அரசியல்

என்னதான் நடக்கிறது வெனிசுவேலாவில்???

Bolivarian Republic of Venezuelaவெனிசுவேலா என்கிற தென்னமெரிக்க நாடு குறித்து ஒரு பத்தாண்டுகள் முன்பு வரை அதிகமாக கேள்விப்பட்டிருக்க மாட்டோம். 1999 வரை, அமெரிக்க ஆதரவு பொம்மை அரசுகள் ஆட்சி புரிந்து வந்த வரை மேற்குலக நாடுகளோ ஊடகங்களோ அந்த நாடு குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவுமில்லை, செய்திகளாக நமக்குத் தெரிவிக்க விருப்பப்படவுமில்லை. அதன் பிறகு 1999 இல் மக்களின் பேராதரவுடன் ஹூகோ சாவேசின் ஆட்சி மலர்ந்த பின்னர்தான், வெனிசுவேலாவை அது வரையிலும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் நீலிக் கண்ணீர் வடிக்கத் துவங்கினர்.

சாவேசும் அவரது அரசும், மக்கள் நலத்திட்டங்களையே அதற்கெல்லாம் பதிலாக கொடுத்தனர்.

 • 1999 இல் 90 பில்லியன் டாலராக இருந்த வெனிசுவேலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, தற்போது 330% வளர்ச்சியடைந்து 385 பில்லியன் டாலராகியிருக்கிறது.
 • வெனிசுவேலாவின் அயல்நாட்டு கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19% ஆக குறைந்திருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் கடனோ 106% ஆகவும், ஜெர்மனி 147% ஆகவும், ஜப்பான் 60% ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 • 1999இல் 66% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழிருந்தார்கள்; இன்றோ அது 23% ஆக குறைந்திருக்கிறது.
 • வறுமையினை ஒழிப்பதற்காக, கடந்த 14 ஆண்டுகளில் மக்கள் நலப்பணிகளுக்காக 550 பில்லியன் டாலர் செலவிடப்பட்டிருக்கிறது.
 • குழந்தை இறப்புவிகிதம் 1 லட்சத்திற்கு 27 என்கிற எண்ணிக்கையிலிருந்து, 13 ஆக குறைந்திருக்கிறது.
 • நாட்டின் எண்ணெய் வளங்களை எல்லாம் நாட்டுடைமையாக்கி, அதில் வரும் வருமானத்தை வறுமை ஒழிப்பிற்கு பயன்படுத்தியது சாவேஸ் அரசு.

  Chávez’s second term in office saw the implementation of social missions, such as this one to eliminate illiteracy in Venezuela.

 • கடந்த 14 ஆண்டுகளில் 22 புதிய பல்கலைக் கழகங்கள் துவங்கப் பட்டிருக்கின்றன. 5 லட்சம் பேர் மட்டுமே கல்வி பயின்று கொண்டிருந்த நிலைமாறி, இலவசக்கல்வியால் 25 பேருக்கு கல்வி சாத்தியமாகியிருக்கிறது. உயர்கல்வியும் கூட முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணம் என்கிற வார்த்தையே இல்லாமல் போயிருக்கிறது.
இத்தனையையும் சாதித்திருக்கிற மக்கள் நல வெனிசுவேலா அரசை தொடர்ந்து செயல்படவிடாமல் தடுக்க முயல்வது யார்? எதனால்?

வெனிசுவேலாவை ஆக்கிரமிக்க தொடர் சதி:

இலட்சினை

உலகிலேயே மிக அதிக அளவில் எண்ணை இருப்பு கொண்ட நாடு வெனிசுவேலாதான் (சவுதி அரேபியா கூட இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறது). சாவேசின் சோசலிச அரசு அமைவதற்கு முன்பு வரை அமெரிக்காவின் கைப்பாவை அரசுகள் பல ஆண்டுகளாக வெனிசுவேலாவை ஆண்டு வந்தமையால், அமெரிக்காவைப் பொறுத்த வரையில் எண்ணை இறக்குமதிக்கு வெனிசுவேலா எப்போதும் ஒரு நம்பிக்கையான நாடாகவே இருந்து வந்திருக்கிறது. பல ஆண்டுகளாக நாட்டின் ஒட்டுமொத்த எண்ணை வளமும் வெனிசுவேலாவை ஆண்டுவந்த ஆளும் வர்க்கத்தின் தனிச் சொத்தாகவே இருந்து வந்தது.

உலகிலேயே மிக அதிகமான எண்ணை இருப்பு கொண்ட வெனிசுவேலாவில் 80 சதவீதத்திற்கும் மேலான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்ந்து வந்தார்கள். வெனிசுவேலா மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஹூகோ சாவேசின் அரசு பதவியேற்ற பின் நிலைமை தலைகீழாக மாறத் துவங்கியது. பிப்ரவரி 2002 இல் வெனிசுவேலாவில் இருக்கும் எண்ணை நிறுவனங்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கியது சாவேஸ் அரசு. அதில் வரும் இலாபம் முழுவதையும் வறுமைக் கோட்டுக்குக் கீழிருக்கும் 80 % மக்களின் வாழ்க்கையை உயர்த்தப் பயன்படுத்தப்படும் என்றும் பல்லாயிரக்கணக்கான மக்களின் கரகோஷங்களுக்கிடையே அறிவித்ததோடு நிற்காமல், அதற்கு செயல் வடிவமு‍ம் கொடுத்தார்.
காலங்காலமாக எண்ணை வளங்களை சுரண்டி கொழுத்த வெனிசுவேலாவின் முன்னாள் எண்ணை முதலாளிகளும் அமெரிக்காவும் இணைந்து, வெனிசுவேலாவில் எப்படியாவது ஒரு ஆட்சி மாற்றத்தினை உருவாக்கவேண்டுமென காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் எடுத்த/எடுத்துவருகிற முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல.
 • 2002 இல் சாவேசைக் கடத்தி வைத்து, ஆட்சிக் கவிழ்ப்பினை நடத்த முயற்சித்தது அமெரிக்கா. அதனை வெனிசுவேலா மக்களே முறியடித்தனர்; (http://blog.maattru.com/2012/05/blog-post.html).
 • உலகிலேயே மிகச்சிறந்த நம்பகமான தேர்தல் முறையினைக் கொண்ட நாடு வெனிசுவேலாதான் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் குழுவே ஆய்வு செய்து பாராட்டியும் (http://www.theguardian.com/commentisfree/2012/oct/03/why-us-dcemonises-venezuelas-democracy), அதனை முறைகேடான தேர்தல் முறையென்று சொல்லி, 2005 இல் எதிர்க்கட்சியினரை பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வைத்தது அமெரிக்கா. அதன் மூலம், உலக அரங்கில் வெனிசுவேலாவின் பெயரையும் தரத்தையும் தாழ்த்திடலாம் என்கிற கணக்கினை போட்டது அமெரிக்கா. ஆனால், இம்முறையும் அமெரிக்காவின் எண்ணம் ஈடேறாமல் போனது.
 • Oil factory explosion

  2012 வெனிசுவேலா தேர்தலுக்கு முன்பாக எண்ணைக் கிணறுகள் சில தீப்பிடித்து எரிந்தது. இத்தீவிபத்திற்கு, முன்னாள் எண்ணைக் கிணறு முதலாளிகள் காரணமாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.

 • சாவேசின் மரணத்திற்குக் காரணமான கேன்சர் உருவான விதத்திலேயே மர்மங்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன.
 • சாவேசிற்குப் பின் மதுரோவும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியாத எதிர்கட்சியினர், ஒட்டுமொத்த தேர்தலையே முறைகேடாக நடந்ததென குற்றஞ்சாட்டினர். அதனைத் தொடர்ந்து நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில், எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
அடுத்த அதிபர் தேர்தல் வரை மதுரோவின் அரசை விட்டுவைத்தால், நிரந்தரமாக வெனிசுவேலாவைக் கைப்பற்றவே முடியாமல் போய்விடும் என்று கருதி, ஏப்ரல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்தே நாட்டில்  குழப்பங்களை விளைவிக்கத் துவங்கிவிட்டனர்.

Nicolas Maduro

பல முறை மதுரோவைக் கொல்ல முயற்சி நடந்தது, அவரது சீனப் பயணத்தின் போது போர்டோ ரிகோ வழியாக பயணிக் கவிடாமல் தடுத்தது, வீதிகளில் இறங்கி அரசைக் கவிழ்க்க கலவரங்களைத் தூண்டியது, தேர்தலுக்கு மறுநாளே குழந்தைகள் உட்பட பலரை அந்தக் கலவரத்தில் கொன்றது, என பலவழிகளையும் கையாண்டு பார்த்தது அமெரிக்கா.

சாவேஸ் காலத்திலிருந்தே அவரைக் கொல்ல சத்தித்திட்டம் தீட்டிவந்த அமெரிக்க சதியாளன் ரோஜர் நொரிகா மற்றும் ஒட்டோ ரெய்க் ஆகியோர், அமெரிக்காவில் நடந்த ஐ.நா. சபைக் கூட்டத்தில் பேசுவதாக இருந்த மதுரோவை கலவரமேற்படுத்திக் கொல்ல மிகப்பெரிய சத்தித்திட்டம் தீட்டியதை வெனிசுவேலா அரசு அம்பலப்படுத்தியது.

வெனிசுவேலா மீதான பொருளாதாரப் போர்:

இப்படியாக தனக்கு ஆதரவான கட்சிகளை தேர்தல்களில் வெற்றி பெற வைத்தோ, ஆட்சிக்கவிழ்ப்பினை நடத்தியோ மதுரோவைக் கொன்றோ, வெனிசுவேலாவினுள் நுழைய முடியாமல் போன அமெரிக்கா, எத்தனை மில்லியன் டாலர் செலவானாலும் வெனிசுவேலாவை தனது கைப்பாவை நாடாக மாற்றவேண்டுமென்பதற்காக தற்போது ஒரு புதுவகையான போரினை ஆயுதமாகக் கையிலெடுத்திருக்கிறது. அதுதான் “பொருளாதாரப் போர்”. வெனிசுவேலாவில் செயற்கையான பொருளாதார நெருக்கடியினை உருவாக்கி, அரசின் மீது மக்களுக்கு வெறுப்பினை உண்டாக்கி, மிகப்பெரிய குழப்பத்தினை விளைவிப்பதே இப்பொருளாதாரப் போரின் குறிக்கோள்.

இதன் முதலாவது சதியாக, 15 ஆண்டுகளாக மக்கள் நலனிற்காக உருவாக்கப்பட்டு வந்திருக்கிற உள்கட்டமைப்பு வசதியினை தகர்த்துவிட்டால், வெனிசுவேலாவின் பொருளாதார வளர்ச்சியினை தடுத்துவிடலாம் என்பது அவர்களின் கணக்கு. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திலிருந்து, வெனிசுவேலாவின் மின்சார பகிர்வு நிலையங்கள் ஒவ்வொன்றாக குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றன. மின்சாரத்தை தடைசெய்து, அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு உண்டாக்க முயல்கிற முயற்சியிது. அதனைத் தொடர்ந்து, “இருளில் வெனிசுவேலா”, “மின்சாரம் கூட வழங்காத அரசு” என்று ஊடகங்கள் மூலமாக பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டன. ஆனாலும் வெனிசுவேலா அரசு, மின்பிரச்சனையை உடனுக்குடன் தீர்த்துவருகிறது. (1)

இரண்டாவது சதியாக, உணவுப் பொருட்களை மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்யத் திட்டமிட்டது அமெரிக்க ஆதரவுக் கூட்டணி. முந்தைய ஆண்டைவிட, 30% கூடுதலாக உற்பத்தியாகியிருக்கிறது சோளம்; 5.5 லட்சம் டன் அரிசியும், 2.2 லட்சம் உருளைக்கிழங்கும் 2013இல் உற்பத்தியாகியிருக்கிறது. இறக்குமதியே செய்யத் தேவையில்லாத அளவிற்கான உற்பத்தியிது. ஆனாலும், திடீரென சூப்பர் மார்க்கெட்டுகளில் காய்கறியோ, பாலோ, அரிசியோ கிடைக்காமல் போனது. அதிரடியாக அரசு அதிகாரிகள் சூப்பர் மார்க்கெட்டினுள் நுழைந்து பார்த்தால், அவர்களது குடோனில் டன் கணக்கில் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள். உற்பத்தியான உணவுப் பொருட்களை மொத்தமாக விலைக்கு வாங்கி, ஊருக்கு வெளியே இன்னும் ஏராளமான குடோன்களில் பதுக்கும் வேலையினை செய்துவருகிறார்கள். (2)

வெனிசுவேலாவின் மிகப்பெரிய பணக்கார வியாபாரிகள், முன்னாள் எண்ணை நிறுவன முதலாளிகள், எதிர்க்கட்சியினர் துணையோடு அமெரிக்க அரசு கோடிக்கணக்கான டாலர்களை செலவழித்து இப்பணியினை செய்து வருகிறது. வெனிசுவேலா அரசோ தன்னால் இயன்ற வரை அதனை மீட்டெடுத்து மக்களுக்கு நியாயமான விலையில் வழங்கிவருகிறது.

மூன்றாவது சதியாக, பதுக்கிய உணவுப் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்து விற்பனைக்கு விடுவதன் மூலம், விலையேற்றத்தை விண்ணுயரச் செய்துவிட்டால், அரசின் மீதான அவநம்பிக்கை மக்களுக்கு அதிகமாகும் என்று சதியாளர்கள் திட்டமிட்டனர். இதனால், உணவு உற்பத்தியில் வெனிசுவேலா தன்னிறைவு பெற்றிருந்தாலும், பற்றாக்குறையினை தீர்க்க முடியாமல் போகிற கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு, உற்பத்தியான உணவுப் பொருட்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கப்பட்டு, அண்டை நாடான கொலம்பியாவிற்கு சட்டவிரோதமாக கடத்திக் கொண்டுபோய் விற்கப்பட்டன. இவற்றின் மூலம் எதிராளிகளின் சதிப்படி உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது. இவ்வாண்டி இறுதியில், வெனிசுவேலாவின் பணவீக்கம் 45% உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இப்படியொரு சூழலுக்காகவே காத்திருந்த மேற்குல ஊடகங்கள், “சோமாலியாவாக மாறிக் கொண்டிருக்கிறது வெனிசுவேலா” என்று தனது பிரச்சாரப் பணியினை முடுக்கிவிட்டன. சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அமெரிக்காவின் அரவணைப்பில் வெனிசுவேலா இருந்த காலகட்டத்தில், பணவீக்கம் 100% த்திற்கும் மேலாக இருந்தது என்பதனை தங்களுக்கு வசமாக மறந்துவிட்டனர். 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால், வெனிசுவேலாவின் தற்போதைய உணவு உற்பத்திமுறை பல மடங்கு முன்னேறியிருக்கிறது. ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆய்வுப்படி, வறுமை ஒழிப்பில் வெனிசுவேலாவின் உற்பத்திமுறை மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது என பாராட்டியிருக்கிறது. மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் வெனிசுவேலாவைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுமிருக்கிறது.
கடந்த ஜூலையில் அவ்வமைப்பு நடத்திய ஆய்வில், 94% வெனிசுவேலா நாட்டின் மக்கள், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மூன்று வேளை நிறைவான உணவினை உட்கொள்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது.
நான்காவது சதியாக, உணவுப் பொருளல்லாத இன்னபிற தொழிற்சாலைகளின் உற்பத்தியைக் குறைப்பதற்கு தொழில் நிறுவனங்களுக்கு பெருமளவில் பணம் வழங்கப்பட்டும், உற்பத்தியான பொருட்கள் சந்தைக்கு வராமல் இரகசியக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட விநியோகிப்பாளர்களுக்கும் பெருமளவில் பணப்பட்டுவாடா நடந்துவருகிறது. வெனிசுவேலாவில் ஆட்சிக்கவிழ்ப்பினை நடத்த, அமெரிக்க மக்களின் வரிப்பணம் வாரியிறைக்கப்படுகிறது. இதற்காகவே செயல்பட்ட மூன்று அமெரிக்க நிறுவனங்களை வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி, வெனிசுவேலாவிலிருந்து வெளியேற்றியது மதுரோவின் அரசு. (3)
ஐந்தாவது சதியாக, மேலே குறிப்பிட்டிருக்கிற அனைத்து சதித்திட்டங்களின் மூலம் அரசுக்கு எதிராக மிகப்பெரிய வெறுப்பினை மக்களிடம் வரவைத்து, 337 மேயர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக வருகிற டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கிற உள்ளாட்சித் தேர்தலில் பெருமளவில் ஆளும் மதுரோ அரசைத் தோல்வியுறச் செய்து, அதன்பின்னர் அதனையே காரணமாக வைத்து அதிபர் மதுரோவை திரும்பப் பெரும் மக்கள் வாக்கெடுப்பைக் கோரி ஆட்சிக் கவிழ்ப்பினை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது அமெரிக்கா தலைமையிலான சதிக் கூட்டணி.

ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா தலைமையிலான சதிக் கூட்டணி அமைப்பு:

கடந்த ஜூன் 13ஆம் தேதி, வெனிசுவேலா ஆட்சியினை கவிழ்ப்பது எப்படி? என்பதை விவாதிக்க ஒரு இரகசியக் கூட்டம் நடந்திருக்கிறது. அக்கூட்டத்தில் பங்குபெற்றவர்களின் விவரங்களையும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் ஆர்.டி. செய்தித் தொலைக்காட்சி ஆதாரத்துடன் வெளியிட்டது. (http://actualidad.rt.com/expertos/eva_golinger/view/110489-documento-evidencia-plan-desestabilizacion-venezuela-golinger)

1. டெமாக்ரடிக் இண்டெர்னஷனலிசம் பவுண்டேசன் – இந்நிறுவனத்தின் தலைவரும் அமெரிக்க ஆதரவு கொலம்பிய தீவிர வலதுசாரியுமான அல்வரோ உரிபே மிக முக்கியமான நபராக இக்கூட்டத்தில் பங்கெடுத்தார்.

2. கொலம்பியா ஃபர்ஸ்ட் – இவ்வியக்கம்தான் அல்வரோ உரிபேவை கொலம்பியாவின் அதிபராக்க ஆதரவளிக்கிறது.

3. எப்.டி.ஐ. கல்சல்டிங் – ஆட்சிக் கவிழ்ப்பிற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக அழைக்கப்பட்ட அமெரிக்க நிறுவனம்

4. யு.எஸ்.ஏ.ஐ.டி. (யுஎஸ் எய்ட்)  – லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு உதவும் அமெரிக்க நிறுவனம். இது ஒரு அமெரிக்க அரசு நிறுவனம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருக்கும் அரசுகளை கண்காணிப்பதற்காகவும், அமெரிக்க எதிர்ப்பு அரசுகளை கவிழ்க்கிற திட்டங்களை மறைமுகமாகத் தீட்டுவதற்காகவும் உருவாக்கப்பட்ட அமைப்பிது. அதன் தலைவரான மார்க் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

5. ஜே.ஜே. ரெண்டன் – லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடக்கிற தேர்தல்களில், அமெரிக்க ஆதரவு நபர்களை வெல்லவைக்க, அரசியல் தந்திரங்களையும் வியூகங்களையும் அமைக்கிற பணியினைச் செய்கிறவர்.

6. மரியா கொரினா – வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி எம்.பி.

7. ஜோலியோ போர்சஸ் – வெனிசுவேலாவின் எதிர்க்கட்சி எம்.பி.
அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவைகளையும் எடுக்கப்பட்ட முடிவுகளையும் தொகுத்து அவர்கள் தயாரித்த இரகசிய ஆவணத்தின் சில பகுதிகள் கீழே:
வெனிசுவேலாவில் நடந்து கொண்டிருக்கிற 14 ஆண்டுகால ஆட்சியை மாற்ற, அந்நாட்டின் எதிர்கட்சியினரோடு விவாதித்து தயாரிக்கப்பட்ட வியூகத் திட்டம் இது.


கால அளவு:

இவ்வியூகத் திட்டத்தினை செயல்படுத்தி வெற்றி கண்டிட இன்றிலிருந்து நமக்கு 185 நாட்கள் (டிசம்பர் 8 உள்ளாட்சித் தேர்தல் நாள்) இருக்கின்றன.

செயல்திட்டம்:

 • வெனிசுவேலா மக்களின் இன்றைய பிரச்சனைகளான உணவுப் பற்றாக்குறை, பொருள் கிடைக்காமை போன்றவற்றை பெரியளவில் மக்களிடையே கொண்டு சென்று, ஹென்றிக் கேப்ரைல்சின் எதிர்கட்சியினை வெற்றிபெறச் செய்வது.
 • மக்களின் அன்றாடத் தேவைகளை தடை செய்வதை தொடர்ந்து செய்வதோடு மட்டுமல்லாமல், அதிகப்படுத்தவும் வேண்டும். குறிப்பாக, மின்சாரம் கிடைக்காமல் செய்து, அரசின் இயலாமையாகவும், பொறுப்பற்றத்தன்மையாகவும் மக்களை உணரவைப்பது.
 • அமெரிக்க-வெனிசுவேலா உறவை ஆதரித்து பிரச்சாரம் செய்தால், தேவைப்படும்போது அமெரிக்க ஆதரவு அமைப்புகளை தலையிட வைக்க ஏதுவான சூழலை உருவாக்குவது.
 • நெருக்கடி நிலையினை வெனிசுவேலா தெருக்களில் கொண்டுவந்து, அதன்மூலம் கொலம்பிய அரசின் உதவியுடன் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளை தலையிட வைக்க முயற்சிப்பது.
 • வன்முறையை வெடிக்க வைத்து, அதன்மூலம் முடிந்தால் உயிரிழப்புகளையும் படுகாயங்களையும் நிகழவைப்பது.
 • தொடர் உண்ணாவிரதங்களை ஊக்குவிப்பது, மக்களை கூட்டங்கூட்டமாக தெருவினில் போராடவைப்பது, பல்கலைக்கழகங்கள் மற்றும் இன்ன பிற அரசுத்துறைகளில் குழப்பங்கள் விளைவிப்பது.
 • இருக்கிற எல்லா வாய்ப்புகளையும், அமைப்புகளையும் பயன்படுத்தி அரசுக்கு இழிவினை ஏற்படுத்தி, எதிர்கட்சிக்கு நம்பகத்தன்மையினை அதிகரிப்பது.
 • அமெரிக்காவின் உதவியோடு, வெனிசுவேலா அரசையும் அரசின் உயரதிகாரிகளையும் போதை மருந்து கடத்தலிலும், பணமோசடியிலும் ஈடுபட்டதாக செய்திபரப்புவது.
 • அமெரிக்க ஆதரவு லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசுகளை வெனிசுவேலாவிற்கு எதிரான நிலையில் வைத்திருப்பது.
 • வெனிசுவேலாவிற்கு ஆதரவாக இருக்கிற அர்ஜென்டினா, பிரேசில், பொலிவியா, ஈக்வடார், நிகாரகுவா போன்ற நாடுகளின் நன்மதிப்பை குறைத்து லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் பிரச்சாரம் மேற்கொள்வது.
 • குறைந்தபட்சம் 55% மேயர் பதவிகளையாவது எதிர்க்கட்சியினர் இத்தேர்தலில் பிடிப்பதற்கு, எதிர்கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் மேலும் கூடுதலாக நிதி வழங்குவது.
 • எதிர்கட்சியினர் தான் மிகச்சிறந்த மாற்று என்கிற கருத்தைப் பரப்ப, ஒன்பது சர்வதேச ஊடகங்களின் பத்திரிகையாளர்களை ஏற்பாடு செய்வது, (பி.பி.சி., சி.என்.என்., நியூ யார்க் டைம்ஸ், நியூ யார்க் போஸ்ட், ரிவ்டர்ஸ், இஎப்இ, ஏ.பி., மியாமி ஹெரால்ட், டைம், venisuvellaa கிளாரின், ஏபிசி, …). வெனிசுவேலா தலைநகரில் இருக்கும் அயல்நாட்டு ஊடக சங்கத்துடனும் தொடர்பு வைத்துக்கொள்வது.
 • வெனிசுவேலாவின் பொருளாதார நெருக்கடி குறித்து, சர்வதேச பொதுக்கருத்தை உருவாக்குவது.
 • அமெரிக்காவிலிருக்கிற வெனிசுவேலா மற்றும் க்யூபாவிற்கு எதிரானவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து வெனிசுவேலா அரசை வீழ்த்துகிற இவ்வியூகத்திட்டத்திற்கு உதவிகோருவது.
 • முன்னாள் இராணுவத்தினர், அதிருப்தி இராணுவத்தினர் என இதற்கு ஆதவளிப்பதற்கு ஒரு பெரிய பட்டியலையே தயாரித்து, ஒரு ஆயுதந்தாங்கிய இராணுவப்படையினை தயார்செய்து வைப்பது, தேவைப்படுகிறபோது அந்த இராணுவத்தை பயன்படுத்துவது அல்லது அந்நிய படைகளை அனுமதிக்க உதவப் பயன்படுத்துவது.
குறிக்கோள்:

இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவிருக்கிற தேர்தலை மனதில் வைத்தே தயாரிக்கப்பட்டது. ஆனால், அத்தேர்தலுக்கு முன்பாகவே இத்திட்டத்தினை செயல்படுத்த முடிந்தால் சிறப்பாக இருக்கும்.

அமெரிக்கா ஒரு சதிக் கூட்டணி அமைத்து இப்படியானதொரு திட்டத்தினை முன்வைத்தே வெனிசுவேலாவில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிறது. இதனை மதுரோவின் மக்கள் நல வெனிசுவேலா அரசு சிறப்பாகவே கையாண்டு வருகிறதென்றாலும், இத்தேர்தலோடு என்னவிலை கொடுத்தேனும் வெனிசுவேலாவை தனதாக்கிவிட வேண்டுமென்று வெனிசுவேலாவின் பெருமுதலாளிகள், எண்ணைக்காக காத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு, வெனிசுவேலாவின் முன்னாள் எண்ணை முதலாளிகள், பக்கத்து நாடான கொலம்பியாவின் அதிதீவிர வலதுசாரிகள், மற்றும் வெனிசுவேலாவின் அமெரிக்கத் தலையாட்டி எதிர்கட்சிகள் – என்று ஒரு மிகப்பெரிய சுரண்டல் கூட்டணி காத்துக் கொண்டிருக்கிறது.

Salvador Allende 1973 – USSR stamp

குழப்பம் விளைவித்து, ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி, மக்களாட்சியினை மீண்டும் வராமல் பார்த்துக் கொள்கிற நடவடிக்கைகளில் இறங்குவது  அமெரிக்காவிற்கு ஒன்றும்  புதிதல்ல. சிலி நாட்டு மக்களின் ஏகோபித்த  ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று நல்லாட்சி புரிந்து கொண்டிருந்த அதிபர் சால்வடாரை 1973 இல் இதே போன்றதொரு குழப்பம் விளைவித்தே கொலை செய்து ஆட்சிக் கவிழ்ப்பையும் நிகழ்த்தியது அமெரிக்கா. 40 ஆண்டுகளாகியும், இன்று வரையில் சிலி நாட்டில் நம்பிக்கை தரும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசினை ஏற்படுத்த முடியாமலே போயிருக்கிறது. அதே நிலை வெனிசுவேலாவிற்கும் ஏற்படக் கூடாது.

மக்களையே நம்பிக் களமிறங்கியிருக்கும் மதுரோவின் மக்கள் நல அரசு மாபெரும் வெற்றி பெற்று, உலக மக்களுக்கெல்லாம் வெனிசுவேலா ஒரு நம்பிக்கை ஒளியாகத் திகழ விரும்புவோம், வாழ்த்துவோம்…

Related Posts