இளைஞர் முழக்கம்

ஊழல் ஒழிப்பு என்பது எப்போது, யாரால் சாத்தியம்?

ஊழல் இல்லாமல் ஒரு வருடம் ஆட்சி நடத்தியுள்ளதே பாஜகவின் பெரும் வெற்றிதான் என்று மோடி சொல்லி வாயை மூடவில்லை, அதற்குள் ஏராளமான ஊழல் புகார்கள் வெடிக்கத் துவங்கிவிட்டன. மகாராஷ்டிரத்தில் நிகழ்ந்துள்ள ஊழலுக்குக் காரணமான பாஜக அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் பேசுகிறது. ஆனால், கேரளாவிலோ இதே காங்கிரசின் ஆட்சிதான் நடக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டாம் என்கிறார்கள் அங்கே.

இந்தியச் சட்டங்களால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தேடப்படும் நபராக உள்ள ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதாகச் சொன்ன மத்திய அமைச்சரை, யார் மூலமாக தொடர்புகொண்டு உதவிகேட்டார் என்ற கேள்விக்கெல்லாம் அவசியமே இல்லாத அளவிற்கு சூழல் வெளிப்படையாகவே உள்ளது. அந்த குற்றவாளிக்கு சட்ட ஆலோசனை (இதன் அர்த்தம் இங்கு எழுதப்பட வேண்டிய அவசியம் இருக்காது என்பதால் விட்டுவிடுகிறோம்) வழங்குவதே அமைச்சரின் குடும்பம்தானாம். குற்றவாளியே வெளியிடும் தகவல் இது. சுஷ்மா பதவி விலக வேண்டும் என்று இப்போது சொல்லும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது, குற்றம் சாட்டப்பட்ட தனது     எந்த அமைச்சரையும் பதவி விலகச் சொல்லவேயில்லை.

சரி, பாஜக அன்று எதிர்க்கட்சியாய் இருந்தபோது, இப்போது காங்கிரஸ் சொல்வதைத்தான் சொன்னது. ஆனால், பாஜக அப்போது சொன்னதை காங்கிரஸ் மீறியது. இப்போது பாஜக சொல்வதை காங்கிரஸ் புறக்கணிக்கிறது. ஆனாலும், இரு கட்சிகளும் எந்த வெட்கமும் இல்லாமல் ஊழலுக்கு எதிராக அறிக்கைகள் விட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதன் பெயர் தான் அரசியலாம்.

ஏனிந்த முரண்பாடுகள்? ஆட்சியில் இருக்கும்போது ஊழலுக்கு எதிரான குரலுக்கு, சிறிதேனும் மதிப்பளிக்காத இக்கட்சிகள், ஆட்சியை விட்டு இறங்கிய பின்பு மட்டும் ஏனிப்படி பேசுகிறார்கள்?

தமிழகத்திலும் இப்படித்தான். ஊழலே செய்யாத கட்சி எங்கள் கட்சி என்பது போல்தான், அதிமுகவும் திமுகவும் பேசிக்கொள்கின்றன. ஆனால், ஒரு சத்துணவுப் பணியாளர் நியமனம் முதல் சாலைகள், திட்டங்கள் மட்டுமில்லாது பணியிடமாறுதல் வரை அனைத்தும் ஊழல்மயம்தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், நீதிதேவதையே அம்மா என்பதுபோல் தான் அதிமுகவினரும், கறையில்லாதவர் கலைஞர் மட்டும்தான், என திமுகவினரும் சொல்லி ஊழலை நாங்கள்தான் ஒழிப்போம் எனவும் வெட்கமேயில்லாமல் பேசிக்கொள்கின்றனர்.

ஆனால், இந்த நான்கு கட்சிகளும்தான் மத்தியிலும், மாநிலத்திலும் பெரும்பாலும் ஆளுகின்றனர். ஆக, ஊழல் என்பதே இந்தியாவில் வளர்ந்தது இவர்களால் தான். ஆகையால், ஊழலை ஒழிப்போம் என இவர்கள் சொல்வதையும் மக்கள் ஒருபோதும் முழுமையாய் நம்பியதில்லை. ஊழலை இவர்களால் ஒழிக்க முடியாது என்பதை அவர்கள் அறிவார்கள்.அப்படியெனில் எப்படித்தான் ஊழலை ஒழிக்க முடியும்? சாத்தியமேயில்லையா என்ன?

ஒரே ஒரு விசயம் மக்களிடம் அழுத்தமாய் சொல்லப்படவேண்டும்.

சட்டமன்றம்/நாடாளுமன்றம்/உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் ஏன் பல கோடிகளைக் கொட்டிப் போட்டியிடுகிறார்? சேவை செய்யவா கோடிகளைச் செலவு செய்கிறார்? போட்டதை வட்டியும், முதலுமாய் எடுக்கத்தானே. இது மக்களுக்கும் தெரியும்தான். ஆனாலும், ஏன் விவாதமாக்கப்படவில்லை? இக்கட்சிகளும் இன்று தேர்தலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனவே, எப்படி வந்தது நிதி இவர்களுக்கு? தனி விமானங்களில் பயணம் செய்ய பணம் யார் கொடுத்தது? மக்களுக்கு மேலோட்டமாய்த் தெரியும் என்றாலும், ஒன்றை அழுத்தமாய் சொல்லவேண்டியுள்ளது.

தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் செலவு செய்யக்கூடாது, அவரின் கட்சிதான் செலவழிக்க வேண்டும். அதேபோன்று, அக்கட்சி மக்களிடம் தான் நிதி வசூலிக்கவேண்டும். அப்போதுதான் ஊழலை ஒழிக்கமுடியும் என்பதை ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தில் வலுவாய் சொல்லவேண்டும். இதுவே ஊழலை ஒழிப்பதற்கான ஒரே வழியென்றும், உங்களிடமிருந்து நிதி பிரித்து செயல்படும் கட்சியை மட்டுமே ஆதரிப்பீர் என்றும் அரசியலாய் பேசவேண்டியுள்ளது. இதை ஊழலுக்கு எதிராய் நாம் பேசும் ஒவ்வொரு நேரத்திலும் பேசுவதே ஊழல் ஒழிப்பு ப் போரின் முதல் முழக்கம் ஆகும்.

Related Posts