இலக்கியம்

எளிய மனிதர்களின் வாழ்க்கையைப்பேசும் “பதிலிகள்”

வடசென்னையின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவரான தோழர் மணிநாத், பல்வேறு காலகட்டங்களில் எழுதிய 15 சிறுகதைகளைத் தொகுத்து “பதிலிகள்” என்னும் பெயரில் காவ்யா பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறது.

ஒவ்வொரு கதையும் எளிய மனிதர்களைக் கதைமாந்தர்களாக வைத்து எழுதப்பட்டிருக்கும் கதைகளாக இருக்கின்றன. அதிகமான கதைகளில் அஞ்சல்துறையிலும் கொரியரிலும் பணிபுரியும் ஊழியர்கள் குறித்து மிகநெருங்கி அவர்களது வாழ்க்கையை எழுதியிருக்கிறார். அவரும் அஞ்சல்துறையில் பண்புரிந்தவர். தான் வாழும் சூழலையும் சுற்றுப்புறத்தையும் உற்றுநோக்கி, அவற்றை கதைகளாக்கி, அச்சூழலை பொதுச்சமூகம் உணரச்செய்யும் வேலையை அழகாகச் செய்வதே ஒரு எழுத்தாளனின் தலையாய கடமை. அதனை நூலாசிரியர் மணிநாத் வெகுசிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக அஞ்சல்துறையில் தற்கால ஊழியர்களாக இருக்கும் தொழிலாளர்களைப் பற்றிய அந்த ‘பதிலிகள்’ கதையைப் படிக்கையில், நவீன அடிமை முறையில் சிக்குண்டவர்களாக வாழும் அவர்களது நிலைமை நமக்கு நன்கு உணர்த்தப்பட்டிருக்கும். ‘நாய்கடி வாங்காத அஞ்சல்காரர் உண்டா’ என்று போகிறபோக்கில் ஓரிடத்தில் சொல்லியிருப்பார். தற்காலிக ஊழியர்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட காலத்தையும் தாண்டி, தற்போது நிரந்தர ஊழியர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள், அழுத்தங்கள் என அனைத்தையும் பதிலிகள் மற்றும் எதிர்பார்ப்புகள் என இரு கதைகளிலும் கதைமாந்தர்கள் மூலமாக பேசியிருப்பார்.

‘வீடு’ கதையில் அஞ்சல்துறையில் உண்டான நெருக்கடிக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்துவரும் கொரியரில் பணிபுரியும் தொழிலாளரின் வாழ்க்கையைப் பேசியிருக்கிறார் நூலாசிரியர். நகரங்களை நோக்கித் தள்ளப்படும் மக்களின் வாழ்க்கை, எந்திரத்தன்மையாகவும், அழுத்தமிக்கதாகவும், வாடகை வீட்டு அவலங்களைக் கொண்டதாகவும் இருப்பதையும் இக்கதையில் காணலாம்.

டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியரைப் பற்றிய கதையும் கண்ணீர்க்கதையாகவே இருக்கிறது. தொழிலாளிக்கான மதிப்பும் மரியாதையும், பொதுச்சமூகத்தில் அவர்கள் பணிபுரியும் தொழிலுக்கான மரியாதையை ஒத்ததாகவே இருக்கிறது. கையால் மலமள்ளும் தொழிலை ஒழிப்பதற்கு பதிலாக, அதில் பணிபுரியும் தொழிலாளர்களை இழிவாகப் பார்க்கும் சாதிய சமூகம்தான், டாஸ்மாக்கில் பணிபுரியும் தொழிலாளர்களை சமூகவிலக்கம் செய்துவிட்டதைப் போல நடத்துகிறது. இதனை ‘கானல் நீர்’ கதையில் காணலாம்.

மக்களை முட்டாள்களாகவே வைத்துக்கொண்டு, ஓட்டுச்சீட்டை அதிகாரமற்ற வெறும்பொருளாக சித்தரித்து, ஆட்சியதிகாரத்தை தொடர்ந்து தன்வசம் வைத்துக்கொள்கிறவர்களைப் பற்றிய கதையாக இருக்கிறது ‘லவகுசா பாலம்’. வாழவழியும் ஆத்தைகடக்க பாலமும் கேட்டால், ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். வழிபடக்கோவில் தருகிறோம்’ என்கிற மக்களின் உண்மையான பிரச்சனைகளை திசைதிருப்புவதில் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்கு நிகர் அவர்களே என்பதை இக்கதை சொல்கிறது.

போராட்டமே வாழ்க்கையாக வாழும் கணவனுக்கும், அதனை வெறுக்கும் மனைவிக்கும் இடைவிடாத சண்டையும் சச்சரவுமுமாகவே இருக்கையில், ஒருகட்டத்தில் ஊரில் வருகிற ஒரு பிரச்சனையில் தானும் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்த ஊரும் பாதிக்கப்படுகையில், கணவனின் உந்துதலின்றி போராட்டக்களத்தில் குதிக்கிற மனைவியின் கதையைப் பேசுகிறது ‘அவள்’.

சாதிகள் பிரிக்கும் காதலே சமூகத்தில் அதிகம் என்கிற சூழலில் சாதியால் தன் காதலை இழந்து பிடிக்காதவனுடன் வாழும் ஒரு பெண், ‘ஆனது ஆச்சு போனது போச்சி’ என வாழ்வதா அல்லது தனக்கான வாழ்க்கையைத் தேடிப்போவதா என்கிற இருதலைக்கொள்ளி எறும்பாக தவிப்பதைப் பேசும் ‘நீர்க்கோடுகள்’ கதை.

2016இல் வந்த சென்னை மழையையும் செம்பரம்பாக்கம் ஏரியைத் துறந்துவிட்ட தமிழக அரசையும் நினைவுபடுத்துகிறது ‘வெள்ளப்பெருக்கு’ சிறுகதை. அக்காலகட்டத்தின் சூழலில் அவதிப்பட்ட பலதரப்பு மக்கள், அவர்களை வஞ்சித்தும் ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்திய ஆட்சியாளர்கள் என அனைத்தையும் இக்கதையில் பட்டவர்த்தனமாகப் பதிவுசெய்திருக்கிறார் ஆசிரியர்.

‘யாரெல்லாம் கல்வி கற்கலாம், யாரெல்லாம் கல்விகற்கக்கூடாது, எந்தசாதி என்ன செய்யவேண்டும்’ என்கிற சாதிய வன்கொடுமையினைப் பேசும் கதையாக எழுதப்பட்டிருக்கிறது ‘படிப்பு’ கதை. இயல்பாகவும் எளிதாகவும் கிடைக்கவேண்டிய படிப்புகூட, ஒடுக்கப்பட்ட சாதிமக்களுக்கு எட்டாக்கனியாகவும், அதற்காக அவர்கள் படும்பாட்டினையும் இக்கதையில் காணலாம்.

ஏழ்மையையும் பசியையும் நன்கு உணர்ந்த சத்துணவு ஊழியரின் கதையான ‘பசி’, பசியின் கொடூரத்தையும், அவரது மனிதநேயத்தையும் பேசுகிறது.

இச்சிறுகதைதொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தகதை எனச்சொல்வதானால், ‘உறுத்தல்’ எனலாம். தற்செயலாக தன்காதலிக்காக கருக்கலைப்பு மாத்திரையை வாங்கிக்கொடுத்த செய்தி ஊரில் பரவ, பல பெண்களுக்கு தொடர்ச்சியாக வாங்கிக்கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறான் கதையின் நாயகன். ஒருகட்டத்தில் அதனை நிறுத்தவேண்டிய நிலைக்கு போகிறபோது, ஏற்படும் விளைவு விபரீதமாக முடிய, அதுவே அவனுக்கான ஆயுள்முழுக்க உறுத்தலாக மாறுகிறது. குடும்பக்கட்டுப்பாடு என்பது ஆண்களைச் சார்ந்தது என்பதிலிருந்து முழுக்க முழுக்க பெண்களைச் சார்ந்ததாக மாற்றப்பட்டு, அவர்களது உடல்மீதான வன்முறையாக மாற்றப்பட்டிருக்கும் அரசியலையும் இக்கதை தொட்டுச்செல்கிறது.

சாதியால் ஆண்டைகளாக இருக்கிறவர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்து, அனைவருக்குமானதாக மாற்றுவதே நமது இலட்சியமாக இருக்கவேண்டுமென்பதையும், அதிகாரம் கையில் வந்ததும், தன்னைவிட சாதியாலும் வர்க்கத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களை ஒடுக்குவதற்கு அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பதையும் பேசுகிறது ‘ஆண்டை’ கதை.

தொழிலாளர் பிரச்சனைகள், அதற்கான தீர்வாக அவர்கள் நகரவேண்டிய பாதைகள், சமூகப் பிரச்சனைகள், அதில் சிக்கித்தவிக்கும் மனிதர்கள், சாதியும் வர்க்கமுமாக ஒடுக்கப்பட்டவர்களை சுரண்டும் சூழல்கள், மனித உறவுகளுக்கிடையிலான நியாய தர்மங்கள், ஆட்சியாளர்களை நோக்கிய தொடர்கேள்விகள் என இந்நூல் முழுவதும் எளிய மக்களின் வாழ்க்கையை சமூக யதார்த்தங்களோடு இணைத்துப் பேசுகிறது.

-இ.பா.சிந்தன்

Related Posts