புதிய ஆசிரியன் மார்ச் 2015

என்னைத் தெரியுமா?

டாக்டர் ஜி. ராமானுஜம்
கல்யாண வீடுகளில் பந்திக்கு முந்தும் அவசரம் எல்லோரையும்விட  மருத்துவர்களுக்கு இருக்கும். ஏனென்றால் பெரும்பாலும் ஒருவரது வாயில் தெர்மாமீட்டரை வைத்துவிட்டுத்தான் கல்யாண வீட்டிற்கு வந்திருப்பார்கள். அவசரமாகப் போய் அதை எடுக்க வேண்டியிருக்கும். அந்த அவசரத்திலும் மண்டபத்தையே மருத்துவமனையாகப் பாவித்து “இந்த நடுமுதுகுல நாலு நாளா ஒரு நமைச்சல்” என்று மருத்துவ ஆலோசனை நடத்துவார்கள் சிலர். அவர்களைக்கூட விட்டுவிடலாம். ஆனால் என்னைத் தெரிகிறதா என்று கேட்டபடி ஒரு கொலைவெறியுடன் ஒரு கும்பல் வரும் பாருங்கள். கூலிப்படையினர் தோற்றார்கள்.
இதுபோல் பலரும் நேரிலும் தொலைபேசியிலும் திடுக்கிட வைப்பார்கள். நான் தான் பேசறேன். ஏழு வருஷத்துக்கு முன்னாடி காட்டினேனே. இப்பவும் அதே மாதிரி இருக்கு. அந்த மாத்திரையையே சாப்பிடலாமா? என்பார்கள். விடுகதை சொன்னாலாவது விடை சொல்லலாம். விடுகதையே சொல்லாமல் விடை சொல்லு என்றால் என்ன செய்வது என்று கவுண்டமணி ஒரு திரைப் படத்தில் சொல்வதுபோல் குழப்பமாக இருக்கும்.
என்னைத் தெரியாதா? நீ பிறந்த அன்னிக்கு ஹார்லிக்ஸ் பாட்டிலெல்லாம் வாங்கிட்டுவந்துஉன்னைப் பார்த்தேனே…அதுக்குள்ள மறந்துட்டியா? என்பார்கள். இதைவிடக்கொடுமைஉச்சி வெயிலில் ட்ராஃபிக்கில் உயிரைப் பணயம் வைத்து வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது நாஸாவின் விண் கலத்திலிருந்து நடுப்பயணத் தில் தப்பித்து வந்தவர்போல் ஹெல் மெட், கண்ணாடி, கையுறை என்று உடலில் ஒரு இஞ்ச் தோலைக்கூடச் சூரியனுக்குக் காட்டாமல் மறைத் திருக்கும் ஒருவர் சிக்னலில் நமது அருகில் நின்று கையசைத்து என்னைத் தெரியுதா? எப்படி இருக் கீங்க என்பார். மயானத்தில் வெட்டி யானாக இருந்த அரிச்சந்திரனைச் சந்திரமதிக்கே அடையாளம் தெரிய வில்லையாம். இந்தக் கோலத்தில் இவர் செல்ஃபி எடுக்க செல் ஃபோனைப் பார்த்தாலும் நம் போனில் வேறு யாரோ என்று நினைத்துத் திகைத்து விடுவார். இதுபோல் நம்மைத் திகைக்க வைப்பவர்களைப் பழி வாங்கச் சில வழிகள் உள்ளன. ஏதேனும் விசேஷ வீட்டில் என்னைத் தெரிகிறதா என்று கேட்பவர் மனைவியுடன் இருந்தால் மனைவி காதுபட உங்களைத் தெரி யாதா சார்! போன வாரம் சினிமா தியேட்டர்ல பாத்தேனே. அன்னிக்கு உங்க மனைவியோட வந்திருந் தீங்களே. ஆமா இவங்க யாரு? என்று கேட்கலாம். அதன்பின் அடுத்த விசேஷம் அவரது வீட்டில் தான்.
தொலைபேசியில் என்னைத் தெரிகிறதா என்று கேட்பவர்களிடம் அப்படியே உங்கள் தொலைபேசி யில் வீடியோ கால் போட்டுக் காட்டுங்கள். தெரிந்துவிடும் என்று சொல்லலாம். அப்படியும் விடமாட் டேன் என்றால் உங்களைத் தெரி யாதா? இந்தக் காலத்துல யாரு வாங்கின கடனை உங்கள மாதிரி ஒழுங்காக் கொடுக்கப் போறாங்க? அந்த அம்பதாயிரத்தைக் கேஷாக் கொடுக்கப் போறீங்களா இல்லை செக்காவா என்று கேட்டு பதில் அதிர்ச்சி கொடுக்கலாம்.
சமீபத்தில் தொலைபேசியில் நடந்த ஒரு உரையாடல்:
ஹலோ ராமானுஜமா?
ஆமாங்க சார்!
என்னைத் தெரியுதா?  அடடே ! உங்களைத் தெரியாதா? கே.ஜே ஜேசுதாஸ் சார்! உங்க பாட்டுன்னா எனக்கு உயிராச்சே!
ஜேசுதாஸா? நான் சுப்பிரமணியன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பதினேழு வருஷத்துக்கு முன்னாடி உங்க பக்கத்து வீட்டுல இருந்தவன்.
ஸாரி சார்! என்னால கேட்டவுடனே கண்டுபிடிக்க முடியணும்னா ஜேசு தாஸ் இல்லை பி.சுசீலா போன் பண்ணினா மட்டும்தான் முடியும்   ஆனால் எல்லோரும் அப்படி இல்லை. தத்துவஞானிகளும் தலை யில் அடிபட்டவர்களும் என்னைத் தெரியுமா என்று கேட்டால் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உண் மையில் அவர்களுக்கே அவர்களைத் தெரியாமல்இருக்கக்கூடும். தன்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்தவர்கள் என்று யாருமில்லை தானே!
(ramsych2@gmail.com 9443321004)

Related Posts