடப்படும் குற்றவாளியான எஸ்.வி.சேகர் மத்திய அமைச்சருடன் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகெள்கிறார். இது செய்தியாக பல ஊடகங்களில் வெளிவருகிறது. இருப்பினும் அரசோ அல்லது காவல்துறையோ முழு மௌனத்துடன் இருக்கிறது. இவருடைய குடும்ப உறுப்பினர் தான் தலைமைச் செயலாளர். அதனால் தான் இவர் கைது செய்யப்படவில்லை என வெளிப்படையாகவே அனைவருக்கும் புரிகிறது. சட்டமும் காவல்துறையும் எப்போது அனைவருக்கும் சமமாகுமோ அதுவரை எதிர்ப்பின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும்.

ஒடுக்கப்பட்ட மக்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தால் வெட்டிக் கொலை செய்யப்படுவர் நம் தமிழகத்தில். இதை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் செய்தியாகக் கூட வெளியிடவில்லை. எம்.பி.ஏ படித்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர். நீ எவ்வளவு பெரிய பட்டம் பெற்றிருந்தாலும், எவ்வளவு சாதனைகளை செய்திருந்தாலும் உனது முதல் அடையாளம் உன் சாதிதான். நீ ஒரு தலித். உனக்கு சமத்துவம் கிடையாது என்று கூறுகிறது இந்த சாதிய சமூகம். இது போன்று நடப்பது முதல் முறையா என்ன? எப்படி அமைதியாக இருக்க முடியும் இது போன்ற நேரங்களில்? சமீபத்தில் வெளிவந்த ஒரு வீடியோவில் ஒரு பெண் (தலித்) கோவிலுக்கு உள்ளே சென்ற பொழுது அவரை தடுத்து நிறுத்தி ஆதிக்க சாதியினர் அப்பெண்ணை கோவிலை விட்டு வேளியேற்ற முயற்சி செய்கின்றனர். அதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இருப்பினும் அப்பெண்ணை கோவிலில் இருந்து வேளியேற்ற முயற்சி செய்கிறார்கள். இதை பார்த்து கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல வேண்டுமா? அல்லது இது போன்ற ஒடுக்குமுறைகள் இருக்கக் கூடாது என போராட வேண்டுமா?

கல்வி ஒரு அடிப்படை உரிமை என்பதில் இருந்து அதை பெறுவதே ஒரு போராட்டமாக மாற்றிய சாதனை நம்மை ஆளும் ஆட்சியாளர்களுக்கே போய்ச் சேரும். தந்தை தினமும் மது அருந்தி வருவதால் நீட் தேர்வுக்கு படிக்க முடியவில்லை எனக்கூறி ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டானே. அவன் இறப்பிற்கு இந்த அரசின் விடை என்ன? கல்வி நிலையங்களை மூடிக் கொண்டும் டாஸ்மாக் கடைகளை இலக்கு வைத்து நடத்தி வருகின்ற இந்த அரசிற்கு இந்த உயிரின் மதிப்பு தெரியுமா? கல்வி அடிப்படை உரிமை என்ற குரல் ஓங்காமல் எல்லோருக்கும் கல்வி எப்படிப் போய்ச் சேரும். அடிப்படை உரிமையான கல்வி கனவாகவே இருந்து விடுமே? அது சரி தானா

மைலாப்பூரில் ஒரு மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது மட்டும் இல்லாமால் அதைத் தன்னுடைய கைபேசியில் பதிவு செய்துள்ளார். பின்தொடர்ந்தும், துன்புறுத்துவதாக மிரட்டி பார்த்தும் தன் விருப்பத்திற்கு இணங்காததால் கல்லூரி வளாகம் வரை சென்று படிக்கும் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளான். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் அந்த மாணவி. இதைப் போல் எந்தனை முறை இளம் பெண்கள் கொலை என்று நாம் பார்த்துவிட்டோம்? இது போன்ற கொடூரங்கள் தொடர்ந்து கொண்டே தானே இருக்கிறது? மாற்றம் எப்போது வரும்? நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப் படுகிறார்கள். சேலம், விழுப்புரம், மதுரை, கடலூ‌ர் என கடந்த மாதத்தில் மட்டுமே எத்தனை குழந்தைகளின் ரத்தம் வடிந்த கால்களை, பற்கள் பதிந்த உடல்களை பார்த்திருப்போம். எந்த மனித மனதிற்கும் அதை எதிர்க்கொள்ள தைரியம் உண்டா? இக்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?

இளம் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்முறை, நீட் தே‌ர்வு என்ற பெயரில் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் கொடுத்த மன அழுத்தம், அத‌ன் விளைவாக மரணங்கள். குட்கா உழல், அதை மறைக்க பல பல முயற்சிகள். யாரை பாதுகாக்க இந்த முயற்சிகள்? கல்லூரிக்கு படிக்கச் சென்றதால் விபச்சாரத்திற்கு அழைக்கும் கல்லூரி ஆசிரியை. அந்த ஆசிரியருக்கு பக்க பலமாக இருகும் “பெரிய இடத்து அதிகாரிகள்”. இதில் மாநில ஆளுநரின் பெயரும் அடிபடுகிறது.

எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று போகக் கூடாதாம். புதிய அரசியல் வரவு ரஜினியின் அறிவுரை. ரஜினி போன்றவர்களுக்கு போராட்டம் தேவை இல்லை தான். தன்மானமும், சுயமரியாதையும், சமத்துவமும் வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு தான் போராட்டத்தின் தேவையும் அர்த்தமும் புரியும். எப்படிக் கிடைத்தது சுதந்திரம் என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்குத் தெரியும் போராட்டங்களே புதிய வரலாறு படைக்கும் என்று.

Related Posts