இதழ்கள் இளைஞர் முழக்கம்

ஊடகங்களின் அறமற்ற அரசியல் – என்.ரெஜீஸ்குமார்

 

ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படுபவை பாராளுமன்றம்/சட்டமன்றம், அரசு நிர்வாகம், நீதிமன்றம் மற்றும் பத்திரிக்கைதுறை ஆகும். ஜனநாயகத்தை அதன் முழுமையான பொருளில் பாதுகாக்கவும், நிலைநிறுத்தவும் செய்யும் முக்கியமான பொறுப்பு இந்த நான்கு அமைப்புகளுக்கு இருந்தாலும் ஊடகங்களுக்கு சற்று கூடுதலான பொறுப்பு உள்ளது. ஆனால் ஊடகங்கள் இந்த சமூகப் பொறப்பை உணர்ந்து செயல்படுகிறதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

உலகமயம், தனியார்மையம், தாராளமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமுல்படுத்தத் துவங்கிய 1990 களுக்குப் பிறகு ஊடகங்கள் தங்களது சமகப் பொறுப்பிலிருந்து பெருமளவில் தடம்புரண்டு கொண்டிருக்கிறது. அதன் உச்சத்தை கடந்த இரண்டு தேர்தல்களில் சந்தித்தோம். முதலாவதாக 2014 பாராளுமன்றத் தேர்தலின் போது இந்தியாவை மீட்கவல்ல மீம்பவராக நரேந்திர மோடியை சித்தரித்து குக்கிராமங்களிலுள்ள மக்களிடம் கூட மோடியை சர்வவல்லமை படைத்தவராக கொண்டு சென்றதில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த தேர்தலிலும் மக்களின் உண்மையான பிரச்சனைகள் பேசுபொருளாக மாற்றப்படாமல் கவர்ச்சிகரமான அறிவிப்புகளும், மோசடியான வாக்குறுதிகளும், மோடியா – ராகுலா என்ற இரண்டு தனிமனிதர்களை மையமாகக் கொண்ட விமர்சனங்களுமே தேர்தல் காலத்தில் விவாதிக்கப்பட்டது என்றால் அதற்கு ஊடகங்கள் முழுமையாக துணை போனது.

தற்போது நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஊடகங்கள் தங்களது கடந்தகால மோசமான நடவடிக்கைகளை தாங்களே முறியடித்து மிகவும் கேவலமாக நடந்து கொண்டதை நாம் பார்த்தோம். குறிப்பாக இந்த தேர்தலில் மக்களின் உண்மையான பிரச்சனைகள் பேசுபொருளாக இல்லை. மாறாக ஜெயலலிதாவா, கருணாநிதி என்ற இரண்டு தனிமனிதர்களை மையமாக வைத்தே விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. நடுநிலை நாளிதழ்கள் என்று தங்களைத் தாங்களே புகழும் பத்திரிகையாக இருந்தாலும் சரி, உள்ளது உள்ளபடி என தங்களுக்கு தாங்களே நேர்மைச் சான்று கொடுக்கும் காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி அனைத்து ஊடகங்களும் நேர்மையற்ற முறையிலேயே நடந்து கொண்டன.

ஊடக தர்மம் என்ன விலை என்று கேட்கும் வகையில் கேடுகெட்ட செயலில் ஈடுபடவும் தயங்கவில்லை. தமிழகத்தின் அதிக வாசகர்களைக் கொண்ட பத்திரிக்கை என்று சொல்லும் பத்திரிக்கையின் நிருபரோடு பேசிக் கொண்டிருந்தபோது ஏன் மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார செய்திகளை உங்கள் பத்திரிக்கையில் காணவில்லை என்று கேட்டேன். அதற்கு அந்த நிருபர் சொன்ன பதில் அதிர்ச்சியடைய வைத்தது. அந்த குறிப்பிட்ட பத்திரிக்கை நிறுவனம் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் ரூ.8 லட்சம் கேட்டதாகவும், அப்படி எட்டு லட்ச ரூபாய் கொடுத்த வேட்பாளர்களின் பிரச்சார செய்திகளை மட்டுமே தங்கள் பத்திரிக்கையில் வெளியிடுவதாகவும் குறிப்பிட்டார். இதற்கும் மேல் கால்பக்க விளம்பரம் கொடுத்தால் அதற்காக ஒரு செய்தி வெளியிடுமாறும் தங்களிடம் கூறியுள்ளதாக சொன்னார். இந்த குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனம் மட்டுமல்ல வேறு சில பத்திரிக்கைகளும் இப்படி வேட்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு செய்திகளை வெளியிட்டதாகவும் பணம் கொடுக்காத வேட்பாளர்களின் செய்திகளை வெளியிடவில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்திலுள்ள பெரும்பாலான மக்கள் இப்படிப்பட்ட ஊடகங்களில் வரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டுதான் தங்களது வாக்கை தீர்மானிக்கிறார்கள். அப்படியென்றால் லஞ்சம் பெற்றுக்கொண்டு வாக்காளர்களை தவறாக திசை திருப்பிய ஊடகங்களின் நேர்மையற்ற செயலை என்னவென்று சொல்வது. அரசியல் வாதிகளின், அதிகாரிகளின் லஞ்ச, ஊழல் குறித்து இவர்களால் நேர்மையோடு பேசமுடியுமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

முல்லைப் பெரியார், காவேரி என தமிழக மக்களின் நீர்தேக்கங்களுக்கு பக்கத்து மாநிலங்களையே சார்ந்து நிற்கும் நாம் இயற்கை கொடுக்கும் மழைநீரை சேகரிக்காமல் இருக்கிற நீர்நிலைகளையும் அபகரிக்கும் நமது ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளோ அல்லது தாமிரபரணியை காவு கொடுக்கும் வகையில் பெப்சி கம்பெனிக்கு அனுமதி கொடுத்ததோ ஏன் பேசு பொருளாக மாறவில்லை?

ஆற்று மணல் கொள்ளை, கடர்கரையோர கனிம மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை என தமிழக மக்களின் வளங்களை சில முதலாளிகள் கொள்ளையடிப்பதோ சோற்றுக்குக் கூட வழியில்லாதவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் கோடி கோடியாக சொத்து சேர்த்தது குறித்தோ எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் லஞ்ச ஊழல் குறித்தோ அதற்கான தீர்வுகள் குறித்தோ ஏன் நேர்மையுடன் விவாதிக்கப்படவில்லை?

தமிழகத்தை பீடித்துள்ள சாதிபேயின் கோரத்தாண்டவம் குறித்தோ, ஆணவக் கொலைகள் குறித்தோ ஏன் பேசப்படவில்லை? கட்டவீழ்த்து விடப்பட்டுள்ள கல்வி வியாபாரம், வேலையற்று வீதியில் அவையும் இளைஞர் வட்டம், கல்வி நிலையங்கள், பணியிடங்கள் என செல்லும் இடங்களில்லாம் பாலியல் துன்புறுத்தலுக் குள்ளாகும் பெண்கள் என பேசபட வேண்டிய தமிழக மக்களின் பிரச்சனைகள் பேசப்படாமல் போனது எதனால்?

இத்தகைய தமிழக மக்களின் பிரச்சனைகளை நெஞ்சரத்துடனும், நேர்மைத் துணிவுடனும் பேசிய மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சாரத்தை இருட்டடிப்பு செய்தது ஏன்? மக்கள் பிரச்சனைகள் அவர்களுக்கு முக்கிய மானதல்ல என்று கருதுவது மட்டுமல்ல அவற்றை திசைதிருப்பும் வேலைகளிலும் ஊடகங்கள் ஈடுபடுகின்றன. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் வாக்குகளைப் பெறுவதற்காக பணத்தை வெள்ளமாக வாரியிறைத்ததை, வாக்காளர்களை விலை பேசியதை நேர்மையின் சிகரமாக சொல்லிக் கொள்ளும் எந்த ஊடகமும் ஏன் வெளிப்படுத்தவில்லை?

திராவிட இயக்கங்கள் தமிழகத்திற்கு எந்த பங்களிப்பையும் செய்யவில்லை என்று சொல்ல முடியாது. அதே நேரம் அதிமுக, திமுக ஆட்சிகள் தமிழக மக்களுக்கு துரோகம் செய்து, தங்கள் குடும்பத்திற்காக கோடி கோடியாய் சேர்த்தது குறித்து ஊடகங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை?

சாதிய ரீதியாக பாட்டாளி மக்கள் கட்சியும், மத ரீதியாக பாரதிய ஜனதா கட்சியும், இனரீதியாக நாம் தமிழர் கட்சியும் மக்களை பிளவுபடுத்தும் அரசியலை வெளிப்படையாக செய்தபோதும் அது குறித்த நேர்மையான விமர்சனங்களை ஊடகங்கள் முன்வைக்கத் தவறியது ஏன்? பதில் ஒன்றுதான். இன்றைய ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின், பண முதலைகளின் கையில் உள்ளது. அல்லது அவர்களுக்கு சேவை செய்யும் சேவகர்களாக மாறிப் போயுள்ளன. ஆகவே தான் அவர்களது நலன் பேணும் அரசியலை மட்டுமே ஊடகங்கள் ஆதரிக்கிறது. மக்களை உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் பண முதலைகளின் கொள்ளைக்கு எந்த வகையிலும் இடையூறு செய்யாத, இன்னும் அவர்களது கொள்ளைக்கு துணை போகிற அதிமுக, திமுக காட்சிகளை மட்டுமே மக்கள் முன் நிறுத்துகிறது.

ஜனநாயகத்தின் முதல் மூன்று தூண்கள் தங்களது பொறுப்புகளிலிருந்து நழுவும்போது, அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய ஊடகங்கள் தங்கள் பாதையிலிருந்து தடம் மாறுவது ஜனநாயகத்தையே ஆபத்துக்குள்ளாக்கும். ஊடகவியல் மாணவனாக இருந்தபோது “வாள்முனையைவிட பேனாமுனை வலியது” என்று ஆசிரியர் சொன்ன வரிகளை நினைத்து பல தருணங்களில் பெருமைப்பட்டதுண்டு. ஆனால் அந்த பேனாமுனையும் பணத்திற்கு முன்னால் வளைந்து கொடுப்பதை பார்க்கும்போது வெட்கப்படாமல் இருக்க முடியவில்லை.

ஆனாலும் நம்பிக்கையை இழக்கவில்லை. மக்கள் எல்லாக் காலங்களிலும் முட்டாளாக, உணர்வற்றவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் உண்மையை உணரும்போது உங்களை மட்டுமல்ல, உங்கள் முனைமழுங்கிய பேனாக்களையும் தூக்கி எறிவார்கள்.

Related Posts