இலக்கியம்

எஞ்சிய சில நல்ல பக்கங்கள்

– ச.சுப்பாராவ்

அம்மாவிற்கு வரவர ஞாபகமறதி அதிகமாகிவிட்டது. மூக்குக் கண்ணாடியை, சுலோக புத்தகத்தை, பீரோ சாவியை எங்கே வைத் தோம் என்பது மாதிரியான மறதி இல்லை. நிகழ்வுகள், மனிதர்கள் குறித்தான நினைவுகளின் மறதி. அம்மாவின் இயல்பே அதுதான் என்றால் நாங்கள் இத்தனை வேதனைப்பட மாட்டோம். ஒவ்வொன்றைப் பற்றியும், அது ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக இருப்பினும், அதை தன் நினைவுகளின் அடுக்கிலிருந்து சரியாகப் பிரித்தெடுத்து, தூசி தட்டி, நம் கண்முன் நடப்பதுபோல் வர்ணிக்கும் அம்மாவின் நினைவாற்றல் குறைந்து வருகிறது என்றால் வேதனையாகத்தானே இருக்கும் !

தான் ஆறாவது படிக்கும்போது, காந்தியடிகள் மதுரை வந்தது, சிம்மக்கல்லில் வைத்து தான் அவரைப் பார்த்ததை அம்மா சொல்லும்போது, சிவப்பாய், ஒல்லியாய், உயரமாய் அந்த தாத்தா கம்பை ஊன்றிக் கெண்டு சிம்மக்கல் தெருவில் ஓட்டமும் நடை யுமாக குடுகுடுவென்று வேகமாய்ச் சென்றது எங்கள் கண்முன் தெரி யும். இன்று அண்ணாமலை திரையரங்கும், அதற்கு முன்னால் கல்பனா தியேட்டரும் இருந்த இடத்தில் அக்காலத்தில் இருந்த செல்லம்கொட்டகையில் நவாப்ராஜமாணிக்கத்தின் நாடகம் நடந் தது, கமலத் தோப்புத் தெருவில் ஜி.என்.பி -யின்கச்சேரிநடந்தது எல்லாவற்றையும் அம்மா என்ற சிறுமியோடு சேர்ந்து பார்த்து ரசித்த பாக்கியசாலிகள் நானும், என் அண்ணனும் ! சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு என்று பல ஆண்டுகளாகச் சாப்பிட்ட மருந்துகளின்பாதிப்பில் அம்மாவின் ஞாபக சக்தி கொஞ்சம்கொஞ்சமாகக் குறைந்துவிட்டது.

வர்ஷாபடிக்கிறாளா, வேலைக்குப் போய்விட் டாளா? காயத்ரி மதுரைக்கு மாறுதல்பெற்றுவந்து விட்டாளா?என்றெல்லாம் அம்மாதிடீர்திடீரென்று கேட்கும் போது,எங்களுக்குதுக்கம் பொங்கும். நம் அம்மா தானா இதுஎன்றுஅழுகை தொண்டையை அடைக்கும். ராமானுஜம் டாக்டரிடம் கேட் டால் உங்க அம்மா இனிமே ஞாபக சக்தியோட இருந்து, ஐஏஎஸ் பரிட்சையா எழுதப் போறாங்க? வயசானா இதெல் லாம் சகஜம் தான் என்கிறார். நேரம், வாய்ப்பு   கிடைக்கும் போதெல்லாம் அம்மாவின் நினைவாற்றலை பழையபடி கொண்டுவரும் முயற்சிகளைச் செய்வதுதான் எனக்கும், அண் ணனுக்கும் முழு நேர வேலை யாக இருந்தது.

நவராத்திரி ஆரம்பமாகி விட்டது. காயத்ரியும், மன்னியும் கொலு வைத்து, சுண்டல் போட்டு, அக்கம்பக்கத்து மாமி களை அழைத்துப் பாடச் சொல்லி இரண்டு நாட்களாக ஒரே ரகளை. இப்போது இரு வரும் வெளியே ஒரு ரவுண்ட் சுண்டல் வசூலுக்குப் போய் இருக்கிறார்கள். வீட்டை, அம் மாவைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எங்களுக்கு. அவர்கள் வரும்போது, அக்கம் பக்கத்து மாமிகளும் கொலுவிற்கு வந்து விடுவார்கள். அவர்கள் வந்ததும் நாங்கள் வெளியேறிவிடவேண் டும் என்பது தாய்க் குலங்களின் கட்டளை. வாசகர்கள் அவசரப் பட்டு எங்களைத் தவறாக நினைத்துவிட வேண்டாம். அனந்த் வைத்தியநாதன் முன்பு குழந்தைகள் வேண்டுமானால் டிவியில் தைரியமாகப் பாட லாம். ஆனால் எங்கள் எல்என்பி அக்ரஹாரத்து மாமிகளுக்கு என் முன் பாடும் தைரியம் கிடை யாது. உங்காத்து மாமா முன் னாடி எப்படிப் பாடறது என்று நாக்கைக் கடித்துக் கொண்டு, தோளைக் குலுக்கி வெட்கமாய்ச் சிரிப்பார்கள். நான் மூன்றாம் தலைமுறை வயலின் புலியல் லவா?

சங்கரா டிவியில் ஒருவர் ஏதோ ஒரு சுலோகத்தை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அம்மா சோபாவில் உட்கார்ந்து கையில் அதே சுலோகம் உள்ள புத்தகத்தை வைத்துக் கொண்டு அதை கற்றுக் கொள்ள முயல் கிறாள். நாங்கள் அம்மாவின் நினைவாற்றலைத் தூண்டிவிடும் வேலையை ஆரம்பிக்கிறோம். அண்ணா, இப்போதெல்லாம் யார் பாடுகிறார் கள்? எல்லாம் கேஸட்,சிடிஎன்று ஆகி விட்டது. நல்ல கீர்த்தனைகளை வாய் விட்டுப்பாடும்படியான ஞானம் இப்போது யாருக்கும் இல்லை என்கிறார். முன்பொரு முறை நம் வீட்டு கொலுவிற்கு சுவாமிநாதன் வந்து, என்ன கவி பாடினாலும் பாடியது ஞாபக மிருக்கிறதா? அம்மா எந்த சுவாமிநாதன் என்கிறாள். அவன் யூனியன், கட்சின்னு மீட்டிங்தானே பேசுவான்! என் கிறாள். அண்ணா, பொறுமை யாக மதுரை சோமு சிஷ்யர் சுவாமிநாதன்மா, தாத்தா கூட அவர் கச்சேரிக்கு வாசிப்பாரே என்றார். அம்மா, தாத்தா காலத் துல எத்தனையோ வித்வான்கள் வந்து பாடியிருக்கா, என்றாள் பொதுவாக. தனக்கு ஞாபக மில்லை என்பதை அம்மா இப்படித்தான் மறைமுகமாகத் தெரிவிப்பாள்.

நாங்கள் இதெற்கெல்லாம் அசருபவர்கள்இல்லை. அம்மாப் பொண்ணு மாமி வருஷா வருஷம் தாமரை பூத்த தடாக மடிதான் பாடுவாள். நீங்க அப்படியே தண்டபாணி தேசிகர் மாதிரியே பாடறேள் என்று அப்பாசொன்னதன் உட்பொருள் மாமிக்குப் புரிய வில்லை. மாமிக்கு தேசிகரின் அதே கனத்த குரல். மாமி பெருமையாய்ச் சிரித்ததை நினைத்து நாங்கள் அந்தநவராத்திரிமுழுக்க சிரித்தோம். அண் ணா இதைச் சொன்னதும், அம்மா எந்த அம்மாப் பொண்ணு என்றாள். என்னம்மா இப்படிக் கேக்கற? வத்திராப்பு சுப்ரமணிய அய்யர் நாட்டுப் பொண்ணு. கரடி வாத் தியார் ஆத்து முன் போர்ஷன்ல இருந்தாளே! நவராத்திரின்னா ஒரு மாம்பழக் கலர் பட்டுப் பொடவ,தாமரைபூத்த தடாகம்னுவெச்சுண்டிருக் கான்னு நீ கூட சொல்லுவியே ! என்றேன் நான். அம்மா கரடி வாத்யார் ஆத்துலயா? என்று கேட்டுவிட்டு மௌனமானாள்.

அறுபத்திரண்டு ஆண்டு களுக்கு முன் தனது தலை தீபாவளியன்று, தன் தாயாருக் கும், மாமியாருக்கும் இடையில் பட்சணங்களின் எண்ணிக்கை குறித்து நடந்த வாதப் பிரதி வாதங்களை போன வருடம் வரை வரி மாறாமல், அவரவர் குரலிலேயே தத்ரூபமாகச் சொல்லி, நடித்துக்காட்டிய அம் மாவா இது ? இருந்தாலும் நாங்கள் மனம் தளரவில்லை. அம்மாவின் சினேகிதியான கன்னடத்து மாமி பற்றி ஆரம்பித் தோம். அக்ரஹாரம் முழுவதற் கும் அவர் கன்னடத்து மாமி தான். மாமிக்குத் தன் பெயரே மறந்திருக்கும். மாமி, தான் மதுரை மணி ஐயரின் சிஷ்யை என்றது, ஜயதி ஜயதி பாரத மாதாவை படுகொலை செய்தது, மாமி கிளம்பிப் போனதும் மதுரை மணி ஜயரின் அகால மரணத்துக்கு இந்த சிஷ்யைதான் காரணமாக இருந்திருக்க வேண் டும் என்று அப்பாசொன்னது,என் பிரெண்ட் என்றுயார்வந்தாலும் அவர்களைக் கிண்டல் செய் வதே உங்கள் வேலையாகி விட் டது என்று அம்மா பொய்க் கோபம் காட்டியது, விஎஸ்ஆர் வீட்டு மாமி கொலுவிற்கு வந்த போது டிவி ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் வந்த வைஜயந்தி மாலா நடனம், அதைப் பார்த்து அந்த மாமி, தான் வைஜயந்தி, குமாரி கமலா எல்லோரும் ஒரு செட் என்றது, நீங்கள் எல்லோ ரும் ஒன்றாக நடனம் கற்றீர்களா என்று அம்மா வியந்தது, மாமி மிகவும் கூலாக, நாங்க எல்லாம் ஒரே வயசுக்காரா என்றது, மாமி போனபின் அண்ணா, தானும் கமலஹாசனும் ஒரு செட், அப் பாவும் எஸ்.வி.சுப்பையாவும் ஒரு செட் என்றெல்லாம் சொல்லி எல்லோரும் சிரித்தது, தான் அனுராதா கிருஷ்ணமூர்த்தி போல இருப்பதாக, பாடுவதாக எல்லோரும் சொல்வதாகச் சொல்லிக் கொள்ளும் ரேஷ்மா வின் அம்மா என்று நாங்கள் பலவற்றையும் அள்ளி அள்ளி வெளியே போட்டோம். அம்மா அனுராதா கிருஷ்ணமூர்த்தி யார் என்று கேட்க, நாங்கள் சற்று சோர்ந்து போனேம்.

காயத்ரியும் மன்னியும் வந்து விட்டார்கள். கூடவே அக்ர ஹாரத்தின் மாமிகள் சிலர். நாங்கள் வெளியே கிளம்ப ஆயத்தமானபோது, போன வாரம் அமெரிக்காவிலிருந்து வந்திருக் கும் ஹேமாவின் குரல் கேட்டது. அண்ணி ஹேமாவைப் பாடச் சொல்கிறார். ஹேமா தான் பாடு வது இருக்கட்டும் என்றும், எட்டாண்டுகளுக்கு முன் ஒரு ராதா கல்யாணத்தில் எங்கள் அம்மா பாடிய ரங்கபுர விஹாரா தன் காதில் இன்னும் ஒலிப்ப தாகவும், அம்மா அதை இப் போது பாடவேண்டும் என்றும் நேயர் விருப்பம் வைக்கிறாள். அடுத்த கணம் அம்மா ரங்க.. பூ.. ரவி ஹாரா.. வை கணீரென்று ஆரம்பிக்கிறாள். எம்.எஸ்சின் அதே பிருந்தாவன சாரங்கா எங்கள் வீட்டுக் கூடம் முழுவதும் மென்மையாய்ப் பரவுகிறது.

அம்மாவுக்கு நடுவுல நிறைய பக்கத்தக் காணோம்னு சொல்வியேடா! இருக்கற ஒண்ணு ரெண்டு பக்கம் கிழியாம ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கற மாதிரி தெரியறதே! என்கிறார் அண்ணா சந்தோஷமாக. எனக்கு அவரைக் கட்டிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

Related Posts