இதழ்கள் இளைஞர் முழக்கம்

எழுச்சிகள் அடங்கப் போவதில்லை – எஸ்.பாலா

மீண்டுமொரு வன்முறை வெறியாட்டத்தை தூத்துக்குடியில் அரங்கேற்றியுள்ளது தமிழக அரசு. தூய காற்றும், நீரும் கேட்டதற்காக மக்களை சுட்டுத்தள்ளி தன்னுடைய அதிகார பயங்கரவாதத்தை நிரூபித்துள்ளது. போராடினால் நாங்கள் வன்முறையை நிகழ்த்துவோம், வெறிகொண்டு அடக்குவோம் என அறிவித்துள்ளோம். இருபத்தாண்டுகள் நடந்துவரக்கூடிய அமைதி வழிப்போராட்டத்தை தமிழக அரசு எந்த முறையில் அணுகி உள்ளது? அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிட ஏன் தயாரில்லை? என்ற இரண்டு கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தது.
வேதாந்தா நிறுவனத்தின் பிரிவான ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் தூத்துக்குடியில் உள்ள சிப்காட்டில் 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று 1300 கோடி மதிப்பீட்டில் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இங்கு அடிக்கல் நாட்டப்படுவதற்கு முன் கோவாவிலிருந்து குஜராத்திற்கும், குஜராத்திலிருந்து மகாராஷ்ட்ராவிற்கும் 300 கோடியில் பணிகள் நடைபெற்ற பின்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பால் 1990 களில் மூட்டைக்கட்டி தமிழகத்திற்கு அனுப்பப்பட்ட நிறுவனமாகும். அதன் உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 1200 டன்னாகும். ஓட்டுமொத்த இந்தியத் தாமிரச் சந்தையில் 36 சதவீதம் இந்த ஆலையிலிருந்து உற்பத்தியாகிறது.
தற்சமயம் ஆலையை 400 ஏக்கர் பரப்பளவு 3500 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தும் திட்டம், அரசு மற்றும் இதர அனுமதிக்காக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தாமிர ஆலை இதுதான். இந்தியாவில் கிட்டதட்ட 10 லட்சம் டன் தாமிரம் உற்பத்தியாகிறது. இந்தியாவின் தேவை இதில் சரிபாதி மட்டுமேயாகும்.

நவீன தொழில்நுட்பம் மற்றும் மினசாரத்துறையின் காப்பர் (தாமிரத்தின்) பங்கு மிகவும் முக்கியமானதாகும். தாமிரம் இல்லாமல் எந்தவிதமான மின் பொருட்களும் உற்பத்தி செய்திட முடியாது. ஆனால் தாமிர உற்பத்தி நிகழும் போது பின்பற்றிட வேண்டிய எந்த சுற்றுச்சூழல் நெறிமுறையும் நடைமுறைப்படுத்தவில்லை.

தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி, கந்தக டை ஆக்சைடின் அளவு ஒரு கனமீட்டருக்கு 2941 மைக்ரோ கிராம் ஆகும். அனுமதிக்கப்பட்ட அளவு 1250 மைக்ரோகிராம் மட்டுமே. தூத்துக்குடி நகரில் கிட்டதட்ட இரண்டரை மடங்கிற்கு அதிகமான அளவு இருந்துள்ளது. அதேபோல அந்த நகரினை சுற்றி உள்ள பல கிராமங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள தண்ணீரை எடுத்து சோதித்துப் பார்த்துள்ளனர். இதில் வந்த முடிவுகளில் குளோரைடு, மக்னிசம், சல்பேட் உள்ளிட்ட தாது பொருட்களின் அளவு என்பது இருக்க வேண்டிய அளவை காட்டிலும் பன்மடங்கு அதிகமாக உள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் காற்றும், நீரும் நச்சாகி உள்ளது என்பதை காட்டுகிறது.

இதன் விளைவாக 2016ம் ஆண்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேன்சருக்காக சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2160 ஆக இருந்துள்ளது. தோல், நுரையீரல், புற்றுநோய் என பல்வேறு நோய்களால் மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
நிலமும், நீரும் நஞ்சானதின் விளைவாக உயிரிழப்பும் தொடர் நிகழ்வாக மாறியுள்ளது. இது தூத்துக்குடி நகரிலும், சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளிலும் கடுமையான தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட வேண்டும் என்ற உணர்வை பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஆலையை மூட மக்கள் இயக்கங்கள் நடைபெற்று வந்துள்ள நிலையில் சட்ட ரீதியான பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. சி.ஐ.டி.யு முன்னாள் தலைவரான தோழர் கே.கனகராஜ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர். தமிழக அரசு 2013 ல் மூடுவதாக சீல்வைத்த பின்பு சரியான முறையில் வழக்கினை நடத்தவில்லை. இந்த ஆலை சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பினை உருவாக்கியுள்ளது. அரசு இதனை நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தவறிவிட்டது. எனவே மக்களுக்கு ஆதரவான தீர்ப்பு என்பது கிடைக்கவில்லை.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி எனும் நிலையில் அரசும் நீதி அமைப்புகளும் கைவிட்டுவிட்டது. இதனால் மக்களின் மனநிலையில் கொதிப்பு உருவானது. ஸ்டெர்லைட் ஆலைக்குள் இக்காலத்தில் விபத்துக்களும் நிகழ்ந்துள்ளது. இதனால் தொழிலாளர்களும் உயிர் இழந்துள்ளனர். இது ஆலைக்குள்ளும் பாதுகாப்பான நிலை இல்லை என்பதை காட்டுகிறது. பசுமை மண்டலம் உள்ளிட்ட எந்த சுற்றுச்சூழல் விதிமுறைகளையும் இந்நிறுவனம் பின்பற்றவில்லை. ஆனால் 10 லட்சம் விட்டர் தண்ணீரும், ஆலைக்கு நிலம் உள்ளிட்ட பல சலுகைகளும் அரசு செய்து தந்துள்ளது. நாளுக்கு நாள் காற்றில் உள்ள விஷத் தன்மையும் அதிகரித்துள்ளது என்ற புள்ளி விபரங்கள் வந்துள்ளன.

எந்த இடையூறும் இல்லாமல் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை உள்ள நேரத்தில்கூட இவ்வளவு அதிகமான தண்ணீரை எடுத்து கொண்டுள்ளது. முதல் கட்டமாக வழங்கப்பட்ட நிலத்துடன் ஆலை விரிவாக்கத்திற்கும் தமிழக அரசு நிலங்களை அள்ளி வழங்கியுள்ளது. இதற்கெல்லாம் ஆட்சியாளர்கள் சொல்லும் பதில் வளர்ச்சிக்காக.

ஆனால் இது யாருக்கான வளர்ச்சி? தூத்துக்குடி மக்கள் மட்டுமல்ல, தமிழகம் விரும்பாத இந்த ஆலை எதற்கு? எப்படிப்பட்ட வளர்ச்சி? என்ற கேள்விகள் எழுவது இயல்பானது.

மக்களை கொல்லும், சுற்றுச்சூழலை வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றிடும் வளர்ச்சி நமக்கு தேவையில்லை என்ற உணர்வு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. உலகமயக் கொள்கைகள் லாபத்திற்காக எதையும் செய்யத் தயங்காது. இன்றைய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு மிகச்சரியான உதாரணமாகும்.

தொழிற்சாலை வேண்டும், சாலை வேண்டும் என கோரிக்கை வைத்த மக்களும், இயக்கங்களும்தான் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம், எக்ஸ்பிரஸ் சாலை வேண்டாம் என்று சொல்ல வேண்டிய நிலை ஏன் உருவானது? மக்களை புறக்கணித்து விட்டு. வேலைவாய்ப்பை உருவாக்காத, புதிய தொழில் நுட்பம் இல்லாத, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வாழ்வதற்கு தகுதியற்ற நிலையை உருவாக்கியதே காரணம்.

மக்களுக்கு பயன்தராத திட்டங்களும், சுற்றுசூழலுக்கு கேடுவிளைவிக்கும் திட்டங்களும், அடிப்படையான கார்ப்பரேட் நலன் குவிக்கும் திட்டங்களாகவே உள்ளது. இவ்வகையான திட்டங்களை இந்திய நாடு முழுவதும் மிகத்தீவிரமாக சீர்திருத்தம் எனும் பெயரில் அமலாக்கி வருகின்றனர். இன்னும் அடுத்தகட்ட சீர்திருத்தங்கள் விரைவாக அமலாகும் என்ற மோடியின் அறிவிப்பை பார்க்க முடிகிறது.

மக்களின் வாழ்வை மறுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் உருவானது. தொடர்ந்து நிகழ்ந்தது. மீண்டும் மிகப்பெரிய அறப்போராட்டமாக வளர்ந்து நிற்கிறது. இதனை அரசு உணரவில்லை என்பது மட்டுமல்ல. மக்களின் உணர்வுப்பூர்வமான போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க எத்தனிக்கிறது.

பிப்ரவரி மாதம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் எழுச்சி வலுவாக வெளிப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து 100 வது நாள் வரை நிகழ்ந்து வந்தது. மே 22 அன்று மிகப்பெரிய மக்கள் திரள் எழுச்சி பெற்று அதிகார வர்க்கத்தின் அலுவலகம் நோக்கி முன்னேறியது. அவர்களின் கோரிக்கைக்கு பின் உள்ள நியாயத்தை எடப்பாடி அதிமுக அரசு புரிந்து கொள்ளவில்லை.
இப்போராட்டத்தை ஒடுக்க விரிவான திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இதனை அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்தியுள்ளன. வாழ்வுக்காக ஒன்றுபட்ட மக்களை அரசின் துப்பாக்கிகள் சுட்டுத் தள்ளியது. ஈவிரக்கம் இல்லாமல் இந்த செயலை அரங்கேற்றியது. 13 பேர் படுகொலை, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடும் நிலையில் படுகாயத்துடன் மருத்துமனையில் அனுமதி,ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காயங்கள், காவல்துறையிடம் அடிவாங்காத இளைஞர்கள் இல்லை என்ற அளவிற்கு மீண்டுமொரு ஜாலியன் வாலாபாக் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.
மக்கள் போராட்டத்தை அடக்க அரசு வகுத்துள்ள எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. ஸ்னைப்பர் தூப்பாக்கிக்களைக்கொண்டு போராடும் மக்கள் குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். அதிகார வர்க்க அரசு தலை, முகம், காது, மார்பு என இடங்களை தேர்வு செய்து துப்பாக்கி குண்டுகளை சுட்டுக் கொன்றுள்ளனர்.

சுட்டுக்கொன்ற பிறகும் வெறிஅடங்காமல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மனிதத்தன்மையற்ற தாக்குதலை ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் தொடர்ந்துள்ளனர். 144 தடை உத்தரவு என்பது மக்களுக்கு மட்டும்தான். எந்த ஒரு தரங்கெட்ட செயலையும் காவல்துறை மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை.

அமைதியான போராட்டத்தை வன்முறைக்களமாக்கியது அரசும், காவல்துறையும்தான். பின்னர் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர் என்று கோரப்பற்களை மறைத்துக் கொண்டு வஞ்சகம் நிறைந்த பொய்களை அள்ளி வீசினார்கள். அதனை கால்நக்கி கார்ப்பரேட் மீடியாவும் வாந்தி எடுத்தன. வழக்கம்போல இதற்கான திட்டம் வகுத்துத் தந்தவர் வெளிநாடு சுற்றக் கிளம்பிப்போனார். பிட்னஸ் சவால்களை ஏற்றுக்கொள்ளும் அவரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட மனதில் ஈரமில்லை. இது தமிழகத்தை வெறிகொண்டு தாக்கும் வன்மமத்தின் வெளிப்பாடே .

இன்னும் சில வடிவங்களில் இதுபோன்ற குரல்கள் எதிரொலிக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவசரச் சட்டம் போடப்படும் என்று அறிவித்தது. அதனை தொடர்ந்து போராட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியது. அன்றைக்கும் இதேபோல சமூக விரோதிகள் கலந்துவிட்டனர் என்ற பொய்யைக்கூறிவிட்டு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது காவல்துறை.
சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் சமூக விரோதிகள் தான் காரணம் என பேட்டிக் கொடுத்து கொண்டிருந்தார். அதே நேரத்தில் உண்மைகளை மீடியாக்கள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அக்காட்சிகள் என்னவெனில் ஆட்டோவிற்கு தீ வைத்தது, குடிசையைக் கொளுத்தியது, மீன் மார்க்கெட்டை கொள்ளை அடித்தது, தடியடி நடத்தியது, கண்ணீர் குண்டு போட்டது, குப்பத்தை புரட்டி எடுத்தது காவல்துறைதான். காவல்துறையில் யாரும் மேலிட உத்தரவு இல்லாமல் எந்தவொரு செயலையும் செய்ய முடியாது. அதே அனுகுமுறையைதான் தூத்துக்குடியில் காவல்துறை பின்பற்றியுள்ளது. எல்லாவிதமான குற்றச் செயல்களையும் செய்து விட்டு பழியை வேறு ஒருவர் மீது போடக்கூடிய பழைய நடைமுறையே காவல்துறை இன்றும் பின்பற்றி வருகின்றனர்.

இங்கு சில கேள்விகள்

கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இல்லாமல் எங்கு சென்றார்? ஏன் சென்றார்?

துணை வட்டாட்சியர் உத்தரவு வழங்கி இன்ஸ்பெக்டர் துப்பாக்கிச் சூடு நடத்தலாமா?

அப்படி எனில் மாவட்ட எஸ்பிக்கு என்ன வேலை? உயர் அதிகாரி யார்?
கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நடந்த தீ வைப்பு சம்பவம் யார் நிகழ்த்தியது?

மக்களை சுட ஸ்னைப்பர் துப்பாக்கி பயன்படுத்தலாமா?

துப்பாக்கிச் சூடு குறித்த அரசு வழிமுறைகூட காற்றில் பறக்கவிட்டது ஏன்?

போராடும் உரிமை மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. நடைமுறையில் இல்லாமல் போனது ஏன்?
இன்னும் ஏராளமான கேள்விகள் தூத்துக்குடி மக்கள் எழுப்பி வருகின்றனர். அதில் முக்கியமானது எங்களை ஏன் சுட்டார்கள்? இதற்கு மத்திய, மாநில அரசு பதில் சொல்ல வில்லை. இதனை திசைதிருப்பவே இன்று சமூக விரோதிகள் என்று சொல்லி ஏமாற்றப் பார்க்கின்றனர்.
இதைத்தான் ரஜினி வழிமொழிந்து உள்ளார். காலம் காலமாய் போராடுபவர்களை மக்கள் தோழர்கள் என்றும், அதிகார வர்க்கம் அவர்களை சமூக விரோதிகள் என்றும் அழைப்பதுதான் வரலாறு. அதற்கு இப்போராட்டமும் விதி விலக்கல்ல.

ஸ்டெர்லைட் ஆலையை முடுவதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது உண்மையான நோக்கத்துடன் போடப்பட்ட உத்தரவா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.இத்தனை நாள் போராட்டத்தின் போது மக்கள் கோரிக்கையை நிறைவேற்றாத அரசு இன்று உத்தரவிட்டதின் நோக்கம் என்ன? இதனை முன்பே செய்து இருந்தால் உயிர்ப்பலி நடந்து இருக்காதே? கேள்விகள் இன்னும் உள்ளது. ஆனாலும் மக்கள் திரண்டெழுந்து இந்நிலைக்கு அரசை கொண்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அமலாக்க போராட்டத்தில் உருவான சாதி, மத உணர்வுகளை கடந்த ஒற்றுமையை பாதுகாத்திட வேண்டியது அவசியமாகும். இன்று அதனை பிரிக்க சில சக்திகள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகின்றது.

மக்களின் வலிமையான ஆயுதங்களாக முழக்கம், உயர்த்தப்பட்டுள்ள கோரிக்கை பதாகை, ஒற்றுமை ஆகியவை மாறியுள்ளது. ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை மூடு என்ற போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வெற்றிக்காக எளிய மக்கள் வீர மரணமடைந்துள்ளனர். வடசென்னை, சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் 26 பேர் சிறை சென்றுள்ளனர். மகத்தான தியாகங்கள், போராட்டங்கள் மூலமாக மக்கள் அடுத்தகட்டத்தை அடைந்துள்ளனர்.
நியாயத்திற்கான பெரு நெருப்பு இப்போராட்டங்களின் வாயிலாக மக்கள் மனதில் பற்றவைக்கப்பட்டு, எரியத்துவங்கியுள்ளது. லாபம் மட்டும் எனக்கு, மற்றதெல்லாம் உனக்கு என்ற உலகமயக்கொள்கைக்கு எதிராகத் திரண்ட மக்கள் திரள்தான் இவை. இப்போராட்டங்களை மேலும் வலுப்படுத்துவதும், வளர்த்தெடுப்பதும் நமது பணியாகும். இப்போராட்டத்தில் விரிவான பிரச்சாரம், மக்களின் பங்கேற்பு, அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவைதான் வெற்றிக்கு பிரதான காரணங்கள் ஆகும்.

இதுபோன்ற சுற்றுச் சூழல் சார்ந்த மக்கள் விரோத திட்டங்கள் கடற்கரை
யோர ரசாயன மண்டலம், பசுமை வழிச்சாலை ஷெல், மீத்தேன் திட்டங்கள் சாகர்மாலா, துறைமுகம் திட்டம், கூடங்குளம் 3,4 அணு உலை விரிவாக்கத்திட்டம் என வரிசையாக உள்ளன. இந்நிலையில் தமிழக நலன்களை பாதுகாக்கும் எழுச்சிகள் அடங்கப் போவதில்லை. தொடர்ந்து முன்னேறும். போராட்டத்தின் விளை பொருளாக வெற்றி என்பது மக்கள் வசமாகும்

Related Posts