அரசியல் ஜூன் 2015 புதிய ஆசிரியன்

ஊழலே உன் விலை என்ன?

தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். 18 ஆண்டுகளாக நடந்துவந்துள்ள சொத்துக்குவிப்பு வழக்கு திரைப்படத் திருப்பங்களையும் மிஞ்சக்கூடியது. வாய்தா வாங்கியே இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று மைக்கேல் டி. குன்ஹா வழங்கிய தீர்ப்பு அதிமுகவினர் தலையில் பேரிடியாக இறங்கியது. சிறைத் தண்டனை, அபராதம் என வழங்கப்பட்ட தீர்ப்பினைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மின்னல் வேகத்தில் ஜாமீன் பெறப்பட்டது. தற்போது அவசர அவசரமாக விசாரித்து நீதியரசர் குமாரசாமி தீர்ப்பை வழங்கிவிட்டார்.
இந்த வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞராக முன்பு வாதாடிய ஆச்சார்யா, ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாகச் செயல்படுமாறு முந்தைய பாஜக முதல்வர் எடியூரப்பா குடைச்சல் கொடுப்பதாகக் கூறி பதவியை ராஜினாமா செய்தார். பின்பு பவானிசிங் அரசுத்தரப்பு வழக்கறிஞராக ஆஜரானார். அவர், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென வாதம் வைத்ததைவிட, அவர்களை எப்படியாவது விடுவித்துவிடவேண்டுமென்பதிலேயே குறியாக இருந்தார். உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் பவானிசிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. மீண்டும் அரசுத்தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆச்சார்யாவுக்கு தன் எழுத்துப்பூர்வ வாதத்தை முன்வைக்க ஒரு நாள் அவகாசமே கிடைத்தது.
ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையும் விடுவிப்பதாகவும் அபராதத்தை ரத்து செய்வதாகவும் குமாரசாமி அறிவித்தார். தீர்ப்பில் கூட்டல் கணக்கில் அவர் கோட்டைவிட்டது பரபரப்புச் செய்தியானது. பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கும் வழக்குகளை குமாரசாமி நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டுமெனக் கோரப்படுவதாக நகைச்சுவைத் துணுக்குகள் உலா வருகின்றன. குறிப்பாக, ஸ்பெக்ட்ரம் வழக்கை குமாரசாமி நீதிமன்றத்திற்கு அனுப்பினால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடியை வெறும் 75 ரூபாயாக மாற்றிவிடக்கூடிய மாஜிக் அவரிடம் இருப்பதாகக்கூட சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. எப்படியோ, இந்த வழக்காடு காதையில் குமாரசாமியின் பெயரும் இடம்பெற்றுவிட்டது. மைக்கேல் டி. குன்ஹாவின் பெயரும் இடம் பெற்றுவிட்டது. எந்தெந்த வகையில் இடம்பெற்றுள்ளது என்று கூறுவது தேவையற்றது. அனைவருக்கும் புரியக்கூடியது.
ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிகளில் ஆடம்பரம் கொடிகட்டிப் பறந்ததும், இதைக்கண்டு மக்கள் முகம் சுழித்ததும் தெரிந்ததே. அதிமுகவினர் எதைச் செய்தாலும் ஓவராக்டிங் செய்தே பழகிவிட்டனர். அம்மாவின் பதவி பறிபோனால் அவர்கள் கும்பலாகக் கூடி நின்று அழுகிற அழுகையில் வங்கக்கடலே வருத்தப்படுகிறது. வழக்கில் விடுதலை வாங்கினால் அவர்கள் அடிக்கிற கூத்திலும், வெடிக்கிற பட்டாசிலும் சிவகாசி ஆலைகளே வெட்கப்படுகின்றன. ஆளுநரைச் சந்தித்து பதவி கோரச் சென்றபோதே சென்னையை ஒரு வழிசெய்துவிட்டார்கள். அடுத்தநாள் நடைபெற்ற பதவியேற்புவிழாவின் போது அதிமுக கொடியை விட ஆடம்பரக்கொடியே உயரப்பறந்தது.
இடையில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அம்மையாரைச் சந்தித்தது நீதித்துறையில் பேரம் நடந்திருக்குமோ என்ற சர்ச்சையைக் கிளப்பியது. என்னமோ நடந்திருக்கிறது, கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவிற்கு வந்துதானே தீரவேண்டுமென அரசியல் நோக்கர்கள் அடுத்த கட்ட நிகழ்விற்காக காத்திருக்கிறார்கள். எப்படியோ, முதல்வர் பொறுப்பிலிருந்து ஒ. பன்னீர்செல்வத்திற்கு விடுதலை கிடைத்திருக்கிறது. முதல்வர், மக்கள் முதல்வர் என்ற இரட்டை அவஸ்தையிலிருந்து மக்களும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதினார். அதில், அதிமுகவின் தவறுகளை பட்டியல் போட்டிருந்தார். ஒ.பி.எஸ். இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், எதிர்கால முதல்வராக அவரது தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் களத்தில் இறங்கி, திமுகவின் ஊழல் பட்டியலை சுட்டிக்காட்டி அதிமுகவை விமர்சிக்க திமுகவிற்கு உரிமை உண்டா என்ற கேள்வியை எழுப்பினார்.
இந்த திடீர் திருப்பத்தை எதிர்பார்க்காத திமுக, அன்புமணிக்கு பதிலளிக்க ஸ்டாலின் தேவையில்லை. முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வனே போதுமெனக்கூறி அவர் மூலம் எதிர்அறிக்கை விட்டது. உடனே, அன்புமணி ராமதாஸ் தன்னுடைய தகுதிகள் என்ன என்று பதில் அறிக்கையில் பட்டியலிட்டார். பதிலுக்கு மத்திய அமைச்சராக இருந்தபோது அன்புமணி செய்த ஊழல்களை திமுக வெளியிட்டது. பதிலுக்கு திமுக ஊழல்களை பாமக வெளியிட்டது. அதிமுவின் ஊழலை வெளியிடப்போவதாகக் கூறி கடைசியில் திமுக, பாமக ஊழல்கள் வெளியாகின.
ஒ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலத்தில் அரசு நிர்வாகம் முடங்கிக்கிடந்தது உண்மை. ஆனால், ஊழல் நிர்வாகம் முடங்கியிருக்கவில்லை. அமைச்சராக இருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலி வேளாண்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமியை மிரட்டியதில் அவர் தற்கொலை செய்துகொண்டார். அடுத்தடுத்து இதே போன்று பல்வேறு செய்திகள் வெளியாயின.
அடுத்து, பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் புறப்பட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 45 சதவீத கமிஷன் கொடுக்கவில்லையென்றால் எந்த வேலையும் கிடைக்காது என்ற உண்மையை வெளிக்கொண்டுவந்தனர். ஏற்கனவே, ஆவின் பாலில் தண்ணீரை கலந்த விவகாரம், நெல்லில் மண்ணைக் கலந்த விவகாரம் என பல முறைகேடுகள் வெளிவந்துள்ளன. எந்தவொரு பணிநியமனம், பணிமாறுதலும் லஞ்சம் கொடுக்காமல் நடக்காது என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. இதில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் பெயரில் மட்டுமே வித்தியாசம் உண்டு. இவை இரண்டும்தான் தமிழகத்தில் பிரதான கட்சிகள் என்பதால், ஊழல் என்பது வெறுக்கப்படவேண்டிய ஒன்று என்ற நிலை மாறி, அதுவொரு கொண்டாட்டமாக இங்கே மாற்றப்பட்டுவிட்டது. மத்தியில் காங்கிரஸ், பாஜக… தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் போடுகிற சண்டையில் ஊழல் பற்றிய பல உண்மைகள் வெளிவருகின்றன. இடதுசாரிகள் ஆட்சி செய்த கேரளம், மேற்குவங்கம் மாநிலங்களில் பதவியிலிருந்த முதல்வர்கள் ஊழல் செய்த வரலாறு இல்லை. இப்போதும் திரிபுராவில் ஆட்சி நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் மாணிக் சர்க்கார் இந்தியாவிலேயே ஏழை முதல்வர் என்று பத்திரிகைகளால் வர்ணிக்கப்படுகிறார். கொள்ளையா? கொள்கையா?… என்பதுதான் விவாதக்களமாக இருக்கவேண்டும். மாறாக நீ சாப்பிட்டது எவ்வளவு? நான் சாப்பிட்டது எவ்வளவு? … என்று அவர்கள் சண்டைபோட நாம் கைதட்டிக் கொண்டிருந்தால் நம்மையே சாப்பிட்டுவிடுவார்கள்…

Related Posts