இதழ்கள் இளைஞர் முழக்கம்

ஊழலை வேரறுக்க ஊற்றுக்கண்ணை அடைக்க வேண்டும் – க.கனகராஜ்

 

2017, பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் இவ்வாண்டு தமிழகத்திற்கு மறக்க முடியாத நாளாக மாறிப்போனது. 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த செல்வி ஜெயலலிதா மற்றும் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள். ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் மீதி 3 பேருக்கும் தண்டனை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் என்று ஜெயலலிதாவிற்கு 100 கோடி அபராதம், மற்ற மூவருக்கும் 10 கோடி அபராதம், நால்வருக்கும் நான்காண்டுகள் சிறைத்தண்டனை என்று தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ரத்து செய்தார். ஆனால், உச்சநீதிமன்றம் குன்ஹா தீர்ப்பை வெகுவாக போற்றிப் பாராட்டி இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் மிகக்கடுமையாக விமர்சித்திருக்கிறது.

2 பேர் அடங்கிய நீதிபதிகள் மொத்தமாக தண்டனைகள் பற்றிய தீர்ப்பையும், நீதிபதி அமிதவா ராய் ஊழலின் தன்மை பற்றிய 7 பக்க தனித்தீர்ப்பையும் எழுதியுள்ளனர்.

“கண்முன்னே வைக்கப்பட்டுள்ள உண்மைகளையும், எதிர்கொண்ட சூழ்நிலைகளையும் உற்று நோக்கினால் எந்தவித குற்ற உணர்ச்சியின்றி ஏராளமான சொத்துக்களை அபகரித்து கொள்வதற்கான மிக ஆழமான சதி நடந்தேறியிருக்கிறது. மேலும் சட்டவிரோத சொத்துக்களை மறைமுகமான நிறுவனங்களின் மூலம் மூடி மறைப்பதற்கும், சொத்துக்களை வாங்குவதற்கும் சட்டப்படிதான் அனைத்தும் நடந்திருக்கிறது என தோற்றம் காட்டுவதற்கும் அவர்கள் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அட்டூழியங்களை நிகழ்த்துவதில் புதுமையும், சாட்சியங்களின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களின் அளவும், எவ்வளவு குறைத்து சொன்னாலும் பயமுறுத்தும் அளவிற்கு மிகப் பிரம்மாண்டமானது”. இதேபோன்று இவர்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டால் சமூகத்தில் நேர்மையாளர்கள் சிறுபான்மையாகிவிடுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

ஒரு வழக்கை எந்த அளவிற்கு இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவிற்கும், அரசுத்தரப்பில் வாதாடுகிறவர்களை எந்த அளவிற்கு ஒதுங்கிப்போகச் செய்ய முடியுமோ அந்த அளவிற்கும், சட்டத்திலிருக்கூடிய வாய்ப்புகளை எந்த அளவிற்கு தவறாகப் பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கும், அரசியல் நிர்ப்பந்தங்களை எந்த அளவிற்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கும் மக்கள் தங்களுக்கு அளித்துள்ள அங்கீகாரத்தை நீதியின் கரங்களை முறுக்குவதற்கு எந்த அளவிற்கு போக முடியுமோ அந்த அளவிற்கும் குற்றவாளிகள் சென்றார்கள். அவை அனைத்தையும் மீறியே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு இந்தியாவில் அஇஅதிமுக தவிர அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டிருக்கிறது. பாரதிய ஜனதா கூட இதை வரவேற்றிருக்கிறது. பாரதிய ஜனதா கூட என்று சொல்வதற்கு காரணமிருக்கிறது. குன்ஹா தீர்ப்பு வந்த போது இது ஒன்றும் இறுதித்தீர்ப்பல்ல என்று சொல்லி அதிமுகவிற்கு ஆதரவாக நின்ற கட்சி அது. இந்த வழக்கின் ஒரு கட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் செல்வி ஜெயலலிதாவுக்காக வாதாடியவர் தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் திரு.ரவிசங்கர்பிரசாத் அவர்கள். அதன் காரணமாகவே குமாரசாமியின் தீர்பபு வந்த அன்று பாராளுமன்றத்திற்குள் லட்டு கொடுத்து கொண்டாடினார் திரு.ரவிசங்கர் பிரசாத். எல்லாத் தடைகளையும் தாண்டி நீதி இப்போது தப்பிப்பிழைத்திருக்கிறது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்கிறார்கள். ஒருவேளை 20 வருடம் என்பது தாமதமில்லை என்று நீதிமன்றம் நினைக்கிறதா என்று தெரியவில்லை. இதற்கிடையில் குன்ஹா தீர்ப்பு வந்த போது நீதிமன்றத்தையும், ஏன் அவர்கள் நம்பும் கடவுளையும் கூட நிர்ப்பந்திப்பதற்காக மண்சோறு திண்பதும், வேல் குத்துவதும் கடந்து போனது. உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு பின்பாக உற்சாகமாக ஊழலுக்கு எதிராக டுவிட்டர் பக்கங்களில் கருத்து சொல்லிக் கொண்டிருக்கும் நடிகர்கள் கூட ஜெயலலிதா தண்டனை பெற்ற காலத்தில் தெய்வத்திற்கு மனிதன் தண்டனை வழங்க முடியுமா? என்று உண்ணாவிரதமிருந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்போதும் ஜெயலலிதா உயிரோடு இருந்தால் இந்தத் தீர்ப்பு வந்திருக்காதே என்று சொல்வோரும் இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் ஜெயலலிதா நீதி தேவதையை மிரட்டும் வல்லமை படைத்தவர்.

தனிநபருக்கு எதிரான குற்றங்களுக்குக் கூட இந்தியாவில் தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் சமூகத்திற்கெதிரான அட்டூழியங்களுக்கு அத்தனை கடுமையான தண்டனைகள் இல்லை. தமிழகத்தின் சமூக நிர்வாக, அரசியல் அடுக்குகளில் லஞ்சத்iயும், ஊழலையும், முறைகேடுகளையும் பாய்ந்தோடச் செய்து கெட்டிப்படுத்த 1991-1996 கால கட்டத்தை இந்த 4 குற்றவாளிகளும் எப்படி செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை பார்த்தால் இந்த குற்றத்தின் கடுமை தெரியும். இந்த கால கட்டத்தில் டான்சி வழக்கில் நீதிமன்றம் செல்வி ஜெயலலிதாவும், சசிகலாவும் தவறு செய்திருக்கிறார்கள் என்று கூறிவிட்டு தண்டனை வழங்குவதிலிருந்து விலகிக்கொண்டு பிராயச்சித்தம் தேடிக் கொள்ளட்டும் என்று உபன்யாசம் செய்தது. அதன் தொடர்ச்சியே நீதிமன்றத்தை நீதியை எந்த அளவிற்கும் வளைக்க முடியும் என்ற நிலைக்குப் போனார்கள். இந்த வழக்குகள் நடந்து கொண்டிருந்த காலத்தில் கூட ஜாஸ் சினிமா பிரச்சனையும் வந்தது என்பதை நாம் அறிவோம். சமீபத்தில் என்.டி.டி.வி வைகுந்தராஜன் நிறுவனத்தில் சசிகலாவின் உறவினர்கள் பங்குதாரர்களாய் இருந்ததையும், வைகுந்தராஜன் 2012 ஆண்டு வரை மிடாஸ் சாராய ஆலையில் 3-ல் ஒரு பங்குதாரராய் இருந்ததையும் வெளிப்படுத்தியிருக்கிறது. தி நகரில் உள்ள ஒரு வீட்டின் முகவரியில் ஜாஸ் சினிமாஸ், ஜெயா பைனான்சஸ் உள்ளிட்ட 13 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த 13 நிறுவனங்களையும் சசிகலாவின் உறவினர்கள் உட்பட அதே நபர்கள் இயக்குநர்களாக இருப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

ககன்தீப் சிங் பேடி தாதுமணல் குறித்து விசாரணை செய்த அறிக்கை அளித்திருக்கிறார். இடைக்காலத்தில் தாதுமணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும ஒரே ஆண்டில் 9 லட்சத்து 70 ஆயிரம் டன் தாது மணல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக செய்திகளை சொல்லி என்.டி.டி.வி ஆச்சசரியப்பட்டிருக்கிறது. இவர்கள் மட்டுமே ஊழல் செய்தார்கள் என்பதே இப்போது வந்திருக்கும் பிரச்சனை. ஆனால் ஊழல் ஒருவர் செய்கிறார் என்றால் அதற்கு உடந்தையாக உள்ள பலரும் இந்த நடைமுறையில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதன் பொருள் என்னவெனில் குற்றவாளிகள் மட்டுமல்ல குற்றத்திற்கு துணை போனவர்களையும் குற்றம் செய்ய தைரியமளிக்கும் செயலும் இதற்குள் உட்பொதிந்து கிடக்கிறது. இவர்கள் மாட்டிக் கொண்டாலும், மாட்டாத பல பேரும் மாட்ட வேண்டிய பலரும் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. இதோ மதுரை மாவட்டத்திலிருந்த கிரானைட் மலைகள் அப்படியே பெயர்க்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதுகுறித்து விசாரணை செய்த சகாயம் அறிக்கை மூடி மறைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ககன்திப் சிங் பேடி அறிக்கை தாதுமணல் பற்றி விசாரித்தது. அதுவும் வெளியிடப்படவில்லை. இந்த இரண்டும் வெளியிடப்பட்டால் இந்த குற்றவாளிகள் தவிர இதற்கு உடந்தையாக இருந்த வேறு பலரும் மாட்டுவார்கள்.

அதிமுகவினர் மட்டுமல்ல, சகாயத்தின் பூர்வாங்க அறிக்கையை கணக்கில் கொண்டால் மலையை விழுங்கியதில் திமுகவிற்கும் பங்குண்டு. இப்போது சாதுவான தோற்றமும் காட்டி அலைகின்ற பன்னீர்செல்வத்தின் ஆசியோடும், துணையோடும், பங்கோடும் நடந்தது வெளிச்சத்திற்கு வரும். ஒரு யூனிட் ஆற்று மணல் 650 ரூபாய் என்று நிர்ணயித்து விட்டு ஒரு யூனிட் மணல் 7000, 8000 என்று விற்கப்படும் அவலமும் தாயின் மடி அறுத்தது போல ஆற்றுமணலை ஒட்டச்சுரண்டி நீர் தேங்க வாய்ப்பில்லாத கொடூரத்தை இன்றளவும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் லஞ்சம், ஊழலுக்கு தண்டனை என்பதை தாண்டி அவை நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பையும் முன்னிறுத்துகிறது. சுரப்பி அறுக்கப்பட்ட ஆறுகளிலிருந்து மணல் மூலம் கட்டுக்கட்டாய் பணம் இவர்களிடம் வந்து குவிந்தது. அதேநேரம் ஆறுகள் வறண்டு, தமிழக விவசாயிகள் வேறு வேலை தேடி இடம் பெயர நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஆணி வேரோடு தங்களை பிடுங்கிக்கொண்டு புதிய இடங்களுக்கு போய் வேலைகளுக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பை நிறுத்தி விட்டு, பசியாற வேலைகளுக்கு போய் கொண்டிருக்கிறார்கள். ஒரு சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த கொடூரத்தின் சிறுபகுதிக்கு அளிக்கப்பட்ட தண்டனையே உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு. இது போதுமானதல்ல.

அந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற லஞ்சம், ஊழல் முறைகேடுகளுக்காக இவர்களுக்கு முன்னரும் அந்த அமைச்சரவையில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் மாட்டிக் கொண்டவர்கள். ஆனால் கொள்ளையடித்ததில் அத்தனை பேருக்கும் பங்குண்டு. முதலில் சிறைக்கு போனவர் இந்திரகுமாரி. அடுத்து போனவர் கல்வியமைச்சராக இருந்த மருங்காபுரி பொன்னுச்சாமி. அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த சுடுகாட்டு கூரையைக்கூட விட்டு வைக்காத செல்வகணபதியும் தண்டிக்கப்பட்டார். ஆனால், இவர்களெல்லாம் அதிமுகவிலிருந்து பின்னர் திமுகவிற்கு தாவி விட்டனர். திமுகவிற்கு தாவிய பின்னர் தான் செல்வகணபதி நாடாளுமன்ற உறுப்பினரானார். ஊழல் பேய் அதிமுகவை மட்டுமல்ல அனைத்து முதலாளித்துவ கட்சிகளையும் பீடித்திருக்கிறது. அதை கொஞ்சம் கொஞ்சமாய் சமூகத்தின் நிர்வாகிகளாய், வாக்காளர்களாய், பயனாளிகளாய், நோயாளிகளாய், வேலை தேடுவோராய் உள்ள ஒவ்வொருவரையும் கவ்விப்பிடித்து சிதைத்து அளித்திருக்கிறது. ஒரு சமூகம் முழுவதும் ஊழலைப்பற்றியான அசூசை உணர்வின்றி இருந்ததின் விளைவே ஜெயலலிதா ஜெயிலுக்கு போய் வந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

1991-96 கால கட்டத்தில் அப்போதைய செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசின் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆளுங்கட்சியின் நிர்வாகிகளும் சமூகத்தின் விழுமியங்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இந்த அட்டூழியங்களுக்கு எதிராக இடதுசாரி இயக்கங்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்தது. சமூகத்தின் மனசாட்சியை லஞ்ச ஊழலுக்கு எதிராக தட்டி எழுப்ப அரும்பாடு பட்டது. வெற்று அறிவிப்புகள், பகட்டான பேச்சுகள், படோபடமான விளம்பரங்கள், தூக்கி நிறத்தப்படட கட்அவுட்கள், பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டங்கள் என்ற மாபெரும் இரைச்சலில் நியாயத்திற்கான அந்த போராட்டத்தை ஊடகங்களோ, மக்களோ அதற்கு உரிய முக்கியத்துவத்தோடு புரிந்து கொள்ளவில்லை. உச்சநீதிமனறத்தின் இந்த தீர்ப்பு நிச்சயமாக ஊழலுக்கு எதிராக போராடுபவர்களுக்கு உத்வேகம் அளிக்கும், போராடலாம், நீதிமன்றம் போகலாம் என்றேனும் ஒருநாள் நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையை நிச்சயமாக ஒரு பகுதியினர் மத்தியில் எற்படுத்தும். ஆனால், தூக்கு தண்டனைகள் எப்படி கொலைகளை நிறுத்தி விட முடியவில்லையோ அதை போன்று இந்த தண்டனைகளும் ஊழலை முற்றிலுமாக அழித்து விடாது. மாறாக, ஊழலுக்கு எதிரான மனோநிலையை சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்குவதும், ஊழல் பணம் பாவத்தின் சம்பளம் என்பதையும் ஊழல் பணம் இன்னொருவர் ரத்தத்தை, வாழ்க்கையை, கல்வியை, மருத்தவத்தை, சுகாதாரத்தை தட்டிப் பறித்த ரத்தத்தை விற்ற பணம் என்பதையும், சமூகம் உணர வேண்டும். முறையற்ற பணங்கள் பொதுக்கூட்டத்திற்கோ, வாக்களிப்பதற்கோ எதற்கு அளிக்கப்பட்டாலும் அதை துச்சமென மதிக்கிற அது பாவத்தில் பங்கு என்கிற விழுமியத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சமூகம் உருவாவதன் மூலம் தனிநபர் துதி என்பதிலிருந்து விடுபட்டு கொள்கை அரசியலுக்கு பின்னால் அணி திரளுவதன் மூலமுமே இது சாத்தியம்.

-க.கனகராஜ்

Related Posts