எது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்

இந்திய சினிமாவின் ஆன்மா கலைஞர், பதேர் பாஞ்சாலியின் இயக்குனர் சத்தியஜித்ரேவை பற்றியோ, ஈரானிய இயக்குனர் மக்மல்ஃபை பற்றியோ அல்லது மதிலுகள், நாலு பெண்ணுகள் படத்திற்காக தேசியவிருது பெற்ற அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றியோ, திரைப்படங்களில் கூட தற்கொலையை அனுமதிக்கமாட்டேன் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் செய்தும் காட்டிய நூற்றாண்டின் கலைஞன் அகிராகுரசோவாவை பற்றியதோ அல்ல இந்த எழுத்தின் நோக்கம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூரில் நடைபெற்ற வாலிபர் சங்க ஐந்து நாள் கருத்தரங்கத்திற்கு, இடையில் ஒரு நாள் இரவு சினிமா காட்சிக்கு சென்றிருந்தோம். சுமாரான திரையரங்கம் தான் எனினும் தரமணி படம் பார்ப்பதற்கு போதுமானதாகவே இருந்தது எனலாம். சில காட்சிகளில் சத்தம் குறைவாகவும், சில காட்சிகளில் சத்தம் கூடுதலாகவும் இருந்தது. இங்கு தரமணி படமோ, திரையரங்கோ, டி.டி.எஸ் சத்தமோ பிரச்சனை இல்லை.
பார்வையாளர்களில், சிலர் சத்தம் குறைந்த வசனங்களுக்கு திரையங்க ஆப்ரேட்டரின் கவனக்குறைவு காரணம் எனச் சொல்லி சண்டையிட்டனர். நகரம் சார்ந்து வந்திருந்த சில இளைஞர்கள் படத்தின் ஒலி அமைப்பே இது தான் என வாதிட்டனர். வளர்ச்சியும், இரசனையும், வாய்ப்பும் இங்கு ஒரே திரையரங்கில் படம் பார்ப்பவர்களுக்கே அமையவில்லையே அல்லது வேறுபடுகிறதே என்பது புரிந்தது.

வட தமிழகத்தின் வாழ்வியலைப் புரியாதவர்களுக்கு இயக்குனர் இரஞ்சித் இயக்கிய அட்டக் கத்தியின் அரசியல் புரியாததும், தென் தமிழகத்தின் பேச்சு மொழி புரியாதவர்களுக்கு இயக்குனர் முத்தையா இயக்கிய மருது படத்தின் சாதி அரசியல் புரியாததும், தமிழகத்தின் மேற்குப் பகுதி சில இயக்குனர்கள் நீண்டகாலமாக பதினெட்டுபட்டியின் அரசியல் பேசுவதை இயல்பாய் நம்மால் கடந்துவிட முடியவில்லை.

இத்தனை ஆண்டு காலம் தமிழ் சினிமா பேசியது தான் என்ன? நம் வாழ்வியலில் பிரதிபலித்ததுதான் என்ன என்பதே நம் கேள்வி. அதை விவாதத்திற்கு உட்படுத்துவதே நம் நோக்கம். சுருங்கச் சொல்லி ஆழமாக விவாதித்தலும், உணர்தலும் கொண்ட சினிமா நமக்காகப் பேசுகிறதா இல்லை நம்மைப் பேசுகிறதா என்பதே நம் முன் உள்ள கேள்வி.
சினிமாத் துறைக்கு வரும் எல்லோரும் தன்னை ஏதொவொரு அடையாளத்தோடு வெளிப்படுத்திக் கொண்டு மக்களை ஆளவேண்டும் என்ற எண்ணத்தோடவே வருகின்றனர். தான் சம்பாதிக்கும் திரைத் துறையில் சாதனை நிகழ்த்துவதை விட, மக்களின் வாழ்வியலை பேசுவதை விட அரசியலில் நுழைய அனுமதிச் சீட்டாகவே பார்க்கப்படுகிறது. சிவாஜி கனேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.இராதா, எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்டோருக்கு அன்று அரசியல் இருந்தது. அரசியலில் இருந்து சினிமாவிற்கு வந்தனர். மக்களுக்கான அரசியல் பேசினர். இன்றைக்கு வருபவர்களிடமும் அரசியல் இருக்கிறது. ஆனால் யாருக்கான அரசியலாய் இருக்கிறது என்பதே நம் கேள்வி.

அன்று கதாநாயகன் என்பவன் ரொம்ப நல்லவன். அனைவரையும் மதிப்பான், எவரிடத்தும் பாகுபாடு பார்க்கமாட்டான். நியாத்திற்காகக் குரல் கொடுப்பான். ஆனால் இன்று கதாநாயகன் என்றால் சிகரெட் பிடிப்பான், தண்ணியடிப்பான். தனக்கு விருப்பமான பெண்னிற்கு தன் மீது விருப்பம் இருக்கோ இல்லையோ துரத்தித் துரத்தி தொந்தரவு தருவான். இதைவிடவும் கொடுமை, இந்த பொது சமூகத்தில் யாருக்கெல்லாம் மரியாதை இல்லையோ, யாரெல்லாம் கொலை, கொள்ளையில் ஈடுபடுகிறார்களோ அவர்களுக்குப் பிரமிப்பூட்டுவதும், அவர்களை நியாயப்படுத்துவதும்தான். இதனை மாற்றுவது நம்மால் சாத்தியப்பட்டதே.

கதை, நாடகம், ஓவியம், பேச்சு, நிகழ்த்துக்கலை உள்ளிட்ட வடிவங்கள் மக்களிடம் ஏற்படுத்திய உணர்வுகளைவிட சினிமா ஏற்படுத்திய தாக்கம் அதிகம். மிகப்பெரும் வணிகம் சார்ந்த கலையாக சினிமா இருப்பதால்தான் என்னவோ, இலக்கியவாதிகள், கலைஞர்கள் உலா வரவேண்டிய திரைத்துறை வணிகர்களிடத்திலும், பெருமுதலாளிகளிடமும் சிக்கித் தவிக்கிறது. அப்படி எனில் இதை மாற்றவே முடியாதா? மாற்றத்திற்கான முயற்சியே இல்லையா என்கிற கேள்வி நிச்சயம் எழும். ஆம், இரத்தக் கண்ணீர் துவங்கி அருவி வரை விவசாயி துவங்கி ஜோக்கர் வரை மாற்றத்திற்கான முயற்சி நடந்து கொண்டேதான் வருகிறது.

இவ்வளவு காலம் சினிமாவிற்கு இருந்த பிரம்மாண்டம், அதன் பின் இருந்த வாய்ப்புகளை இன்றைய டிஜிட்டல் உலகம் நமக்கு எளிமையானதாக மாற்றியுள்ளது. நாம் வாழும் வாழ்க்கை முறையும், நாம் காணும் சினிமாவிற்கான இடைவெளியை குறைப்போம். சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தனி ஒருவனால் தீர்த்துவிட முடியுமெனும் கதாநாயக அபத்தங்களைப் போல் இல்லாமல், பெருந்திரள் இளைஞர்களிடத்தில், கல்வி, காதல், வீரம், தாய்மை, அமைதி, விடுதலை, சுதந்திரம் எப்படி பேசப்பட வேண்டுமென விவாதிப்போம். நல்ல சினிமாக்கள் வரும்போது அது நல்ல சிந்தனைகளை பேசும். நல்ல சிந்தனைகள் சரி, தவறு குறித்து விவாதிக்கும். விவாதிக்கும் சமூகம் ஒப்புதலைதரும். அதற்கான மிகப் பெரும் சக்தி சினிமா.

 

About இளைஞர் மு‍ழக்கம்