இதழ்கள் இளைஞர் முழக்கம்

ஊர்சுற்றலாம் வாங்க : தொகுப்பு : செல்வராஜ்

ஊர்சுற்றலாம் வாங்க  : தொகுப்பு : செல்வராஜ்

                மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், கடல் மட்டத்தில் இருந்து 2133 மீ உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து பிரிந்து கிழக்கு நோக்கித் திண்டுக்கல் வரை தொடர்ந்து நிற்கும் மலை மேல் அமைந்திருக்கிறது. கானல் எனும் ஒருவகைக் கொடி இங்கு மிகுதியாகக் காணப்படுவதால் கொடைக்கானல் எனப் பெயர் வழங்கிவருகிறது. பலவித மரங்களும், செடி, கொடிகளும், பூக்களும், அருவிகளும் நிறைந்த இயற்கையின் செல்வமே கொடைகானல். நெடிதுயர்ந்த மரங்கள் நிறைந்த மலைச்சாரலான கொடைக்கானலில் நடந்து சுற்றிப் பார்க்க உகந்த இயற்கை காட்சிகள் கண்ணை கவரும் வண்ணம் அமைந்துள்ளன.

இங்கு ஆண்டுக்கு சராசரியாக 165 செ.மீ மழை பெய்கிறது. கோடைக்காலத்திலும் குளிர்காலத்திலும் பெரும்பாலும் மாறாத பருவநிலை நிலவுகிறது. இங்கு கோடைக் காலத்தில் தட்பவெப்ப நிலை 11-20 டிகிரி செண்டிகிரேடு வரையிலும், குளிர்காலத்தில் 8-17 டிகிரி செண்டிகிரேடு வரையிலும் நிலவுகிறது.

பிரையண்ட் பூங்கா

பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன. 150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும்.

கோக்கர்ஸ் நடைபாதை:

1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது சரேலென இறங்கும் செங்குத்தான மலைச்சரிவைக் கொண்டது. இப்பாதையிலிருந்து தரைப்பகுதியைப் பார்த்தால் வனப்பாகத் தோன்றும்.

செண்பகனூர் அருங்காட்சியகம்:

இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. தொல்பொருள் ஆய்வின் மூலம் கண்டெறியப்பட்ட தொல்குடிகளின் செடி வகைகள் மலரினங்கள் உயிரினத் தொகுப்புகள் பலவும் இந்த அருங்காட்சியகத்தில் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. இங்கே 300 வகை அபூர்வ மலர் வகைகள் பராமரிக்கப்படுகின்றன.

குறிஞ்சி மலர்

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ கடைசியாகக் பூத்த ஆண்டு 2004. இதனால் தமிழ் இலக்கியத்தில் இவ்வூர் குறிஞ்சி மலை எனக் குறிப்பிடப் படுகிறது. மூன்றடி உயரத்திற்கு வளரும் பூவால் கொடைக்கானல் மலைப்பகுதி கண்கவர் காட்சியாய் விளங்கும். இது 4500 முதல் 6000 அடி வரை உயரமுள்ள மலைப்பகுதியில் பூக்கும்.

கொடைக்கானல் ஏரி

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஏரியில் படகில் மிதந்தபடி ஏகாந்தமாய் பயணிப்பதில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான். இறைவன் இயற்கையின் அழகையெல்லாம் கொட்டி வைத்திருக்கும் ஏரியழகின் ரம்மியம் தனித்துவமானது. கொடைக்கானலின் மையப்பகுதியே இந்த ஏரிதான். இதன் சுற்றுச் சாலை 5 கி.மீ. ஏரியின் அளவு 24 ஹெக்டேர் அளவு உள்ளது.

தூண் பாறைகள்

இந்த பாறைகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது கூடுதல் தகவல். அழகிய மலர்கள் சூழ்ந்த சிறிய தோட்டம் ஒன்றை இந்தப் பாறைகள் பெற்றிருக்கின்றன.

பாம்பர் அருவி:

கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. பாம்பர் அருவியிலிருந்து கீழ்ப்பாய்ந்து வரிசையான பாறைகள் வழியே நெளிந்து பொங்கிப் பெருகும் தண்ணீரின் அழகு வசீகரத்தின் உச்சகட்டம்.

வெள்ளியருவி

கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்குகிறது. இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும்.

தலையாறு அருவி

இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. கொடைக்கானலுக்குச் செல்லும் மலைத்தொடர் சாலையில் 13 ஆவது கி.மீட்டரில் இந்த அருவி பாய்கிறது. இதற்கு எலிவால் அருவி என்ற பெயரும் உண்டு. இதன் உயரம் 975 அடி.

கூக்கால் குகைகள்

இங்குள்ள குகைகள் பாறைப் பாளங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். 1500 மீட்டர் உயரத்தில் இப்பாறை மறைவிடம் உள்ளது. கொடைக்கானலிலிருந்து 40 கி.மீ. தொலைவில் பூம்பாறை என்னுமிடத்தில் இக்குகைகள் காணப்படுகின்றன.

இதுமட்டுமில்லாமல் கரடிச் சோலை அருவி, பேரிஜம் ஏரிக்காட்சி, ஃபேரி அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, செட்டியார் பூங்கா, சூரிய ஆய்வு மையம், டால்மென் வட்டம் என கொடைகானலின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. அந்த இயற்கையின் அழகுகை நாம் ஒருமுறை சுற்றி தெரிந்து கொள்வோம்.

எப்படி செல்வது?

திண்டுக்கல்லிலிருந்து 100 கி.மீ, கொடை ரோடு ரயில் நிலையம் 80 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரையில் இருந்து 115 கி.மீ. மற்றும் கோவையிலிருந்து 130 கி.மீ.தொலைவில் கொடைக்கானல் உள்ளது.

 

Related Posts