இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

எல்லாக் காலத்துக்குமான ஒரு நீதிக் கதை: ஓநாயும், ஆட்டுக்குட்டியும்!

ஒரு முறை தியோடர் பாஸ்கரிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். “புத்தகங்கள் படிக்கும் போது அதில் வாசகனின் பங்களிப்பு செய்வது போல் , படங்களில் பார்வையாளனை பங்கெடுக்கச் செய்ய முடியுமா?” என்று அவர் சொன்ன பதில் நினைவில்லை. ஆனால் அதற்கான பதில் இந்த படத்தில் இருக்கிறது. இதில் பார்வையாளன் ஒரு பங்கேற்பாளன் ஒவ்வொருவனுக்கும் ஏற்றார்போல் இந்த படம் விரிகிறது. த்ரில்லர் என்றும் ஆக்ஷன் என்றும் கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்கிற நீதியை போதிக்கிற படம் என்றும் ஒரு சிலர் இந்த படத்தை வகைப்படுத்திக் கொண்டிருக்க எனக்கு இது நந்தலாலாவின் இரண்டாம் பாகம் போலதான் பட்டது.

இந்தப் பதிவில் இசையைப் பற்றியோ கேமரா ஷாட்களைப் பற்றியோ குறியீடுகள் பற்றியோ சொல்லவில்லை.(எழுதினால் நாற்பது பக்கத்திற்கு குறையாமல் வரும்)ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ன சொல்ல வருகிறது என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

நாம் எல்லோருமே சிறுவயதில் பள்ளியிலோ, அல்லது வேறெங்கோ ஈசாப்பின் நீதிக் கதைகளை கடந்துதான் வந்திருப்போம். இலக்கியத்தில் நீதிக் கதைகளின் அவசியம் என்பது காலத்திற்கேற்ப மாறுபடுகிறது. ஜெயகாந்தனின் கதைகளை கூட நவீன காலத்தின் நீதிக் கதைகள் என்றே கூறலாம்.
எல்லோரும் மனிதர்களை வைத்துக் கதைகள் சொல்லிக் கொண்டிருந்த போது ஈசாப் மட்டும் விலங்குகளை கதாபாத்திரங்களாக கொண்டு நீதிக் கதைகளை சொன்னார். காடு என்பது நகரத்தின் குறியீடாகவும், ஒவ்வொரு விலங்குகளும் அவற்றின் பிரதான குணநலன்களுக்கு ஏற்ப அதே குணங்களுடன் வாழும் மனிதர்களுடனும் பொருத்திப் பார்த்தும் அக்கதைகள் புரிந்து கொள்ளப்பட்டன. ஆனால் கால ஓட்டத்தில் விலங்குகள் அல்லது விலங்குகள் பற்றிய நம் புரிதல் மாறாவிட்டாலும், மனிதர்களும் நீதியும் ரொம்பவும் மாறிவிட்டது. நல்லவன், கெட்டவன் என்பது போன்ற வித்தியாசங்களும். சமூக அந்தஸ்து, படிநிலைகள் போன்ற விஷயங்களும் மாறிவிட்டதால் இப்போது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓராயிரம் விலங்குகள்.

ஆனால் இன்றைய என்று அல்ல எல்லா காலத்துக்குமான ஒரு நீதி இருக்கின்றது அது அன்பின் நீதி. சக மனிதன் நல்லவனா, கெட்டவனா என்பது போன்ற வரையறைகளை தாண்டி எளிமையான அன்பை பரிசளிப்பது என்பது இந்த சமூகத்தில் நாம் வாழ்வதற்கான அடிப்படை செயல்பாடுகளுள் ஒன்று. ஆனால் எல்லா செயல்களும் விளைவுகளை கருத்தில் கொண்டு செய்யப்படும் காலகட்டத்தில் அன்பென்பது அவ்வளவு எளிதாக தரவோ, பெறவோ படுவதில்லை.

தமிழின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான ஆரண்யகாண்டத்தில் நேரடியாக சொல்லப் படாவிட்டாலும். நகரம் என்பது பெருங்காடாகவும் அதன் கதாபாத்திரங்கள் சில விலங்குகளாகவும் உருவகப் படுத்தப் பட்டிருப்பர். ஓநாயும் ஆட்டுகுட்டியும் அதனை ஒரு ஈசாப் கதையின் எளிமையோடு முன்வைக்கின்றது.
இந்த படத்தின் கதை, முன்வைக்கும் செய்தி, அரசியல் இது எதுவுமே நாம் கேள்விப்படாத விஷயங்கள் அல்ல. ஏற்கனவே நாம் துண்டு துண்டாகவோ அல்லது முழுமையாகவோ கேட்டிருக்க கூடிய கதை. எந்த சிக்கல்களும், தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய குறியீடுகளும் அற்ற மிஷ்க்கினே சொல்வது போன்று ஒரு எளிமையான யுனிவர்சல் ஸ்டோரி.

படத்தில் பெரும்பாலான காட்சிகள் இருளில் இருக்கின்றன. அது தான் மிஷ்கினின் ஹோம் கிரவுண்ட். இந்த படத்தில் மிகச் சிறிய நேரமே பகல் வருகிறது.ஆனால் இருளை விட மிகக் கோரமாய் இருக்கிறது பகல். இரவில் நடக்கும் கொலைகளுக்கு எல்லாம் பகலில் தான் திட்டம் தீட்டப்படுகின்றன. இரவில் ஒரு உயிரைக் காப்பாற்றிய ஸ்ரீ கதாப்பாத்திரத்தை பகலில் அதே உயிரைக் கொல்லத் தூண்டுகிறார்கள். அதுவும் ஒரு இருட்டறையில் செயற்கையான ஒரு இருளில் பகல் தன் திட்டத்தைத் தீட்டுகிறது.
மிஷ்கினின் பாஷையில் சொல்லப் போனால் இந்த படத்தில் இருள் ஒரு ஓநாய் பகல் ஒரு கரடி. இருளில் ஆட்டுக்குட்டிகள் ஒழிந்து கொள்வதற்கு இடம் உண்டு பகலில் அவற்றுக்கு சாவதைத் தவிர வேறு வழி இல்லை. இப்படத்தில் இருளில் ஒளிரும் மஞ்சள் விளக்குகள் எப்போதும் அன்பைக் கோரிக் கொண்டே இருக்கின்றன. அன்பை போதிக்கும் ஒரு படத்தில் இத்தனை கொலை எதற்கு என்கிற கேள்வியும் எழுகிறது. ஒரு துப்பாக்கியால் அன்பை வேறெப்படி வெளிக்காட்ட முடியும்.

மிஷ்கின் மேல் ஒரு குற்றச்சாட்டு எப்போதும் வைக்கப்படுகிறது. கதாப்பாத்திரங்கள் செயற்கைத்தனமாக இருக்கிறது என்று. அது வேண்டும் என்றே வைக்கப் பட்டதாகத் தான் இருக்கும். இந்த செயற்கைத் தனமான எதிர்வினைகள் சித்திரம் பேசுதடி படத்தில் இருந்தே இருக்கிறது. இது அஜாக்கிரதையால் நிகழ்ந்தது இல்லை. மிக இயல்பான ஒரு கதையில் செயற்கையான காதாப்பாத்திரங்கள் தான் மிஷ்கினின் திரைமொழிக்கு உயிர் கொடுப்பது என்று நினைக்கிறேன்.

இயல்பான இவ்வுலகத்தில் நாம் அனைவருமே செயற்கையாக சுற்றித் திரிகிறோம். எல்லா இயற்கையான விசயங்களையும் நாம் செயற்கையாகவே செய்கிறோம். பிடித்த நபரிடம் காதலை வெளிப்படுத்துவதில் இருந்து இப்போது இந்த கட்டுரை எழுதுவது வரை எல்லாவற்றிலும் செயற்கைத்தனம் படிந்து கிடக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் அந்த செயற்கைத்தனமான எதிர்வினைகள் அமைகின்றன. ஒரு எதார்த்தப்படத்தில் செயற்கையான ஒரு கதாப்பாத்திரம் இருப்பதற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. மிஷ்கின் படத்தில் வெளிப்படுத்தப்படும் உணர்வுகள் அனைத்துமே இயல்பானதாய் இருக்கும் அதை வெளிப்படுத்தும் முறை மட்டுமே செயற்கையாக இருக்கும்.

அதே போல் சில விசயங்களை மிக மெதுவாக செய்வது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பது பிறகு தீடிரென பரபரப்பாக ஓட ஆரம்பிப்பது இவை எல்லா மிஷ்கின் படத்தில் இருக்கும் இதிலும் இருக்கிறது. இது எரிச்சலைடைய வைக்கிறது என்று ஒரு நண்பர் சொன்னார். எனக்கு நினைவுக்கு வருகிறது நேற்று காலை சிந்தன் என்னை ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பற்றி எழுதச் சொன்னார். எழுத ஆரம்பித்து இரண்டு வரிகளை மட்டும் டைப் செய்து விட்டு மாலை என்னால் முடியாது என்று அவருக்கு சொல்கிறேன். அடுத்த நாள் காலையான இன்று தெரிக்க தெரிக்க தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். (இவ்வளவு அவசரகதியாய் எழுதவேண்டும் என்று கட்டாயமும் இல்லை). இதை ஒரே ஷாட்டில் பார்க்கும் போது உங்களுக்கு எரிச்சல் வரத் தான் செய்யும்.Director_Mysskin

மிஷ்கினின் சில கிளிஷேக்கள் இதில் இல்லை. எனக்கு மிகவும் பிடித்த கால் ஷாட்களும் இல்லை ஒவ்வொருவராக வந்து அடிவாங்கும் காட்சிகளும் இல்லை. என்னை எரிச்சலூட்டும் மஞ்ச சேலை டான்ஸ் இல்லை. ஆனால் தொடர்ந்து மிஷ்கினின் படம் பார்த்து வருபவருக்கு இந்த படத்தின் ஒரு ஷாட்டைக் காண்பித்தால் கூட மிஷ்கினின் படம் என்று சொல்லிவிடுவார்கள். முத்தத்தைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாது அதைக் கொடுத்தோ வாங்கியோ தான் அனுபவிக்க முடியும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் அப்படித்தான்.

கடைசியாக “இது மிகவும் எளிமையான ஆனால் எல்லாக் காலகட்டதிற்குமான ஒரு செய்தியை சொல்லும் படைப்பு. மிஷ்கின் நமது நம்பிக்கைகள் காப்பாற்றியதுடன் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளார்.”

(பி.கு : எனது ப்ரோ வெற்றிவேல் அவர்களுக்கு இந்த பதிவு ஒரு ட்ரிபியூட் )

Related Posts