பிற

என்ன தவறு செய்தார்கள் . . . . . . . . . . !

ஊரெங்கும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள். சேலம் மாவட்டத்தின் ஓர் மூலையில் இந்திய வரைபடத்தின் சிறு துண்டு உதாரணமாக ஊர், பின்னே கரட்டருகே அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலித் குடும்பங்களின் கொட்டகைகள். இழவு வீடு. சமீப காலமாக இந்தியாவே இழவு வீடு போல் தான் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நிலைகுத்திய கண்களுடன் பித்துப் பிடித்தவர் போல் அமர்ந்திருக்கிறார் ராஜலட்சுமியின் அம்மா சின்னப்பொண்ணு. வருபவர்கள் எல்லோரும் ஆறுதல் சொல்கிறார்கள். உடன் நிற்கிறார்கள். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டத்திற்கு பிறகு 3.11.2018 அன்று மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வந்திருக்கிறார். 11 நாட்களுக்குப் பிறகு குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோழர் திருமா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. ராஜலட்சுமியின் பெற்றோரோடு முதலமைச்சரை சந்திக்க இருப்பதாக தோழர் திருமா அறிவித்திருக்கிறார்.

கடந்த பத்தாண்டுகளில் 2016 லிருந்து தலித்துகள் மீது நடக்கும் வன்முறைகள் 25% அதிகரித்திருப்பதாக தேசிய குற்றப் புலனாய்வுத் துறை அறிக்கை கூறுகிறது. கொலை சம்பவம் தானே . இதில் சாதி எங்கே வந்தது என கேட்பவர்கள் ஒரு முறை அந்த கிராமத்திற்கு போய் வாருங்கள். இந்திய சமூகம் என்பதே தலித்துகளுக்குப் பாதுகாப்பற்றதாகத் தான் இருக்கிறது. Dalits are most vulnerable in Indian society. அதிலும் தலித் பெண்கள் நீருக்காகவும் கழிப்பிட வசதிக்காகவும் (திறந்த வெளியானலும் ) கூட ஆதிக்க சாதியினரைச் சார்ந்திருக்கிற வாழ்நிலையில், அவர்கள் தானும் மனுஷிதான் என்பதை சொல்லவே அச்சப்பட்டு வாழ்கிற சூழல். இப்படியான சூழலில்தான் தனக்கு நேர்ந்த வன்முறையை தன் அம்மாவிடம் சொன்னதற்காக கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள் ராஜலக்ஷ்மி. வேடிக்கை பார்ப்பதற்காக அன்றி வேறெதற்கும் உடன் நிற்காத ஊர் சனம். தன் பள்ளிக் கூடத்தில் படித்த பிள்ளை இப்படி செத்துப் போய் விட்டாளே என துக்கம் விசாரிக்கக் கூட வராத ஆசிரியர்கள். சட்டப்படி வந்து பார்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருந்தும் சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாக வந்து தன் பணிகளை செய்திராத மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் தனித் தொகுதி MLA . இப்படித் தான் அரசின் அத்தனை துறைகளும் சமூகத்தின் அத்துணை பொது நடைமுறைகளும் மனங்களும் தலித் மக்களை புறக்கணித்துக் கொண்டிருக்கின்றன.

சம்பவம் நடக்கும் போது அவள் பூப்பெய்தி இருந்திருக்கிறாள். இரண்டு நாட்களாக பதட்டமாக சோர்வாக இருந்திருக்கிறாள். கொலை சம்பவத்தன்று அம்மாவிடம் இனி பள்ளிக்கூடம் போக மாட்டேன் என சொல்லி இருக்கிறாள். ஏன் எனக் கேட்டதற்கு பதில் சொல்லாமல் தவிர்த்தவள், பிறகுதான் கொலையாளி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிப்பதாக சொல்லி இருக்கிறாள். இவை நடந்து 5 வது நிமிடம் அவன் வந்து பிள்ளையை வெட்டிப் பிணமாக்கி இருக்கிறான். வீட்டில் தாய் இருக்கும் போதே ஒரு குழந்தையை இழுத்து வந்து கழுத்தை அறுக்கிற திமிரை அவனுக்கு எது கொடுத்தது ? ஒரு ஆதிக்க சாதியினரின் வீட்டில் தனியாக ஒருவன் நுழைந்து இதே காரியத்தை செய்து விட முடியுமா? காரிய சாத்தியங்களைத் தாண்டி அப்படி ஒரு உளவியல் துணிவு ஒருவனுக்கு வந்து விடுமா? இங்கு தான் சாதி வேலை செய்கிறது. அது அவனை அதிகார மிக்கவனாகவும் அந்தக் குடும்பத்தை கேட்பாரற்ற ஏதிலிகளாகவும் நினைக்க வைத்திருக்கிறது. உண்மையும் அப்படித் தானே இருக்கிறது.

இந்தக் கொடூரத்தை செய்து விட்டு காவல் நிலையத்தில் அவன் பைத்தியம் போல் நடித்திருக்கிறான். அது உண்மையில்லை என போலீஸ் தரப்பு உறுதி செய்திருக்கறது. இந்த வழக்கில் சில ஊடகங்கள் சம்பவம் நடக்கும் வரை நல்ல உறவு என சொல்வதெல்லாம் குற்றவாளிக்கு சாதகமான statement. அது உண்மையற்றதும் கூட. ஒடுக்கப் பட்ட மக்கள் உட்கார்ந்த இடத்தை சாணியிட்டுக் கழுவி விடும் தீண்டாமை உள்ள இடத்தில் நல்ல உறவு என்பது எப்படி சாத்தியம்? இது திடீர் sudden provocation என கொலையாளி தன்னை defend செய்து கொள்ளத்தான் உதவும்.

சம்பவத்தின் போது கொலையாளி தினேஷ் கொலை செய்துவிட்டு வருவதற்காக இருசக்கர வாகனத்தில் அவனை அழைத்துச் செல்ல அவன் மனைவியும் தம்பியும் காத்திருந்ததோடு ‘இதை ஏன் எடுத்துட்டு வந்த’ என்று ராஜலட்சுமி தலையைக் கையில் வைத்திருந்த கொலையாளியை நோக்கி அவன் மனைவி சாரதா கேட்டிருக்கிறாள். இதை பார்த்த கண்ணுற்ற சாட்சியங்கள் இருக்கிறார்கள். ஆக இது sudden provocation ஆல் நடந்த சம்பவம் இல்லை. அவர்கள் இருவரும் சம்பவம் நடக்க இருப்பதை முன் கூட்டியே அறிந்திருக்கிறார்கள். திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும் he is not a lunatic person. ஆக சட்டப்படியான எந்த விதிவிலக்குகளும் பொருந்தாத பொருத்த முடியாத திட்டமிடப்பட்ட படுகொலை இது. மட்டுமல்ல சாரதாவும் தினேஷ் தம்பியும் குற்ற உடந்தைகள். அவர்களுக்கும் குற்றவாளிக்குக் கிடைக்கும் அதே தண்டனை உண்டு. ஆனால் அவர்கள் இன்னும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப் படவில்லை. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

SC ST Prevention of Atrocities Actல் பதிவு செய்யப் படும் வழக்குகளில் 30 சதவீதத்திற்கும் குறைவான வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப் படுகிறார்கள். பெரும்பாலும் technical aspectல் தப்பிக்க முயற்சிப்பதும் பாதிக்கப் பட்ட தரப்பை சாட்சிகளை மிரட்டி வழக்கை பலவீனப் படுத்துவதும் அதற்கு அரசு அதிகார அமைப்புகள் உறுதுணையாக இருப்பதும் தான் நடந்து கொண்டிருக்கிறது. இதனை சட்ட ரீதியாக எதிர் கொள்ள நாம் தயாராக வேண்டும்.

எல்லாவற்றையம் தாண்டி நம் மனங்களைத் துளைப்பது ராஜலட்சுமி கடைசியாய் கேட்ட கேள்வி . நான் என்ன குற்றம் செய்தேன். உண்மையில் அவள் என்ன குற்றம் செய்தாள். நமக்கு நமே கேட்டுக் கொள்வோமே? உப்பிப் பிணமாகக் கிடைத்த நந்தினியும், சிதைக்கப்பட்ட ராகவியும், இளவரசனும், சங்கரும்,கோகுல்ராஜும், சிறுநீர் கழிக்க தன் குடிசையை விட்டு இரவு வெளியே வந்த போது வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டாலே சேலத்திலே ஒரு தலித்குழந்தை அவளும், உத்திரப்பிரதேசத்திலே மரத்தில் பிணமாகத் தொங்கவிடப் பட்ட இரு தலித் சிறுமிகளும் என்ன குற்றம் செய்தார்கள். நான் என்னண்ணே தப்பு செஞ்சேன் என்கிற கேள்வி. ஆயிரம் ஆண்டுகளாய் பொது சனத்திடம் தலித்துகள் வைத்துக் கொண்டிருக்கும் அந்தக் கேள்வியை அவள் இறுதியாகக் கேட்டுவிட்டுப் போயிருக்கிறாள்.

உண்மையில் தவறு எங்கே இருக்கிறது என்பதை உணர முயற்சிப்போம். நான் சாதியே பார்ப்பதில்லை என சொல்லிக் கொண்டு உட்சாதியில் கல்யாணம் செய்வது, பேர் வைப்பது தொடங்கி சாவு வரை சடங்குளைக் கடைபிடிப்பது, இடஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேசிக் கொண்டு அலைவது, எந்தத் துறையில் இருந்தாலும் தன் சாதியினரைக் கண்டடைந்து கள்ளக் கூட்டு வைப்பது, ஒடுக்கப்பட்டோர் ஒன்றிணையும் போது பதற்றத்திற்குள்ளாகித் தூற்றுவது இவை எல்லாமும் கொலை செய்வதற்கு ஈடான, சாதியின் பேரால் கழுத்தை அறுக்கிற செயல்கள் தான் என்பதை புத்தியில் வைத்துக் கொள்வோம் .

நாளை தீபாவளி. வீட்டில் பட்டாம்பூச்சி போல் சுற்றிக் கொண்டிருந்த மகளை இழந்த அந்தக் குடும்பம் நீதி கேட்டு தெருவில் நிற்கிறது. மகள் கழுத்தறுக்கப்பட்டு தலையும் உடம்பும் தனியே துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அந்த தாய் கண்களுக்கு எந்த வெளிச்சமும் தெரியப்போவதில்லை. நாம் பார்க்கிற இந்த ஒளியெல்லாம் ஒடுக்கப்பட்டோர் வாழ்வின் இருள் மீது கட்டமைக்கப்பட்டது தான் என்பதை உணர்ந்து கொள்வோம். எல்லோருக்கும் சம நீதி என்பதே மனிதகுலத்தின் மெய் வெளிச்சம்.

 

– த.ஜீவலட்சுமி.

Related Posts